சுன்னத் தொழுதுவிட்டுத்தான் ஃபஜ்ரு ஜமாஅத்தில் கலந்து கொள்ள வேண்டுமா?

சுன்னத் தொழுதுவிட்டுத்தான் ஃபஜ்ரு ஜமாஅத்தில் கலந்து கொள்ள வேண்டுமா?

னஃபி மத்ஹபைச் சேர்ந்தவர்கள் ஃபஜ்ரு ஜமாஅத் தொழுகை நடந்து கொண்டிருக்கும்போது பள்ளிக்கு வந்தால் முதலில் சுன்னத் தொழுதுவிட்டு பிறகு ஜமாஅத் தொழுகையில் சேர்கின்றார்கள். இது பற்றிக் கேட்டதற்கு பின்வரும் இந்த ஹதீஸைக் கூறுகின்றார்கள். 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபஜ்ரு தொழுகை நடத்திக் கொண்டிருக்கும் போது இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் பள்ளிக்கு வருகின்றார்கள். ஒரு ஓரமாக நின்று சுன்னத்தைத் தொழுது விட்டு பிறகு ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்கின்றார்கள் என்ற செய்தி தஹாவீயின் ஷரஹ் மஆனில் ஆஸார் என்ற நூலில் இடம்பெற்றுள்ளதாகக் கூறினார்கள்.

இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானதா?

ஈ. இஸ்மாயீல் ஷெரீப், பெரம்பூர், சென்னை.

பதில்:

நீங்கள் குறிப்பிடும் ஹதீஸ் இதுவாக இருக்கலாம்.

شرح معاني الآثار

2199 – حَدَّثَنَا سُلَيْمَانُ، قَالَ: ثنا خَالِدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: ثنا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي مُوسَى، عَنْ عَبْدِ اللهِ «أَنَّهُ دَخَلَ الْمَسْجِدَ وَالْإِمَامُ فِي الصَّلَاةِ , فَصَلَّى رَكْعَتَيِ الْفَجْرِ»

இமாம் தொழுகையில் இருக்கும் போது இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் பள்ளிவாசலுக்கு வந்து பஜ்ருடைய முன் சுன்னத் இரண்டு ரக்அத்களைத் தொழுதார்கள்.

நூல் : ஷரஹ் மஆனில் ஆஸார்

இந்தச் செய்தியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தியதாகவோ, அல்லது நபித்தோழரின் செயலை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கீகரித்ததாகவோ கூறப்படவில்லை. மேலும் இமாம் தொழுகையில் இருக்கும் போது என்று இதில் கூறப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இமாமாக இருந்தால் இப்படிக் கூற மாட்டார்கள். நபியவர்கள் இமாமத் செய்தபோது என்றே கூறுவார்கள். எனவே இப்னு மஸ்வூத் அவர்களின் இச்செயல் மார்க்க ஆதாரமாக ஆகாது.

இகாமத் சொல்லப்பட்ட பின் சுன்னத் தொழுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள். இதற்கு முரணாகவும் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களின் இச்செயல் அமைந்துள்ளது

صحيح مسلم

1678 – وَحَدَّثَنِى أَحْمَدُ بْنُ حَنْبَلٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ وَرْقَاءَ عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ أَبِى هُرَيْرَةَ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ « إِذَا أُقِيمَتِ الصَّلاَةُ فَلاَ صَلاَةَ إِلاَّ الْمَكْتُوبَةُ »

தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் அந்தக் கடமையான தொழுகை தவிர வேறு எதனையும் தொழலாகாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : முஸ்லிம்

ஜமாஅத் தொழுகை நடக்கும் போது வேறு தொழுகை நடத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்ததாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ் இருக்கும் போது, அதைவிட்டு விட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அங்கீகாரம் இல்லாத ஆதாரமற்ற செய்திகளைக் காட்டி மத்ஹபுகளை நியாயப்படுத்த முனையக் கூடாது.