ஜும்ஆத் தொழுகை நடைபெற குறைந்தது 40 நபர்கள் இருக்க வேண்டுமா?

ஜும்ஆத் தொழுகை நடைபெற குறைந்தது 40 நபர்கள் இருக்க வேண்டுமா?

ஜும்ஆத் தொழுகை நடைபெற குறைந்தது 40 நபர்கள் இருக்க வேண்டுமா?

அம்பை பௌசுல்

பதில் :

903حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَقَ عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلٍ عَنْ أَبِيهِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ وَكَانَ قَائِدَ أَبِيهِ بَعْدَ مَا ذَهَبَ بَصَرُهُ عَنْ أَبِيهِ كَعْبِ بْنِ مَالِكٍ أَنَّهُ كَانَ إِذَا سَمِعَ النِّدَاءَ يَوْمَ الْجُمُعَةِ تَرَحَّمَ لِأَسْعَدَ بْنِ زُرَارَةَ فَقُلْتُ لَهُ إِذَا سَمِعْتَ النِّدَاءَ تَرَحَّمْتَ لِأَسْعَدَ بْنِ زُرَارَةَ قَالَ لِأَنَّهُ أَوَّلُ مَنْ جَمَّعَ بِنَا فِي هَزْمِ النَّبِيتِ مِنْ حَرَّةِ بَنِي بَيَاضَةَ فِي نَقِيعٍ يُقَالُ لَهُ نَقِيعُ الْخَضَمَاتِ قُلْتُ كَمْ أَنْتُمْ يَوْمَئِذٍ قَالَ أَرْبَعُونَ رواه أبو داود

அப்துர் ரஹ்மான் பின் கஅப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :

(எனது தந்தை) கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் ஜும்ஆவுடைய பாங்கைச் செவியுறும் போது அஸ்அத் பின் ஸுராரா (ரலி) அவர்களுக்காக பிரார்த்தனை செய்வார்கள்.  நான் அவர்களிடம், "நீங்கள் ஜும்ஆவுடைய பாங்கைச் செவியுறும் போது அஸ்அத் பின் ஸுராராவுக்காக பிரார்த்தனை செய்கின்றீர்களே? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஹஸ்முன் நபீத்" என்ற இடத்தில் எங்களை ஜும்ஆவுக்காக திரட்டிய முதல் நபர் அவர்தான். அந்த இடம் பனூ பயாளா குலத்தாரின் கருங்கற்களைக் கொண்ட நிலத்தில் நகீவுல் கள்மாத் என்ற தண்ணீர் நிறைந்த பகுதியாகும்'' என்று பதில் கூறினார்கள். "அன்றைய தினம் எத்தனை பேர் இருந்தீர்கள்'' என்று கேட்டேன். அதற்கு "நாற்பது பேர்'' என்று பதில் சொன்னார்கள்.

நூல் : அபூதாவூத் 903

ஜும்ஆத் தொழுகை நடத்துவதற்கு நாற்பது நபர்கள் இருப்பது அவசியம் என்று கூறுவோர் மேற்கண்ட செய்தியைத் தான் ஆதாரமாகக் காட்டுகிறார்கள். இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது என்றாலும் இவர்களின் வாதத்துக்கு வலுசேர்க்கும் எந்த அம்சமும் இந்த ஹதீஸில் இல்லை.

மதீனாவில் முதன் முதலில் நடத்தப்பட்ட ஜும்ஆவில் நாற்பது நபித்தோழர்கள் கலந்து கொண்டதாக இச்செய்தி கூறுவதால் ஜும்ஆத் தொழுகைக்கு நாற்பது நபர்கள் இருப்பது அவசியம் என்று வாதிடுகின்றனர்.

நாங்கள் நாற்பது நபர்கள் இருந்தால் தான் ஜும்ஆ நடத்த வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று ஹதீஸில் சொல்லப்பட்டு இருந்தால் தான் இதை அவர்களின் கூற்றுக்கு ஆதாரமாகக் காட்டலாம். ஆனால் இந்த ஹதீஸில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி பேசப்படவே இல்லை. அத்துடன் நாற்பது நபர்கள் இருப்பது ஜும்ஆவிற்கு அவசியம் என்று இதை அறிவிக்கும் நபித்தோழரும் கூறவில்லை.

நாற்பது நபர்கள் இருந்தோம் என்று ஒரு தகவலாகவே நபித்தோழர் குறிப்பிடுகின்றார். அன்றைக்கு முப்பது நபர்களோ, இருபது நபர்களோ, பத்து நபர்களோ, ஏன் இரு நபர்களோ இருந்திருந்தாலும் அவர்கள் ஜும்ஆ நடத்தி இருப்பார்கள். நாற்பதை விட கூடுதலாக இருந்திருந்தாலும் ஜும்ஆ நடத்தியிருப்பார்கள்.

ஜும்ஆ நடத்துவதற்கு நாற்பது நபர்கள் இருப்பது அவசியம் இல்லை என்பதால் தான் கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் அதை முக்கியத்துவப் படுத்திப் பேசவில்லை. அவர்களிடம் அறிவிப்பாளர் அப்துர் ரஹ்மான் நீங்கள் அன்றைக்கு எத்தனை நபர்கள் இருந்தீர்கள்? என்று கேள்வி கேட்டதற்குப் பதிலாகத் தான் நாற்பது நபர்கள் இருந்தோம் என்று தெரிவிக்கின்றார். எனவே இந்தச் செய்தியை வைத்து ஜும்ஆத் தொழுகைக்கு நாற்பது நபர்கள் இருப்பது அவசியம் என்று வாதிடுவது தவறாகும்.

ஜும்ஆத் தொழுகை நடத்துவதற்கு குறைந்தது 40 நபர்கள் இருக்க வேண்டும் என்று மத்ஹப் நூற்களில் சட்டம் கூறப்பட்டுள்ளது. ஆனால் இவ்வாறு நிபந்தனையிடுவதற்கு குர்ஆனிலோ, ஏற்கத்தகுந்த நபிமொழிகளிலோ எந்த ஆதாரமும் இல்லை. மார்க்கத்தில் கூறப்படாத நிபந்தனைகளை இடுவதற்கு யாருக்கும் அனுமதியில்லை.

ஜும்ஆவைப் பொறுத்தவரை அது கூட்டாக நிறைவேற்றப்பட வேண்டிய தொழுகை. கூட்டுத் தொழுகைக்கு குறைந்தது இரண்டு நபர்கள் இருந்தாலே போதுமானது. இதற்கு நபிமொழிகளில் சான்றுகள் உள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மற்றும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஆகிய இருவர் மட்டும் சேர்ந்து ஜமாஅத் நடத்தியுள்ளனர்.

699حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ عَنْ أَيُّوبَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنْ أَبِيهِ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ بِتُّ عِنْدَ خَالَتِي فَقَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي مِنْ اللَّيْلِ فَقُمْتُ أُصَلِّي مَعَهُ فَقُمْتُ عَنْ يَسَارِهِ فَأَخَذَ بِرَأْسِي فَأَقَامَنِي عَنْ يَمِينِهِ رواه البخاري

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

நான் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களது வீட்டில் ஓர் இரவில் தங்கினேன். அந்த இரவில் (உறங்கிக் கொண்டிருந்த) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுந்து தொழுதார்கள். நானும் எழுந்து அவர்களுடன் தொழுதேன். அப்போது நான் அவர்களுக்கு இடப் பக்கம் நின்றேன். உடனே அவர்கள் எனது தலையைப் பிடித்து என்னைத் தம் வலப் பக்கம் நிறுத்தினார்கள்.

நூல் : புகாரி 699

எனவே ஜும்ஆ என்பது கூட்டுத் தொழுகையாக இருப்பதால் குறைந்தது இரண்டு நபர்கள் இருந்தாலே ஜும்ஆ நடத்தலாம். ஒருவர் உரையாற்றி தொழுகை நடத்த வேண்டும். மற்றொருவர் அவரது உரையைக் கேட்டு அவருடன் சேர்ந்து தொழ வேண்டும்.

ஜும்ஆவிற்கு நாற்பது நபர்கள் இருக்க வேண்டும் என்ற அளவுகோல் தவறு என்பதைப் பின்வரும் ஹதீஸ் மூலமும் தெரிந்துகொள்ளலாம்.

936حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو قَالَ حَدَّثَنَا زَائِدَةُ عَنْ حُصَيْنٍ عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ قَالَ حَدَّثَنَا جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ بَيْنَمَا نَحْنُ نُصَلِّي مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ أَقْبَلَتْ عِيرٌ تَحْمِلُ طَعَامًا فَالْتَفَتُوا إِلَيْهَا حَتَّى مَا بَقِيَ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا اثْنَا عَشَرَ رَجُلًا فَنَزَلَتْ هَذِهِ الْآيَةُ وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انْفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا رواه البخاري

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) கூறினார்கள் :

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் (ஜும்ஆத்) தொழுது கொண்டிருந்தபோது உணவுப் பொருட்களை ஏற்றிக்கொண்டு ஒட்டகக் கூட்டம் ஒன்று வந்தது. அதை நோக்கி மக்கள் சென்று விட்டனர். பன்னிரண்டு நபர்களைத் தவிர வேறு எவரும் எஞ்சியிருக்கவில்லை. இந்த நேரத்தில் தான், "அவர்கள் வணிகப் பொருட்களையோ கவனத்தை ஈர்க்கக் கூடியதையோ கண்டால் உம்மை நிலையில் விட்டுவிட்டு அதை நோக்கிச் சென்று விடுகின்றனர்.'' (62:11) என்ற வசனம் இறங்கியது.

நூல் : புகாரி 936

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜும்ஆ நடத்திக் கொண்டிருந்த போது பன்னிரண்டு நபர்கள் மட்டுமே இருந்துள்ளனர். ஜும்ஆவிற்கு 40 நபர்கள் அவசியம் என்றால் பன்னிரண்டு நபர்களை மட்டும் வைத்துக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜும்ஆ நடத்தியிருக்க மாட்டார்கள். எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கும், ஜும்ஆவிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்ந்து ஜும்ஆவை நடத்தியுள்ளார்கள்.

மேற்கண்ட செய்தியிலும் ஜும்ஆவின் போது ”நாங்கள் பன்னிரண்டு பேரைத் தவிர வேறு எவரும் எஞ்சியிருக்கவில்லை”  என்று குறிப்பிடப்படுவதை வைத்து பன்னிரெண்டு பேர் இருந்தால் தான் ஜும்ஆ கடமை என்று யாராவது புதிதாக வாதிடுவார்களேயானால் அதுவும் தவறுதான் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.