தன்னைவிட குறைவான வயதுடையவரை ஒரு பெண் திருமணம் செய்யலாமா?
எனக்கும், என் உறவினர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. மணமகன் என்னை விட ஒரு வயது இளையவர். இவரைத் திருமணம் செய்வது சரியா? இந்நிலையில் புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய ஒருவர் என்னைப் பெண் கேட்டார். அவரிடம் எனக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்ட விஷயத்தைச் சொல்லி விட்டேன். (மாற்று மதத்திலிருந்து இஸ்லாத்திற்கு வந்த) அவரை மறுத்ததால் நான் பாவத்திற்குள்ளாவேனா?
எம். ராபியா பஸ்ரின்.
திருமணம் செய்யும் ஆணை விட பெண்ணுக்கு வயது குறைவாகத் தான் இருக்க வேண்டும் என்று இஸ்லாம் எந்த வரம்பையும் நிர்ணயிக்கவில்லை. எனவே வயதில் இளைய ஆணைத் திருமணம் செய்வதற்கு எந்தத் தடையும் இல்லை.
புதிதாக இஸ்லாத்தைத் தழுவியவருக்கு உதவிகள் செய்யலாம். அதற்காக அவரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில்லை. திருமணத்தைப் பொறுத்த வரை இஸ்லாம் பெண்களுக்கு முழு உரிமையை வழங்கியுள்ளது.
இணை வைப்பவர்களைத் திருமணம் செய்து கொள்ளத் தடை இருக்கின்றது. மற்றபடி ஒரு பெண் தான் விரும்பிய மணமகனைத் தேர்வு செய்து கொள்ளலாம்.
புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட நபரை நீங்கள் விரும்பினால் அவரை உங்களது தந்தை, அல்லது சகோதரர் போன்ற பொறுப்பாளர் முன்னிலையிலோ, அல்லது சமுதாயத் தலைவரின் முன்னிலையிலோ மணம் முடிக்கலாம். விருப்பம் இல்லாவிட்டால் விட்டு விடலாம். இதில் தவறேதும் இல்லை.
01.01.2015. 21:05 PM