சம்பளம் வாங்கி இமாம் தொழுகை நடத்தலாமா?

சம்பளம் வாங்கி இமாம் தொழுகை நடத்தலாமா?

அற்ப ஆதாயத்திற்காக குர்ஆனை விற்காதீர்கள் (5:44) என்ற வசனத்தின் படி சம்பளம் பெற்று குர்ஆன் ஓதி தொழ வைப்பது ஹராம் என்று ஒரு சகோதரர் கூறுகின்றார். மேலும் சம்பளம் பெற்று தொழவைக்கும் இமாம்கள் பின்னால் நின்று தொழுவது பாவம் என்றும், அவர்களுக்குச் சம்பளம் வழங்குவது பாவம் என்றும் கூறுகின்றார். இது சரியா?

அஹ்மது நைனா, சிங்கப்பூர்.

இமாமுக்குச் சம்பளம் கொடுப்பது கூடுமா என்பதைப் பார்ப்பதற்கு முன், தாங்கள் அதற்கு ஆதாரமாகக் காட்டியுள்ள வசனத்தின் கருத்து என்ன என்பதை முதலில் பார்ப்போம்.

தவ்ராத்தை நாம் அருளினோம். அதில் நேர்வழியும், ஒளியும் இருக்கிறது. (இறைவனுக்கு) கட்டுப்பட்ட நபிமார்களும், யூத வணக்கசாலிகளும், மேதைகளும் அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாக்க அவர்கள் கட்டளையிடப்பட்டதாலும், அதற்கு அவர்கள் சாட்சிகளாக இருந்ததாலும் யூதர்களுக்கு அதன் மூலமே தீர்ப்பளித்து வந்தனர். மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்! எனது வசனங்களை அற்ப விலைக்கு விற்று விடாதீர்கள்! அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் (ஏக இறைவனை) மறுப்பவர்கள்.

திருக்குர்ஆன் 5:44

இந்த வசனத்திலும் 2:41, 2:174, 3:199 ஆகிய வசனங்களிலும், அல்லாஹ்வின் வசனங்களை அற்ப விலைக்கு விற்று விடாதீர்கள என்று கூறப்பட்டுள்ளது.

இமாமத் பணியில் இருப்பவர்கள் குர்ஆன் ஓதி தொழுவிப்பதால் அவர்கள் சம்பளம் வாங்குவது குர்ஆனை விற்பதற்குச் சமம்; எனவே இந்த வசனங்களின் அடிப்படையில் இமாம்களுக்குச் சம்பளம் வழங்கக் கூடாது என்ற வாதம் சரியா?

இந்த வசனங்களில் கூறப்படும் அற்ப விலைக்கு விற்றல் என்பதற்கு வசனங்களை விற்று சம்பாதித்தார்கள் என்று நேரடிப் பொருள் இருந்தாலும் அந்தக் கருத்தில் இந்த வாசகம் குர்ஆனில் பயன்படுத்தப்படவில்லை.

உலக ஆதாயத்திற்காக வேதத்தை மறைத்தல், அதன் படி தீர்ப்பளிக்காமல் இருத்தல், வேதத்தை ஏற்றுக் கொள்ள மறுத்தல், வேதத்திற்கு மாறு செய்தல், வேதத்தின் பொருளை விளங்கிக் கொண்டே அதைப் புறக்கணித்தல் போன்ற செயல்களைப் பற்றிக் குறிப்பிடும் போது தான் அல்லாஹ் இந்தச் சொற்றொடரைப் பயன்படுத்துகின்றான்.

தவ்ராத்தின் அடிப்படையில் தீர்ப்பளிக்காதவர்களை நோக்கித் தான் அற்ப விலைக்கு விற்று விடாதீர்கள் என்று அல்லாஹ் 5:44 வசனத்தில் கூறுகின்றான். யூதர்கள் தங்களின் வேதமான தவ்ராத்தின் அடிப்படையில் தீர்ப்பளிக்காமல், உலக ஆதாயத்திற்காக அதற்கு மாற்றமான தீர்ப்பை வழங்கும் போது அல்லாஹ் அதைக் கண்டிப்பதற்காக இவ்வாறு கூறுகின்றான்.

அந்த இணைகற்பிப்போருக்கு அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் எவ்வாறு உடன்படிக்கை இருக்க முடியும்? மஸ்ஜிதுல் ஹராமில் நீங்கள் உடன்படிக்கை செய்தோரைத் தவிர. அவர்கள் உங்களிடம் நேர்மையாக நடக்கும் வரை அவர்களிடம் நீங்களும் நேர்மையாக நடங்கள்! அல்லாஹ் (தன்னை) அஞ்சுவோரை நேசிக்கிறான். எப்படி? அவர்கள் உங்களை வெற்றி கொண்டால் உங்களிடம் உள்ள உறவையும், உடன்படிக்கையையும் பொருட்படுத்த மாட்டார்கள். தமது வாய்களால் அவர்கள் உங்களைத் திருப்திப்படுத்துகின்றனர். அவர்களின் உள்ளங்கள் மறுக்கின்றன. அவர்களில் அதிகமானோர் குற்றம் புரிந்தவர்கள். அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை அற்ப விலைக்கு விற்கின்றனர். அவனது பாதையை விட்டும் தடுக்கின்றனர். அவர்கள் செய்து கொண்டிருப்பவை கெட்டவையாகும்.

திருக்குர்ஆன் 9:7-9

மக்காவிலிருந்த முஷ்ரிக்குகளை நோக்கி, அல்லாஹ்வின் வசனங்களை அற்ப விலைக்கு விற்கின்றனர் என்று அல்லாஹ் இந்த வசனத்தில் கூறுகின்றான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் மக்கத்து முஷ்ரிக்குகளிடம் வேதம் எதுவும் இருக்கவில்லை. அவர்கள் குர்ஆனை மறுப்பதைத் தான் அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்.

எனவே இந்த அடிப்படையில் பார்த்தால், அல்லாஹ்வின் வசனங்களை அற்ப விலைக்கு விற்று விடாதீர்கள் என்ற திருக்குர்ஆனின் கூற்று நீங்கள் சொன்ன பொருளில் பயன்படுத்தப்படவில்லை என்பதை அறியலாம்.

ஆனால் அதே சமயம் குர்ஆன் ஓதி கூலி வாங்குவதைக் கண்டித்து பல ஹதீஸ்கள் உள்ளன.

مسند أحمد بن حنبل (3/ 428)

 15574 – حدثنا عبد الله حدثني أبي ثنا وكيع عن الدستوائي عن يحيي بن أبي كثير عن أبي راشد عن عبد الرحمن بن شبل قال قال رسول الله صلى الله عليه و سلم : اقرؤوا القرآن ولا تأكلوا به ولا تستكثروا به ولا تجفوا عنه ولا تغلوا فيه

நீங்கள் குர்ஆனை ஓதுங்கள். அதன் மூலம் சாப்பிடாதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் ஷிப்ல் (ரலி)

நூல்கள்: அஹ்மத், அபூயஃலா, தப்ரானி

مسند أحمد بن حنبل

 14898 – حدثنا عبد الله حدثني أبي حدثنا عبد الوهاب يعني بن عطاء أنبأنا أسامة بن زيد الليثي عن محمد بن المنكدر عن جابر بن عبد الله قال : دخل النبي صلى الله عليه و سلم المسجد فإذا فيه قوم يقرؤون القرآن قال اقرؤوا القرآن وابتغوا به الله عز و جل من قبل أن يأتي قوم يقيمونه أقامه القدح يتعجلونه ولا يتأجلونه

குர்ஆனை ஓதுங்கள்! அம்பைச் சீர்படுத்துவது போல் குர்ஆனை திருத்தமாக குர்ஆன் ஒதும் கூட்டம் தோன்றுவார்கள். அதற்கான பலனை அவர்கள் இவ்வுலகில் தேடுவார்கள். மறுமையைத் தேட மாட்டார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

நூல்: அஹ்மத்

இந்த ஹதீஸ்களின் அடிப்படையில் குர்ஆன் ஓதிவிட்டு, அதற்காகக் கூலி வாங்கக் கூடாது என்பது தெளிவாகின்றது. குர்ஆன் ஓதிவிட்டு கூலி வாங்கலாம் என்ற கருத்திலும் ஹதீஸ்கள் உள்ளன.

صحيح البخاري

2276 – حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ أَبِي المُتَوَكِّلِ، عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: انْطَلَقَ نَفَرٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفْرَةٍ سَافَرُوهَا، حَتَّى نَزَلُوا عَلَى حَيٍّ مِنْ أَحْيَاءِ العَرَبِ، فَاسْتَضَافُوهُمْ فَأَبَوْا أَنْ يُضَيِّفُوهُمْ، فَلُدِغَ سَيِّدُ ذَلِكَ الحَيِّ، فَسَعَوْا لَهُ بِكُلِّ شَيْءٍ لاَ يَنْفَعُهُ شَيْءٌ، فَقَالَ بَعْضُهُمْ: لَوْ أَتَيْتُمْ هَؤُلاَءِ الرَّهْطَ الَّذِينَ نَزَلُوا، لَعَلَّهُ أَنْ يَكُونَ عِنْدَ بَعْضِهِمْ شَيْءٌ، فَأَتَوْهُمْ، فَقَالُوا: يَا أَيُّهَا الرَّهْطُ إِنَّ سَيِّدَنَا لُدِغَ، وَسَعَيْنَا لَهُ بِكُلِّ شَيْءٍ لاَ يَنْفَعُهُ، فَهَلْ عِنْدَ أَحَدٍ [ص:93] مِنْكُمْ مِنْ شَيْءٍ؟ فَقَالَ بَعْضُهُمْ: نَعَمْ، وَاللَّهِ إِنِّي لَأَرْقِي، وَلَكِنْ وَاللَّهِ لَقَدِ اسْتَضَفْنَاكُمْ فَلَمْ تُضَيِّفُونَا، فَمَا أَنَا بِرَاقٍ لَكُمْ حَتَّى تَجْعَلُوا لَنَا جُعْلًا، فَصَالَحُوهُمْ عَلَى قَطِيعٍ مِنَ الغَنَمِ، فَانْطَلَقَ يَتْفِلُ عَلَيْهِ، وَيَقْرَأُ: الحَمْدُ لِلَّهِ رَبِّ العَالَمِينَ فَكَأَنَّمَا نُشِطَ مِنْ عِقَالٍ، فَانْطَلَقَ يَمْشِي وَمَا بِهِ قَلَبَةٌ، قَالَ: فَأَوْفَوْهُمْ جُعْلَهُمُ الَّذِي صَالَحُوهُمْ عَلَيْهِ، فَقَالَ بَعْضُهُمْ: اقْسِمُوا، فَقَالَ الَّذِي رَقَى: لاَ تَفْعَلُوا حَتَّى نَأْتِيَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَذْكُرَ لَهُ الَّذِي كَانَ، فَنَنْظُرَ مَا يَأْمُرُنَا، فَقَدِمُوا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرُوا لَهُ، فَقَالَ: «وَمَا يُدْرِيكَ أَنَّهَا رُقْيَةٌ»، ثُمَّ قَالَ: «قَدْ أَصَبْتُمْ، اقْسِمُوا، وَاضْرِبُوا لِي مَعَكُمْ سَهْمًا» فَضَحِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: وَقَالَ شُعْبَةُ: حَدَّثَنَا أَبُو بِشْرٍ، سَمِعْتُ أَبَا المُتَوَكِّلِ، بِهَذَا

நபித்தோழர்களில் சிலர் அரபுப் பிரதேசத்தின் ஒரு கூட்டத்தினரிடம் வந்து தங்கினார்கள். ஆனால் அந்தக் கூட்டத்தினர் அவர்களுக்கு விருந்தளித்து உபசரிக்கவில்லை. இந்நிலையில் அந்தக் கூட்டத்தின் தலைவனை (தேள்) கொட்டிவிட்டது. உங்களிடம் மருந்தோ அல்லது மந்திரிப்பவரோ உள்ளனரா? என்று அவர்கள் கேட்டனர். அதற்கு நபித்தோழர்கள், நீங்கள் எங்களுக்கு விருந்தளித்து உபசரிக்கவில்லை. எனவே எங்களுக்கு ஒரு கூலியை நீங்கள் நிர்ணயித்தால் நாங்கள் உங்களுக்கு உதவுவோம் என்று கூறினார்கள். அந்தக் கூட்டத்தினர் சில ஆடுகள் தருவதாகக் கூறினார்கள். அதன் பின்னர் ஒருவர், அல்ஹம்து சூராவை ஓதி உமிழ்ந்தார். இதனால் அவர் குணமடைந்து விட்டார். அவர்கள் ஆடுகளைக் கொடுத்தனர். நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் இது பற்றி விசாரிக்காது இதைப் பெற மாட்டோம் என்று கூறி, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இது பற்றிக் கேட்டார்கள். இதைக் கேட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள். அல்ஹம்து சூரா ஓதிப் பார்க்கத் தக்கது என்று உனக்கு எப்படித் தெரியும்? என்று கேட்டு விட்டு எனக்கும் அந்த ஆடுகளில் ஒரு பங்கைத் தாருங்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: புகாரி 2276, 5749, 5736, 5007

மற்றொரு அறிவிப்பில், (புகாரி 5737) நபித்தோழர்கள், அல்லாஹ்வின் வேதத்திற்குக் கூலி பெற்று விட்டீரே என்று மந்திரித்தவரைக் கண்டித்தனர். இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்ட போது, கூலிகள் பெறுவதற்கு மிகவும் அருகதை உள்ளது அல்லாஹ்வின் வேதம் தான் என்று கூறினார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த இரு வகையான ஹதீஸ்களும் முரணாகத் தோன்றினாலும் மறுமையின் நன்மையை நாடி ஓதுவதற்குக் கூலி வாங்கக் கூடாது என்றும், நோய் நிவாரணத்திற்காக ஓதிப் பார்த்து அதில் நிவாரணம் கிடைத்தால் கூலி வாங்கலாம் என்றும் விளங்கிக் கொள்ளும் வகையில் இந்த ஹதீஸ்களின் வாசக அமைப்பு அமைந்துள்ளது.

எனவே இறந்தவர்களுக்காக குர்ஆன் ஓதி, அதற்காகக் கூலி வாங்குவது போன்ற காரியங்கள் கூடாது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

பள்ளிவாசலில் இமாமாக வேலை பார்ப்பவர்களுக்குக் கூலி வழங்கக் கூடாது என்பதற்கு நீங்கள் சுட்டிக் காட்டிய வசனத்திலோ, அல்லது மேற்கண்ட ஹதீஸ்களிலோ நேரடியாக ஆதாரம் எதுவும் இல்லை.

مسند أحمد بن حنبل

 16314 – حدثنا عبد الله حدثني أبي ثنا عبد الصمد قال ثنا حماد عن الجريري عن أبي العلاء عن عثمان بن أبي العاص قال قلت : يا رسول الله اجعلني إمام قومي فقال أنت إمامهم واقتد بأضعفهم واتخذ مؤذنا لا يأخذ على أذانه أجرا

تعليق شعيب الأرنؤوط : إسناده صحيح على شرط مسلم

என் சமுதாயத்துக்கு என்னை இமாமாக நியமியுங்கள் என்று நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள்  நீ அவர்களின் இமாமாவாய். அவர்களில் பலவீனர்களைக் கவனத்தில் கொள்வாயாக! பாங்குக்காக கூலி எதுவும் பெறாத முஅத்தினை ஏற்படுத்துவீராக! என்று கூறினார்கள்

அறிவிப்பவர்: உஸ்மான் பின் அபில் ஆஸ் (ரலி)

நூற்கள்: அஹ்மத், திர்மிதீ, நஸயீ

இந்த ஹதீஸில் கூலி வாங்காத முஅத்தினை ஏற்படுத்துமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்பதால், இமாமத்துக்கும் அதே சட்டம் தான்! பாங்கைப் போலவே தொழுகை, வணக்கமாக இருப்பதால் தொழுகை நடத்துவற்குச் சம்பளம் கொடுப்பதோ, வாங்குவதோ கூடாது என்பதற்கு இந்த ஹதீஸை ஆதாரமாகக் காட்டினால் அது சரியானதுதான்.

இமாமத், அல்லது பாங்கு சொல்வது போன்ற வேலைகளுக்காக மட்டுமே ஆட்களை நியமிக்காமல் பள்ளிவாசல் பராமரிப்பு, மார்க்கக் கல்வி பயிற்றுவித்தல், இதர நிர்வாகப் பணிகள் போன்றவற்றுக்காக ஒருவரை நியமித்து அதற்காகச் சம்பளம் வழங்குவதற்கு மார்க்கத்தில் தடை இல்லை. இத்தகைய பணிகளைக் கவனிப்பதற்கு ஆட்கள் இல்லாமல் ஒரு பள்ளிவாசலைப் பராமரிக்க முடியாது.

தொழுகை நடத்துதல் என்பது மட்டுமே ஒரு வேலை அல்ல! ஒவ்வொரு முஸ்லிமும் நிறைவேற்ற வேண்டிய கடமை தான் தொழுகை! ஐவேளை ஜமாஅத்திற்கு வருபவர்களில் குர்ஆன் ஓதத் தெரிந்த ஒருவர் தொழுகை நடத்தலாம்.

சம்பளம் வாங்கும் இமாமாக இருந்தாலும், அவரைப் பின்பற்றித் தொழுவதற்கு மார்க்கத்தில் தடையேதும் இல்லை. தொழுகைக்காக சம்பளம் கொடுப்பதும், வாங்குவதும் தான் ஹதீஸ் அடிப்படையில் தவறே தவிர பின்பற்றித் தொழுவதற்குரிய தகுதியில் இது அடங்காது.

பொதுவாகவே மார்க்கப் பணிகளில் ஈடுபடுவோருக்கு எந்த உதவியும் செய்யக் கூடாது, அவர்கள் தரித்திரர்களாகவே எப்போதும் இருக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக உள்ளது.

மவ்லிது, ஃபாத்திஹா போன்ற பித்அத்துக்கள் உருவானதற்கும், மார்க்கத்தின் பெயரால் பொருளீட்டும் நிலை தோன்றியதற்கும் சமுதாயத்தில் நிலவுகின்ற இந்த மனநிலையும் ஒரு காரணம் என்றால் மிகையல்ல!

மார்க்கப் பணிகளுக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட ஏழைகளுக்கு உதவிகள் வழங்குவதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது மட்டுமல்லாமல் வலியுறுத்தப்பட்டும் உள்ளது.

(பொருள் திரட்டுவதற்காக) பூமியில் பயணம் மேற்கொள்ள இயலாதவாறு அல்லாஹ்வின் பாதையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ஏழைகளுக்கு (தர்மங்கள்) உரியது. (அவர்களைப் பற்றி) அறியாதவர், (அவர்களின்) தன்மான உணர்வைக் கண்டு அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்வார். அவர்களின் அடையாளத்தை வைத்து அவர்களை அறிந்து கொள்வீர்! மக்களிடம் கெஞ்சிக் கேட்க மாட்டார்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்.

திருக்குர்ஆன் 2:273

பொதுவாக ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்குத் தர்மம் செய்யலாம் என்பதை அனைவரும் அறிவர். ஒருவர் ஏழையாக இருப்பதுடன் மார்க்கப் பணிக்காகத் தன்னை அர்ப்பணித்துள்ளார். மார்க்கப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டது தான் அவர் ஏழையாக இருப்பதற்கே காரணமாகவும் உள்ளது. இதன் காரணமாக அவரால் பொருளீட்டவும் இயலவில்லை.

இத்தகையவர் ஏழையாக இருக்கிறார் என்பதற்காக மட்டுமின்றி மார்க்கப் பணியிலும் ஈடுபடுகிறார் என்பதையும் கவனத்தில் கொண்டு பொருளாதாரம் வழங்குவது தவறில்லை என்று இவ்வசனத்திலிருந்து தெரிகிறது.

ஒருவர் பொருளீட்டுவதற்கான முயற்சி எதனையும் மேற்கொள்ளாமல் முழுக்க முழுக்க மார்க்கப் பணிக்காக அர்ப்பணித்துக் கொள்வது குறை கூறப்படக் கூடாது; மாறாக இது பாராட்டப்பட வேண்டிய சேவை என்பதை இவ்வசனத்திலிருந்து அறியலாம்.

இவ்வாறு மார்க்கப் பணிகளில் தம்மை அர்ப்பணித்துக் கொள்வோர் வேறு வருமானத்திற்கு வழியில்லை என்பதால் மற்றவர்களிடம் யாசிப்பதோ, சுயமரியாதையை இழப்பதோ கூடாது.

எந்த நிலையிலும் எவரிடமும் கேட்பதில்லை என்பதில் உறுதியாக அவர்கள் நிற்க வேண்டும். அவ்வாறு சுயமரியாதையைப் பேணுபவர்களுக்குத் தான் மார்க்கப் பணியைக் காரணம் காட்டி உதவியும் செய்ய வேண்டும். அவர்கள் யாசிக்க ஆரம்பித்து விட்டால் இந்தத் தகுதியை இழந்து விடுகிறார்கள் என்பதையும் இவ்வசனத்திலிருந்து அறியலாம்.

01.01.2015. 20:28 PM

Leave a Reply