மனித உடலில் ஜின்கள் மேலாடுமா?

மனித உடலில் ஜின்கள் மேலாடுமா?

தியாகதுருகம் என்ற ஊரிலுள்ள என் உறவுக்காரப் பெண் ஒருவருக்கு உடம்பில் ஜின் இருப்பதாகக் கூறுகின்றார்கள். அவருக்கு அபார சக்தி இருப்பதாகவும், இரவு 12 மணி, 1 மணிக்கு எழுந்து தொழுவதாகவும் (அந்தப் பெண் தொழும் வழக்கம் இல்லாதவர்) மற்றவர்கள் கேட்டால் தெரியாது என்று கூறுவதாகவும் சொல்கின்றனர். மனித உடம்பில் ஜின் இருக்க வாய்ப்புள்ளதா?

கே. மெஹபூப், சென்னை – 81

குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் ஜின் என்ற படைப்பினம் உள்ளது; அது மனிதர்களைப் போன்றே பகுத்தறிவு வழங்கப்பட்ட படைப்பு என்றும், மனிதர்களை விட சக்தி வாய்ந்தது என்றும் ஒரு முஸ்லிம் நம்ப வேண்டும்.

ஆனால் ஜின்கள் மனிதர்கள் மேல் வந்து மனிதனை ஆட்டுவிக்கும் என்பதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை.

ஒரு மனிதனின் உடம்பில் ஜின் இருக்கின்றது என்றால் அந்த மனிதனுக்கு மனித உள்ளம், ஜின் உள்ளம் என்று இரண்டு உள்ளங்கள் இருப்பதாக ஆகின்றது. அதிலும் இரவில் ஜின் உள்ளத்தைக் கொண்டு தொழுகின்றாள், பகலில் தெரியாது என்று கூறுகிறாள் என்றெல்லாம் கூறுவது இரண்டு உள்ளங்கள் அப்பெண்ணிடம் இருக்கின்றது என்று தான் அர்த்தம்.

ஆனால் இவ்வாறு இரண்டு உள்ளங்கள் யாருக்கும் இருக்க முடியாது என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.

எந்த மனிதருக்குள்ளும் இரண்டு உள்ளங்களை அல்லாஹ் ஏற்படுத்தவில்லை.

திருக்குர்ஆன் 33:4

மனிதனிடம் இரண்டு உள்ளங்களை ஏற்படுத்தவில்லை என்று இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான். இதற்கு மாற்றமாக அப்பெண் கூறுவதால் இது ஏமாற்று வேலையாக இருக்கலாம். மற்றவர்கள் தன்னை மதிக்க வேண்டும் என்பதற்காகவோ, அல்லது வேறு ஏதேனும் ஆதாயம் கருதியோ அப்பெண் இவ்வாறு நடிக்கலாம்.

அவர் நடிக்கவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிந்தால் அவர் மன நோய்க்கு ஆளாகியிருக்கின்றார் என்பதில் சந்தேகமில்லை.

திருமணம் அல்லது வேறு ஏதேனும் தேவைகள் இருப்பவர்கள் அதை நேரடியாக வீட்டில் சொல்ல முடியாமல் மனதிற்குள்ளேயே வைத்திருப்பதால் மன அழுத்தம் ஏற்பட்டு, இது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். இது, ஹிஸ்டீரியா என்ற ஒருவகை மன நோயாகும்.

அப்பெண்ணுக்கு அபார சக்தி இருப்பதாகக் கூறி, அதற்கு ஆதாரமாக இரவில் எழுந்து தொழுவதைக் கூறியுள்ளீர்கள். இரவில் எழுந்து தொழுவதெல்லாம் அபார சக்தி கிடையாது. ஜின்களின் சக்தியைப் பற்றி திருக்குர்ஆன் தெளிவாகக் கூறுகின்றது.

பிரமுகர்களே! அவர்கள் கட்டுப்பட்டு என்னிடம் வருவதற்கு முன்னால் அவளது சிம்மாசனத்தை என்னிடம் கொண்டு வருபவர் உங்களில் யார்? என்று (ஸுலைமான்) கேட்டார். உங்கள் இடத்திலிருந்து நீங்கள் எழுவதற்கு முன்னால் அதை உங்களிடம் நான் கொண்டு வருகிறேன். நான் நம்பிக்கைக்குரியவன்; வலிமையுள்ளவன் என்று இப்ரீத் என்ற ஜின் கூறியது. கண் மூடித் திறப்பதற்குள் அதை நான் உம்மிடம் கொண்டு வருகிறேன் என்று வேதத்தைப் பற்றிய ஞானம் பெற்றது (ஜின்) கூறியது. தன் முன்னே அது வந்திருக்க அவர் கண்டதும், நான் நன்றி செலுத்துகிறேனா? அல்லது நன்றி மறக்கிறேனா? என்று என்னைச் சோதிப்பதற்காக இது எனது இறைவனின் அருட்கொடை. நன்றி செலுத்துபவர் தமக்காகவே நன்றி செலுத்துகிறார். யார் நன்றி மறக்கிறாரோ என் இறைவன் தேவையற்றவன்; கண்ணியமிக்கவன் (என்று ஸுலைமான் கூறினார்)

திருக்குர்ஆன் 27:38-40

கண் மூடித் திறப்பதற்குள் வேறு ஒரு நாட்டிற்குச் சென்று அந்த நாட்டு அரசியின் சிம்மாசனத்தைத் தூக்கி வரும் அளவுக்கு ஜின்களுக்கு ஆற்றல் இருந்ததாக இந்த வசனங்களில் அல்லாஹ் சொல்கின்றான்.

நீங்கள் கூறும் அந்தப் பெண் இது போன்ற அற்புதத்தைச் செய்து காட்டுவாரா? என்று கேட்டுப் பாருங்கள். தமிழ்நாட்டின் முதலமைச்சரான ஜெயலலிதாவின் நாற்காலியைத் தூக்கிக் கொண்டு வந்து, அதை அபார சக்தி என்று கூறினால் ஒரு அர்த்தம் இருக்கும். இரவில் எழுந்து தொழுவதெல்லாம் சாதாரணமாக எல்லோரும் செய்யக் கூடிய செயல் தான். இதை வைத்து ஜின் மேலாடுவதாகக்  கூறுவது தெளிவான ஏமாற்று வேலை! முறையாக விசாரித்தால் உண்மை வெளியாகும்.

01.01.2015. 20:24 PM

Leave a Reply