திருமணத்திற்குப் பின்பு மனைவி வீட்டில் கணவன் வாழலாமா?
திருமணத்திற்குப் பிறகு பெண், கணவன் வீட்டில் வாழ வேண்டுமா? அல்லது கணவன், மனைவியின் வீட்டில் வாழ வேண்டுமா?
சமீரா அஜீஸ், அதிராம்பட்டிணம்.
பதில் :
சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள்.
திருக்குர்ஆன் 4:34
ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள் என்றும், ஆண்களே பெண்களுக்காக பொருள் செலவு செய்ய வேண்டும் என்றும் இந்த வசனம் கூறுகின்றது. இந்த அடிப்படையில் மனைவிக்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் அனைத்தும் கணவன் தான் கொடுத்தாக வேண்டும்.
உங்கள் வசதிக்கேற்ப அவர்களை நீங்கள் குடியிருக்கும் இடத்தில் குடியமர்த்துங்கள்! அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி அவர்களுக்குத் தீங்கு செய்யாதீர்கள்! அவர்கள் கர்ப்பிணிகளாக இருந்தால் அவர்கள் பிரசவிக்கும் வரை அவர்களுக்காகச் செலவிடுங்கள்!
திருக்குர்ஆன் 65:6
இந்த வசனத்தில் தலாக் விடப்பட்ட பெண்களுக்கு, அவர்கள் கர்ப்பிணிகளாக இருந்தால் பிரசவிக்கும் வரை கணவன் செய்ய வேண்டிய கடமையைப் பற்றி அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான். இதில் கணவன், மனைவிக்கு இருப்பிடத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று இறைவன் கட்டளையிடுகின்றான். தலாக் விடப்பட்ட பெண்களுக்கே கணவன் இருப்பிடம் அமைத்துக் கொடுக்க வேண்டும் எனும் போது, சேர்ந்து வாழும் போது சொல்ல வேண்டியதே இல்லை. கண்டிப்பாக கணவனின் வீட்டில் தான் மனைவி இருக்க வேண்டுமே தவிர, மனைவியின் வீட்டில் கணவன் போய் இருப்பது குர்ஆனின் கட்டளைக்கு மாற்றமானது.
வரதட்சணை வாங்கவில்லை என்று கூறிக் கொண்டு, பெண்ணிடமிருந்து வீடு வாங்கும் வழக்கம் ஏகத்துவவாதிகள் என்று தங்களைக் கூறிக் கொள்ளும் சிலரிடம் உள்ளது. குறிப்பாக காயல்பட்டிணம், கீழக்கரை போன்ற பகுதிகளில் மாப்பிள்ளைக்கு வீடு கொடுக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாகவே உள்ளது.
ஆண்கள் செலவு செய்வதால் தான் பெண்களை நிர்வாகம் செய்யக் கூடிய தகுதி ஆண்களுக்கு உள்ளது என்று அல்லாஹ் கூறுகின்றான். அதற்கு மாற்றமாக பெண் வீட்டில் போய் ஆண் இருக்கும் போது, இயற்கையாகவே ஆண்களுக்கு அல்லாஹ் வழங்கியுள்ள அந்த நிர்வாகத் திறன் இல்லாமல் போய் அங்கு ஆண்கள் அடிமைகளாக நடத்தப்படுவதையும் நாம் பார்க்க முடிகின்றது.
எனவே அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்றமாக பெண் வீட்டில் போய் கணவன் தங்கும் நிலை முற்றிலும் மாற வேண்டும். வரதட்சணை திருமணங்களைப் புறக்கணிப்பது போல், இது போன்று பெண்ணிடமிருந்து வீடு வாங்கி நடத்தப்படும் திருமணங்களையும் ஏகத்துவவாதிகள் புறக்கணிக்க வேண்டும்.
23.12.2014. 19:13 PM