திருமணம் செய்யாமல் இருக்கலாமா?
கேள்வி:
இஸ்லாத்தில் திருமணம் செய்யாமல் இருக்க அனுமதியுண்டா?
பதில் :
ஒவ்வொரு மனிதனுக்கும் அல்லாஹ் இயற்கையாகவே பாலுணர்வை ஏற்படுத்தியுள்ளான். இந்த ஆசையை முறையாக அவன் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக திருமணம் என்ற முறையை இஸ்லாம் வலியுறுத்துகிறது.
எனவே பாலுணர்வு உள்ளவர் கட்டாயமாகத் திருமணம் முடிக்க வேண்டும். இவர் திருமணத்தைப் புறக்கணித்தால் ஒரு நேரம் இல்லாவிட்டால் இன்னொரு நேரத்தில் தவறான பாதைக்குச் சென்று விடுவார். மனிதர் ஒழுக்கத்துடன் வாழ்வதற்கு திருமணம் சிறந்த வழிமுறை என்பதால் இதை மார்க்கம் வலியுறுத்துகின்றது.
உங்களில் வாழ்க்கைத் துணையற்றவர்களுக்கும், நல்லோரான உங்களின் ஆண் அடிமைகளுக்கும், பெண் அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள்! அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தனது அருளால் அவர்களைத் தன்னிறைவு பெற்றோராக ஆக்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.
திருக்குர்ஆன் 24:32
صحيح البخاري
5066 – حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ: حَدَّثَنِي عُمَارَةُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، قَالَ: دَخَلْتُ مَعَ عَلْقَمَةَ، وَالأَسْوَدِ عَلَى عَبْدِ اللَّهِ، فَقَالَ عَبْدُ اللَّهِ: كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَبَابًا لاَ نَجِدُ شَيْئًا، فَقَالَ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا مَعْشَرَ الشَّبَابِ، مَنِ اسْتَطَاعَ البَاءَةَ فَلْيَتَزَوَّجْ، فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ وَأَحْصَنُ لِلْفَرْجِ، وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ فَإِنَّهُ لَهُ وِجَاءٌ»
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
இளைஞர்களே! திருமணம் செய்துகொள்ள சக்தி பெற்றோர் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். (அதற்கு) இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும்! ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களிடம் சொன்னார்கள்.
நூல் : புகாரி 5066
திருணம் செய்து கொள்வது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறையாகும். திருமணம் செய்து கொள்ள தகுதி இருந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் துறவறம் மேற்கொள்வதற்கு அனுமதியில்லை. இத்தகையவர் தன்னைச் சார்ந்தவர் இல்லை என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
صحيح البخاري
5063 – حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، أَخْبَرَنَا حُمَيْدُ بْنُ أَبِي حُمَيْدٍ الطَّوِيلُ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: جَاءَ ثَلاَثَةُ رَهْطٍ إِلَى بُيُوتِ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَسْأَلُونَ عَنْ عِبَادَةِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا أُخْبِرُوا كَأَنَّهُمْ تَقَالُّوهَا، فَقَالُوا: وَأَيْنَ نَحْنُ مِنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَدْ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَّرَ، قَالَ أَحَدُهُمْ: أَمَّا أَنَا فَإِنِّي أُصَلِّي اللَّيْلَ أَبَدًا، وَقَالَ آخَرُ: أَنَا أَصُومُ الدَّهْرَ وَلاَ أُفْطِرُ، وَقَالَ آخَرُ: أَنَا أَعْتَزِلُ النِّسَاءَ فَلاَ أَتَزَوَّجُ أَبَدًا، فَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيْهِمْ، فَقَالَ: «أَنْتُمُ الَّذِينَ قُلْتُمْ كَذَا وَكَذَا، أَمَا وَاللَّهِ إِنِّي لَأَخْشَاكُمْ لِلَّهِ وَأَتْقَاكُمْ لَهُ، لَكِنِّي أَصُومُ وَأُفْطِرُ، وَأُصَلِّي وَأَرْقُدُ، وَأَتَزَوَّجُ النِّسَاءَ، فَمَنْ رَغِبَ عَنْ سُنَّتِي فَلَيْسَ مِنِّي»
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து கேட்டனர். அது பற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போது, அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு), முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டு விட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே என்று சொல்லிக் கொண்டனர். அவர்களில் ஒருவர், நான் எப்போதும் இரவில் தொழுது கொண்டே இருக்கப் போகிறேன் என்றார். இன்னொருவர், நான் ஒரு நாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகிறேன் என்று கூறினார். மூன்றாம் நபர் நான் பெண்களை விட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன். ஒரு போதும் மணமுடித்துக் கொள்ள மாட்டேன் என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அந்தத் தோழர்களிடம்) வந்து, இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள் தாமா! அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை விட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டுவிடவும் செய்கிறேன்; தொழுகவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். ஆகவே, என் வழிமுறையை யார் கைவிடுகின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர் என்று சொன்னார்கள்.
நூல் : புகாரி 5063
திருமணம் செய்வது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழி மட்டுமல்ல. அனைத்து நபிமார்களின் வழிமுறையாகும்.
உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும், மக்களையும் ஏற்படுத்தினோம்.
திருக்குர்ஆன் 13:38
திருமணம் செய்தால் சுதந்திரம் பறிபோய் விடும் என்பதற்காக திருமணத்தைப் புறக்கணிப்பவர்களும் இருக்கின்றார்கள். இதற்காக திருமணத்தைப் புறக்கணிப்பது தவறாகும்.
அதே நேரத்தில் சிலருக்கு இல்லற வாழ்வில் ஈடுபட முடியாது. தன் வாழ்க்கைத் துணையின் இல்லறத் தேவையை நிறைவேற்ற முடியாது. இந்த நிலை இருந்தால் இத்தகையவர்கள் மட்டும் திருமணத்தைத் தவிர்க்க வேண்டும். இவர்கள் திருமணம் செய்தால் பெண்ணின் வாழ்க்கை பாதிக்கும்.
28.10.2011. 13:33 PM