திருமணம் விதிப்படி தான் நடக்கிறதா?

திருமணம் விதிப்படி தான் நடக்கிறதா?

திருமணம் இறைவனால் உறுதி செய்யப்பட்டதா? அல்லது மனிதனால் ஏற்படுத்திக் கொள்ளும் உறவா? நாம் திருமணம் முடிக்கப் போகும் பெண் யார் என்று முன்கூட்டியே இறைவனால் தீர்மானிக்கப்பட்டு இருக்குமா? அப்படியெனில் காதலும் விருப்பமும் தேவை இல்லாத ஒன்றுதானே? ஒரு பெண்ணுக்கு திருமணம் தடைப்பட்டால் அது விதியின் அடிப்படையில் அமைந்ததா 

ராஜ் கபூர்

பதில்

உங்கள் கேள்வி திருமணம் பற்றியது மட்டும் அல்ல. விதியைக் குறித்த நம்பிக்கை தொடர்பான கேள்வியாகும். நீங்கள் கேட்ட கேள்வியை இன்னும் பல விஷயங்களில் கேட்க முடியும். 

உலகில் நடக்கின்ற அனைத்து நிகழ்வுகளும் சிறிய அணு அசைவது உட்பட இறைவனுடைய நாட்டப்படியே நடக்கின்றன.

ஒருவர் நல்லவனாக அல்லது கெட்டவனாக வாழ்வது, செல்வந்தனாக அல்லது ஏழையாக வாழ்வது உள்ளிட்ட எல்லா விஷயமும் இறைவனால் தீர்மானிக்கப்பட்டே நடக்கிறது. அந்த வகையில் திருமணமும் விதியின் படிதான் நடக்கின்றது.

நமக்கு எப்போது திருமணம் ஆகும்? யார் நமக்கு மனைவியாக அமைவார்? இவையும் கூட ஏற்கனவே இறைவனால் முடிவு செய்யப்பட்டவை தான். இதற்கு விதி என்று சொல்லப்படுகின்றது.

நடந்து முடிந்த விஷயங்களுக்கே விதியைக் காரணம் காட்டலாம். இனி நடக்கவிருக்கின்ற விஷயங்களைப் பொறுத்தவரை விதியைக் காரணம் காட்டி செயல்படாமல் இருந்துவிடக் கூடாது. நாம் செய்ய வேண்டிய அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.

விதியைக் காரணம் காட்டி நல்ல அமல்கள் செய்யாமல் இருந்து விடலாமா? என்று நபித்தோழர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அளித்த பதிலை இங்கே தருகிறோம்.

صحيح البخاري
1362 – حَدَّثَنَا عُثْمَانُ، قَالَ: حَدَّثَنِي جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: كُنَّا فِي جَنَازَةٍ فِي بَقِيعِ الغَرْقَدِ، فَأَتَانَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَعَدَ وَقَعَدْنَا حَوْلَهُ، وَمَعَهُ مِخْصَرَةٌ، فَنَكَّسَ فَجَعَلَ يَنْكُتُ بِمِخْصَرَتِهِ، ثُمَّ قَالَ: «مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ، مَا مِنْ نَفْسٍ مَنْفُوسَةٍ إِلَّا كُتِبَ مَكَانُهَا مِنَ الجَنَّةِ وَالنَّارِ، وَإِلَّا قَدْ كُتِبَ شَقِيَّةً أَوْ سَعِيدَةً» فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، أَفَلاَ نَتَّكِلُ عَلَى كِتَابِنَا وَنَدَعُ العَمَلَ؟ فَمَنْ كَانَ مِنَّا مِنْ أَهْلِ السَّعَادَةِ فَسَيَصِيرُ إِلَى عَمَلِ أَهْلِ السَّعَادَةِ، وَأَمَّا مَنْ كَانَ مِنَّا مِنْ أَهْلِ الشَّقَاوَةِ فَسَيَصِيرُ إِلَى عَمَلِ أَهْلِ الشَّقَاوَةِ، قَالَ: «أَمَّا أَهْلُ السَّعَادَةِ فَيُيَسَّرُونَ لِعَمَلِ السَّعَادَةِ، وَأَمَّا أَهْلُ الشَّقَاوَةِ فَيُيَسَّرُونَ لِعَمَلِ الشَّقَاوَةِ» ثُمَّ قَرَأَ: {فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى وَصَدَّقَ بِالحُسْنَى} [الليل: 6] الآيَةَ

அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள் :

 
நாங்கள் பகீஉல் கர்கத் என்னும் பொது மையவாடியில் ஒரு ஜனாஸாவில் கலந்து கொண்டோம் அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து உட்கார்ந்ததும் நாங்களும் அவர்களைச் சுற்றி அமர்ந்து கொண்டோம். அவர்களிடம்  ஒரு சிறிய கைத்தடி இருந்தது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலை குனிந்தவர்களாகத் தமது கைத்தடியால் தரையைக் கீறிக்கொண்டு, "உங்களில் யாரும் அல்லது எந்த ஆத்மாவும் அதன் இருப்பிடம் சொர்க்கமா அல்லது நரகமா என்பது பற்றித் தீர்மானிக்கப்படாமலில்லை; தீய கதியுடையதா, நற்பேறுடையதா என்பதும் நிர்ணயிக்கப்படாமலில்லை'' எனக் கூறினார்கள். உடனே ஒருவர்,  "அல்லாஹ்வின் தூதரே! அப்படியாயின் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டு விட்டதை நம்பி, (நற்) செயல்களில் ஈடுபடுவதை நாம் விட்டு விடலாமா? ஏனெனில் நம்மில் யார் நல்லவர்களாக(த் தீர்மானிக்கப்பட்டு) உள்ளார்களோ அவர்கள் நிச்சயமாக நல்லவர்களின் செயல்களில் ஈடுபடுவார்கள்; யார் தீயவர்களாக(த் தீர்மானிக்கப்பட்டு) உள்ளார்களோ அவர்கள் நிச்சயமாகத் தீயவர்களின் செயல்களில் ஈடுபடுபவர்கள் தாமே?'' என்றதும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “"நம்மில் யார் நல்லவர்களாக(த் தீர்மானிக்கப்பட்டு) உள்ளார்களோ அவர்களுக்கு நல்லமல்கள் செய்வது எளிதாக்கப்படும்; யார் தீயவர்களாக(த் தீர்மானிக்கப்பட்டு) உள்ளார்களோ அவர்களுக்குத் தீய காரியங்கள் எளிதாக்கப்படும்'' என்று கூறிவிட்டு, “"எவர் தான தர்மம் கொடுத்து, பயபக்தியுடன் நடந்து, நல்லவற்றை உண்மையாக்குகின்றாரோ…''என்ற (92: 5,6ஆகிய) வசனங்களை ஓதிக் காட்டினார்கள்.

நூல் : புகாரி 1362

நமக்கு எப்படிப்பட்ட மனைவி அமைவாள் என்பது நமக்குத் தெரியாது. அல்லாஹ்வின் முடிவு என்னவென்பது நமக்குத் தெரியாமல் இருக்கும் போது நல்லதை நோக்கியே நமது முயற்சி இருக்க வேண்டும்.

எல்லா விஷயங்களிலும் இவ்வாறு தான் நாம் நடந்துகொள்கிறோம். அல்லாஹ் நமக்கு விதித்த செல்வம் எப்படியும் வந்துவிடும் என்று கூறிக் கொண்டு வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருக்க மாட்டோம். நம்மால் முடிந்த அளவிற்கு முயற்சிகளை மேற்கொள்வோம்.

நோய் வந்தால் இறைவன் நாட்டப்படி நடக்கட்டும் என்று கூறி மருத்துவம் செய்யாமல் இருப்பதில்லை. நமது முயற்சியையும் மீறி ஏதேனும் நடந்தாலே விதியைக் காரணம் காட்டுவோம். இது போன்றே மனைவியைத் தேர்வு செய்யும் விஷயத்திலும் நடந்து கொள்ள வேண்டும்.

அல்லாஹ் நல்லவற்றையும் தீயவற்றையும் நமக்கு காட்டித் தந்துள்ளான். இவற்றில் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்கின்ற அதிகாரத்தையும், ஆற்றலையும் இந்த உலகத்தில் நமக்கு வழங்கியிருக்கிறான். அறிவைத் தந்திருக்கின்றான். எத்தகைய வாழ்க்கைத் துணையை தேர்வு செய்ய வேண்டும் என்ற வழிகாட்டலையும் கற்றுத் தந்துள்ளான்.

எனவே வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்கின்ற விஷயத்தில் விதியின் மீது பழிபோடாமல் சிந்தித்து செயல்பட வேண்டும்.

Leave a Reply