தொலைக்காட்சியில் பெண்களைப் பார்க்கலாமா?

தொலைக்காட்சியில் பெண்களைப் பார்க்கலாமா?

பார்வையைத் தாழ்த்தும்படி திருக்குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளதால் டிவியில் பெண்களைப் பார்ப்பதற்கும் தடை உண்டா?

சமீா்

பதில் :

பெண்களை நேரடியாகப் பார்ப்பதற்கு எந்த அளவுக்கு தடை உண்டோ அதே தடை தொலைக்காட்சியில் பார்ப்பதற்கும் பொருந்தும். எந்த அளவுக்கு அனுமதி உள்ளதோ அதே அனுமதி தொலைக்காட்சியில் பார்ப்பதற்கும் பொருந்தும்.

எவ்விதத் தேவையுமில்லாமல் தவறான நோக்கத்தில் ஆண்கள் பெண்களைப் பார்ப்பதை இஸ்லாம் தடுக்கின்றது. இறைநம்பிக்கையாளர்களான ஆண்கள் அவ்வாறு பார்ப்பதை விட்டும் தங்களின் பார்வையைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் என இறைவன் கட்டளையிட்டுள்ளான்.

(முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக!

திருக்குர்ஆன் 24:30,31

صحيح البخاري

6243 – حَدَّثَنَا الحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: لَمْ أَرَ شَيْئًا أَشْبَهَ بِاللَّمَمِ مِنْ قَوْلِ أَبِي هُرَيْرَةَ، ح حَدَّثَنِي مَحْمُودٌ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ ابْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: مَا رَأَيْتُ شَيْئًا أَشْبَهَ بِاللَّمَمِ مِمَّا قَالَ أَبُو هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ كَتَبَ عَلَى ابْنِ آدَمَ حَظَّهُ مِنَ الزِّنَا، أَدْرَكَ ذَلِكَ لاَ مَحَالَةَ، فَزِنَا العَيْنِ النَّظَرُ، وَزِنَا اللِّسَانِ المَنْطِقُ، وَالنَّفْسُ تَمَنَّى وَتَشْتَهِي، وَالفَرْجُ يُصَدِّقُ ذَلِكَ كُلَّهُ وَيُكَذِّبُهُ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

விபச்சாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது. இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவையனைத்தையும் உண்மையாக்குகிறது; அல்லது பொய்யாக்குகிறது.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 6243

سنن الترمذي

2776 – حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ قَالَ: أَخْبَرَنَا يُونُسُ بْنُ عُبَيْدٍ، عَنْ عَمْرِو بْنِ سَعِيدٍ، عَنْ أَبِي زُرْعَةَ بْنِ عَمْرِو بْنِ جَرِيرٍ، عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ نَظْرَةِ الفُجَاءَةِ «فَأَمَرَنِي أَنْ أَصْرِفَ بَصَرِي»

ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் (அன்னியப் பெண் மீது) திடீரெனப் படும் பார்வையைப் பற்றிக் கேட்டேன். நான் என்னுடைய பார்வையைத் திருப்ப வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

நூல் : திர்மிதி

صحيح البخاري

1513 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: كَانَ الفَضْلُ رَدِيفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَاءَتِ امْرَأَةٌ مِنْ خَشْعَمَ، فَجَعَلَ الفَضْلُ يَنْظُرُ إِلَيْهَا وَتَنْظُرُ إِلَيْهِ، وَجَعَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَصْرِفُ وَجْهَ الفَضْلِ إِلَى الشِّقِّ الآخَرِ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ فَرِيضَةَ اللَّهِ عَلَى عِبَادِهِ فِي الحَجِّ أَدْرَكَتْ أَبِي شَيْخًا كَبِيرًا، لاَ يَثْبُتُ عَلَى الرَّاحِلَةِ، أَفَأَحُجُّ عَنْهُ؟ قَالَ: «نَعَمْ»، وَذَلِكَ فِي حَجَّةِ الوَدَاعِ

(இளைஞரான) ஃபழ்ல் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் (ஒட்டகத்தில்) அமர்ந்து கொண்டிருந்த போது கஸ்அம் கோத்திரத்தைச் சார்ந்த ஒரு பெண் வந்தார். உடனே ஃபழ்ல் அப்பெண்ணைப் பார்க்க அப்பெண்ணும் அவரைப் பார்த்தார். (இதைக் கவனித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்) ஃபழ்லின் முகத்தை வேறு திசையில் திருப்பினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி 1513

பார்வைகளிலும், பேச்சுக்களிலும் கூட விபச்சாரம் என்று மேற்கண்ட ஹதீஸ்கள் கூறுகின்றன. இதனடிப்படையில் தொலைக்காட்சியிலும், வீடியோவிலும் தகாத முறையில் பெண்களைப் பார்ப்பது பாவம் என்று தெரிகின்றது.

பெண்கள் ஹிஜாபைக் கடைபிடித்திருக்கும் நிலையில் அவா்களைப் பார்ப்பதற்கு தேவை ஏற்பட்டால் அப்போது அந்நிய ஆண்கள் பெண்களைப் பார்க்கலாம். இதை மார்க்கம் அனுமதிக்கின்றது. இதற்கு நபிமொழிகளில் ஏரளாமான ஆதாரங்கள் உள்ளன.

صحيح البخاري

98 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَيُّوبَ، قَالَ: سَمِعْتُ عَطَاءً، قَالَ: سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، قَالَ: أَشْهَدُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – أَوْ قَالَ عَطَاءٌ: أَشْهَدُ عَلَى ابْنِ عَبَّاسٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – «خَرَجَ وَمَعَهُ بِلاَلٌ، فَظَنَّ أَنَّهُ لَمْ يُسْمِعْ فَوَعَظَهُنَّ وَأَمَرَهُنَّ بِالصَّدَقَةِ، فَجَعَلَتِ المَرْأَةُ تُلْقِي القُرْطَ وَالخَاتَمَ، وَبِلاَلٌ يَأْخُذُ فِي طَرَفِ ثَوْبِهِ»

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு பெருநாள் தினத்தில் உரையாற்றிவிட்டு) பெண்கள் செவியேற்கும் விதத்தில் தாம் பேசவில்லை என்று எண்ணியவர்களாக (பெண்களிருக்கும் பகுதிக்கு) பிலால் (ரலி) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றார்கள். அங்கு பெண்களுக்கு அறிவுரை கூறிவிட்டு தர்மம் செய்யும்படி வலியுறுத்தினார்கள். அங்கிருந்த பெண்கள் தங்கள் காதணிகளையும், மோதிரங்களையும் (கழற்றிப்) போடலானார்கள். பிலால் (ரலி) அவர்கள் தமது ஆடையின் ஓரத்தில் அவற்றைப் பெற்றுக் கொண்டிருந்தார்கள் என நான் உறுதியளிக்கிறேன்.

நூல் : புகாரி 98

நபியவா்களின் முன்னிலையில் பெண்கள் பகுதிக்குச் சென்று பெண்கள் தர்மமாக தருபவைகளை பிலால் (ரலி) தமது ஆடையில் வாங்கிக் கொண்டார் என்பதிலிருந்து தேவை ஏற்படும் நேரத்தில் பெண்களைப் பார்ப்பது அனுமதி என்பதை அறியலாம்

இஸ்லாம் கூறும் ஹிஜாபை முஸ்லிமல்லாத பெண்கள் கடைப்பிடிக்க மாட்டார்கள். அவர்களை நேரில் சந்திக்கும் நிலை நமக்கு ஏற்படுகிறது. உதாரணமாக பெண் மருத்துவர், பெண் அதிகாரி, பெண் நிர்வாகி, பெண் ஆசிரியை எனப் பலரையும் நாம் சந்திக்கும் அவசியம் ஏற்படுகிறது. அவர்கள் இஸ்லாமிய மரபுப்படி ஆடை அணியாவிட்டாலும் நமக்கு நாமே ஹிஜாப் அணிந்து கொண்டு பார்க்கலாம். அதாவது முகத்தை மட்டும் காமப்பார்வை இல்லாமல் பார்க்கலாம். அது போல் தொலைக் காட்சியிலும் பார்க்கலாம்.

ஆடல் பாடல் கூத்து போன்றவைகளில் ஈடுபட்டுள்ள பெண்களை நேரில் பார்ப்பது கூடாது. அதுபோல் தொலைக்காட்சியிலும் பார்க்கக் கூடாது.

இது பற்றி மேலும் அறிய

உருவப்படத்துக்கு அனுமதி உண்டா?

என்ற ஆக்கத்தைப் பார்க்கவும்.

19.04.2013. 23:43 PM

Leave a Reply