நடத்தைகெட்ட மனைவியை என்ன செய்வது?

நடத்தைகெட்ட மனைவியை என்ன செய்வது?

மனைவி கணவருக்குத் தெரியாமல் திருமணத்திற்கு முன்பிலிருந்து இப்போது வரையிலும் இன்னொரு ஆணிடம் தொடர்பு வைத்திருக்கிறாள். இரண்டு குழந்தைகள் உள்ளன. என்ன செய்ய?

முஹம்மது.

பதில் :

திருமணம் மூலம் அல்லாமல் கள்ளத் தொடர்பு வைக்கும் ஆண்களாயினும், பெண்களாயினும் இஸ்லாமிய ஆட்சியில் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள். திருமணம் செய்யாத நிலையில் இதுபோல் விபச்சரம் செய்பவருக்கு நூறு கசையடிகளும் திருமணத்துக்குப் பின் விபச்சாரம் செய்பவருக்கு மரண தண்டனையும் இஸ்லாமிய ஆட்சியில் வழங்கப்படும்.

நீங்கள் குறிப்பிடும் பெண் இஸ்லாமிய ஆட்சியில் இரு வகையான தண்டனைக்கும் உரியவராகிறார்.

இஸ்லாமிய ஆட்சி இல்லாத நிலையில் அவளது கணவன் தன்னளவில் சரியான முடிவை எடுக்க வேண்டும்.

விபச்சாரம் செய்தவன், விபச்சாரம் செய்தவளையோ இணை கற்பிப்பவளையோ தவிர மற்றவர்களை மணந்து கொள்ள மாட்டான். விபச்சாரம் செய்தவளை, விபச்சாரம் செய்தவனோ இணை கற்பிப்பவனோ தவிர மற்றவர்கள் மணந்து கொள்ள மாட்டார்கள். இது நம்பிக்கை கொண்டோர் மீது தடை செய்யப்பட்டுள்ளது.

திருக்குா்ஆன் 24:3

ஒரு முஸ்லிம் ஆண் நடத்தைகெட்ட விபச்சாரியைத் திருமணம் செய்யக்கூடாது என்றும், ஒரு முஸ்லிம் பெண் நடத்தை கெட்டவனைத் திருமணம் செய்யக் கூடாது என்றும் மேற்கண்ட வசனம் தடை விதிக்கின்றது.

மேலும் நடத்தைகெட்ட பெண்கள் நன்னடத்தை கொண்ட ஆண்களுக்குத் தகுதியானவர்கள் இல்லை என்றும் குா்ஆன் கூறுகிறது.

கெட்ட பெண்கள், கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள், கெட்ட பெண்களுக்கும் (உரியோர்). நல்ல பெண்கள், நல்ல ஆண்களுக்கும் நல்ல ஆண்கள், நல்ல பெண்களுக்கும் (தகுதியானோர்). இவர்கள் கூறுவதை விட்டும் அவர்கள் சம்பந்தமில்லாதவர்கள். இவர்களுக்கு மன்னிப்பும், மரியாதையான உணவும் உண்டு.

திருக்குா்ஆன் 24:26

கற்புநெறியைப் பேணாதவர்களுடன் முஸ்லிம்கள் வாழக் கூடாது என்பதை இதில் இருந்து அறியலாம்.

ஆணோ, பெண்ணோ தவறான நடத்தையுடையவராக இருந்து திருந்தி அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டுவிட்டால் அவர்களை வாழ்க்கைத் துணையாக வைத்துக் கொள்வது சம்மந்தப்பட்டவரின் விருப்பத்தைப் பொருத்ததாகும்.

அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள். தமது இறைவனிடமிருந்து மன்னிப்பும், சொர்க்கச் சோலைகளுமே அவர்களின் கூலி. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். (நன்கு) செயல்பட்டோரின் கூலி மிகவும் நல்லது.

திருக்குர்ஆன் 3:135, 136

அவ்வாறு இல்லாமல் கணவன் இருக்கும் போதும் ஒரு பெண் கள்ள உறவு வைத்திருந்தால் அவளுடன் கணவன் வாழக் கூடாது. அவளை விவாகரத்து செய்து விட வேண்டும். இந்தக் காரணத்துக்காக விவாகரத்து செய்யும்போது அவர்களுக்கு எந்த இழப்பீட்டையும் கணவன் வழங்கத் தேவையில்லை.

நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை. அவர்களுக்கு நீங்கள் வழங்கியதில் எதையும் பிடுங்கிக் கொள்வதற்காக அவர்களைத் துன்புறுத்தாதீர்கள்! அவர்கள் வெளிப்படையான வெட்கக்கேடானதைச் செய்தால் தவிர. அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத்திருப்பான்.

திருக்குர்ஆன் 4:19

வெளிப்படையாக வெட்கக்கேடானதைச் செய்யாதவரை தான் மனைவியுடன் வாழ முடியும் என்பதை இதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

வெட்கக்கேடான செயல் நம்பிக்கை கொண்டோரிடம் பரவ வேண்டும் என விரும்புவோருக்கு இவ்வுலகிலும், மறுமையிலும் துன்புறுத்தும் வேதனை உண்டு. அல்லாஹ்வே அறிகிறான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.

திருக்குரஆன் 24:19

இது போன்றவர்களுடன் வாழ்க்கை நடத்துவது முஸ்லிம் சமுதாயத்தில் மானக்கேடான செயல் பரவுவதற்கு அடையாளமாகும். இது பாவமாகும். இதன் பின்னரும் அதைச் சகித்துக் கொண்டு வாழ்க்கை நடத்துபவர்களுக்கு அல்லாஹ்விடம் தண்டனை உண்டு. மற்ற பெண்களும் இதுபோல் நடக்கும் துணிவையும் இது ஏற்படுத்தி விடும்.

நபியே! பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால் அவர்கள் இத்தாவைக் கடைப்பிடிப்பதற்கேற்ப விவாகரத்துச் செய்யுங்கள்! இத்தாவைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்! உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுங்கள்! பகிரங்கமான வெட்கக்கேடான காரியத்தை அப்பெண்கள் செய்தாலே தவிர அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றாதீர்கள்! அவர்களும் வெளியேற வேண்டாம். இவை அல்லாஹ்வின் வரம்புகள். அல்லாஹ்வின் வரம்புகளை மீறுபவர் தமக்கே தீங்கு இழைத்துக் கொண்டார். இதன் பிறகு அல்லாஹ் ஒரு கட்டளை பிறப்பிக்கக் கூடும் என்பதை நீர் அறிய மாட்டீர்.

திருக்குர்ஆன் 65:1

விவாகரத்துக்குப் பின்னர் ஒழுக்கக்கேடாக நடந்தால் இத்தா காலத்தில் கணவன் வீட்டில் தங்கும் உரிமையை அவர்கள் இழக்கிறார்கள். மனைவி எனும் பந்தம் நீங்கிய பின்னர் இந்த நிலை என்றால் மனைவியாக இருக்கும் போது ஒழுக்கங்கெட்ட செயலில் ஈடுபடும் பெண்ணைச் சகித்துக் கொள்ள முடியாது.

இத்தா காலத்தில் செய்து கொடுக்க வேண்டிய அடிப்படை வசதிகளைக் கூட ஒழுக்கங்கெட்டவர்களுக்கு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால் விவாகரத்து செய்யும் போது கொடுக்கும் இழப்பீட்டைக் கொடுக்கத் தேவை இல்லை என்பதை இதில் இருந்து அறியலாம்.

விபச்சாரிகளுடன் இல்லற வாழ்வைத் தொடர்வது சுயமரியாதைக்குப் பெரிதும் இழுக்காகும். மேலும் இது போன்றவர்களுடைய நடவடிக்கை குழந்தைகளின் எதிர்காலத்தை மிகவும் பாதிக்கும்.

01.11.2013. 20:15 PM

Leave a Reply