நபிகள் நாயகம் சிறுவயது ஆயிஷாவை திருமணம் செய்தது ஏன்?

நபிகள் நாயகம் சிறுவயது ஆயிஷாவை திருமணம் செய்தது ஏன்?

முஹம்மது நபி அவர்கள் ஆறு வயது ஆயிஷாவை ஏன் திருமணம் செய்து கொண்டார்கள்.?

ஹபீபுல்லாஹ்

பதில் :

ஆயிஷா (ரலி) அவர்களுக்கு ஆறு வயது இருக்கும் போது அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மணமுடித்தார்கள் என்று ஆதாரப்பூர்வமான செய்திகளில் கூறப்பட்டுள்ளது.

5133 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَزَوَّجَهَا وَهِيَ بِنْتُ سِتِّ سِنِينَ وَأُدْخِلَتْ عَلَيْهِ وَهِيَ بِنْتُ تِسْعٍ وَمَكَثَتْ عِنْدَهُ تِسْعًا رواه البخاري

நான் ஆறு வயதுடையவளாய் இருந்த போது என்னை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மணந்து கொண்டார்கள். எனக்கு ஒன்பது வயதான போது என்னுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். நான் அவர்களுடன் ஒன்பது வருடங்கள் (மனைவியாக) வாழ்ந்தேன்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி 5133

ஆயிஷா (ரலி) அவர்களை பருவ வயது அடைவதற்கு முன்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் செய்ததாக இந்த ஹதீஸ் கூறுகிறது.

அகில உலகுக்கு வழிகாட்டியாக வந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறுமியைத் திருமணம் செய்தது நியாயமானது தானா? என்று முஸ்லிமல்லாதவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறுமையைத் திருமணம் செய்ததை ஆதாரமாகக் கொண்டு நாமும் சிறுமியைத் திருமணம் செய்யலாமா என்பது முஸ்லிம்களில் பலருக்கு இருக்கும் சந்தேகம்.

இது குறித்து தக்க முறையில் அறிந்து கொண்டால் இரு சாராரின் சந்தேகமும் முற்றாக விலகி விடும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட போது அவர்களுக்கு இடப்பட்ட ஒரே கட்டளை ஒரே இறைவனாகிய அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் என்பது மட்டுமே. இந்த அடிப்படைக் கொள்கையை ஏற்றவர் உடனே முஸ்லிமாகி விடுவார், இதன் பின்னர் அவர் அந்தச் சமுதாய வழக்கப்படி நடந்து கொள்வார். ஏனெனில் இஸ்லாத்தின் அனைத்து சட்டங்களும் ஒரே நேரத்தில் அவர்களுக்கு அருளப்படவில்லை. சிறிது சிறிதாக 23 ஆண்டுகளில் ஒவ்வொரு சட்டமாகவே அவர்களுக்கு அருளப்பட்டது.

இறைவனிடம் இருந்து எது குறித்து சட்டம் அருளப்படவில்லையோ அந்த விஷயங்களில் அந்தச் சமுதாயத்தில் நிலவிய பழக்க வழக்கங்களின்படியே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், இஸ்லாத்தை ஏற்றவர்களும் நடந்து கொண்டனர்.

அன்றைய மக்களில் மதுபானம் அருந்தக் கூடியவர்கள் தான் அதிகமான இருந்தனர். அது குறித்து இறைவனின் தடை உத்தரவு வருவது வரை இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் தங்களின் பழைய வழக்கத்தையே தொடர்ந்தனர்.

இறைவன் தடை செய்யாததால் நபிகள் நாய்கம் (ஸல்) அவர்களும் அதைத் தடை செய்யவில்லை.

அதுபோல் தான் சிறுவயதுப் பெண்ணை திருமணம் செய்வது அன்றைய அரபுகள் மத்தியில் சாதாரணமாக நடந்து வந்தது. சிறுமிகளைத் திருமணம் செய்யக் கூடாது என்ற தடை விதிக்கப்படுவதற்கு முன் அந்த வழக்கப்படி நபிகள் நாயகம் ஸல் அவர்களும் சிறு வயதுடைய ஆயிஷா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள்.

பின்னர் திருமணத்திற்கான ஒழுங்குகள் இறைவன் புறத்தில் இருந்து அருளப்பட்டன. விபரமில்லாத சிறுமிகளைத் திருமணம் செய்வதை இஸ்லாம் முற்றாகத் தடை செய்தது. இதைப் பின்வரும் ஆதாரங்களிலிருந்து அறியலாம்.

திருமண வயது என்று ஒரு குறிப்பிட்ட வயதை இஸ்லாம் குறிப்பிடாவிட்டாலும் ஒரு பெண் திருமணம் செய்து கொள்ள வேண்டிய தருணம் எது என்பதை மிகத் தெளிவாக குறிப்பிடுகிறது.

திருமண வாழ்வில் பெண்கள் ஆற்ற வேண்டிய கடைமைகள் பல உள்ளன. கணவனுக்குக் கட்டுப்படுவதும், வீட்டைக் கவனிப்பதும், குழந்தைகளைப் பேணுவதும் மனைவியின் கடமையாகும். விவரமற்ற சிறுமிகளால் இந்தக் கடமைகளைப் பேண இயலாது.

பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன.

திருக்குர்ஆன் 2:228

தன் கணவனைத் தேர்வு செய்யும் உரிமையைப் பெண்ணுக்கு இஸ்லாம் வழங்கியுள்ளது. விபரமுள்ள பெண்களே இந்த உரிமையைச் சரியாகப் பயன்படுத்த முடியும். சிறு வயது பெண்கள் சுயமாக தனது கணவனைத் தேர்வு செய்யும் நிலையில் இல்லை.

நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை.

திருக்குர்ஆன் 4:19

صحيح البخاري

6971 – حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ ذَكْوَانَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «البِكْرُ تُسْتَأْذَنُ» قُلْتُ: إِنَّ البِكْرَ تَسْتَحْيِي؟ قَالَ: «إِذْنُهَا صُمَاتُهَا»

கன்னிப் பெண்ணிடமும், விதவையிடமும் சம்மதம் பெற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறிய போது, கன்னிப் பெண் வெட்கப்படுவாளே? என்று நான் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவளது மௌனமே அவளது சம்மதமாகும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 6971, 6964, 5137

صحيح البخاري

5138 – حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ القَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، وَمُجَمِّعٍ، ابْنَيْ يَزِيدَ بْنِ جَارِيَةَ، عَنْ خَنْسَاءَ بِنْتِ خِذَامٍ الأَنْصَارِيَّةِ، أَنَّ أَبَاهَا زَوَّجَهَا وَهْيَ ثَيِّبٌ فَكَرِهَتْ ذَلِكَ، فَأَتَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «فَرَدَّ نِكَاحَهُ»،

என் தந்தை எனது சம்மதம் பெறாமல் எனக்கு மணமுடித்து வைத்தார். அதனை விரும்பாத நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து கூறிய போது, அத்திருமணத்தை ரத்து செய்தார்கள்.

அறிவிப்பவர்: கன்ஸா பின்த் கிதாம் (ரலி)

நூல்: புகாரி 5139, 6945, 6969

அப்பெண்கள் உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை எடுத்துள்ளார்கள்.

திருக்குர்ஆன் 4:21

இந்த வசனத்தில் திருமணத்தை ஒரு கடுமையான ஒப்பந்தம் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது. அந்த ஒப்பந்தம் செய்வதற்கான தகுதியும், முதிர்ச்சி பருவ வயதை அடைந்தால் தான் ஏற்படும்.

மண வாழ்க்கையில் தன்னுடைய உரிமைகள் என்ன? கடமைகள் என்ன? தனக்கு கணவனாக வருபவர் எவ்வாறு இருக்க வேண்டும்? என்று நன்கு ஆராய்ந்து முடிவெடுப்பதற்கு ஏற்ற வயதில் தான் பெண்களின் திருமணங்கள் நடைபெற வேண்டும் என்பதை இந்த வசனங்களும், ஹதீஸ்களும் உறுதி செய்கின்றன.

திருமணம் என்பது கடுமையான உடன்படிக்கை என்றால் கணவன் மனைவி ஆகிய இருவரும் திருமணம் என்றால் என்ன? எதற்காகத் திருமணம் செய்யப்படுகிறது? ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வேறுபாடு என்ன? என்பதையெல்லாம் அறிந்தால் தான் அதை ஒப்பந்தம் என்று கூற முடியும்.

இதை எல்லாம் அறிய முடியாத பருவத்தில் உள்ள ஆணுக்கோ பெண்ணுக்கோ திருமணம் செய்விப்பதற்கு இப்போது அனுமதி இல்லை. இந்தச் சட்டம் நடைமுறையில் இல்லாத காலத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இஸ்லாத்தை ஏற்ற பலரும் சிறுமிகளைத் திருமணம் செய்திருந்தனர்.

இத்திருமணம் இறைவன் தடை செய்வதற்கு முன்னர் நடந்த்து என்பதால் நபிகள் நாயகத்தின் ஒழுக்கத்தை இது பாதிக்கும் என்று கருத எந்த நியாயமும் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பால்ய விவாகத்தை தவறு என்று எப்போது போதித்தார்களோ அதன் பின்னர் அவர்கள் பால்ய வயதுடைய சிறுமியைத் திருமணம் செய்திருந்தால் தான் அதைக் குறை கூற முடியும். அதை தடை செய்யாமல் ஊர் வழக்கப்படி அவர்கள் நடந்து கொண்டிருந்த நிலையில் இத்திருமணம் நடந்ததால் இது விமர்சனத்துக்கு உரியதாக ஆகாது.

கடவுள் மறுப்புக் கொள்கையைப் பிரச்சாரம் செய்யும் ஒருவர் இப்பிரச்சாரம் செய்வதற்கு முன் கோவில் தர்மகர்த்தாவாக இருந்திருக்கலாம். அப்போது கடவுள் வழிபாட்டை நடத்தி இருக்கலாம். அதை விமர்சிப்பது நியாயமான விமர்சனமாக ஆகாது. அது தவறு என்ற பிரச்சாரத்தை மேற்கொண்ட பின்னர் அவர் கடவுள் வழிபாடு செய்தால் அதுதான் விமர்சனத்துக்கு உரியதாகும்.

26.02.2011. 4:19 AM

Leave a Reply