நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாவங்களை மன்னிக்கக் கூடியவர்களா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாவங்களை மன்னிக்கக் கூடியவர்களா?

தீனாவில் நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்தித்தேன். அவர்கள் தன் பெயரைப் பற்றி கூறும் போது, நபியுத்தவ்பா என்பதையும் கூறியதாக ஹுதைஃபா (ரலி) அறிவிக்கும் செய்தி முஸ்லிம், திர்மிதீ போன்ற நூல்களில் உள்ளது. நபியுத்தவ்பா (மன்னிக்கும் நபி) என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மைப் பற்றி கூறியுள்ளார்கள். இதைத் தானே மவ்லூதில் ஓதுகின்றார்கள். இது சரியா? 

ரா. ரிஸ்வான் அஹ்மத், தஞ்சாவூர்

தாங்கள் குறிப்பிடும் ஹதீஸ் ஹுதைஃபா (ரலி) அறிவிப்பதாக இல்லாவிட்டாலும் அபூமூஸல் அஷ்அரி (ரலி) அறிவிப்பதாக உள்ளது. அந்த ஹதீஸில் நபியுத் தவ்பா என்ற வார்த்தை இடம் பெற்றிருப்பது உண்மை தான். ஆனால் நபியுத் தவ்பா என்றால் அதற்கு மன்னிக்கும் நபி என்று பொருள் கூறியிருப்பது தான் தவறு.

நபியுத் தவ்பா என்றால் தவ்பாவுடைய நபி, தவ்பா செய்யும் நபி என்று தான் பொருள் கூற முடியுமே தவிர மன்னிக்கும் நபி என்று பொருளில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நம்மை விட அதிகமதிகம் இறைவனிடம் பாவமன்னிப்பு தேடக்கூடியவர்களாக, தவ்பா செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள். எனவே நபியுத் தவ்பா என்று தம்மைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டிருக்கலாம். இதை வைத்து மவ்லிதுகளில் பாவங்களை மன்னிப்பவர் என்று கூறப்பட்டிருப்பதை நியாயப்படுத்த முடியாது. மவ்லிதுகளில் உள்ள மார்க்கத்திற்கு முரணான விஷயங்களைப் பற்றி கடந்த இதழில் தெளிவாக விளக்கியுள்ளோம். 

குறிப்பு : 2004 ஜூன் மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கட்டுரை

Leave a Reply