நபிதோழர்கள் கவ்ஸர் தடாகத்தை விட்டு தடுக்கப்படுவார்களா?

நபிதோழர்கள் கவ்ஸர் தடாகத்தை விட்டு தடுக்கப்படுவார்களா?

வ்ஸர் தடாகத்திலிருந்து ஸஹாபாக்கள் விரட்டப்படுவார்கள் என்று எந்த அடிப்படையில் நீங்கள் சொல்கிறீர்கள்?

சுல்தான்.

பதில்:

இவ்வாறு நாம் இட்டுக்கட்டி சுயமாகக் கூறவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதன் அடிப்படையில் தான் இவ்வாறு சொல்கிறோம்.

صحيح البخاري

4625 – حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، أَخْبَرَنَا المُغِيرَةُ بْنُ النُّعْمَانِ، قَالَ: سَمِعْتُ سَعِيدَ بْنَ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: خَطَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «يَا أَيُّهَا النَّاسُ، إِنَّكُمْ مَحْشُورُونَ إِلَى اللَّهِ حُفَاةً عُرَاةً غُرْلًا»، ثُمَّ قَالَ: {كَمَا بَدَأْنَا أَوَّلَ خَلْقٍ نُعِيدُهُ، وَعْدًا عَلَيْنَا إِنَّا كُنَّا فَاعِلِينَ} [الأنبياء: 104] إِلَى آخِرِ الآيَةِ، ثُمَّ قَالَ: ” أَلاَ وَإِنَّ أَوَّلَ الخَلاَئِقِ يُكْسَى يَوْمَ القِيَامَةِ إِبْرَاهِيمُ، أَلاَ وَإِنَّهُ يُجَاءُ بِرِجَالٍ مِنْ أُمَّتِي فَيُؤْخَذُ بِهِمْ ذَاتَ الشِّمَالِ، فَأَقُولُ: يَا رَبِّ أُصَيْحَابِي، فَيُقَالُ: إِنَّكَ لاَ تَدْرِي مَا أَحْدَثُوا بَعْدَكَ، فَأَقُولُ كَمَا قَالَ العَبْدُ الصَّالِحُ: {وَكُنْتُ عَلَيْهِمْ شَهِيدًا مَا دُمْتُ فِيهِمْ، فَلَمَّا تَوَفَّيْتَنِي كُنْتَ أَنْتَ الرَّقِيبَ عَلَيْهِمْ وَأَنْتَ عَلَى كُلِّ شَيْءٍ شَهِيدٌ} [المائدة: 117] فَيُقَالُ: إِنَّ هَؤُلاَءِ لَمْ يَزَالُوا مُرْتَدِّينَ عَلَى أَعْقَابِهِمْ مُنْذُ فَارَقْتَهُمْ "

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருமுறை மக்களுக்கு) உரை நிகழ்த்தினார்கள். (அதில்), "மக்களே! நீங்கள் (மறுமையில்) செருப்பணியாதவர்களாகவும், நிர்வாணமானவர்களாகவும், விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாகவும் அல்லாஹ்விடம் கொண்டுவரப்படுவீர்கள்'' என்று கூறிவிட்டுப் பிறகு "எழுதப்பட்ட ஏடு சுருட்டப்படுவதைப் போல் நாம் வானத்தைச் சுருட்டும் அந்நாளில், நாம் முதலில் எவ்வாறு படைக்கத் தொடங்கினோமோ அவ்வாறே நாம் மீண்டும் (அவர்களுக்கு உயிர் கொடுத்து) படைப்போம்'' எனும் (21:104ஆவது) வசனத்தை இறுதிவரை ஓதினார்கள். பிறகு, "அறிந்து கொள்ளுங்கள்: மறுமை நாளில் (சொர்க்கத்தின்) ஆடை அணிவிக்கப்படும் முதல் நபர் இப்ராஹீம் (அலை) அவர்கள்தாம். அறிந்து கொள்ளுங்கள்: என் சமுதாயத்தாரில் சிலர் கொண்டு வரப்பட்டு, இடப்பக்கத்திற்குக் கொண்டு செல்லப்படுவார்கள். அப்போது நான், "என் இறைவா! (இவர்கள்) என் தோழர்களில் சிலர்'' என்று சொல்வேன். அதற்கு "இவர்கள் உங்களுக்குப் பின் என்னவெல்லாம் புதிது புதிதாக உருவாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாது'' என்று கூறப்படும். அப்போது நான், "நான் அவர்களுடன் இருந்த வரையில் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்துக் கொண்ட போது நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய்!'' என்று நல்லடியார் (ஈஸா நபி) சொன்னதைப் போன்று, பதிலளிப்பேன். அதற்கு, "இவர்களை நீங்கள் பிரிந்ததிலிருந்து, இவர்கள் தங்கள் குதிகால் (சுவடு)களின் வழியே தம் மார்க்கத்திலிருந்து வெளியேறிக் கொண்டு தான் இருந்தார்கள்'' என்று கூறப்படும்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 4625, 4740, 6526, 6572, 6582, 6585, 6586, 7049 முஸ்லிம் 365, 4247, 4250, 4259, 5104

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படி தெளிவாகச் சொல்லி இருந்தும் இது நபித்தோழர்களைக் குறிக்காது. அவர்களின் உம்மத்தினர் அனைவரையும் குறிக்கும். அனைத்து உம்மத்துகளிலும் மேற்கண்டவாறு நடந்து கொண்டவர்களையே குறிக்கும் என்று சிலர் குதர்க்கமான விளக்கம் கொடுக்கின்றனர்.

சில அறிவுப்புகளில் உம்மத்தீ என் சமுதாயத்தினர் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

சுனன் நஸயீ அல்குப்ராவில் 11095வது ஹதீஸில், நபி (ஸல்) அவர்கள் "அஸ்ஹாபீ' என்பதற்குப் பதிலாக "உம்மத்தீ – என்னுடைய சமுதாயமே' என்று சொன்னதாக இடம் பெற்றுள்ளது.

என் சமுதாயத்தினர் என்று சில அறிவிப்புக்களிலும், என் தோழர்கள் என்று சில அறிவிப்புக்களிலும் வந்தால் இதை எப்படிப் புரிந்து கொள்வது என்ற தெளிவு இல்லாமல் இப்படி வாதிடுகின்றனர்.

உம்மத் என்பதில் ஸஹாபாக்களும் அடங்குவார்கள். மற்ற மக்களும் அடங்குவார்கள். ஆனால் ஸஹாபி என்பதில் அனைத்து மக்களும் அடங்க மாட்டார்கள்.

உதாரணமாக, ஒரு செய்தியில், "வன விலங்கு ஒன்று மனிதனைக் கடித்து விட்டது' என்று இடம் பெறுவதாக வைத்துக் கொள்வோம்.

அதே செய்தியை மற்றொரு இடத்தில் சொல்லும் போது, சிங்கம் ஒன்று மனிதனைக் கடித்ததாகக் கூறப்படுகிறது என்றால் இப்போது முன்னர் இடம் பெற்ற செய்தியில் உள்ள வன விலங்கு, சிங்கம் தான் என்பது தெளிவாகி விட்டது.

வன விலங்கு என்பதால் அது புலி, சிறுத்தை, ஓநாய் எல்லாவற்றையும் குறிக்கும்; எனவே கடித்தது சிங்கம் அல்ல என்று யாரும் கூற மாட்டார்கள். ஏனென்றால், முதல் செய்தியில் வன விலங்கு என்று பொதுவான வார்த்தை இடம் பெற்றாலும், அடுத்த செய்தியில் சிங்கம் என்ற குறிப்பான வார்த்தை வந்து விட்டதால் இங்கு வேறு அர்த்தம் கொடுக்க வழியே இல்லை.

சில ஹதீஸ்களில் உம்மத் என்ற வார்த்தை இடம் பெற்றாலும் அது ஸஹாபாக்களைக் குறிக்காது என்று கூற முடியாது. ஏனென்றால் ஸஹாபாக்களும் உம்மத்தில் உள்ளவர்கள் தான். உம்மத் என்று பொதுவான வார்த்தை இடம் பெறும் ஹதீஸுக்கு ஸஹாபி என்ற வார்த்தை இடம் பெறும் ஹதீஸ் விளக்கமாக அமைகின்றது. எனவே இந்த அடிப்படையிலும் இந்த ஹதீஸில் கூறப்படுவது நபித்தோழர்கள் தான் என்பது உறுதியாகின்றது.

இன்னும் இதை விடத் தெளிவாக முஸ்லிமில் இடம் பெறும்  (4259) ஹதீஸில், "என்னிடம் தோழமை கொண்டவர்களில் சிலர்' என்று மிகத் தெளிவாகக் குறிப்பிடுகின்றார்கள். இதன் மூலம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த ஹதீஸில் குறிப்பிடுவது, ஸஹாபாக்களைத் தான் என்பது உறுதியாகின்றது.

இது தொடர்பான சில ஹதீஸ்களில் அவர்கள் நபிகள் நாயகத்துக்குப் பின்னர் மதம் மாறிச் சென்றதாகக் கூறப்பட்டுள்ளது. நபித்தோழர்கள் மதம் மாறிச் சென்று இருப்பார்களா? எனவே மதம் மாறிச் சென்றவர்கள் என்ற வாசகம் காரணமாக நபித்தோழர்கள் அல்லாத் மற்றவர்களைத்தான் இது குறிக்கிறது எனவும் அவர்கள் வாதிடுகின்றனர்.

இதுவும் அறியாமை காரணமாக வைக்கப்படும் வாதமாகும்.

நபித்தோழர்கள் என்று கருதப்பட்டவர்களிடம் மதமாற்றம் நிகழ்ந்துள்ளதை இஸ்லாமிய வரலாறு தெரிந்தவர்கள் மறுக்க மாட்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறந்தவுடனேயே மதமாற்றம் நடந்தது. இதை புகாரி 1400வது ஹதீஸிலும் வேறு பல ஹதீஸ்களிலும் காணலாம்.

அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில், "நபி (ஸல்) அவர்கள் இருக்கும் போது ஜகாத் கொடுத்தோம். அவர்கள் இறந்து விட்டார்கள். இனிமேல் ஜகாத் கொடுக்க மாட்டோம்'' என்று அரபிகள் மறுத்து மதம் மாறியுள்ளனர்.

இந்த அரபிகள் யார்? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்தவர்கள் தான் இந்த அரபிகள். இவர்களை தாபியீன்கள் என்று கூற முடியாது. காரணம் தாபிஃ என்றால் ஸஹாபாக்களைச் சந்தித்தவர்கள் என்று அர்த்தம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலத்தில் வாழ்ந்தவர்கள் தான் ஜகாத் கொடுக்க மறுக்கிறார்கள். எனவே அவர்களை ஸஹாபாக்கள் என்று தான் குறிப்பிடுவோம்.

முஸ்லிமாக இருக்கும் நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை சந்தித்து, அவர்கள் இறந்த பின்னர் யாரேனும் மதம் மாறியிருந்தால் நபியவர்களைப் பொறுத்த வரை அவர்கள் ஸஹாபிகள் தான். ஏனென்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு தான் இவர்கள் மதம் மாறுகிறார்கள். எனவே மதம் மாறியிருந்தாலும் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிந்திராத காரணத்தால் "என்னுடைய தோழர்கள்'' என்று அழைக்கிறார்கள்.

உங்களுடைய மரணத்திற்குப் பிறகு அவர்கள் மதம் மாறியது உங்களுக்குத் தெரியாது என்று மறுமையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்படுகின்றது. எனவே மதம் மாறியவர்களை நபித்தோழர்கள் என்று எப்படிக் குறிப்பிடலாம் என்ற வாதம் அர்த்தமற்றதாகும்.

இந்தக் கருத்தில் வரும் புகாரி 3349, 3347, 4625, 4740, 6526, முஸ்லிம் 5104 ஆகிய ஹதீஸ்களில் "ஈஸா (அலை) அவர்கள் சொன்ன வாக்குமூலத்தை நானும் சொல்லி விடுவேன்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்வதாகக் கூறப்படுகிறது.

அதாவது திருக்குர்ஆன் 5:117 வசனத்தில் உள்ளது போன்று, "நான் அவர்களுடன் இருக்கும் போது அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். என்னை நீ கைப்பற்றியதும் நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய்'' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவார்கள் என்ற கருத்து இந்த ஹதீஸில் இடம் பெறுகின்றது.

இந்த வாக்குமூலத்தைப் பாருங்கள். "நான் அவர்களுடன் இருக்கும் போது நான் அவர்களைக் கண்காணித்தேன்' என்றால் அவர்கள் இருக்கும் போது உடனிருந்த மக்கள் யார்? நபித்தோழர்கள் தான் என்பது திட்டவட்டமாகத் தெரிகின்றது. அப்படியிருக்கையில் இந்த ஹதீஸ் நபித்தோழர்களைக் குறிக்கவில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்? மனோ இச்சையைப் பின்பற்றித் தான் இவ்வாறு வாதிட முடியும்.

"நீங்கள் இவர்களைப் பிரிந்ததிலிருந்து இவர்கள் தம் மார்க்கத்தை விட்டு விலகி, தாம் வந்த சுவடுகளின் வழியே திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள்'' என்று கூறுவார்கள் என்று கூறப்படுகிறது.. (புகாரி 3447, 3449)

இந்த ஹதீஸில், "நீங்கள் இவர்களைப் பிரிந்ததிலிருந்து'' என்ற வாசகம் இடம் பெறுகின்றது. நபித்தோழர்களிடமிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரிவதையே இது குறிக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. எனவே இந்த வாசகமும் தடாகத்தில் தடுக்கப்படுவோர் நபித்தோழர்களில் சிலர் தான் என்பதைத் தெளிவாக உணர்த்துகின்றது.

இந்த விளக்கங்களின் அடிப்படையில் பார்க்கும் போது, தடாகத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பரிந்துரைப்பது ஒட்டு மொத்த உம்மத்தையும் அல்ல! ஸஹாபாக்களைத் தான் என்பது நன்கு தெளிவாகின்றது. பல்வேறு ஹதீஸ்களை ஒன்றிணைத்துப் பார்த்து நாம் இந்த முடிவுக்கு வருகின்றோம்.

பொதுவாக நபித்தோழர்கள் குறித்து நமது நிலையை அறிந்திட ன நபித்தோழர்களும் நமது நிலையும் என்ற  நூலை வாசிக்கவும்.

Leave a Reply