ஏகத்துவம் ஏப்ரல் 2007
நபி மீது பொய்! நரகமே பரிசு!
இது மவ்லிது மாதம்! இரவு நேரங்களில் வீடுகள் தோறும் மவ்லிதுக் கச்சேரிகள்! சந்தன வாடை; சாம்பிராணி வாசம்; நெய்ச் சோறு, கறிச் சாப்பாடு! பள்ளிவாசல்களிலும், பஜார் திடல்களிலும் பன்னிரெண்டு நாட்கள் தொடர் பயான்கள்! மீலாது மேடைகள்; ஊர்வலங்கள்.
ஊர்வலத்தில் செல்வோர் "ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்; அல்லாஹ் இஸ் சூப்பர் ஸ்டார்’ என்று கோஷங்கள் எழுப்புவர். அருகில் உள்ள பள்ளியில் பாங்கொலி எழுப்பப்படும். ஆனால் ஊர்வலத்தில் செல்வோர் தொழ மாட்டார்கள். காரணம் அவர்கள் இதை விடப் பெரிய பணியில் ஈடுபட்டுள்ளனர். அதனால் இந்த ஐங்காலத் தொழுகையெல்லாம் அவர்களுக்குக் கடமை இல்லை.
இவையெல்லாம் எதற்காக? என்று கேட்டால், "நாங்கள் நபி மீது கொண்டிருக்கும் அன்பின் வெளிப்பாடு’ என்று இந்தக் காரியங்களைச் செய்வோர் கூறுகின்றனர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீது அன்பு, பாசம் கொள்வது இறை நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்.
"உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் உடன் பிறந்தாரும், உங்கள் வாழ்க்கைத் துணைவியரும், உங்களின் குடும்பத்தாரும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டத்திற்கு நீங்கள் அஞ்சுகிற வியாபாரமும், நீங்கள் விரும்புகிற வசிப்பிடங்களும் அல்லாஹ்வை விட, அவனது தூதரை விட, அவன் பாதையில் போரிடுவதை விட உங்களுக்கு அதிக விருப்பமானவையாக ஆகி விட்டால் அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை காத்திருங்கள்! குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்” என்று கூறுவீராக!
அல்குர்ஆன் 9:24
நமது பெற்றோர்கள், பிள்ளைகள், உறவினர்கள் அனைவரை விடவும் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் அன்பு கொள்ள வேண்டும் என்று இந்த வசனம் குறிப்பிடுகின்றது.
உயிரை விடவும் மேலானவர்
இதை விட ஒரு படி தாண்டி, நமது உயிரை விடவும் மேலாக நபியவர்களை நேசிக்க வேண்டும் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
நம்பிக்கை கொண்டோருக்கு தங்களை விட இந்த நபி (முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றவர். அவரது மனைவியர் அவர்களுக்கு அன்னையர்.
அல்குர்ஆன் 33:6
இதையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் கூறியுள்ளார்கள்.
"எனது உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! உங்களில் ஒருவருக்கு அவரது தந்தையையும், அவரது மக்களையும் விட நான் மிக்க அன்பானவனாக ஆகும் வரை அவர் (உண்மையான) ஈமான் உள்ளவராக மாட்டார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 14
மேற்கண்ட இந்த வசனங்கள், ஹதீஸின் அடிப்படையில் நபி (ஸல்) அவர்கள் மீது அன்பு கொள்ளாதவர் ஒரு போதும் இறை விசுவாசியாக இருக்க முடியாது. ஆனால் அன்பு செலுத்துவதற்கென்று ஒரு வரைமுறையை மார்க்கம் ஏற்படுத்தி இருக்கின்றது. அந்த அடிப்படையில் தான் அன்பின் வெளிப்பாடு அமைய வேண்டும். அந்த வரைமுறையை இப்போது பார்ப்போம்.
கடவுளாக்கக் கூடாது
"நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) "உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே’ என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும்” என்று (முஹம்மதே!) கூறுவீராக!
அல்குர்ஆன் 18:110
எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த வசனத்தில், நபி (ஸல்) அவர்களை மனிதர் என்ற நிலையிலிருந்து மாற்றி கடவுள் என்ற நிலைக்குக் கொண்டு சென்று விடக் கூடாது என்று எச்சரிக்கின்றான்.
இந்த வரையறையில் தான் நிற்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்களும் தமது சமுதாயத்தை எச்சரிக்கின்றனர்.
"கிறித்தவர்கள் மர்யமின் மகன் ஈஸாவை (கடவுள் நிலைக்கு) உயர்த்தி விட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில் நான் அல்லாஹ்வின் அடியான் தான். (என்னைப் புகழ்வதாயிருந்தால்) "அல்லாஹ்வின் அடியார்’ என்றும் "அல்லாஹ்வின் தூதர்’ என்றும் கூறுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உமர் (ரலி)
நூல்: புகாரி 3445, 6830
ஆனால் இவ்வளவு எச்சரித்த பிறகும் இன்றைய மவ்லிது கிதாபுகளில் நபி (ஸல்) அவர்களைக் கடவுளாக்கும் கவிதைகள் ஏராளமாக நிறைந்து காணப்படுகின்றன. நபியவர்களை மனிதர் என்ற நிலையிலிருந்து உயர்த்தி அப்பட்டமாகக் கடவுள் நிலைக்குக் கொண்டு செல்லும் நாசக் கருத்துக்களை இந்த மவ்லிதுகள் தாங்கி நிற்கின்றன.
அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் என்ற கொள்கையின் பால் உலக மக்களை அழைக்க வந்த நபி (ஸல்) அவர்களையே கடவுளாக்கும் கொடுமை இங்கே அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. அதனால் தான் இந்த மவ்லிதுகளை எதிர்த்து, கால் நூற்றாண்டாக தவ்ஹீது ஜமாஅத் ஒரு யுத்தமே நடத்திக் கொண்டிருக்கிறது. இன்னும் அந்த யுத்தம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதைத் துடைத்துத் தூர எறிகின்ற வரை அந்த யுத்தம் இன்ஷா அல்லாஹ் தொடரும்.
தூதர் (ஸல்) அவர்கள் உலகின் மற்ற தலைவர்களைப் போல் அல்ல! அவர்களை ஒவ்வொரு முஸ்லிமும் தனது உயிரை விட நேசிப்பார். அவ்வாறு நேசிக்கும் போது புகழ முற்படுவார். அந்தப் புகழ்ச்சியில் வரம்பு மீறல் ஏற்படும். இந்தப் பாதக நிலைக்குப் போய் விடக் கூடாது என்பதற்காகத் தான் அதற்கு ஒரு வடிகாலாக நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்வதை அல்லாஹ் கடமையாக்கி விட்டான்.
நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த இந்த முறையில் அவர்கள் மீதுள்ள அன்பை வெளிப்படுத்துவது தான் ஓர் உண்மையான முஸ்லிமின் வழிமுறையாகும்.
மேலும் நபி (ஸல்) அவர்கள் மீது நாம் அன்பு செலுத்துவது உண்மையென்றால், அதன் வெளிப்பாடாக அவர்களை ஒவ்வொரு செயலிலும் பின்பற்றி நடக்க வேண்டும். தரீக்காக்கள், தர்ஹா வழிபாடுகள், மத்ஹபுகள், மவ்லிதுகள் போன்ற நபி (ஸல்) அவர்கள் காட்டித் தராத வழிமுறைகளை விட்டொழித்து, திருக்குர்ஆனையும், நபி (ஸல்) அவர்களின் வழிமுறையையும் மட்டுமே பின்பற்ற முன்வர வேண்டும். அது தான் உண்மையான நேசத்தின் வெளிப்பாடாகும்.
அதை விட்டு விட்டு மார்க்கத்திற்கு முரணான மவ்லிதுகள், மீலாது விழாக்கள், ஊர்வலங்கள் போன்ற காரியங்களைச் செய்பவர்கள் நபி (ஸல்) அவர்கள் மீது ஒரு போதும் அன்பு செலுத்தியவர்களாக மாட்டார்கள். மாறாக அவர்களைக் கடவுள் என்ற நிலைக்கு உயர்த்தி, ஷிர்க் எனும் மாபாதகச் செயலைச் செய்து, நிரந்தர நரகத்தைத் தண்டனையாகப் பெறுவார். அல்லாஹ் காப்பானாக!
ரபீயுல் அவ்வல் வந்து விட்டால் நபி (ஸல்) அவர்கள் மீது புகழ் மாலைகள் என்ற பெயரில் பொய் மாலைகளை பள்ளிவாசல்களிலும், பொது மேடைகளிலும் வண்டி வண்டியாக அவிழ்த்து விடுகின்றனர்.
தூதர் (ஸல்) அவர்களைப் புகழ்கிறோம் என்ற பெயரில் துணிந்து அவர்கள் மீது பொய்களை அள்ளி வீசுகின்றனர்.
"என் மீது எவன் வேண்டுமென்றே இட்டுக்கட்டிக் கூறுவானோ அவன் நரகத்தில் தனது இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 108, 1291
இந்த எச்சரிக்கையை மார்க்கம் தெரியாத பாமரர்கள் புறக்கணித்தால் பரவாயில்லை. ஆனால் மார்க்கம் தெரிந்த ஆலிம்களே இந்த எச்சரிக்கையைக் காற்றில் பறக்க விடுகின்றனர். நபியவர்கள் மீது பொய்களை அவிழ்த்து விடுகின்றனர். இத்தகையவர்களுக்கு நரகமே இறைவன் தரும் பரிசு என்று எச்சரிக்கிறோம்.