நபி (ஸல்) அவர்களைக் கனவில் காணமுடியாது

நபி (ஸல்) அவர்களைக் கனவில் காணமுடியுமா?

நபி (ஸல்) அவர்களைக் கனவில் காணமுடியுமா?

ஹூசைன்

பதில்

பிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் காணாத முஸ்லிம்கள் அவர்கள் எவ்வாறு இருப்பார்கள் என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவது இயல்பான ஒன்று தான்.

ஒருவர் இறைநேசராக ஆகிறார் என்றால் அதற்கான அடையாளம் நபிகள் நாயகத்தைக் கனவில் காண்பது தான் என மார்க்க அறிவு குறைந்த சிலர் நினைக்கின்றனர்.

இந்தப் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றுப் பேர்வழிகள் தாங்கள் கனவில் நபிகள் நாயகத்தைக் கண்டதாகப் புளுகி மக்களிடம் இறைநேசர் என்ற பட்டத்தைப் பெற்று விடுகின்றனர்.

குர்ஆனுக்கும், நபிவழிக்கும் எதிரான கருத்துக்களுடன் இயற்றப்பட்ட புர்தா' என்ற பாடலை பூசிரி என்ற புலவன் எழுதினான். அவன் தனது கவிதையில் ஒரு இடத்தில் தடுமாறிய போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவனுடைய கனவில் தோன்றி அடுத்த அடியை எடுத்துக் கொடுத்தார்கள் என்று புளுகி புர்தா' என்ற கட்டுக் கதையைப் புனிதமாக்கியுள்ளதைக் காண்கிறோம். மார்க்க அறிவு சிறிதும் இல்லாத பூசிரி என்ற புலவனை இறைநேசராகச் சித்தரிப்பதையும் காண்கிறோம்.

புர்தாவைத் தூக்கிச் சாப்பிடும் வகையில் நபிகள் நாயகத்தின் பெயரால் இட்டுக்கட்டி எழுதப்பட்ட புளுகு மூட்டை தான் சீராப்புராணம். குர்ஆன் ஹதீஸைப் பற்றி ஓரளவு அறிவு உள்ளவர் கூட சீராப்புராணத்தைக் கட்டுக்கதை என்று கண்டு கொள்வார். இதைப் புனைந்த உமருப்புலவர் என்பவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கனவில் காட்சியளித்து புராணத்தை அங்கீகரித்ததாக மார்க்கத்தை அறியாதவர்கள் புளுகி வருகின்றனர்.

முரீது என்ற பெயரால் மக்களை வழிகெடுக்கும் பித்தலாட்டக்காரர்களும் கூட தாங்கள் நபிகள் நாயகத்தைக் கனவில் கண்டதாகக் கூறித் தான் ஆள் பிடிக்கும் வேலையில் இறங்குகிறார்கள்.

எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் காண முடியுமா? என்பது பற்றிய அறிவும் நமக்கு இருப்பது அவசியமாகும்.

6197 – حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ حَدَّثَنَا أَبُو حَصِينٍ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ سَمُّوا بِاسْمِي وَلَا تَكْتَنُوا بِكُنْيَتِي وَمَنْ رَآنِي فِي الْمَنَامِ فَقَدْ رَآنِي فَإِنَّ الشَّيْطَانَ لَا يَتَمَثَّلُ فِي صُورَتِي وَمَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنْ النَّارِ  صحيح البخاري

 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  என் பெயரை நீங்கள் சூட்டிக் கொள்ளுங்கள். ஆனால், எனது (அபுல் காசிம்' எனும்) குறிப்புப் பெயரை நீங்கள் சூட்டிக் கொள்ளாதீர்கள். யார் என்னைக் கனவில் கண்டாரோ உண்மையில் அவர் என்னைத் தான் கண்டார். ஏனெனில், ஷைத்தான் என் உருவத்தில் காட்சியளிக்க முடியாது. என் மீது யார் வேண்டுமென்றே பொய் சொல்கின்றாரோ அவர் தமது இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக்கொள்ளட்டும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி  6197

இந்தச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு தான் நபிகள் நாயகத்தைக் கனவில் காண முடியும் என்று சிலர் வாதிட்டு வருகின்றனர்.

இந்த நபிமொழியை இவர்கள் தவறாக விளங்கியுள்ளனர். இந்த நபிமொழியை எவ்வாறு விளங்குவது என்பதற்கு மற்றொரு நபிமொழி துணை செய்கிறது.

6993 – حَدَّثَنَا عَبْدَانُ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ عَنْ يُونُسَ عَنْ الزُّهْرِيِّ حَدَّثَنِي أَبُو سَلَمَةَ أَنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ رَآنِي فِي الْمَنَامِ فَسَيَرَانِي فِي الْيَقَظَةِ وَلَا يَتَمَثَّلُ الشَّيْطَانُ بِي ِ   صحيح البخاري ت – (ج 17 / ص 448)

 
'என்னை யாராவது கனவில் கண்டால் விழித்தவுடன் என்னைக் காண்பார். ஏனெனில் ஷைத்தான் என் வடிவில் வரமாட்டான்'

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6993

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை எவர்கள் கனவில் காண இயலும் என்பதை இந்த நபிமொழி விளக்குகிறது.

 ‘என்னைக் கனவில் காண்பவர் விழித்தவுடன் நேரிலும் காண்பார்’ 

என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறுகின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த உலகில் உயிரோடு வாழும் போது மாத்திரம் தான் இது சாத்தியமாகும்.

அவர்கள் உயிரோடு இந்த உலகில் வாழும் போது ஒருவர் கனவில் அவர்களைக் கண்டால் விழித்தவுடன் அவர்களை நேரில் காணும் வாய்ப்பைப் பெறுவார் என்று இந்த நபிமொழி கூறுகிறது.

இன்று ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் கண்டதாகக் கூறினால் விழித்தவுடன் அவர் நேரிலும் அவர்களைக் காண வேண்டும். நகமும் சதையுமாக அவர்களை நேரில் காணவில்லையானால் அவர் கனவிலும் அவர்களைக் காணவில்லை என்பது உறுதி.

எனவே நபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்குப் பிறகு எந்த மனிதரும், எந்த மகானும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் பார்க்கவே இயலாது என்பதை இரண்டாவது கருத்துக்கு இடமில்லாமல் இந்த நபிமொழி தெரிவிக்கிறது.

இந்த இடத்தில் சிலருக்கு ஏற்படும் ஒரு சந்தேகத்தையும் அதற்கான விளக்கத்தையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

கனவில் ஒருவர் தோன்றி, நான் தான் முஹம்மத் நபி' என்று கூறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். நபிகள் நாயகத்தின் வடிவில் ஷைத்தான் வரமாட்டான் என்ற நபிமொழியின் அடிப்படையில் கனவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் வந்தார்கள் என்று கருதலாம் அல்லவா? என்பது தான் அந்தச் சந்தேகம்.

நான் தான் முகம்மது நபி' என்று ஒருவர் கூறுவது போல் கனவு கண்டாலும் அது நபிகள் நாயகம் அல்ல. ஷைத்தான் அவர்களின் பெயரைப் பயன்படுத்தியுள்ளான் என்று தான் புரிந்து கொள்ள வேண்டும். ஷைத்தான் நபிகள் நாயகத்தின் வடிவத்தை எடுக்க மாட்டான் என்று தான் அந்த நபிமொழி உத்தரவாதம் தருகிறது. ஷைத்தான் தனக்கே உரிய வடிவத்தில் வந்து நான் தான் நபிகள் நாயகம் என்று கூற மாட்டான் என்று அந்த நபிமொழி கூறவில்லை.

'என் வடிவில் ஷைத்தான் வர மாட்டான்' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். கனவில் ஒருவர் வந்தால் அவர் நபிகள் நாயகமா அல்லவா? என்று முடிவு செய்வதாக இருந்தால் அவர் நபிகள் நாயகத்தை நேரில் பார்த்தவராக இருக்க வேண்டும்.

நேரில் அவர்களை எந்த வடிவத்தில் பார்த்தாரோ அதே வடிவில் கனவிலும் வந்தால் வந்தவர் நபிகள் நாயகம் தான் என்று அவரால் அறிந்து கொள்ள இயலும்.

நபிகள் நாயகத்தின் வடிவத்தைக் காணாத ஒருவரால் இதை அறிந்து கொள்ள இயலாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வடிவத்தை எடுப்பதை விட்டும் தான் ஷைத்தான் தடுக்கப்பட்டுள்ளான். வேறு வடிவத்தில் வந்து நான் தான் நபிகள் நாயகம் என்று கூற மாட்டான் என்று எந்த நபிமொழியும் இல்லை.

நபிகள் நாயகத்தை ஏற்கனவே நேரடியாகக் கண்டவர் தான் கனவில் காண முடியும். அல்லது கனவில் கண்டவர் பின்னர் நேரில் காண முடியும் என்பதைத் தான் இரண்டு நபிமொழிகளும் கூறுகின்றன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பிறகு 'நபிகள் நாயகத்தை இந்தப் பெரியார் கனவில் கண்டார், அந்த மகான் கண்டார்' என்றெல்லாம் கூறப்படுமானால் அது கட்டுக்கதையாகத் தான் இருக்க முடியும் என்பதில் சந்தேகம் இல்லை.

Leave a Reply