நீண்ட உறக்கத்தில் நல்லடியார்கள்

நீண்ட உறக்கத்தில் நல்லடியார்கள்

னிதன் மரணித்து அடக்கம் செய்யப்பட்ட உடன் என்ன நடக்கிறது என்பதை நபிகள் நாய்கம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு விளக்கியுள்ளனர்.

سنن الترمذي

1071 – حَدَّثَنَا أَبُو سَلَمَةَ يَحْيَى بْنُ خَلَفٍ قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ المُفَضَّلِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ المَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِذَا قُبِرَ المَيِّتُ – أَوْ قَالَ: أَحَدُكُمْ – أَتَاهُ مَلَكَانِ أَسْوَدَانِ أَزْرَقَانِ، يُقَالُ لِأَحَدِهِمَا: الْمُنْكَرُ، وَلِلْآخَرِ: النَّكِيرُ، فَيَقُولَانِ: مَا كُنْتَ تَقُولُ فِي هَذَا الرَّجُلِ؟ فَيَقُولُ: مَا كَانَ يَقُولُ: هُوَ عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، فَيَقُولَانِ: قَدْ كُنَّا نَعْلَمُ أَنَّكَ تَقُولُ هَذَا، ثُمَّ يُفْسَحُ لَهُ فِي قَبْرِهِ سَبْعُونَ ذِرَاعًا فِي سَبْعِينَ، ثُمَّ يُنَوَّرُ لَهُ فِيهِ، ثُمَّ يُقَالُ لَهُ، نَمْ، فَيَقُولُ: أَرْجِعُ إِلَى أَهْلِي فَأُخْبِرُهُمْ، فَيَقُولَانِ: نَمْ كَنَوْمَةِ العَرُوسِ الَّذِي لَا يُوقِظُهُ إِلَّا أَحَبُّ أَهْلِهِ إِلَيْهِ، حَتَّى يَبْعَثَهُ اللَّهُ مِنْ مَضْجَعِهِ ذَلِكَ، وَإِنْ كَانَ مُنَافِقًا قَالَ: سَمِعْتُ النَّاسَ يَقُولُونَ، فَقُلْتُ مِثْلَهُ، لَا أَدْرِي، فَيَقُولَانِ: قَدْ كُنَّا نَعْلَمُ أَنَّكَ تَقُولُ ذَلِكَ، فَيُقَالُ لِلأَرْضِ: التَئِمِي عَلَيْهِ، فَتَلْتَئِمُ عَلَيْهِ، فَتَخْتَلِفُ فِيهَا أَضْلَاعُهُ، فَلَا يَزَالُ فِيهَا مُعَذَّبًا حَتَّى يَبْعَثَهُ اللَّهُ مِنْ مَضْجَعِهِ ذَلِكَ "

இறந்தவர் அடக்கம் செய்யப்பட்டதும் கருத்த நிறமும், நீலநிறக் கண்களும் கொண்ட முன்கர், நகீர் என்ற இரு மலக்குகள் அவரிடம் வருவார்கள். (முஹம்மது (ஸல்) அவர்களைக் குறித்து) "இந்த மனிதரைப் பற்றி நீ என்ன கருதியிருந்தாய்?'' என்று கேட்பார்கள். "அவர் அல்லாஹ்வின் தூதரும்  அவனது அடியாருமாவார். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது அடியாரும் தூதருமாவார்கள் என்று உறுதியாக நான் நம்புகின்றேன்'' என்று அந்த மனிதர் கூறுவார். "உலகில் வாழும் போதே இவ்வாறு நீ நம்பியிருந்தாய் என்பதை நாங்கள் அறிவோம்'' என்று அம்மலக்குகள் கூறுவார்கள். பின்னர் அவரது மண்ணறை விசாலமாக்கப்பட்டு ஒளிமயமாக்கப்படும். பின்னர் அவரை நோக்கி, "உறங்குவீராக'' என்று கூறப்படும்.

நான் எனது குடும்பத்தாரிடம் சென்று இந்த விபரங்களைக் கூறி விட்டு வருகின்றேன் என்று அம்மனிதர் கூறுவார். அதற்கு அவ்வானவர்கள், "நெருங்கிய உறவினர்களைத் தவிர வேறு எவரும் எழுப்ப முடியாதவாறு உறங்கும் புது மாப்பிள்ளை போல் இந்த இடத்திலிருந்து இறைவன் எழுப்பும் வரை உறங்குவீராக'' என்று கூறுவார்கள்.

இறந்த மனிதன் நயவஞ்சகனாக இருந்தால் அவனிடம் இக்கேள்வியைக் கேட்கும் போது அவன், "இந்த முஹம்மதைப் பற்றி மனிதர்கள் பலவாறாகப் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டிருக்கின்றேன். மற்றபடி இவரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது'' என்று கூறுவான். அதற்கு அவ்வானவர்கள், "நீ இப்படித் தான் உலகிலும் கூறிக் கொண்டிருந்தாய் என்பதை நாங்கள் அறிவோம்'' என்று கூறுவார்கள். அதன் பின்னர் பூமியை நோக்கி, "இவனை நெருக்குவாயாக'' என்று கூறப்படும். அவனது விலா எலும்புகள் நொறுங்குமளவுக்கு பூமி அவனை நெருக்க ஆரம்பிக்கும். அவனது இடத்திலிருந்து அவனை இறைவன் எழுப்பும் வரை வேதனை செய்யப்பட்டுக் கொண்டே இருப்பான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : திர்மிதீ 991

நல்லவர்களின் ஆவிகளானாலும், கெட்டவர்களின் ஆவிகளானாலும் அவை ஒருக்காலும் உலகுக்கு வர முடியாது. உலகில் உள்ளவர்களுடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ள முடியாது என்பதை இந்த ஹதீஸ் அழுத்தம் திருத்தமாக இரண்டாவது கருத்துக்கு இடமில்லாமல் தெளிவுபடக் கூறுகிறது.

மண்ணறை விசாரணை சில நிமிடங்களில் முடிந்த பின் நல்லவரின் மண்ணறை ஒளி வீசும் வகையில் விசாலமாக்கப்பட்டு உறங்குமாறு நல்லடியாருக்குக் கட்டளையிடப்படும் என்று கூறப்படுகிறது.

தன்னை அல்லாஹ் பொருந்திக் கொண்டதையும், முதல் பரீட்சையில் தான் தேறிவிட்டதையும் அறிந்து கொண்ட நல்லடியார், இந்த நற்செய்தியை எனது உறவினருக்குச் சொல்லி விட்டு வருகிறேன் என அனுமதி கேட்கிறார்.

அனுமதி மறுக்கப்பட்டதுடன் புதுமாப்பிள்ளை போல் ஆழ்ந்த உறக்கத்துக்குச் செல் எனக் கூறப்படுகிறது. இது சில மணி நேர உறக்கம் அல்ல. நியாயத்தீர்ப்பு நாள் வரை நீடிக்கும் உறக்கமாகும் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது.

நல்லடியார் யார் என்பதை நாம் அறிய முடியாது. ஆனாலும் சிலரை நாமாக மகான்கள் என முடிவு செய்து கொள்கிறோம். அந்த முடிவு சரியானது என்று வைத்துக் கொண்டாலும் அவர்களை அழைக்கவோ, பிரார்த்திக்கவோ முடியாது என்பதற்கு இந்த ஹதீஸ் தெளிவான ஆதாரமாக அமைந்துள்ளது.

ஏனெனில் நல்லவர்கள் கியாமத் நாள் வரை ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளனர் எனும்போது நமது அழைப்பை எவ்வாறு அவர்கள் செவியுற முடியும்? எவ்வாறு நமக்கு உதவ முடியும்? ஆழ்ந்த உறக்க நிலையில் இருப்பவர்கள் எப்படி நமக்காக அல்லாஹ்விடம் பரிந்து பேச முடியும்?

கெட்டவர்களின் ஆவிகள் பேய்களாக உலகில் திரிகின்றன என்ற நம்பிக்கைக்கும் இந்த ஹதீஸ் பகிரங்க மறுப்பாக அமைந்துள்ளது.

ஏனெனில் அவர்கள் கியாமத் நாள் வரை வேதனை செய்யப்பட்டுக் கொண்டு அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் உள்ளனர். எனவே அவர்கள் இவ்வுலகுக்கு வந்து ஆட்டம் போட முடியாது என்பதும் இந்த ஹதீஸில் இருந்து தெரிகிறது.

Leave a Reply