ஏகத்துவம் நவம்பர் 2007
புது ரத்தம் பாய்ச்சிய புனித ரமளான்
"ரமளான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப் படுகின்றனர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூற்கள்: புகாரீ 1899, முஸ்லிம் 1957
இந்த ஹதீஸ் உண்மையில் ஓர் உயிரோட்டமான ஹதீஸாகும். இது அல்லாஹ்வுடைய தூதரின் சொல் தான் என்று நமது நம்பிக்கையைப் பலப்படுத்தும் ஹதீஸாகும்.
பள்ளிவாசல் தொடர்பில் கொஞ்சம் அலட்சியமாக இருக்கின்ற பழைய முகங்கள்! பள்ளியுடன் தொடர்பில்லாத புதிய முகங்கள்! அத்தனை பேர்களையும் இந்த ரமளான், பள்ளியில் கொண்டு வந்து சேர்த்து விடுகின்றது.
அராஜக ஷைத்தானின் ஆதிக்கம் ஒரு கட்டுக்குள் வருவதால் தானே கட்டுக்கு அடங்காத கூட்டம் பள்ளிகளில் கூடி களை கட்டுகின்றது; பள்ளி நிரம்பி வழிகின்றது. இந்த மிகப் பெரிய மாற்றத்தை ரமளான் மக்களிடத்தில் கொண்டு வந்து விடுகின்றது.
விபத்தில் கை, கால்கள் ஒடிந்து முடங்கிப் போனவர்களுக்கு அறுவை சிகிச்சை அளித்து, உலோகத் தகடுகள் பொருத்தி, அவர்கள் நடப்பதற்கு மருத்துவர்கள் பயிற்சி கொடுப்பார்கள். அந்தப் பயிற்சியில் பழைய நடையைத் திரும்பப் பெற்றுக் கொள்வார்கள்.
அது போன்று தான், பாவம் என்ற விபத்தில் மாட்டி, படுக்கையில் கிடந்த நம்மை, இந்த ரமளான் மாதம் சரி செய்து நடக்க விட்டிருக்கின்றது. நாம் அப்படியே நம்முடைய நடையைப் பெற்றுக் கொண்டு தொடர வேண்டும். புனித மிக்க இந்த ரமளான் மாதம் நமது உடலில் புது ரத்தத்தைப் பாய்ச்சி உள்ளது.
செல்போன்கள் இயங்குவதற்காக அதிலுள்ள பேட்டரிகளுக்கு மின்சாரத்தை சார்ஜ் செய்கிறோம். அது போன்று நம்முடைய உள்ளத்தில் இறையச்சத்தை சார்ஜ் செய்யும் கருவியாக இந்த ரமளான் அமைந்துள்ளது.
அதிகாலை ஸஹர் நேரத்தில் நம்மை எழச் செய்தது.
அந்த நேரத்தில் இரவுத் தொழுகைகளைத் தொழ வைத்தது.
ஐந்து நேரங்களிலும் தனியாக அல்ல! ஜமாஅத்துடன் தொழ வைத்தது.
அதிகமதிகம் தான, தர்மங்களை அள்ளி வழங்க வைத்தது.
அன்றாடம் குர்ஆனுடன் தொடர்பை அதிகப்படுத்தியது.
பொய், புறம், சினிமா, சீரியல் என அனைத்துத் தீமைகளை விட்டும் அப்புறப்படுத்தியது.
வாய் கொப்பளிப்பதற்காக உள்ளே சென்ற சுத்தமான சுவையான தண்ணீர், தொண்டைக் குழிக்குள் விழுவதற்கு எத்தனை மைல் தூரம்? ஒரு மயிரிழை தூரம் தான். இருப்பினும் அந்தத் தண்ணீர் உள்ளே செல்லவில்லை. ஏன்?
அல்லாஹ் அருகில் இருக்கிறான் என்ற அச்சம். இந்த அச்சத்தை ரமளான் நம்மிடம் பதித்தது; புதுப்பித்தது.
அனுமதிக்கப்பட்ட நமது மனைவியர் பகல் வேளைகளில் அருகில் இருந்தும், அடையாமல் தடுத்தது எது? அல்லாஹ் அருகில் இருக்கிறான் என்ற அச்சம் தான்.
எங்கோ இருந்த நம்மை இந்த ரமளான் அல்லாஹ்வின் பக்கம் மிக அருகில் கொண்டு வந்து விட்டுள்ளது.
இறையச்சம் என்ற மின்னூட்டத்தை நம்முடைய உள்ளத்தில் ஏற்றியுள்ளது.
புனித ரமளான் ஏற்றிய இந்த மின்னூட்டம் இறங்கி விடாமல், இறைவன் அருகில் இருக்கிறான் என்ற உணர்வுடன் அவன் அருகிலேயே நாம் இருக்க வேண்டும்.
அதற்கு ஒரே வழி, ரமளானில் செய்த அந்த வணக்கங்களை அப்படியே விடாது தொடர்வதாகும்.
இந்த உறுதிப்பாட்டுடன் ரமளானுக்குப் பிறகுள்ள நம்முடைய வாழ்வைத் தொடர்வோமாக!