பெண்களுக்கும் ஹூருல் ஈன்கள் உண்டா?

பெண்களுக்கும் ஹூருல் ஈன்கள் உண்டா?

அக்பர் தேங்காய்ப்பட்டிணம்

பதில்

"நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு சொர்க்கச் சோலைகள் உள்ளன''என்று நற்செய்தி கூறுவீராக! அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் ஏதாவது கனி அவர்களுக்கு உணவாக வழங்கப்படும் போதெல்லாம் "இதற்கு முன் இது தானே நமக்கு வழங்கப்பட்டது'' எனக் கூறுவார்கள். இதே தோற்றமுடையது தான் (முன்னரும்) கொடுக்கப்பட்டிருந்தது. அங்கே அவர்களுக்குத் தூய்மையான துணைகளும் உள்ளனர். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.

அல்குர்ஆன் 2:25

"சொர்க்கத்தில் தூய்மையான துணைகள் உள்ளனர்'' என்று திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில் கூறுகின்றது. சில இடங்களில் பெண் துணைகள் உள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.

அப்படியானால் நல்லறம் செய்த பெண்களுக்கு ஆண் துணைகள் இல்லையா? இதற்குரிய விடையை அறிவதற்கு அரபு மொழியின் ஓர் இலக்கண விதியை அறிந்து கொள்ள வேண்டும்.

தமிழ் மொழி உள்ளிட்ட பல மொழிகளில் படர்க்கையில் ஒருமையில் மட்டுமே ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித் தனிச் சொல்லமைப்பு உள்ளது. தமிழில் அவன் என்பது ஆணையும், அவள் என்பது பெண்ணையும் குறிக்கும்.

படர்க்கை பண்மையில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவாக "அவர்கள்' எனக் கூறுகிறோம்.

அரபு மொழியில் படர்க்கை பண்மையிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி சொல்லமைப்பு உள்ளது.

அது போல் முன்னிலையில் பேசும் போது தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் "நீ' "நீங்கள்' என்று கூறுகிறோம். இது ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவானது.

ஆனால் அரபு மொழியில் முன்னிலையாகப் பேசுவதற்கு இரு பாலருக்கும் தனித்தனி சொல்லமைப்பு உள்ளது.

தமிழ் மொழியில் தொழுங்கள் என்று கூறினால் ஆண்கள் பெண்கள் ஆகிய இரு பாலரையும் நோக்கிப் பேசுகிறது என்று புரிந்து கொள்வோம்.

ஆனால் அரபி மொழியில் இப்படி இரு பாலரையும் குறிக்க தனிச் சொல்லமைப்பு இல்லை.

"ஸல்லூ' என்று அரபு மொழியில் கூறினால் "தொழுங்கள்' என்று பொதுவாக பொருள் செய்ய முடியாது. ஆண்களை நோக்கித் தொழச் சொல்லும் போது மட்டுமே இவ்வாறு கூறமுடியும்.

பெண்களை நோக்கி "தொழுங்கள்' என்று கூறுவதாக இருந்தால் "ஸல்லீன' எனக் கூற வேண்டும்.

அரபு மொழியில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவாகக் கட்டளை இடுவதாக இருந்தால் "ஆண்களே தொழுங்கள்! பெண்களே தொழுங்கள்'' என்பது போல் இரு தடவை கூற வேண்டும்.

திருக்குர்ஆனில் உள்ள அனைத்துமே ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானது என்பதால் அனைத்துக் கட்டளைகளையும் இப்படி இரண்டிரண்டு தடவை கூற வேண்டும்

இரண்டு தடவை கூறினால் தற்போதுள்ள குர்ஆன் போல் இரு மடங்காக ஆகி விடும். மேலும் அரபு அல்லாத மொழியில் மாற்றம் செய்யும் போது இந்த நடை வெறுப்பை ஏற்படுத்தி விடும்.

சுருக்கமாகவும் இருக்க வேண்டும்; எந்த மொழியில் மொழி பெயர்த்தாலும் அந்த மொழியில் இருந்து அன்னியப்பட்டு விடாமலும் இருக்க வேண்டும்; ஆண்களையும் பெண்களையும் உள்ளடக்கும் வகையிலும் இருக்க வேண்டும் என்பதற்காக திருக்குர்ஆன் ஒரு மாற்று வழியைத் தேர்வு செய்துள்ளது.

அதாவது அனைத்து கட்டளைகளையும், அறிவுரைகளையும் ஆண்களைக் குறிக்கும் வகையில் பேசிவிட்டு, "ஆண்களுக்குச் சொன்ன அனைத்தும் பெண்களுக்கும் உள்ளன' என்று ஒன்றிரண்டு வசனங்களில் மட்டும் கூறுவது தான் அந்த வழிமுறை.

مسند أحمد
26575   حدثنا  يونس ،  وعفان ، قالا : حدثنا  عبد الواحد  – يعني ابن زياد – قال : حدثنا  عثمان بن حكيم ، عن  عبد الله بن رافع ، عن  أم سلمة . قال  عفان  في حديثه : قال : حدثنا  عبد الرحمن بن شيبة ، قال : سمعت  أم سلمة ، قالت :  قلت : يا رسول الله صلى، الله عليه وسلم، ما لنا لا نذكر في القرآن كما يذكر الرجال ؟ قالت : فلم  يرعني  منه يوما إلا ونداؤه على المنبر : " يا أيها الناس ". قالت : وأنا أسرح رأسي، فلففت شعري، ثم دنوت من الباب، فجعلت سمعي عند الجريد، فسمعته يقول : " إن الله عز وجل، يقول : { إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات } ". هذه الآية. قال عفان : " { أعد الله لهم مغفرة وأجرا عظيما } ". 

நபிகள் நாயகம் (ஸல்) காலத்திலேயே பெண்கள் இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டனர். "ஆண்களைப் பற்றித் தானே திருக்குர்ஆன் கூறுகிறது. பெண்களைப் பற்றிக் கூறுவது இல்லையே ஏன்?'' என்று உம்மு ஸலமா (ரலி) கேட்ட போது, திருக்குர்ஆனின் 33:35 வசனம் அருளப்பட்டது.

(நூல்: அஹ்மத் 25363)

இவ்வசனத்தில் (33:35) ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் சமமான தக்க பரிசுகள் உண்டு எனக் கூறப்படுகிறது. அதாவது ஆண்களுக்குக் கூறப்படும் அனைத்தும் பெண்களுக்கும் உண்டு என்ற கருத்தில் இவ்வசனம் அமைந்துள்ளது.

4:124 வசனத்தில் நல்லறம் செய்த ஆணோ, பெண்ணோ அணுவளவும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள் எனக் கூறப்படுகிறது.

இதே போன்ற கருத்தில் திருக்குர்ஆனின் 3:195, 4:124, 16:97, 40:40 ஆகிய வசனங்களும் அமைந்துள்ளன.

ஆண்களும், பெண்களும் இறைவனுக்கு அஞ்சி நல்லறங்கள் செய்திருக்கும் போது,ஆண்களுக்கு மட்டும் கூடுதல் பரிசுகள் வழங்குவது அநீதியாகும்.

மறுமையில் பரிசு வழங்கும் போது "அனைவரும் அதில் திருப்தியடைவார்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான். அனைவரும் என்பதில் ஆண்களைப் போலவே பெண்களும் அடங்குவார்கள் என்பதில் ஐயமில்லை.

(பார்க்க: திருக்குர்ஆன் 5:119; 9:100; 22:59; 58:22; 88:9; 98:8)

எனவே அல்லாஹ், ஆண்களுக்கு மட்டும் துணைவிகளைக் கொடுத்து விட்டு பெண்களுக்குத் துணை இல்லாமல் விட மாட்டான்.

எத்தனையோ கட்டளைகள் ஆண்களை மட்டும் குறிக்கும் வகையில் இருந்தாலும் அக்கட்டளைகள் பெண்களையும் குறிக்கும் என்று மேற்கண்ட வசனங்களைச் சான்றாகக் கொண்டு அறிந்து கொள்கிறோம்.

அது போல் தான் சொர்க்கத்தில் கிடைக்கும் ஜோடிகள் குறித்தும் ஆண் பாலாகக் கூறப்பட்டுள்ளது. அதுவும் பெண்பாலுக்கும் பொருந்தும் என்று அதே வசனங்களைச் சான்றாகக் கொண்டு முடிவு செய்வதே ஏற்புடையதும், இறைவனின் நீதிக்கு உகந்ததுமாகும்.

மனித உள்ளம் விரும்பும் விஷயங்கள் சொர்க்கத்தில் கிடைக்கும் என்று அல்லாஹ் கூறுகிறான்.

وَلَكُمْ فِيهَا مَا تَشْتَهِي أَنْفُسُكُمْ وَلَكُمْ فِيهَا مَا تَدَّعُونَ (31) 41

இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் நாங்கள் உங்கள் உதவியாளர்கள். நிகரற்ற அன்புடைய மன்னிப்பவனின் விருந்தாக நீங்கள் ஆசைப்படுபவை உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் கேட்பதும் உங்களுக்கு உண்டு என்றும் கூறுவர்.

அல்குர்ஆன் (41 : 31)

ஆண்கள் பெண் துணையை விரும்புவது அவர்களின் இயல்பாôக இருப்பது போல் பெண்கள் ஆண் துணையை விரும்புவதும் அவர்களின் இயல்பான குணமாகும். சொர்க்கத்தில் இவ்விருவருடைய விருப்பமும் நிறைவேற்றப்படும்.

மேலும் சொர்க்கத்தில் உள்ளவர்கள் துணையில்லாமல் இருக்கமாட்டார்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

5062 حَدَّثَنِي عَمْرٌو النَّاقِدُ وَيَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ جَمِيعًا عَنْ ابْنِ عُلَيَّةَ وَاللَّفْظُ لِيَعْقُوبَ قَالَا حَدَّثَنَا إِسْمَعِيلُ ابْنُ عُلَيَّةَ أَخْبَرَنَا أَيُّوبُ عَنْ مُحَمَّدٍ قَالَ إِمَّا تَفَاخَرُوا وَإِمَّا تَذَاكَرُوا الرِّجَالُ فِي الْجَنَّةِ أَكْثَرُ أَمْ النِّسَاءُ فَقَالَ أَبُو هُرَيْرَةَ أَوَ لَمْ يَقُلْ أَبُو الْقَاسِمِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ أَوَّلَ زُمْرَةٍ تَدْخُلُ الْجَنَّةَ عَلَى صُورَةِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ وَالَّتِي تَلِيهَا عَلَى أَضْوَإِ كَوْكَبٍ دُرِّيٍّ فِي السَّمَاءِ لِكُلِّ امْرِئٍ مِنْهُمْ زَوْجَتَانِ اثْنَتَانِ يُرَى مُخُّ سُوقِهِمَا مِنْ وَرَاءِ اللَّحْمِ وَمَا فِي الْجَنَّةِ أَعْزَبُ رواه مسلم

சொர்க்கத்தில் துணையில்லாமல் எவரும் இருக்கமாட்டார்' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி)

நூல் : முஸ்லிம் 5449

ஆண்களைப் போலவே பெண்களும் சொர்க்கத்திற்குச் செல்வார்கள் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை. அப்படியானால் சொர்க்கத்திற்குச் செல்லும் பெண்களுக்கு கண்டிப்பாக வாழ்க்கைத் துணை இருக்கும் என இந்த செய்தி தெளிவாக அறிவிக்கின்றது.

Leave a Reply