பெண் வீட்டாரிடம் கடன் வாங்கித் திருமணம் செய்வது சரியா?


பெண் வீட்டாரிடம் கடன் வாங்கித் திருமணம் செய்வது சரியா?

சில ஆண்கள் வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்து கொள்கின்றார்கள். ஆனால் பெண் வீட்டாரிடம் வரதட்சணை என்று கேட்டு வாங்காமல் "ஒரு லட்சம்,இரண்டு லட்சம் கடனாகத் தாருங்கள், திருமணத்தின் பின்பு திருப்பித் தருகின்றேன்''என்று கேட்டு வாங்கிக் கொள்கின்றார்கள். அதைத் திரும்பச் செலுத்துகின்றார்களா,இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால் பெண் வீட்டாரிடம் இது போன்று கடன் வாங்கித் திருமணம் செய்வது மார்க்க அடிப்படையில் சரியா?

எம். சமீரா அஜீஸ், அதிராம்பட்டிணம்

பதில் : 

பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுடனும்,மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்!

அல்குர்ஆன் 4:4

பெண்களுக்கு மஹர் கொடுத்துத் தான் மணம் முடிக்க வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். ஆனால் இன்று இறைக் கட்டளைக்கு நேர் மாற்றமாக மஹர் கொடுக்காதது மட்டுமின்றி பெண்ணிடமிருந்து வரதட்சணை வாங்கித் திருமணம் செய்யும் அவல நிலை உள்ளது.

நீங்கள் கூறுவது போன்று சிலர், மஹர் கொடுத்துத் திருமணம் செய்கின்றேன் என்று கூறிக் கொண்டு, பெண் வீட்டில் கடன் வாங்கித் திருமணம் செய்கின்றனர். கடன் வாங்குவது மார்க்கத்தில் அனுமதிக்கப் பட்டது தானே என்ற எண்ணத்தில் இவ்வாறு செய்கின்றனர். ஆனால் இதுவும் ஒரு வகையில் மறைமுகமான வரதட்சணை தான் என்பதில் சந்தேகமில்லை.

மஹர் தொகையிலிருந்து அவர்களாக எதையேனும் மனமுவந்து விட்டுத் தந்தால் அதைப் பெற்றுக் கொள்வதில் தவறில்லை என்று மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான். அதாவது மாப்பிள்ளை கொடுத்த மஹர் தொகையிலிருந்து பெண் தருவதாக இருந்தாலும் மனமுவந்து தர வேண்டும். நிர்ப்பந்தத்திற்குப் பயந்து கொடுக்கக் கூடாது. ஆனால் இங்கு என்ன நடக்கின்றது? பெயரளவிற்கு ஆயிரம் ரூபாய் பெருந்தன்மையாக (?) மஹர் கொடுத்து விட்டு, லட்சக் கணக்கில் பெண் வீட்டிலிருந்து கடன் வாங்குகின்றார்கள்.

தற்போது உள்ள சூழ்நிலையில் யாரும் ஒரு லட்சம், இரண்டு லட்சம் என்று சர்வ சாதாரணமாகக் கடன் கொடுத்து விட மாட்டார்கள். ஆனால் பெண் வீட்டுக்காரர்கள்,மாப்பிள்ளைக்கு இவ்வளவு பெரிய தொகையைக் கடனாகக் கொடுக்கின் றார்கள் என்றால் அவர்கள் ஒரு வித நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் தான் கொடுக்கின்றார்கள்.

மார்க்கம் விதிக்கின்ற நிபந்தனைகளான அடைமானம், எழுதிக் கொள்ளுதல்,சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுதல் போன்ற எதுவுமே இல்லாமல் மாப்பிள்ளை என்ற ஒரே அந்தஸ்தைப் பயன்படுத்தி இந்தக் கடன் நாடகம் அரங்கேறுகின்றது.

அஸ்த் எனும் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரை (ஜகாத்) வசூலிப்பவராக நபி (ஸல்) அவர்கள் நியமித்தார்கள். அவர் இப்னுல் லுத்பிய்யா என்று அழைக்கப்பட்டு வந்தார். அவர் ஜகாத் வசூலித்துக் கொண்டு வந்த போது, "இது உங்களுக்குரியது. இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது'' என்று கூறினார்.

நபி (ஸல்) அவர்கள், "இவர் தன் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு, தமக்கு அன்பளிப்பு கிடைக்கிறதா? இல்லையா? என்று பார்க்கட்டும். என் உயிரைத் தன் கைவசம் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! உங்களில் யாரேனும் அந்த ஜகாத் பொருளிலிருந்து முறைகேடாக எதனைப் பெற்றாலும் அதை அவர் மறுமை நாளில் தனது பிடரியில் சுமந்து கொண்டு வருவார். அது ஒட்டகமாக இருந்தால் கனைத்துக் கொண்டிருக்கும். பசுவாகவோ,ஆடாகவோ இருந்தால் கத்திக் கொண்டிருக்கும்'' என்று கூறினார்கள்.

பிறகு அவர்களுடைய அக்குள் வெண்மையை நாங்கள் பார்க்கும் அளவுக்குத் தமது கைகளை உயர்த்தி, "இறைவா! நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா? நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா?'' என்று மூன்று முறை கேட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுமைத் அஸ்ஸாயிதி(ரலி),
நூல்: புகாரி 2597

அன்பளிப்பு என்பது அனுமதிக்கப்பட்டது தான் என்றாலும் இந்த இடத்தில் அதை நபி (ஸல்) அவர்கள் அனுமதிக்கவில்லை. இவர் வீட்டில் இருந்தால் இந்த அன்பளிப்பு கிடைத்திருக்குமா? என்று கேட்கின்றார்கள்.

இது போன்று தான், கடன் என்பது அனுமதிக்கப்பட்டதாக இருந்தாலும் ஒருவித நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் வாங்கப்படுவதை நாம் கடனாக எடுத்துக் கொள்ள முடியாது.

அதே மாப்பிள்ளை அங்கு பெண் எடுக்கவில்லை என்றால் இந்தத் தொகையை கடனாகக் கொடுப் பார்களா? என்றால் நிச்சயமாகக் கொடுக்க மாட்டார்கள். இந்த ஒரு லாஜிக்கே இது மறைமுகமான வரதட்சணை என்பதற்குப் போதுமான சான்றாகும்.

அதே போல் பெண் வீட்டுக்காரர்கள் இவ்வாறு கடன் கேட்டிருந்தால் அதற்கு மாப்பிள்ளை வீட்டார் சம்மதிப்பார்களா? என்பதும் கவனிக்க வேண்டிய அம்சம். தனக்கு வர வேண்டிய மஹரைக் கூட ஒரு பெண், தானாக நிர்ணயம் செய்து, அதை அழுத்தமாகக் கேட்க முடியாத சூழ்நிலை நமது நாட்டில் நிலவும் போது, கடன் கேட்பதைப் பற்றி நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் பெண் வீடு என்றால் மாப்பிள்ளை வீட்டாருக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்ற மனப்பான்மை நிலவுவது தான். இந்த நிலைமை மாறாத வரை இது போன்ற கட்டாயக் கடன்களை (?) தடுக்க முடியாது.


கேள்வி – பதில் – ஏகத்துவம், மார்ச் 2005