பெற்றோருக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக மனைவியை தலாக் சொல்லலாமா?

பெற்றோருக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக மனைவியை தலாக் சொல்லலாமா?

கணவனிடம் எந்தக் குறையும் சொல்ல முடியாதபடி நடக்கும் மனைவியை கணவனின் தாய் விவாகரத்துச் செய் என்று சொன்னால் அதை ஏற்கலாமா?

அபுதாஹிர்

பதில் :

நியாயமான காரணம் இல்லாமல் கணவன் மனைவியைப் பிரிப்பது இஸ்லாத்தில் வன்மையாகக் கண்டிக்கப்பட்டுள்ளது. இது ஷைத்தானுடைய செயல் என்றும், இறை மறுப்பாளர்களின் குணம் என்றும் மார்க்கம் கூறுகின்றது.

5032حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ وَاللَّفْظُ لِأَبِي كُرَيْبٍ قَالَا أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ حَدَّثَنَا الْأَعْمَشُ عَنْ أَبِي سُفْيَانَ عَنْ جَابِرٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ إِبْلِيسَ يَضَعُ عَرْشَهُ عَلَى الْمَاءِ ثُمَّ يَبْعَثُ سَرَايَاهُ فَأَدْنَاهُمْ مِنْهُ مَنْزِلَةً أَعْظَمُهُمْ فِتْنَةً يَجِيءُ أَحَدُهُمْ فَيَقُولُ فَعَلْتُ كَذَا وَكَذَا فَيَقُولُ مَا صَنَعْتَ شَيْئًا قَالَ ثُمَّ يَجِيءُ أَحَدُهُمْ فَيَقُولُ مَا تَرَكْتُهُ حَتَّى فَرَّقْتُ بَيْنَهُ وَبَيْنَ امْرَأَتِهِ قَالَ فَيُدْنِيهِ مِنْهُ وَيَقُولُ نِعْمَ أَنْتَ قَالَ الْأَعْمَشُ أُرَاهُ قَالَ فَيَلْتَزِمُهُ رواه مسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

இப்லீஸ், தனது சிம்மாசனத்தை (கடல்) நீரின் மீது அமைக்கிறான். பிறகு தன் பட்டாளங்களை (மக்களிடையே) அனுப்புகிறான். அவர்களில் மிகப் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகின்றவனே இப்லீஸிடம் மிகவும் நெருங்கிய அந்தஸ்தைப் பெறுகிறான். அவனிடம் ஷைத்தான்களில் ஒருவன் (திரும்பி) வந்து நான் இன்னின்னவாறு செய்தேன் என்று கூறுவான். அப்போது இப்லீஸ், (சொல்லிக் கொள்ளும் அளவுக்கு) நீ எதையும் செய்யவில்லை என்று கூறுவான். பிறகு அவர்களில் மற்றொருவன் வந்து, நான் ஒரு மனிதனுக்கும், அவனுடைய மனைவிக்கும் இடையே பிரிவை ஏற்படுத்தாமல் அவனை நான் விட்டு வைக்கவில்லை என்று கூறுவான். அப்போது இப்லீஸ், அவனை அருகில் வரச் செய்து, நீதான் சரி என்று (பாராட்டிக்) கூறுவான்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)

நூல் : முஸ்லிம்

எனவே நியாயமின்றி கணவன் மனைவியைப் பிரிப்பது பெரும் குற்றமாகும். பாவமான காரியங்களைச் செய்யுமாறு பெற்றோர்கள் கூறினால் அதற்குப் பிள்ளைகள் கட்டுப்படக் கூடாது என மார்க்கம் கூறுகின்றது.

وَوَصَّيْنَا الْإِنْسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا وَإِنْ جَاهَدَاكَ لِتُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ (8) وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَنُدْخِلَنَّهُمْ فِي الصَّالِحِينَ (9)29

தனது பெற்றோருக்கு நல்லுதவி செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தியுள்ளோம். உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்குமாறு அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! உங்களின் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்.

திருக்குர்ஆன் 29:8

உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்கும் படி அவ்விருவரும் உன்னைக் கட்டாயப்படுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! இவ்வுலகில் அவர்களிடம் அழகிய முறையில் தோழமை கொள்! என்னை நோக்கித் திரும்பியோரின் வழியைப் பின்பற்று! பின்னர் உங்கள் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்.

திருக்குர்ஆன் 31:15

பெற்றோர்கள் தகுந்த காரணமின்றி மனைவியை தலாக் செய்யுமாறு கூறினால் மகன் அவர்களுக்குக் கட்டுப்பட்டு தம் மனைவியை தலாக் செய்யக் கூடாது. அது குற்றமாகும்.

திருமணத்தின் மூலம் பெண்கள் ஆண்களிடம் கடுமையான உடன்படிக்கை எடுத்துள்ளதாக அல்லாஹ் கூறுகிறான்.

{وَكَيْفَ تَأْخُذُونَهُ وَقَدْ أَفْضَى بَعْضُكُمْ إِلَى بَعْضٍ وَأَخَذْنَ مِنْكُمْ مِيثَاقًا غَلِيظًا (21)} [النساء: 21]

நீங்கள் ஒருவருடன் மற்றவர் கலந்து பெண்கள் உங்களிடம் கடுமையான உடன்படிக்கை எடுத்துள்ள நிலையில் எப்படி அதை (மஹரை) நீங்கள் எடுத்துக் கொள்ள முடியும்?

திருக்குர்ஆன் 4:21

திருமணம் என்பது அவ்வளவு எளிதாக வெட்டி முறிக்கும் உறவு அல்ல என்பதை கடும் ஒப்பந்தம் என்ற சொல் மூலம் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

அவர்கள் வெளிப்படையான வெட்கக்கேடானதைச் செய்தால் தவிர. அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத்திருப்பான்.

திருக்குர்ஆன் 4:19

தகாத நடத்தை இல்லாத வரை அவர்களுடன் இல்லறம் நடத்துங்கள் என்று அல்லாஹ் இவ்வசனத்தில் வழிகாட்டுகிறான்.

அவ்விருவரிடையே பிளவு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அவன் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும், அவள் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும் அனுப்புங்கள்! அவ்விருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அல்லாஹ் அவ்விருவருக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துவான். அல்லாஹ் அறிந்தவனாகவும், நன்றாகவே அறிந்தவனாகவும் இருக்கிறான்.

திருக்குர்ஆன் 4:35

தம்பதியர் பிரிந்து விடக் கூடிய நிலை ஏற்பட்டால் அதில் தலையிட்டு இணக்கம் ஏற்படுத்த குடும்பத்தினருக்கு அல்லாஹ் கட்டளயிடுகிறான். இதில் பெற்றோரும் அடங்குவார்கள்.

தம்பதிகள் இணைந்து வாழ்வதற்கு முயற்சியை மேற்கொள்ளக் கடமைப்பட்ட பெற்றோர் விவாகரத்து செய்ய வலியுறுத்துவது குற்றமாகும். அவர்களின் தவறான உத்தரவை நிறைவேற்றுவதும் குற்றமாகும்.

மேலும் யாருக்கும் அநீதி இழைக்கக் கூடாது என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடாகும். கணவனுக்குச் செய்யும் கடமையை மனைவி சரியாகச் செய்யும் போது அவளுடன் நல்ல முறையில் வாழ்க்கை நடத்துவதுதான் திருமண ஒப்பந்த்த்தை நிறைவேற்றுவதாகும்

மனைவியிடம் விவாகரத்து செய்யும் அளவுக்கு காரணம் இல்லாத போது பெற்றோரோ, மற்றவரோ சொல்கிறார்கள் என்பதற்காக விவாக ரத்து செய்வது ஒப்பந்த மீறலாகும். அனீதி இழைப்பதாகும்.

மக்களுக்கு அநீதி இழைத்து நியாயமின்றி பூமியில் வரம்பு மீறுவோருக்கு எதிராகவே குற்றம் பிடிக்க வழி உண்டு. அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.

திருக்குர்ஆன் 42:42

அநீதி இழைத்து அல்லாஹ்வால் குற்றம் பிடிக்கும் நிலைக்கு ஆளாகிவிட வேண்டாம்.

பெற்றோர் சொல்லைக் கேட்டு மனைவியை விவாகரத்து செய்ய வேண்டும் என்று கூறுவோர் பின்வரும் ஹதீஸை இதற்கு ஆதாரமாகக் குறிப்பிடுகின்றனர்.

1110حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ أَنْبَأَنَا ابْنُ الْمُبَارَكِ أَنْبَأَنَا ابْنُ أَبِي ذِئْبٍ عَنْ الْحَارِثِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ حَمْزَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ ابْنِ عُمَرَ قَالَ كَانَتْ تَحْتِي امْرَأَةٌ أُحِبُّهَا وَكَانَ أَبِي يَكْرَهُهَا فَأَمَرَنِي أَبِي أَنْ أُطَلِّقَهَا فَأَبَيْتُ فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ طَلِّقْ امْرَأَتَكَ رواه الترمذي

ஒரு பெண் எனக்கு மனைவியாக இருந்தாள். நான் அவளை நேசித்தேன். ஆனால் என் தந்தை (உமர்) அவளை வெறுத்தார். அவளை நான் தலாக் விட வேண்டும் என எனக்கு உத்தரவிட்டார். இதற்கு நான் ஒப்புக் கொள்ளவில்லை. நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இதைத் தெரிவித்த போது அவர்கள் அப்துல்லாஹ் பின் உமரே உனது மனைவியை நீ தலாக் செய்துவிடு என்றார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல் : திர்மிதீ

தக்க காரணம் இல்லாமல் விவாகரத்து செய்யக் கூடாது என்று சொன்ன நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தந்தை சொல்லி விட்டார் என்பதற்காக விவாகரத்து செய்யுமாறு கூறியிருக்க முடியாது. மார்க்கம் அனுமதித்த காரணம் தந்தையின் கோரிக்கையில் இருந்து அதை அறிந்த பின்னர் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியிருக்க முடியும். எந்த நியாயமான காரணமும் இல்லாமல் தந்தை சொல்லி விட்டார் என்பதற்காக ஒரு பெண்ணுக்கு அநீதி இழைக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லி இருக்க மாட்டார்கள்.

இப்படித்தான் இந்த ஹதீஸைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இப்படி அறிவுரை சொல்லும் தாய் தனது மகளை மருமகன் பெற்றோர் சொல் கேட்டு விவாகரத்து செய்தால் அதை மனமுவந்து ஏற்பாரா? என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

18.04.2011. 3:30 AM

Leave a Reply