பெற்றோரைக் கவனிக்காதவருக்கு சொத்துரிமை உண்டா?
இறந்து போன கணவரது சொத்தில் (சுய சம்பாத்தியம்) பங்கு பிரிப்பது எவ்வாறு? பின்வரும் வாரிசுகள் உள்ளனர்.
ஒரு மனைவி,
இரு மகன்கள்,
ஒரு மகள்
இரு மகன்களில் ஒருவர் 25 வருடங்களாக தனிக்குடித்தனம் இருக்கின்றார், தாயைக் கவனிப்பது இல்லை. சொத்து உண்டாக்கியதில் மகனின் பங்கு எதுவும் கிடையாது.
மகள் தாயைப் பராமரித்து வருகின்றார்.
இந்த நிலையில் இறந்தவரின் வஸிய்யத்தை எவ்வாறு பூர்த்தி செய்வது?
பஷீர் அஹ்மத்
தனிக்குடித்தனம் இருப்பது சொத்துரிமையைப் பாதிக்காது,
தாயைக் கவனிப்பதும், கவனிக்காமல் இருப்பதும் சொத்துரிமை சட்டத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
சொத்தைப் பெருக்குவதில் ஒருவருக்கு எந்த அளவுக்கு பங்களிப்பு உள்ளது என்பதற்கும், வாரிசுரிமை சட்டத்துக்கும் சம்மந்தம் இல்லை.
குடும்பத்துடன் சேர்ந்து குட்டுக் குடும்பமாக இருப்பவருக்கும் தனிக்குடித்தனமாக வாழ்பவருக்கும் சமமான சொத்துரிமை தான் உள்ளது.
பெற்றோரைக் கவனிக்கும் பிள்ளைகளுக்கும், கவனிக்காத பிள்ளைகளுக்கும் சமமான உரிமை தான் உள்ளது.
சொத்தைப் பெருக்குவதில் உழைத்தவருக்கும், உழைக்காதவருக்கும் சமமான பங்குதான் உள்ளது.
தந்தை உயிருடன் இருக்கும் போதே ஒருமகன் கஷ்டப்பட்டு தொழிலைப் பெருக்குகிறான். இன்னொரு மகன் தறுதலையாகத் திரிகிறன் என்றால் பாடுபடும் மகனுக்கு சில சொத்துக்களை தந்தை எழுதி வைத்தால் அது பிள்ளைகள் மத்தியில் பாரபட்சம் காட்டியதாக ஆகாது.
உழைப்பவன், உழைக்காதவன் என்ற அடிப்படையில் பாரபட்சம் காட்டினால் அது சரியான நீதியாகும். சொத்துக்கு உரியவர் ஒரு மகனுக்கு மட்டும் எதையும் உடமையாக்காமல் இறந்து விட்டால் அனைவருக்கும் இஸ்லாம் வழங்கியுள்ள சதவிகிதம் சமமாகக் கிடைக்கும்.
நீங்கள் குறிப்பிட்டுள்ளவர்களைத் தவிர வேறு வாரிசுகள் இல்லை என்றால் பின்வருமாறு பங்கீடு செய்ய வேண்டும்.
ஆகவே சுருக்கமான போதுமான பதிலை அளிக்கிறோம்.
இறந்தவருக்குப் பிள்ளைகள் உள்ளதாக நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். அப்படி இருந்தால் மனைவிக்கு மொத்த சொத்தில் எட்டில் ஒரு பாகம் தரப்பட வேண்டும்.
உங்களுக்குக் குழந்தை இருந்தால் நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம் உங்கள் மனைவியர்களுக்கு உண்டு.
திருக்குர்ஆன் 4 : 12
மீதமுள்ள சொத்துக்கள் மகனுக்கு இரண்டு பங்கு, மகளுக்கு ஒரு பங்கு என்ற அடிப்படையில் பங்கிடப்பட வேண்டும்.
இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு என்று உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகிறான்.
திருக்குர்ஆன் 4 : 11
இறந்தவருடைய மொத்த சொத்து விபரம் அளிக்கப்படாததால் இந்த தகவலை வைத்து நீங்களே வாரிசுதார்களுக்கிடையில் பங்கிட்டுக் கொள்ளலாம்.
10.08.2013. 3:02 AM