மதுரை ஜகாத் விவாதம் – ஒரு பார்வை
ஆடிய ஆட்டமென்ன? ஓடிய ஓட்டமென்ன?
கே.எம். அப்துந்நாஸர் எம்.ஐ.எஸ்.சி.
உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது. நீங்கள் (தவறாக) வர்ணிப்பதால் உங்களுக்குக் கேடு தான்.
அல்குர்ஆன் 21:18
உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழியக் கூடியதாகவே உள்ளது.
அல்குர்ஆன் 17:81
மேற்கண்ட இறைவசனங்கள் உண்மையான இறை நம்பிக்கை யாளர்களுக்கு ஒரு பாடத்தை உணர்த்துகின்றன. எப்படிப்பட்ட பெருங்கூட்டங்கள் அணிதிரண்டு நின்றாலும் சத்தியம் தான் வெல்லும் என்பதே அந்த உண்மை.
இன்றைய நிலையில் தான் தவ்ஹீத் ஜமாஅத்தின் சத்தியப் பிரச்சாரத்திற்கு எதிராக எத்தனை, எத்தனை எதிர்ப்பாளர்கள்! தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்ப்பவர்கள் இரு பிரிவினராக உள்ளனர்.
ஒரு கூட்டம் அவர்களுடைய கொள்கையை நாம் விமர்சிப்பதால் நம்மை எதிர்க்கிறார்கள். இவர்களில் பலர் மிகவும் நல்லவர்கள்.
ஆனால் இன்னும் ஒரு பிரிவினர் இருக்கின்றார்கள். இவர்கள் தான் மிகவும் ஆபத்தானவர்கள். இவர்கள் நம்மை எதிர்ப்பதெல்லாம் தங்கள் உள்ளங்களில் கொண்டுள்ள காழ்ப்புணர்வினால் மட்டும் தான். இவர்களில் பலர் மார்க்கப் பிரச்சாரம் செய்கிறோம் என்ற பெயரில் வெளிநாடுகளில் சல்லிக் காசுகளுக்காக தஞ்சமடைந்தவர்கள். அல்லது வெளிநாட்டுக் காசை நம்பி உள்நாட்டில் மார்க்க வியாபாரம் செய்பவர்கள். ஏசி அறைகளில் இருந்து கொண்டு ஒன்றிரண்டு பயான்கள் செய்து கொண்டு பிரச்சாரம் செய்வதாக சொல்லிக் கொள்பவர்கள்.
கூலிக்காக மட்டும் மார்க்கத்தைப் பிரச்சாரம் செய்யும் இந்த மேதாவிகள் (?) தங்களுடைய எஜமானிய விசுவாசத்தை அதிகம் வெளிப் படுத்துவார்கள். தங்களுக்குச் சம்பளம் கொடுக்கும் அரபிகள் என்ன சொன்னார்களோ அது தான் இவர்களின் மார்க்கம். தங்களுடைய எஜமானர்களுக்கு எதிராக யார் எந்தக் உண்மையைச் சொன்னாலும் மார்க்கத்தின் பெயரால் அவர்களை எதிர்க்கத் தயங்க மாட்டார்கள். அதற்காக மார்க்கத்தின் பெயரால் எத்தகைய இருட்டடிப்பையும் செய்வதற்குத் தயாராவார்கள்.
சல்லிக் காசுகளுக்காக சத்திய மார்க்கத்தின் அடிப்படையைக் கூட மாற்றியவர்கள் தான் இவர்கள்! குர்ஆன், ஹதீஸ் மட்டும் தான் மார்க்கம் என்ற கொள்கையிலிருந்த இந்த மதனிகள், உமரிகள் இதே கருத்தை மிகவும் வலிமையாக இவர்களை விடவும் அழுத்தமாக ஆழமாக தவ்ஹீத் ஜமாஅத் பிரச்சாரம் செய்த காரணத்தால், இஸ்லாத்தின் அடிப்படைகள் (குர்ஆன், ஹதீஸ், ஸஹாபாக்களைப் பின்பற்றுவது ஆகிய) மூன்று என மாற்றிக் கொண்டுள்ளார்கள். கோவை ஜாக் பள்ளியில் உரையாற்றிய இக்பால் மதனீ அவர்கள் இதை மிகத் தெளிவாகவே உறுதிப்படுத்தியுள்ளார்கள். இவ்வாறு கூறுவதால் அனைத்து மதனிகளும், உமரிகளும் இப்படித் தான் என எண்ணி விடாதீர்கள். இவர்களில் மிகவும் நல்லவர்கள் பலர் உள்ளனர்.
இவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராகச் செய்த மாபாதகச் செயல்கள் அனைத்தையும் நாம் பட்டியலிட்டு விட முடியாது. இவற்றையெல்லாம் நாம் இங்கே கூறுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது.
ஜகாத் தொடர்பாக இறைச் செய்தியான குர்ஆன், மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் தெளிவான சட்டத்தை தவ்ஹீத் ஜமாஅத் எடுத்து வைத்த போது "தவ்ஹீத் ஜமாஅத்தினர் மதம் மாறி விட்டனர்’ என்று எந்த வித ஞானமுமின்றி ஃபத்வா கொடுத்தவர்கள் தான் இந்தக் கருங்காலிகள். தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கு எதிராக இவர்கள் செய்த அவதூறுப் பிரச்சாரம் கொஞ்ச நஞ்சமல்ல! விவாதக் களத்தில் சந்திக்கத் துணிவில்லாமல் வெளிநாடுகளுக்கும், உள்நாட்டிலும் இவர்கள் ஓடிய ஓட்டம் தான் என்ன……
என்ன ஆனாலும் பரவாயில்லை! இவர்களை விவாதக் களத்தில் சந்தித்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் தான், இவர்களின் கருத்தைப் பிரதிபலிக்கக் கூடிய, இவர்களின் எழுத்துக்களுக்கு முகமூடியாகப் பயன்படுத்தப்பட்ட நூர் முகம்மது அவர்களை தன்னுடைய சொந்தச் செலவில் தவ்ஹீத் ஜமாஅத் அழைத்தது. ஒரு சில செலவுகளைத் தவிர அனைத்து செலவுகளுக்கும் தவ்ஹீத் ஜமாஅத் பொறுப்பேற்றுக் கொண்டது.
தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொறுத்த வரை எந்த ஒரு விவாதமாக இருந்தாலும் உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும்; உண்மையை நிலைநாட்ட வேண்டும் என்ற லட்சியங்களோடு தான் களம் இறங்குகிறோம். அதன் அடிப்படையில் தான் மதுரையில் பிப்ரவரி 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஜகாத் தொடர்பான விவாதமும் சிறப்பான முறையில் நடைபெற்றது.
ஒரு பொருளுக்கு ஒரு தடவை ஜகாத் கொடுத்து விட்டால் அதற்கு மீண்டும் மீண்டும், வருடா வருடம் ஜகாத் கொடுக்கத் தேவையில்லை என்பது தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு.
ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும், வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பது மதுரையைச் சார்ந்த நூர் முகம்மது பாகவி அவர்களின் நிலைப்பாடாகும்.
தான் எந்த இயக்கத்தையும் சார்ந்தவரல்ல என்று இவர் சொல்லிக் கொண்டாலும் தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்ப்பதை மட்டுமே லட்சியமாகக் கொண்ட ஜாக் மற்றும் வெளிநாட்டு மார்க்க வியாபாரிகள் சிலரை பினாமியாகக் கொண்டவராவார்.
விவாதக் களம்
முதல் நாள் காலை 10 மணியளவில் விவாதம் துவங்கிய உடன் மவ்லவி பி.ஜே. அவர்கள் முதலில் பேசத் துவங்கினார்கள். அவர் தனது முன்னுரையில், எந்த ஒரு மனிதனாக இருந்தாலும் அவனிடம் தவறுகள் ஏற்படத் தான் செய்யும். இறைவன் மட்டுமே தவறுகளுக்கு அப்பாற் பட்டவன் என்ற அடிப்படையில், ஜகாத் தொடர்பாகப் பொது மேடைகளில், தான் பேசும் போது எடுத்து வைத்த சில உதாரணங்கள் தவறானவை என்பதை முதலில் எடுத்துரைத்தார். பின்னர் பின்வரும் ஆதாரங்களை முன் வைத்தார்.
1. ஒருவன் இஸ்லாத்தைத் தழுவும் போது லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூற வேண்டும் என மார்க்கம் நமக்குக் கட்டளையிட்டுள்ளது.
2. ஒருவனுக்குப் புதையல் கிடைத்தால் ஐந்தில் ஒன்றை அவன் ஜகாத்தாக வழங்க வேண்டும் என்று நபியவர்கள் நமக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்
3. போர்க்களங்களில் கைப்பற்றப் படும் கனீமத் பொருட்களில் ஐந்தில் ஒன்றை வழங்க வேண்டும் என்ற மார்க்கக் கட்டளை.
4. ஒருவன் இறந்து விட்டால் அவனுடைய சொத்துக்களைப் பங்கிட வேண்டும் என்ற மார்க்கக் கட்டளை.
5. விவாசாயப் பயிர்களுக்கு அறுவடை காலத்தில் ஜகாத் வழங்க வேண்டும் என்ற மார்க்கக் கட்டளை.
6. விபச்சாரம் செய்தவர்கள் திருமணமாகாதவர்களாக இருந்தால் அவர்களை 100 கசையடிகள் அடிக்க வேண்டும் என்ற மார்க்கக் கட்டளை.
இன்னும் பல மார்க்கக் கட்டளைகளை எடுத்து வைத்து இவையனைத்தும் எவ்விதக் காலமும், நிபந்தனைகளுமின்றி இடப்பட்ட கட்டளைகள். இவையனைத்தையும் ஒரு தடவை என்று தான் நாம் விளங்கிக் கொள்கிறோம். இவற்றை ஒரு தடவை நிறைவேற்றிய பின்பு மீண்டும் மீண்டும் நிறைவேற்ற வேண்டும் என்று ஒருவர் கூறினால் அவர் தான் அதற்கான ஆதாரத்தை எடுத்து வைக்க வேண்டும். இல்லையென்றால் அவருடைய கருத்து தவறானதாகும்.
அது போன்று தான் ஜகாத் தொடர்பான விஷயத்தையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் ஜகாத்தை நிறைவேற்றுங்கள் என்பது மட்டும் தான் மார்க்கக் கட்டளை. அதனை வருடா வருடம், ஒரே பொருளுக்கு மீண்டும் மீண்டும் நிறைவேற்ற வேண்டும் என்பதற்குக் குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் அடிப்படையில் எந்த ஆதாரமும் இல்லை. எனவே மற்ற கட்டளைகளை நாம் எப்படி விளங்கிக் கொள்கிறோமோ அது போன்று தான் இதையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
யார் ஒரே பொருளுக்கு மீண்டும் மீண்டும் வருடா வருடா கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார்களோ அவர்கள் தான் அதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பி.ஜே. அவர்கள் தெளிவான முறையில் தன்னுடைய கருத்துக்களைப் பதிவு செய்தார்கள்.
பலவீனமான செய்தியை ஆதாரமாகக் காட்டினார்கள்
ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும், வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற கருத்தைத் தரும் ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸைக் காட்டுங்கள். விவாதத்தை முடித்துக் கொள்வோம் என்று பீஜே கேட்டார்.
தனது ஒவ்வொரு வாய்ப்பின் போதும் பீஜே இவ்வாறு கேட்டுக் கொண்டே இருந்தார். ஆனால் நூர் முகம்மது பாகவி சம்பந்தமில்லாமல் சுய புராணம் பாடினார். பிஜே அவர்கள் எடுத்து வைத்த மேற்கண்ட வாதங்களுக்குப் பதில் என்ற முறையில் சில கருத்துக்களைக் கூறினார். "நான் ஆதாரத்தை எடுத்துக் காட்டுவேன்; காட்டாமல் இந்த இடத்தை விட்டுப் போக மாட்டேன்” என்று சொன்னாரே தவிர பாதி நாள் முடியும் வரை ஆதாரத்தை எடுத்துக் காட்டவில்லை. தனது பல வாய்ப்புகளைப் பாழ் படுத்தினார்.
பாதி நாளை இவ்வாறு கடத்தி விட்டு நூர் முகம்மது அவர்கள் தன்னுடைய முதல் ஆதாரமாகப் பின்வரும் பலவீனமான ஹதீஸை எடுத்து வைத்து வாதம் செய்தார்.
உனக்கு இரு நூறு திர்ஹங்கள் இருந்து அதற்கு ஒரு வருடம் நிறைவடைந்து விட்டால் அதில் ஐந்து திர்ஹங்கள் (ஜகாத் கடமையாகும்). இருபது தீனார் ஆகும் வரை (தங்கத்தில் ஜகாத்) கடமையில்லை. இருபது தீனார் இருந்து அதில் ஒரு வருடம் நிறைவடைந்து விட்டால் அரை தீனார் (ஜகாத்) ஆகும். இந்தக் கணக்கின் அடிப்படையில் இதற்கு அதிகமானவைகளுக்குக் கணக்கிட வேண்டும்
அறிவிப்பவர் : அலீ (ரலி)
நூல் : திர்மிதி 1342
கொடுத்த பொருளுக்கு மீண்டும் மீண்டும், வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற கருத்திற்கு இந்த ஹதீஸில் எந்த ஆதாரமும் இல்லை.
ஒரு பொருள் நம்முடைய கையில் கிடைத்தால் அதற்கு அன்றே ஜகாத் கொடுக்க வேண்டியதில்லை. அது கிடைத்ததிலிருந்து ஒரு வருடம் கழிந்த பிறகு தான் அதற்கு ஜகாத் கடமையாகும் என்ற கருத்தைத் தான் மேற்கண்ட செய்தி கூறுகிறது.
மேலும் இது பலவீனமானது என்பதை தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக விவாதம் செய்த பிஜே அவர்கள் பல வகைகளில் நிரூபித்தார்கள்.
பலவீனம் என்பதற்கு முதல் சான்று
இந்த ஹதீஸ் பலவீனம் என்பதை நூர் முஹம்மத் அவர்களே தான் எழுதியதாகச் சொல்லிக் கொள்ளும் நூலில் ஒப்புக் கொண்டுள்ளார். இதோ அவர் தன்னுடைய வெளியீட்டில் கூறுவதைப் பாருங்கள்.
அனாதைகளின் சொத்தை வியாபாரத்தில் ஈடுபடுத்த வேண்டும் என்ற நபிமொழி.
இரண்டு ஆண்டிற்கான ஜகாத்தை முன் கூட்டியே அப்பாஸ் (ரலி) அவர்கள் வழங்கியதாகக் கூறப்பட்ட நபிமொழி.
ஒரு பொருளை ஒருவன் பெற்றுக் கொண்டால் ஒரு வருடம் நிறைவடையும் வரை ஜகாத் இல்லை என்ற நபிமொழி.
கால் நடைகளின் ஜகாத் பற்றிய நபிமொழி.
மேற்கூறப்பட்டவையில் முதல் மூன்று நபிமொழிகளும் பலவீன மானவை. கால்நடைகள் சம்பந்தப் பட்ட நபிமொழியில் விதண்டா வாதம் பேசி மக்களைத் திசை திருப்புவார்கள் என்பதை நாம் ஏற்கனவே அறிந்து வைத்திருந்ததால், அதனை நமது மறு ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட வில்லை என்பது மட்டுமல்ல, வெள்ளி மேடையிலும் இவற்றை உதாரணத்திற்குக் கூட நாம் எடுத்துக் காட்டவில்லை.
(ஜகாத் சட்டங்கள்: ஜனவரி 2006 "ஏகத்துவம்’ மாத இதழில் மீண்டும் குழப்பங்கள் என்ற நூர் முஹம்மத் அவர்களின் வெளியீடு)
அவர்களே பலவீனம் என்று ஒப்புக் கொண்ட செய்தியைத் தான் விவாதத்திற்காக மனமுரண்டாக ஸஹீஹ் என்று கூறி வாதிட்டார்கள்.
இரண்டாவது சான்று
இந்த ஹதீஸில் இடம் பெறும் அறிவிப்பாளரான ஆஸிம் பின் லமுரா என்பவர் பலவீனமானவராவார்.
"இவர் மனனத் தன்மையில் மிகவும் மோசமானவராவார். தெளிவாகத் தவறு செய்யக் கூடியவர். அலீ (ர-) அவர்களின் சொந்தக் கூற்றில் அதிகமானவற்றை நபியவர்கள் கூறியதாக அறிவிப்பவராவார். (இவர் அறிவித்திருப்பது அலீயின் சொந்தக் கூற்று தான் என்பது) அறியப்படும் போது விடப்படுவதற்கு தகுதியானவராவார்” என்று இமாம் இப்னு ஹிப்பான் அவர்கள் இவரைப் பற்றிக் குறை கூறியுள்ளார்கள்
"இவருடைய அறிவிப்பை வலுவூட்டக் கூடிய வகையில் உறுதியானவர்கள் எவரும் அறிவிக்காத, தவறான செய்திகளை அலீ அவர்களிடமிருந்து இவர் தனித்து அறிவிக்கிறார். குழப்பங்களே இவரிடமிருந்து தான்” என இமாம் இப்னு அதீ அவர்களும் இவரைக் குறை கூறியுள்ளார்.
நூற்கள்: அல்லுஅஃபாஉ வல் மத்ரூகீன், பாகம்: 2, பக்கம்: 69
அல் மஜ்ரூஹீன் பாகம்: 2, பக்கம்: 125
எனவே ஆஸிம் பின் லமுரா அறிவிக்கக் கூடிய அனைத்து அறிவிப்புகளும் பலவீனம் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.
மூன்றாவது சான்று
ஆஸிம் பின் லமுரா என்ற பலவீனமான அறிவிப்பாளர் இடம் பெறுவதாலேயே இது ஆதாரமற்ற செய்தியாகி விடுகின்றது. மேலும் இது அலீ அவர்களுடைய சொந்தக் கூற்று தான் என்பதைப் பல அறிஞர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
மேற்கண்ட செய்தியை நபியவர்கள் கூறியதாக ஹாரிஸ் என்பவர் அறிவித்துள்ளார். இவர் பெரும் பொய்யராவார். எனவே இவருடைய அறிவிப்புகள் ஆதாரமாகக் கொள்ளப்படாது.
ஆஸிம் இதனை அலீயுடைய சொந்தக் கூற்றாகத் தான் அறிவித்துள்ளார். ஆனால் இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஜரீர் என்பவர் தான் ஆஸிம், ஹாரிஸ் ஆகிய இருவருடைய அறிவிப்புகளையும் தெளிவு படுத்தாமல் இருவருமே நபியிடமிருந்து அறிவிப்பதாக இணைத்துக் கூறி விட்டார்.
ஹதீஸ்களை அறிவிப்பதில் ஜரீர் என்பவரை விட மிக உறுதி வாய்ந்தவர்களான சுஃயான், ஷுஃபா, மஃமர் ஆகியோர் இதனை ஆஸிம் பின் லமுரா என்பவர் வழியாக அலீயுடைய சொந்தக் கூற்றாக மட்டுமே அறிவித்துள்ளனர்.
எனவே மிக உறுதி வாய்ந்தவர்களுக்கு மாற்றமாக அறிவிக்கும் ஜரீர் என்பவருடைய அறிவிப்பு நிராகரிக்கத் தக்கதாகும்.
இந்தக் குறைகளை இமாம் அல்பானி அவர்களும் தன்னுடைய இர்வாவுல் கலீல் என்ற நூலில் தெளிவு படுத்தியுள்ளார்கள். எனவே இந்தச் செய்தி அலீயுடைய சொந்தக் கூற்று தான் என்பதில் எவ்விதச் சந்தேகமுமில்லை.
நான்காவது சான்று
இந்தச் செய்தியை அபூ இஸ்ஹாக் என்பவரிடமிருந்து ஜரீர் என்பவர் அறிவித்துள்ளதாக அபூதாவூதில் இடம் பெற்றுள்ளது. ஆனால் ஜரீர் என்பவர் அபூ இஸ்ஹாகிடமிருந்து இதனைச் செவியேற்கவில்லை. இருவருக்கும் மத்தியில் ஹஸன் பின் உமாரா என்பவர் விடுபட்டுள்ளார். இவர் பலவீனமானவராவார்.
இந்தச் செய்தியை அபூதாவூதிற்கு அறிவித்த சுலைமான் என்பவர் தான் ஹஸன் பின் உமாரா என்ற பலவீனமான அறிவிப்பாளரைப் போக்கி விட்டு ஜரீர் என்பவர் அபூ இஸ்ஹாக்கிடமிருந்து அறிவிப்பதைப் போன்று கூறி விட்டார்.
ஆனால் சுலைமான் அவர்களை விட மிக உறுதியானவர்களான ஸஹ்னூன், ஹர்மலா, யூனுஸ், பஹ்ர் பின் நஸ்ர் இன்னும் பலர் அபூ இஸ்ஹாக்கிடமிருந்து ஹஸன் பின் உமரா வழியாகத் தான் அறிவித்துள்ளார்கள்.
இப்னுல் மவ்வாக் என்ற அறிஞர் இந்தக் குறைகளைத் தெளிவு படுத்தியுள்ளார். இதனை இமாம் இப்னு ஹஜர் அவர்களும் தன்னுடைய தல்கீஸ் (பாகம்: 2, பக்கம்: 174) என்ற நூலிலே உறுதிப்படுத்தியுள்ளார்கள்.
எனவே மேற்கண்ட செய்தி அறிவிப்பாளர் தொடர் முறிவடைந்த பலவீனமான செய்தியாகும். இந்த அடிப்படையிலும் இது ஆதாரத்திற்கு ஏற்க முடியாததாகிறது.
இப்படிப்பட்ட பல பலவீனங்கள் இந்தச் செய்தியில் இருப்பதை எடுத்துரைத்து இது ஒரு போதும் ஆதாரத்திற்குத் தகுந்ததல்ல என்பதை தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக மவ்லவி பிஜே அவர்கள் ஆணித்தரமாக பாமரனுக்கும் விளங்கும் வகையில் எடுத்துரைத்தார்கள்.
இவற்றிற்கெல்லாம் சரியான எந்த ஒரு பதிலையும் எடுத்துரைக்காத நூர் முகம்மது அவர்கள் ஆஸிம், ஆஸிம் என்றே முதல் நாளின் கடைசி அமர்வு வரை சொல்லிக் கொண்டிருந்தார்.
முறை தவறிய விவாதம்
தன்னிடம் பலமான ஆதாரம் இருப்பதாகப் பூச்சாண்டி காட்டிய நூர் முகம்மது அவர்கள் மேற்கண்ட பலவீமான செய்தியைத் தான் மிகப் பெரும் ஆதாரமாக எடுத்து வைத்தார்.
மற்ற சான்றுகளை எடுத்து உரைக்குமாறு பல முறை கூறிய போதும் அவற்றைக் கூறாமல் முதல் நாளின் ஆகக் கடைசியில் அது வரை கூறாத செய்திகளை எடுத்து வைத்தார். இது பார்வையாளர்களுக்கு மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஏனென்றால் மறு நாள் கேள்வி பதில் தான். அவற்றில் கேட்கப்படக் கூடிய கேள்விகளுக்குத் தான் பதிலளிக்கப்படுமே தவிர விவாதம் செய்வதைப் போன்று தவறுகளை விளக்கிக் கூற முடியாது.
எனினும் நூர் முகம்மத் அவர்கள் ஆகக் கடைசியில் எடுத்து வைத்து ஸஹீஹ் என்று வாதிட்ட செய்திகள் பலவீனமானவை தான் என்பதற்கான சான்றுகளை வாய் திறக்க முடியாத அளவிற்கு ஆணித்ததரமாக மறு நாள் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் பிஜே அவர்கள் எடுத்துரைத்தார்கள்.
கடைசி வாய்ப்பில் எடுத்து வைக்கப்பட்ட சான்றுகள்
நூர் முஹம்மத் முதல் நாள் முழுவதும் அவருக்குரிய சான்றுகளை எடுத்து வைக்காமல் அவரோடு முடியவிருந்த கடைசி வாய்ப்பில் பின்வரும் செய்திகளை எடுத்து வைத்தார்.
1. அபூதாவூதில் வந்துள்ள முஆவியா அல் காளிரி அவர்கள் அறிவிப்பதாக இடம் பெற்ற செய்தி
2. ஒரு பொருளுக்கு ஒரு வருடம் நிறைவடையாத வரை ஜகாத் இல்லை என்ற இப்னு உமர் (ரலி) அவர்களின் சொந்தக் கூற்று
3. இப்னு ஸிஹாப் என்பவர் அறிவிக்கும் வரலாற்றுச் செய்தி
4. ஆட்டுடைய ஜகாத் பற்றி வரக்கூடிய செய்தி
இது போன்ற செய்திகளை எடுத்துக் கூறி மீண்டும் மீண்டும், வருடா வருடம், கொடுத்த பொருளுக்கே ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற இல்லாத கருத்தை வலியுறுத்திக் கூறினார். இவை அனைத்திற்கும் மறு நாள் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் தெளிவாக பிஜே அவர்களால் பதிலளிக்கப்பட்டது.
இரண்டாம் நாள் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சி
இரண்டாம் நாள் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் இங்கு எழுதப்படவேண்டிய அளவிற்கு எந்த ஒரு கருத்தும் நூர் முகம்மத் அவர்கள் அளித்த பதிலுரையில் இடம் பெறவில்லை.
ஆனால் பிஜே அவர்கள் முதல் நாள் கடைசியில் நூர் முகம்மத் அவர்களால் ஸஹீஹானது என்று எடுத்து வைக்கப்பட்ட ஆதாரங்களின் தரத்தினை தெளிவாக எடுத்துரைத்தார்.
அபூதாவூதில் இடம் பெற்ற செய்தி பலவீனம் என்பதற்கான ஆதாரங்கள்
முதலில் நாம் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும். அபூதாவூதில் இடம் பெற்ற இந்தச் செய்தி இதே கருத்தில் இன்ன பிற நூல்களிலும் இடம் பெற்றுள்ளது. ஆனால் இவையனைத்தும் பலவீனம் என்பதை நூர் முகம்மது அவர்களே ஏகத்துவத்திற்கு எதிராக அவர் எழுதியதாகக் கூறும் நூலில் ஒத்துக் கொண்டுள்ளார்..
அபூதாவூதில் இடம் பெறும் ஹதீஸ் மட்டும் சரியானது என்று நூர் முஹம்மத் வாதிட்டார்.
ஆனால் அபூதாவூதில் இடம் பெற்ற முஆவியா அல் காளிரி அவர்கள் அறிவிக்கும் செய்தியும் பல வகைகளில் பலவீனமாகும்.
முதலாவது இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்களான ஜுபைர் பின் நுஃபைர் என்பவருக்கும் யஹ்யா என்பவருக்கும் மத்தியில் ஒரு அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார்.
ஜுபைர் என்பவரிடம் யஹ்யா என்பவர் செவியேற்கவில்லை என்பதை தஹ்தீப் மற்றும் துஹ்ஃபதுத் தஹ்ஸீல் போன்ற நூலாசியர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
எனவே இருவரும் ஒரே காலத்தில் வாழ்ந்துள்ளனர். எனவே சந்திக்க வாய்ப்பிருக்கலாம் என்ற அடிப்படையில் நூர் முகம்மத் அவர்கள் எடுத்து வைத்த வாதமும் தவிடு பொடியாகி விட்டது.
இருவருக்கும் இடையே சந்திப்பு இல்லை என்பதை ஒப்புக் கொண்ட நூர் முஹம்மத் வேறொரு வகையில் இதைத் தூக்கி நிறுத்த முயன்றார். அதாவது ஜுபைர் என்பவரிடம் யஹ்யா என்பவர் செவியேற்கா விட்டாலும் இருவருக்கும் இடையே விடுபட்டவர் அப்துர் ரஹ்மான் என்பது வேறு நூல்களில் தெளிவு படுத்தப்பட்டுள்ளது. அவர் நம்பகமானவர் என்பதால் இதில் உள்ள குறைபாடு அதன் மூலம் நிவர்த்தியாகும் என்று வாதிட்டார்.
எந்த ஹதீஸைப் பலவீனமானது என்று அவரே ஒப்புக் கொண்டாரோ அந்த அறிவிப்புக்களையே மேற்கண்ட ஹதீஸை வலுப்படுத்தும் ஆதாரமாக, "வேறு நூல்களில் தெளிவு படுத்தப்பட்டுள்ளது’ என்று அவர் குறிப்பிட்டார்.
ஒரு பலவீனமான ஹதீஸைத் தூக்கி நிறுத்த இன்னொரு பலவீனமான ஹதீஸைக் கொண்டு முட்டுக் கொடுத்தார்.
தப்ரானியில் உள்ள அந்த பலவீனமான அறிவிப்பு துணைச் சான்றாகக் கூட எடுக்க முடியாத அளவிற்குப் பலவீனமானதாகும்.
அதனுடைய அறிவிப்பாளரான அபூ தகீ என்பவர் துணைச் சான்றாக எடுக்க முடியாத நிலையில் உள்ளவராவர். இதனை ஹதீஸ் கலை அறிஞர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். முட்டுக் கொடுப்பதற்கு முருங்கைக் கட்டையைக் கொண்டு வரக் கூடாது என்பார்கள். தப்ரானியுடைய அறிவிப்பு முருங்கைக் கட்டையைப் போன்று மிகப் பலவீனமானவர் இடம் பெற்ற அறிவிப்பு என்பதை பிஜே அவர்கள் தெளிவாக விளக்கினார்கள்.
நூர் முகம்மத் கூறிய புருடா கதை
நம்முடைய கைகளில் உள்ள அபூதாவூது பிரதியில் தான் இவர் விடுபட்டுள்ளார். ஆனால் இமாம் இப்னு ஹஜர் அவர்களிடம் இருந்த அபூதாவூத் பிரதியில் அவர் விடுபடவில்லை. இந்தக் கருத்தை அவர் இஸாபாவில் தெளிவு படுத்தியள்ளார் என்று நூர் முகம்மத் அவர்கள் ஒரு புருடாவை அவிழ்த்து விட்டார். இதே கருத்தை அவர் ஏகத்துவத்திற்கு எதிராக தான் எழுதியதாகச் சொல்லிக் கொள்ளும் நூலிலும் கூறியுள்ளார்.
"இமாம் இப்னு ஹஜர் அவர்கள் தன்னிடம் அபூதாவூத் பிரதி இருந்தது எனக் கூறியதாக இஸாபாவில் இல்லையே!’ என்று பிஜே அவர்கள் எடுத்துக் காட்டினார். இப்போது தான் நூர் முகம்மதின் புருடா மக்களுக்குத் தெளிவானது.
இமாம் இப்னு ஹஜர் அவர்களிடம் தனியாக அபூதாவூதின் எந்த ஒரு பிரதியும் இருக்கவில்லை என்பதை இப்னு ஹஜரின் கூற்றைக் கொண்டே பிஜே நிரூபித்துக் காட்டினார்.
எனவே "இப்னு ஹஜர் அவர்களிடம் தனியாக ஒரு அபூதாவூத் பிரதி இருந்தது. அதில் அறிவிப்பாளர் விடுபடாமல் இருந்தது’ என நூர் முகம்மத் கூறியது பொய்யான தகவலாகும் என்பதை பிஜே தெளிவுபடுத்தினார்.
அம்ரு பின் ஹாரிஸ் என்ற அறிவிப்பாளரைப் பற்றிய விளக்கம்
மேலும் மேற்கண்ட செய்தியை இமாம் அபூதாவூத் அவர்கள் அம்ர் பின் ஹாரிஸ் என்பவரின் குடும்பத்தாரிடம் இருந்த புத்தகத்தில் படித்ததாகக் கூறியுள்ளார்கள்.
"அம்ரு பின் ஹாரிஸ் என்வர் நம்பகத் தன்மை நிரூபிக்கப் படாதவராவார்’ என்பதை இமாம் தஹபீ அவர்களின் மீஸானுல் இஃதிதால் மற்றும் இமாம் இப்னு ஹஜர் அவர்களின் தஹ்தீப் மற்றும் இப்னு அபீ ஆஸிம் அவர்களின் அஸ்ஸுன்னா என்ற நூலிலும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இது போன்று யாரென்றே அறியப்படாதவர்களைக் கூட இமாம் இப்னு ஹிப்பான் அவர்கள் தன்னுடைய ஸிகாத் என்ற நூலில் நம்பகமானவர்கள் பட்டியலில் கூறி விடுவார். எனவே இப்னு ஹிப்பானுடைய விமர்சனத்தை மட்டும் வைத்து ஒருவரை நம்பகமானவர் என்று தீர்மானித்து விட முடியாது . மேலும் இப்னு ஹிப்பான் மட்டும் யாரை நம்பகமானவர்கள் என்று கூறியுள்ளாரோ அவர்களுக்குத் தான் இமாம் தஹபீ அவர்கள் தன்னுடைய காஷிஃப் என்ற நூலில் உஸ்ஸிக (நம்பகமானவர் எனக் கருதப் பட்டுள்ளார்) என்ற வாசகத்தைப் பயன்படுத்துவார் என்பதை பிஜே அவர்கள் சிறு குழந்தைக்கும் விளங்கும் வண்ணம் தெளிவாக எடுத்துக் கூறி இந்த ஹதீஸ் மிகவும் பலவீனமானது; இதை ஒரு போதும் ஆதாரமாகக் கொள்ள முடியாது என்பதைத் தெளிவாக விளக்கினார்கள்.
ஆடுகளின் ஜகாத் பற்றிய ஹதீஸ்
தக்க ஆதாரம் இல்லாமல் ஒரு முடிவை எடுத்து விட்டு அதை நியாயப் படுத்துவதற்காக சம்பந்தமில்லாத ஹதீஸ்களையெல்லாம் நூர் முகம்மத் அவர்கள் ஆதாரம் காட்டினார்கள்.
இந்த வகையில் அவர் வைத்த மற்றொரு ஆதாரம் ஆடுகளின் ஜகாத் பற்றிய ஹதீஸை தன்னுடைய இஷ்டத்திற்கு வளைத்ததாகும்.
ஒரு மனிதனிடம் நாற்பது முதல் 120 வரை ஆடுகள் இருந்தால் அதற்கான ஸகாத் ஒரு ஆடு ஆகும். 121 முதல் 200 வரை இரண்டு ஆடுகளாகும். 201 முதல் 300 வரை மூன்று ஆடுகளாகும். 300க்கு மேல் ஒவ்வொரு நூறு ஆடுகளுக்கும் ஒரு ஆடு வீதம் ஜகாத் ஆகும்.
இந்தக் கருத்தில் அமைந்த ஹதீஸை தனது கருத்தை நிரூபிக்கும் ஆதாரமாக எடுத்து வைத்தார்.
இந்த ஆடுகளின் ஜகாத் பற்றிய ஹதீஸில் வருடம் வருடம் கொடுக்க வேண்டும் என்றோ, மீண்டும் மீண்டும் கொடுக்க வேண்டும் என்றோ மறைமுகமாகவோ அல்லது வெளிப்படையாகவோ எங்கும் கூறப்படவில்லை.
ஆனால் ஒரு பொருளுக்கு ஒரு வருடம் நிறைவடையாத வரை ஜகாத் இல்லை என்ற பலவீனமான செய்தியைச் சம்பந்தமில்லாத ஆட்டோடு இணைத்து தேவையில்லாத வியாக்கினம் கொடுத்து நூர் முகம்மத் அவர்கள் தானும் விளங்காமல் மக்களையும் குழப்பினார்.
இதை அவர்களின் தரப்பில் வந்தவர்களே தெளிவாக விளங்கிக் கொண்டனர். இது விவாத சிடிக்களை பார்ப்பவர்களுக்குத் தெளிவாக விளங்கும்.
இப்னு உமர் கூற்றை ஆதாரமாகக் கொள்ளலாமா?
கொடுத்த பொருளுக்கு மீண்டும் மீண்டும், வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதற்கு நூர் முகம்மத் அவர்கள் எடுத்து வைத்த ஆதாரங்கள் மிகப் பலவீனமானவை என்பதை அவர்கள் அணியின் சார்பாக வந்தவர்களே தெளிவாக விளங்கிக் கொண்டனர்.
எனவே அவர்களுடைய அணியைச் சார்ந்த ஒருவர், "நபிகள் நாயகம் அவர்கள் சொன்னதாக வரக்கூடிய செய்திகள் பலவீனமான வையாக இருந்தாலும் ஸஹாபாக்களின் சொந்தக் கூற்றை ஏற்றுக் கொள்ளலாமல்லவா? குறிப்பாக இப்னு உமர் அவர்களின் கருத்தை ஏற்றுக் கொள்ளலாம் அல்லவா?” என்ற கருத்தில் ஒரு கேள்வியைத் தொடுத்தார்.
இதற்குப் பதிலளித்த மௌலவி பிஜே அவர்கள், நாம் இறைச் செய்தியாகிய குர்ஆன், ஹதீஸை மட்டும் தான் பின்பற்ற வேண்டும்; இந்த இரண்டின் அடிப்படையில்லாமல் யாருடைய கூற்றும் மார்க்கமாகாது என்பதைத் தெளிவாக விளக்கினார்கள். மேலும் நீங்கள் எந்த இப்னு உமரின் செய்தியை ஆதாரமாகக் காட்டுகிறீர்களோ அதே இப்னு உமர் தான் நகைகளுக்கு ஜகாத் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளார். இதே கருத்தை இன்னும் பல பெரும் பெரும் ஸஹாபாக்கள் கூறியுள்ளனர். எனவே இப்னு உமரின் கருத்தை ஒருவர் ஏற்று தன்னுடைய சொத்து முழுவதையும் நகையாக மாற்றி வைத்துக் கொண்டு அதற்கு அவர் ஸகாத் கொடுக்காமல் இருந்தால் அவர் செய்தது சரியென்று நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா?
எனவே குர்ஆன் ஹதீஸ் தான் மார்க்கச் சட்டமாக ஆகுமே தவிர ஸஹாபாக்களின் சொந்தக் கருத்து ஒரு போதும் இறைச் செய்தியாக முடியாது என்பதைத் தெளிவாக விளக்கினார்கள்.
மேலும் இப்னு ஸிஹாப் என்பவர் அறிவித்ததாக நூர் முகம்மத் அவர்கள் எடுத்து வைத்த செய்தியும் ஒரு போதும் மார்க்க ஆதாரமாகாது. இப்னு ஸிஹாப் என்பவர் நபியுடைய காலத்தில் பிறந்தவரில்லை. அபூ பக்கர் அவர்களிடமோ, உமர் (ரலி) அவர்களிடமோ எந்தச் செய்தியையும் இவர் செவியேற்றதில்லை. எனவே இவர்கள் செய்ததாக இப்னு ஸிஹாப் என்பவர் ஒரு செய்தியை அறிவித்தால் அது ஒரு போதும் மார்க்க ஆதாரம் ஆகாது என்பதையும் பிஜே அவர்கள் தெளிவுபடுத்தினார்கள்.
கலகலப்பாக முடிந்த விவாதம்
விவாதத்தில் நடைபெற்ற ஒவ்வொரு விஷயத்தையும் நாம் வரிக்கு வரி கூறவில்லை. சில முக்கியமான கருத்துக்களைத் தான் இங்கு நாம் கூறியுள்ளோம்.
இரண்டாவது நாளின் கடைசி அமர்வில் பிஜே அவர்களின் வலிமையான வாதங்களுக்குப் பதில் கூற முடியாமல் திணறிய நூர் முகம்மத் அவர்கள் தன்னுடைய அப்பாவித் தனமான பேச்சின் மூலம் அந்த அவையைக் கலகலப்பாக்கினார்.
வாதங்களுக்குப் பதில் கூற முடியாமல் "நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும், சிடியை மீண்டும் மீண்டும் போட்டுப் பாருங்கள். நான் சரியாகப் பேசியிருப்பேன்’ என்று தனக்குத் தானே சமாதானம் கூறி பயான் செய்ய ஆரம்பித்தார்.
விவாதத்தின் ஒரு கட்டத்தில் பிஜே அவர்கள் இரு அறிவிப்பாளர்களைப் பற்றி பேசும் போது அவர்களுடைய பெயரை மாற்றிக் கூறி விட்டார்கள். பிறகு சரியாக திருத்திக் கூறினார்கள். உடனே நூர் முகம்மத் அவர்கள் "பார்த்தீர்களா? பிஜே தடுமாறி விட்டார். எனவே அவர் சத்தியத்தில் இல்லை. எனவே நான் விவாதத்தில் ஜெயித்து விட்டேன்’ என்று கூறினார். ஆனால் இதில் அதிசயம் என்னவென்றால் அவர் இவ்வாறு பேசிய பின்பு அடுத்த கணமே அவரிடம் பல தடுமாற்றங்களை அல்லாஹ் ஏற்படுத்தினான்.
இதைச் சுட்டிக் காட்டிய பிஜே அவர்கள் "ஒரு மனிதன் பேசும் போது ஏற்படுகின்ற நாக்குளறல்களை ஒரு போதும் சத்தியத்திற்கு அளவு கோலாகக் கொள்ளக் கூடாது. மூஸா நபி அவர்கள் கூட தன்னுடைய நாக்கின் முடிச்சுகளை அவிழ்க்குமாறு இறைவனிடம் பிரார்த்தனை செய்துள்ளார்கள். எனவே மூஸா நாக்குளறல் உடையவராக இருந்ததால் அவர் சத்தியத்தில் இல்லை என்று கூற முடியுமா?’ என்பதை விளக்கி நூர் முகம்மதிடம் ஏற்பட்ட இன்னும் பல தடுமாற்றங்களை எடுத்துக் கூறினார்கள்.
இறுதியில் இருவரும் "விவாதத்தில் மனம் புண்படும்படி ஏதாவது வார்த்தை பேசியிருந்தால் அதனைப் பொருட் படுத்தாமல் விட வேண்டும்’ என கேட்டுக் கொண்டனர். மேலும் விவாதத்திற்கான செலவு முழுவதையும் தவ்ஹீத் ஜமாஅத் ஏற்றிருந்ததால் அதில் ஏற்பட்ட குறைபாடுகளையும் பொருட்படுத்தாமல் விடுமாறு பிஜே அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாகக் கேட்டுக் கொண்டார்கள்.
"ஆடிய ஆட்டம என்ன? ஓடிய ஓட்டம் என்ன?” என்பார்கள். அது போன்று தான் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் ஆய்வு செய்து ஜகாத் விஷயத்தில் ஒரு சட்டத்தைத் தெளிவாகக் கூறியதற்காக இவர்கள் ஆடிய ஆட்டத்தை மக்கள் கண்டிருப்பார்கள். விவாதத்திலும், விவாதத்திற்குப் பிறகும் இவர்கள் ஓடும் ஓட்டத்தையும் மக்கள் காண்கிறார்கள்; இனியும் காண்பார்கள்.
பின்வரும் இறைவனின் வார்த்தைகள் ஒரு போதும் பொய்யாகாது என்பதை மதுரையில் நடைபெற்ற ஜகாத் தொடர்பான விவாதம் மீண்டும் நிரூபித்தது.
உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது. நீங்கள் (தவறாக) வர்ணிப்பதால் உங்களுக்குக் கேடு தான்.
அல்குர்ஆன் 21:18
உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழியக் கூடியதாகவே உள்ளது.
அல்குர்ஆன் 17:81