ஏகத்துவம் நவம்பர் 2007
விஞ்ஞான ஆடிப்படையில் பிறையைக் கணிப்பது குர்ஆன், ஹதீஸுக்கு எதிரானதே!
ஒரு சில இடங்களைத் தவிர இந்தியா முழுவதும் கடந்த 14.10.07 அன்று நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது. ரமளானின் 30ஆம் இரவு மேக மூட்டத்தின் காரணமாக பிறை தென்படாததால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறைப்படி 30 நோன்புகள் பூர்த்தியாக்கப்பட்டு பெருநாள் கொண்டாடப்பட்டது.
பிறை பார்க்கத் தேவையில்லை; கணித்தல் அடிப்படையில் தான் செயல்பட வேண்டும் என்ற கொள்கையுடைய ஜாக் இயக்கத்தினர் 12.10.07 அன்று பெருநாள் என இரண்டு நாட்களுக்கு முன்னதாக அறிவித்தனர். அத்துடன், அன்றைய தினம் நோன்பு நோற்பது ஹராம் என்றும், மாதத்தை மாற்றுவது குஃப்ர் (இறை மறுப்பு) என்றும் கூறி சுவரொட்டிகளை ஒட்டினர்.
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிறை பார்த்தே நோன்பு மற்றும் பெருநாளைத் தீர்மானித்துள்ளார்கள்; எனவே அந்த வழிமுறையைப் பின்பற்றுவது ஹராம், குஃப்ர் என்றால் அல்லாஹ்வின் தூதரையே இவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள் என்று தான் அர்த்தம். அல்லாஹ்வின் தூதரையே குற்றம் சாட்டும் இந்த யூதக் கூட்டத்தினரின் குழப்பத்திலிருந்து அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக” என்று நமது தரப்பிலிருந்து சுவரொட்டி ஒட்டப்பட்டது.
அதன் பின்னர் தற்போது, "பிறை விஷயத்தில் விஞ்ஞானக் கணிப்பை ஏற்பது குர்ஆன், ஹதீஸுக்கு எதிரானதா?” என்ற தலைப்பில் பிரசுரம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
பல்வேறு முரண்பாடுகளையும், இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கும் அம்சங்களையும் கொண்ட அந்தப் பிரசுரம் குறித்து உரிய விளக்கத்தை மக்களுக்குத் தெளிவுபடுத்துவது நமது கடமையாகும்.
ஒரே இறைவன், ஒரே இறுதி இறைத்தூதர், ஒரே கிப்லா ஆகியவற்றால் ஒன்றுபட்டுள்ள முஸ்லிம் சமுதாயம் தனது மகிழ்ச்சிக்குரிய நாள் எது என தீர்மானிப்பதில் குழம்பி நிற்பது நமது ஈமானின் பலவீனத்தையே காட்டுகிறது. உலகிற்கே வழிகாட்ட வந்த மார்க்கத்தைப் பின்பற்றி வரும் ஒரு மிகப் பெரும் பொறுப்புள்ள சமுதாயம் இது விஷயத்தில் நவீன யுகத்திலும் தடுமாற்றம் கொண்டிருப்பது இஸ்லாமைப் பற்றிய தவறான எண்ணத்தை மற்றவர்கள் மத்தியில் ஏற்படக் காரணமாகிவிடும்.
இவ்வாறு அந்தப் பிரசுரம் கூறுகின்றது. அதாவது உலகெங்கும் ஒரே நாளில் பெருநாள் கொண்டாடா விட்டால் அது ஈமானில் பலவீனமான செயல் என்றும், மாற்று மதத்தினர் இஸ்லாமைப் பற்றித் தவறாக நினைப்பார்கள் என்றும் கூறுகின்றனர்.
உண்மையில் உலகம் முழுவதும் ஒரே நாளில் பெருநாள் என்ற கருத்து தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னால் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே பெரும்பாலும் ஒரே நாளில் அல்லது அடுத்தடுத்த இரு நாட்களில் மக்கள் பெருநாள் கொண்டாடி வந்தனர்.
உலகம் முழுவதும் ஒரே நாள் என்ற கருத்து வந்த பிறகும் பொதுவாக மக்களின் நிலையில் எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை என்றாலும் இந்தக் கருத்தைச் சொல்பவர்கள் – உலகம் முழுவதும் ஒரே நாளில் பெருநாள் என்று வாதிடுபவர்கள் தமிழகத்தில் கூட ஒரே நாளில் பெருநாள் கொண்டாடவில்லை. ஒரே நாளில் இல்லாவிட்டாலும் பழைய நிலையில் அடுத்தடுத்த இரு நாட்களிலாவது பெருநாள் கொண்டாடினார்களா? என்றால் அதுவும் இல்லை. வெவ்வேறு மூன்று நாட்களில் பெருநாள் கொண்டாடி குழப்பத்தை ஏற்படுத்தினர்.
15.12.2001 சனி – ஏர்வாடி ஜாக்…
16.12.2001 ஞாயிறு – நாகர்கோவில் ஜாக்…
17.12.2001 திங்கள் – கடையநல்லூர் ஜாக்…
இப்படி தங்கள் இயக்கத்திலேயே மூன்று நாட்கள் பெருநாள் கொண்டாடினார்கள்.
கோட்டாரில் சந்தித் தெருவுக்கு ஒரு பெருநாள்; புதுத் தெருவுக்கு மறு நாள் தான் பெருநாள்.
நாகர்கோவிலுள்ள ஒரு மதனி புதன் கிழமை நோன்பு நோற்கிறார். இன்னொரு மதனி வியாழக்கிழமை நோன்பு நோற்கிறார். இரண்டு மதனிகளுமே ஒரே இயக்கத்தில் இருக்கிறார்கள்; சவூதியில் தான் சம்பளம் வாங்குகிறார்கள்.
ஒரு வீட்டிலேயே அண்ணனுக்கு ஒரு நாளும், தம்பிக்கு அடுத்த நாளும் பெருநாள் வரக் கூடிய நிலையைத் தோற்றுவித்தவர்கள் தான் ஜாக் இயக்கத்தினர்.
கணிப்பு தான் சரி என்று வாதிடும் இந்தப் பிரசுரத்தை, செய்யது அலீ பைஜி என்பவரின் பெயரால் வெளியிட்டுள்ளனர். இவரது நிலை என்ன தெரியுமா? இவர் இமாமாகப் பணி புரியும் கோட்டாறு அஷ்ரப் பள்ளிவாசலில் 11.09.07 அன்று செவ்வாய்க்கிழமை மக்ரிப் தொழுகையில், "இரவு பத்தரை மணி வரை தகவல் வருகிறதா? என்று பார்ப்போம்” என்று அறிவிக்கிறார். அதன் பிறகு பதினொன்றரை மணி வரை பார்ப்போம் என்று கூறுகிறார்.
கடைசியில் நோன்பா? இல்லையா? என்று தெரியாமலேயே 12.09.07 அன்று அங்குள்ளவர்களில் சிலர் நோன்பு நோற்றும், நோற்காமலும் இருக்கும் நிலை ஏற்பட்டது. கணிப்பு தான் சரி என்று நோட்டீஸ் போடுபவர்கள் எதற்காக இரவு 11 மணி வரை பார்க்க வேண்டும்? இப்படித் தங்களுக்குத் தாங்களே முரண்படுபவர்கள் அடுத்தவர்களை எப்படி ஒன்றிணைக்க முடியும்?
இவர்கள் தான், உலகம் முழுவதும் ஒரே நாளில் பெருநாள் கொண்டாடாவிட்டால் மாற்று மதத்தினர் தவறாக நினைப்பார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள். இனி விஷயத்திற்கு வருவோம்.
இவர்கள் வெளியிட்டுள்ள இந்தப் பிரசுரத்தில் லூனார் சிஸ்டம், சோலார் சிஸ்டம் என்று பயங்கர ஆய்வுகளில் ஈடுபட்டு, இறுதியாக இவர்கள் சொல்ல வரும் விஷயம் இது தான்.
"லுஹர் தொழுகைக்காக தயாராகும் ஒருவர் சூரியன் உச்சி சாய்ந்து விட்டதா என்று பார்த்து அறிந்து தொழுவதில்லை. ஏற்கனவே கணித்து வைக்கப்பட்டுள்ள நேரத்தைப் பார்த்தே தொழுகைக்குத் தயாராகிறார்.
இப்படிச் செய்வதால் நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கு மாற்றம் செய்து விட்டதாக, நம்மில் யாரும் யாரையும் குறை காண்பதில்லை. காரணம், நபி (ஸல்) அவர்களின் காலத்திற்கேற்ப அவர்கள் செயல்பட்டார்கள். நாம் நமது காலத்திற்கேற்ப செயல்படுகிறோம்”
"தொழுகைக்குரிய நேரத்தை அறிவதற்கு சோலார் சிஸ்டத்தின் புதிய விஞ்ஞான கணிப்பு முறையை ஏற்பவர்கள் நோன்பை துவக்குவதற்கு லூனார் சிஸ்டத்தின் அதே புதிய விஞ்ஞான கணிப்பு முறையை நிராகரிப்பது முரண்பாடான நிலையாகும்”
அதாவது தொழுகைக்காக சூரியக் கணிப்பைப் பின்பற்றும் நாம், நோன்பின் துவக்கத்தை அறிவதற்கு சந்திரக் கணிப்பைப் பயன்படுத்தினால் தவறில்லை என்பது தான் இந்தப் பிரசுரத்தின் சாராம்சம்.
இதற்கான பதிலை நாம் ஏற்கனவே பலமுறை தெளிவுபடுத்தியுள்ளோம். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த அல்முபீன் மாத இதழிலும், அதன் பின்னர் பல உரைகளிலும், நூல்களிலும் இதற்குப் பதிலளித்துள்ளோம்.
சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?
சூரியன் விஷயத்தில் கணிப்பை ஏற்றுக் கொள்ளும் நாம் சந்திரன் விஷயத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று வேறுபடுத்திக் கூறுவது சரி தான். ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறையைப் பார்த்துத் தான் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்று கூறி விட்டார்கள்.
சூரியன் மறைந்தவுடன் மக்ரிப் தொழ வேண்டும் என்பது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளையாகும். சூரியன் மறைந்தது என்பதை எப்படித் தீர்மானிக்க வேண்டும் என்பது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த உத்தரவையும் இடவில்லை.
அதாவது பிறை பார்த்து நோன்பு வையுங்கள் என்று கூறியது போல், சூரியன் மறைவதைப் பார்த்து மக்ரிப் தொழுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் எந்தக் கட்டளையும் பிறப்பிக்கவில்லை.
மேக மூட்டமான நாட்களில் சூரியன் தென்படாத பல சந்தர்ப்பங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வந்ததுண்டு. அது போன்ற நாட்களில் "சூரியன் மறைவதைக் கண்டால் மக்ரிப் தொழுங்கள். இல்லாவிட்டால் அஸர் நேரம் என்றே அதைக் கருதிக் கொள்ளுங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை.
அது போல் சூரியன் மறைவதைக் கண்ணால் கண்ட பின் தான் நோன்பு துறக்க வேண்டும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் அவர்கள் துஆச் செய்தவுடன் மழை பெய்ய ஆரம்பித்து ஆறு நாட்கள் நாங்கள் சூரியனையே பார்க்கவில்லை என்று புகாரியில் ஹதீஸ் உள்ளது. (பார்க்க: புகாரி 1013, 1014)
ஆறு நாட்களும் சூரியனையோ, அது உதிப்பதையோ, மறைவதையோ பார்க்க முடியவில்லை. இந்த ஆறு நாட்களும் கணித்துத் தான் தொழுதிருக்க முடியும். அனேகமாக சூரியன் மறைந்திருக்கும் என்று கருதும் நேரத்தில் தான் மக்ரிப் தொழுதிருக்க முடியும்.
மேகம் சூரியனை மறைத்தது போல் சந்திரனையும் மறைக்கிறது. சந்திரன் மறைக்கப்படும் போது எப்படியாவது கணித்துக் கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறவில்லை. பிறை தெரியாததால் மேகத்தின் உள்ளே பிறை இருந்தாலும் அது முப்பதாம் நாள் தான்; முதல் நாள் அல்ல என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி விட்டனர்.
சூரியனை மேகம் மறைத்த போது கணித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சந்திரனை மேகம் மறைத்த போது கணிக்கக் கூடாது; அது முப்பதாம் நாள் தான் என்று தெளிவாகப் பிரகடனம் செய்து விட்டனர். எனவே தொழுகைக்கும், நோன்புக்கும் ஒரே மாதிரியான அளவு கோல் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
இரண்டுக்கும் ஒரே மாதிரியான அளவுகோலைத் தான் எடுக்க வேண்டும் என்பதை ஒரு வாதத்திற்கு ஒப்புக் கொண்டாலும் அது இவர்களுடைய நிலைபாட்டிற்கு எதிராகவே அமையும்.
தொழுகை விஷயத்தில் சூரியக் கணிப்பை ஏற்றுக் கொள்ளும் நாம் உலகத்தில் எங்கு சூரியன் மறைந்தாலும் அதை ஏற்று மக்ரிப் தொழலாம் என்று கூறுவதில்லை. அந்தந்த பகுதிக்கு எப்போது சூரியன் மறைகிறதோ, அல்லது மறையும் என்று கணிக்கப்படுகிறதோ அதன் அடிப்படையில் தான் மக்ரிப் தொழுகிறோம்; நோன்பு துறக்கிறோம்.
உதாரணமாக இந்தியாவில் சூரியன் மறையும் நேரத்தில் சவூதியில் மாலை 4 மணியாக இருக்கும். இந்தியாவில் சூரியன் மறைந்து விட்டது என்று சவூதியில் உள்ளவர்கள் நோன்பு துறப்பது கிடையாது. நமது பகுதியில் சூரியன் எப்போது மறையும் என்பதைக் கவனித்தே நோன்பு துறக்கிறோம்; தொழுகிறோம். இதே அளவுகோலைத் தான் பிறை விஷயத்திலும் கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் எப்போது பிறை தென்படும் என்று கணிக்கப்படுகிறதோ அப்போது தான் தமிழகத்தில் முதல் பிறை; சவூதியில் எப்போது தென்படும் என்று கணிக்கப்படுகிறதோ அப்போது தான் சவூதியில் முதல் பிறை என்ற முடிவுக்குத் தான் இவர்கள் வர வேண்டும். ஆனால் இவர்கள் அப்படிச் செய்வதில்லை. உலகில் எங்கு பிறை தோன்றினாலும் உலகம் முழுவதும் அந்த நாள் தான் மாதத்தின் துவக்கம் என்று வாதிடுகின்றனர். இதிலிருந்து "சூரியன், சந்திரன் இரண்டுக்கும் ஒரே அளவு கோலைத் தான் எடுக்க வேண்டும்’ என்ற வாதத்தில் கூட இவர்கள் உண்மையாளர்களாக இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.
அடுத்து இவர்கள் இந்தப் பிரசுரத்தில் எடுத்து வைக்கும் வாதத்திற்கு வருவோம்.
விஞ்ஞானம் வளர்ச்சியடையாத காலத்தில் மாதத்தின் முதல் நாளை அறிந்து கொள்ள அப்போதிருந்த ஒரே வழி புறக்கண்ணால் பிறையைப் பார்த்துத் தீர்மானிப்பது ஒன்று தான்! முற்கூட்டியே துல்லியமாகக் கணித்துச் சொல்லும் வசதி அவர்கள் காலத்தில் இல்லாததுவே இதற்குக் காரணம். இவ்வுண்மையை நபி (ஸல்) அவர்களே தெளிவுபடுத்துவதைப் பாருங்கள்.
"நாம் துல்லியமாகக் கணித்துக் கூறவும், எழுதவும் அறியாதவர்களாக இருக்கிறோம். ஒரு மாதம் இப்படியும் இருக்கலாம் அப்படியும் இருக்கலாம். (அதாவது 29 ஆகவோ அல்லது 30 ஆகவோ இருக்கலாம்) அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்
இந்த ஹதீஸிலிருந்து இரண்டு விஷயங்கள் தெளிவாகிறது.
1. லூனார் சிஸ்டத்தின்படி ஒரு மாதம் எத்தனை நாட்களைக் கொண்டது என்பதை முற்கூட்டியே கணித்துச் சொல்லும் ஆற்றல் அவர்களுக்கு இருந்திருக்கவில்லை.
2. கணித்துச் சொல்லும் ஆற்றல் பெற்றவர்கள் அவ்வசதியைப் பயன்படுத்திக் கொண்டு தீர்மானிப்பதில் தவறில்லை.
இது தான் இவர்களின் வாதம்.
இந்த ஹதீஸுக்குத் தவறான பொருளைத் தருவதால் தான் இவ்வாறு வாதிக்கின்றனர்.
லா நக்துபு வலா நஹ்சுபு என்ற அரபி வாசகத்துக்கு "நாம் துல்லியமாகக் கணித்துக் கூறவும், எழுதவும் அறியாதவர்களாக இருக்கிறோம்’ என்று மொழி பெயர்த்துள்ளனர்.
இந்த ஹதீஸில், "துல்லியமாகக் கணித்துக் கூறத் தெரியாத சமுதாயம்’ என்பதைக் கூறும் எந்த வார்த்தையும் இடம் பெறவில்லை. திட்டமிட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பெயரில் பொய்யை இட்டுக்கட்டியுள்ளனர்.
"என் மீது எவன் வேண்டுமென்றே இட்டுக்கட்டிக் கூறுவானோ அவன் நரகத்தில் தனது இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 108, 1291
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்த எச்சரிக்கையை இவர்களுக்குச் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளோம்.
"துல்லியமாகக் கணித்துக் கூறத் தெரியாது’ என்று இவர்கள் மொழிபெயர்த்துள்ள இடத்தில் நஹ்சுபு என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஹஸிப என்ற மூலத்திலிருந்து பிறந்ததாகும். ஹிஸாப் என்ற சொல்லும் இதிலிருந்து பிறந்ததாகும்.
இன்றைக்குச் சிலர் ஹிஸாப் என்ற வார்த்தையை வானியல் என்ற பொருளிலும் கையாண்டு வருகின்றனர். வானியல் அறிவு பெருகிவிட்ட காலத்தில் அதற்கென ஒரு வார்த்தை அவசியம் எனக் கருதி ஹிஸாப் என்ற வார்த்தையை வானியலுக்கு இன்றைக்குப் பயன்படுத்தி வருகின்றனர்.
அதன் அடிப்படையில் நபி (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸில் "வானியல் தெரியாது’ என்ற கருத்தில் தான் இதைப் பயன்படுத்தினார்கள் என்று வாதிடுகின்றனர்.
ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலத்தில் ஹிஸாப் என்ற வார்த்தை வானியலைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டதே இல்லை. எந்த மொழியாக இருந்தாலும் ஒரு வார்த்தைக்குப் பொருள் கொள்ளும் போது அந்த வார்த்தை பயன்படுத்தப்பட்ட காலத்தில் அதற்கு அந்தப் பொருள் இருந்ததா? என்பதைக் கவனிப்பது அவசியம்.
இதைப் புரிந்து கொள்வதற்கு ஓர் உதாரணத்தைப் பார்ப்போம்.
துப்பாக்கி என்பது ஒரு வகையான ஆயுதம் என்பதை நாம் அறிவோம். துப்பாக்கி என்ற வார்த்தை ஒரு நூலில் பயன்படுத்தப்பட்டால் குறிப்பிட்ட அந்த ஆயுதம் என்று நாம் பொருள் செய்து கொள்வோம்.
ஆனால் திருக்குறளில், துப்பார்க்கு… எனத் துவங்கும் குறளில் துப்பாக்கி என்ற வார்த்தை வருகிறது. இந்த வார்த்தைக்கு ஆயுதம் என்று பொருள் கொள்ள மாட்டோம். வள்ளுவர் காலத்தில் இந்த ஆயுதம் இருக்கவில்லை அல்லது இந்த ஆயுதத்தைக் குறிக்க இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டதில்லை. "(துப்பாக ஆக்கி) உணவாக ஆக்கி’ என்ற பொருளில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அடிப்படையில் திருக்குர்ஆனிலோ, நபிமொழியிலோ பயன்படுத்தப்பட்ட வார்த்தைக்குப் பொருள் கொள்ளும் போது அந்தப் பொருளில் அந்தக் காலத்தில் பயன்படுத்தப்பட்டதா என்பதைக் கண்டிப்பாகக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
திருக்குர்ஆனில் ஹஸிப என்ற மூலத்திலமைந்த சொற்கள் நான்கு பொருட்களில் பயன்படுத்தப் பட்டுள்ளன.
1. போதும், போதுமானது, போதுமானவன் என்பது போன்றவை முதலாவது பொருள். (உதாரணம்: அல்லாஹ் உனக்குப் போதுமானவன்.)
2.206, 2.173, 5.104, 8.62, 8.64, 9.59, 9.68, 9.129, 39.38, 58.8, 65.3, ஆகிய பதினோரு இடங்களில் ஹஸிப என்ற மூலத்திலமைந்த சொற்கள் மேற்கண்ட அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
2. மனதால் நினைப்பது, கருதுவது, தீர்மானிப்பது போன்றவை இரண்டாவது பொருளாகும்.
2.214, 2.273, 3.78, 3.142, 3.169, 3.178, 3.180, 3.188, 5.71, 7.30, 859, 9.16,14.42, 14.47, 18.9, 18.18, 18.102, 18.104, 23.55, 23.115, 24.11, 2415, 24.39, 24.57, 25.44, 27.44, 27.88, 29.2, 29.4, 33.20, 39.47, 43.37, 43.80, 45.21, 47.29, 58.18, 59.2, 59.14, 6.4, 65.3, 75.3, 75.36, 76.9, 90.5, 90.7, 104.3
இந்த வசனங்களில் எல்லாம் மனதால் நினைப்பது, கருதுவது என்ற பொருளில் ஹஸிப என்ற வேர்ச் சொல்லிலிருந்து பிறந்த வார்த்தைகள் பயன்படுத்தப் பட்டுள்ளன.
3. கஹ்ப் அத்தியாயத்தில் ஓர் இடத்தில் மட்டும் ஹஸிப என்ற வேர்ச் சொல்லிலிருந்து பிறந்த வார்த்தை வேதனை என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
4. திருக்குர்ஆனில் இதைத் தவிர உள்ள ஏனைய இடங்களில் இந்த வார்த்தை கணக்கு, எண்ணிக்கை, கேள்வி கணக்கு என்ற பொருளில் பயன்படுத்தப் பட்டுள்ளது.
இறைவன் விரைந்து கேள்வி கணக்கு கேட்பவன், கேள்வி கணக்கு கேட்கப்படும் நாள், உங்களிடம் கணக்கு கேட்பான், கணக்கின்றி வாரி வழங்குபவன், சூரியனும், சந்திரனும் ஒரு கணக்கின் படி இயங்குகின்றன என்பது போன்ற இடங்களில் இந்த வார்த்தை தான் பயன்படுத்தப் பட்டுள்ளது.
2.202, 2.212, 2.284, 3.19, 3.27, 3.37, 3.199, 4.6, 4.86, 5.4, 6.52, 6.62, 6.69, 10.5, 13.18, 13.21, 13.40, 13.41, 14.41 14.51, 17.12, 17.14, 21.1, 21.47, 23.117, 24.38, 24.39, 26.39, 33.39, 38.16, 38.26, 38.39, 38.53, 39.10, 40.17, 40.27, 40.40, 55.5, 65.8, 69.20, 69.26, 78.27, 78.36, 84.8, 88.26
ஆகிய 46 இடங்களில் கணக்கு, எண்ணிக்கை, கணக்குக் கேட்டல் என்ற கருத்தில் பயன்படுத்தப் பட்டுள்ளன. திருக்குர்ஆனின் எந்த இடத்திலும் வானியல் என்ற பொருளில் இந்த வார்த்தை பயன்படுத்தப்படவே இல்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளை ஆராய்ந்தால் அவர்கள் எந்த இடத்திலும் ஹிஸாப், ஹஸிப போன்ற வார்த்தைகளை வானியல் என்ற கருத்தில் பயன்படுத்தியதே இல்லை.
உதாரணத்திற்கு புகாரியில் 25, 393, 1400, 2946, 6924, 7285, 103, 1500, 6979, 7197, 2412, 2641, 2718, 2933, 3221, 3415, 3700, 4115, 6392, 7489, 4666, 4712, 4939,6536, 6537, 5253, 5312, 5350, 5655, 5705, 5752, 472, 6541 ஆகிய இடங்களில் கணக்கு எண்ணிக்கை என்ற கருத்தில் பயன்படுத்தப் பட்டுள்ளன.
மற்ற இடங்களில் நன்மையை நாடி காரியமாற்றுதல், கருதுவது, போதுமானது, பாரம்பரியம் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. கணக்கு, எண்ணிக்கை என்ற பொருளில் அல்லாது மேற்கண்ட பொருளில் சுமார் 125 இடங்களில் இந்த வார்த்தை பயன்படுத்தப் பட்டுள்ளது.
கணக்கு, எண்ணிக்கை என்ற கருத்தில் பயன்படுத்தப்பட்ட இடங்களானாலும் மற்ற 125 இடங்களானாலும் எந்த இடத்திலும் வானியல் என்ற கருத்தில் பயன்படுத்தப்படவில்லை.
மேற்கூறிய இடங்களில் வீம்புக்காக யாராவது வானியல் என்று பொருள் செய்தாலும் அது பொருந்தக் கூடியதாக இருக்காது என்பதை எல்லோரும் விளங்கிக் கொள்ளலாம்.
உதாரணமாக அல்லாஹ் உங்களிடம் கணக்கு கேட்பான் என்பதற்கு வானியலைப் பற்றி கேட்பான் என்று கூற முடியாது. அது போல் அல்லாஹ் கணக்கின்றி கொடுப்பவன் என்பதற்கு வானியல் இல்லாமல் கொடுப்பான் என்று கூற முடியாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வானியலைக் குறிப்பிட ஹிஸாப் என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை எனும் போது, ஆயிரக்கணக்கான தடவை இந்த வார்த்தை பயன்படுத்தப் பட்டிருந்தும் ஒரு தடவை கூட வானியல் என்ற கருத்தில் பயன்படுத்தப்படவில்லை எனும் போது லா நஹ்சுபு என்ற வார்த்தை இடம் பெறும் இந்த ஹதீஸுக்கு மட்டும் வானியல் அறிய மாட்டோம் என்று பொருள் கொள்வது ஏற்புடையதல்ல.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இந்த வார்த்தை வானியல் என்ற பொருளில் பயன்படுத்தப்படவில்லை என்பது மட்டுமே இவ்வாறு பொருள் கொள்வதை நிராகரிக்க ஏற்றதாகி விடும். ஆனால் இது தவிர வேறு காரணங்களாலும் "வானியல் அறிய மாட்டோம்’ என்று பொருள் கொள்வது பொருத்தமற்றதாகும்.
நாம் உம்மி சமுதாயமாவோம் என்று ஹதீஸின் வாசகம் துவங்குகிறது.
இதைத் திட்டமிட்டு மறைத்து விட்டு இந்த ஹதீஸை வெளியிட்டுள்ளனர்.
வேதத்தில் சிலவற்றை மறைத்து விட்டுக் கூறும் யூதர்களின் வழிமுறையை இவர்கள் இங்கு கையாண்டுள்ளனர்.
உம்மி சமுதாயம் என்றால், எழுதவும் படிக்கவும் தெரியாத சமுதாயம் என்ற கருத்தில் இது பயன்படுத்தப்படும்.
நாம் உம்மி சமுதாயம் (அதாவது பாமர சமுதாயம்) என்று கூறிவிட்டு பாமரத்தனத்தை உறுதிப்படுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்துவது தான் பொருத்தமாக இருக்கும்.
எழுதவும், படிக்கவும் தெரியாத ஒரு சமுதாயத்திடம் போய் நீங்கள் வடிகட்டிய பாமரர்களாக இருக்கிறீர்கள். உங்களுக்கு எழுதவும் தெரியவில்லை. கம்யூட்டர் சயின்சும் தெரியவில்லை என்று யாரும் கூற மாட்டார்கள். எழுதவும் தெரியவில்லை; படிக்கவும் தெரியவில்லை என்று கூறினால் அது பொருத்தமாக இருக்கும்.
நீங்கள் பாமரர்களாக இருக்கிறீர்கள் என்று கூறிய பிறகு அதை உறுதி செய்ய சாதாரண அடிப்படை அறிவு கூட இல்லையே என்று தான் கூறுவோம்.
இது போல் தான் நாம் உம்மி சமுதாயம் என்று நபிகள் நாயகம் (ஸல்) ஆரம்பம் செய்கிறார்கள். அதாவது ஏதுமறியாத சமுதாயம் என்று ஆரம்பம் செய்கிறார்கள். எதனால் உம்மியாக இருக்கிறோம் என்பதை இரண்டு காரணங்களைக் கொண்டு நிரூபிக்கிறார்கள். ஒன்று நமக்கு எழுதத் தெரியாது. மற்றொன்று நமக்கு ஹிஸாப் தெரியாது. ஹிஸாப் என்பதற்கு வானியல் என்று பொருள் கொள்வோமானால் அது எப்படிப் பொருந்தும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்?
இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா?
எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு நமக்கு இல்லை. அது போல் சாதாரணமான ஹிஸாப் (அதாவது எண்ணிக்கை) என்ற அறிவும் இல்லை. எனவே நாம் உம்மி சமுதாயமாக உள்ளோம் என்று கூறினால் அது பொருந்திப் போகிறது.
ஹிஸாப் என்பதற்கு வானியல் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இல்லாத புதிய பொருளைக் கொள்வதை விட எண்ணிக்கை என்று அன்றைய காலத்தில் இந்த வார்த்தைக்கு கொடுக்கப்பட்டு வந்த சாதாரண பொருளைச் செய்து பாருங்கள். எவ்வளவு அற்புதமாக பொருந்திப் போகிறது என்பதை உணர்வீர்கள்.
அதாவது எழுதவும் தெரியாத, எண்ணிக்கையும் தெரியாத உம்மி சமுதாயமாக நாம் இருக்கிறோம் என்பது தான் இதன் பொருள்.
எப்படிப் பார்த்தாலும் மேற்கண்ட ஹதீஸிற்கு வானியலை அறிய மாட்டோம் என்ற பொருளைக் கொள்வது எந்த வகையிலும் ஏற்றதல்ல.
எனவே, "எங்களுக்கு வானியல் தெரியாது; அதனால் நாங்கள் பிறை பார்க்கிறோம்; உங்களுக்கு வானியல் தெரிந்து விட்டால் நீங்கள் பிறை பார்க்கத் தேவையில்லை; பிறையை வானியல் அடிப்படையில் கணித்துக் கொள்ளலாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இந்த ஹதீஸிலிருந்து வாதிப்பது அறியாமையாகும்.
பிறையை விஞ்ஞான அடிப்படையில் கணித்து மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்கலாம் என்றிருந்தால் அதை அல்லாஹ்வோ, அவனது தூதரோ தெளிவுபடுத்தாமல் இருந்திருக்க மாட்டார்கள்.
கியாமத் நாள் நெருங்குகையில், தஜ்ஜால் வரும் போது கணித்துக் கொள்ளுங்கள் என்று கூறிய அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை விட முந்திய காலமான இந்தக் காலத்தில் கணித்துக் கொள்வதைப் பற்றி தெளிவுபடுத்தாமல் இருப்பார்களா? எத்தனையோ விஷயங்களைப் பற்றி முன்னறிவிப்புச் செய்த நபியவர்கள், இந்த விஷயத்தில் ஒரு தெளிவை ஏற்படுத்தாமல் இருப்பார்களா?
வானியல் பற்றிய அறிவு இல்லாததால் நபி (ஸல்) அவர்கள் பிறை பார்த்து நோன்பு வைத்தார்கள்; நமக்கு அந்த அறிவு வந்து விட்டதால் நாம் பிறை பார்க்கத் தேவையில்லை என்று கூறுவது அல்லாஹ்வையும் அவனது தூதர் (ஸல்) அவர்களையும் குறை கூறுவதாகும். அவர்கள் மார்க்கத்தைத் தெளிவுபடுத்தாமல் விட்டு விட்டார்கள் என்று குற்றம் சாட்டுவதாகும்.
உமது இறைவன் மறப்பவனாக இல்லை. (அல்குர்ஆன் 19:64)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் நமது கட்டளை இல்லாத ஒன்றை புதிதாக யார் உண்டாக்குகின்றாரோ அவருடைய அந்தச் செயல் நிராகரிக்கப்பட்டதாகும்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 3243
பிறையை புறக்கண்ணால் பார்த்து மாதத்தின் முதல்நாளைத் தெரிந்து கொள்ளும் பழைய வழிமுறையை விட்டுவிட்டு புதிய வழிமுறையாகிய விஞ்ஞானக் கணிப்பை ஏற்றுச் செயல்படுவது ஒருபோதும் சுன்னத்துக்கு மாற்றமான செயலாகாது. ஏனெனில் இரண்டுமே லூனார் சிஸ்டத்திற்கு உட்பட்டவை தான்.
இவ்வாறு அந்தப் பிரசுரம் கூறுகிறது.
பிறையைப் பார்த்து நோன்பு வைப்பது ஹராம் என்றும், குஃப்ர் என்றும் கூறியவர்கள், தற்போது இரண்டுமே லூனார் சிஸ்டத்திற்கு உட்பட்டவை தான் என்றும், விஞ்ஞானக் கணிப்பை ஏற்றுக் கொள்வது சுன்னத்துக்கு மாற்றமில்லை என்றும் கூறுகின்றனர். அதாவது விஞ்ஞானக் கணிப்பை ஏற்றுக் கொள்வது குற்றமில்லை என்பது தான் இந்தப் பிரசுரத்தில் இவர்கள் எடுத்து வைக்கும் வாதம்.
அப்படியானால் விஞ்ஞானக் கணிப்பை ஏற்று பெருநாள் கொண்டாடாதவர்களை காஃபிர்கள் என்ற கருத்தில் சுவரொட்டி ஒட்டியது ஏன்?
இவர்கள் நோன்பு என்று அறிவித்த மறு நாள் தான் சவூதி அரேபியாவில் நோன்பு வைத்தனர். அதனால் சவூதியும் காஃபிராகி விட்டது என்று கூறுவார்களா? புனித மாதத்தை மாற்றும் இறை நிராகரிப்பை சவூதி அரசாங்கம் செய்கிறது என்று இவர்கள் வாதிடத் தயாரா? அத்தகைய சவூதி அரசாங்கத்திடமிருந்து கமாலுத்தீன் மதனீ சம்பளம் வாங்கலாமா? என்பதை நடுநிலையாளர்கள் சிந்திக்க வேண்டும்.
இவர்களின் மற்றொரு சந்தர்ப்ப வாதத்தையும் பாருங்கள்.
லூனார் சிஸ்டத்தின் பழைய மற்றும் புதிய இரண்டு முறைகளையும் பொதிந்தே தான் நோன்பு தொடர்பாக வரும் குர்ஆன் வசனமும் அமைந்துள்ளது. "உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்க வேண்டும்’ (2:185)
இவ்வசனத்தில் உங்களில் எவர் பிறை பார்க்கிறாரோ என்றோ அல்லது எவர் கணிக்கிறாரோ என்றோ குறிப்பிட்டுச் சொல்லாமல் எக்காலத்திற்கும் ஏற்ற வகையில் பொதுவாக எவர் அடைகிறாரோ என்றே கூறப்பட்டுள்ளது.
என்று இந்தப் பிரசுரத்தில் கூறியுள்ளனர்.
அதாவது, "ரமளானை யார் அடைகிறாரோ’ என்று குர்ஆன் கூறுவது கணிப்பிற்கும் பொருந்தும் என்று வாதிடுகிறார்கள்.
ஆனால் இதே வசனத்திற்கு நாம் மேற்கண்ட பொருளைக் கொடுத்த போது, நாம் மிகப் பெரிய பாதகத்தைச் செய்து விட்டதாக வானத்திற்கும் பூமிக்கும் குதித்தார்கள். அல்ஜன்னத் என்ற பத்திரிகையில் இவர்கள் எழுதியதைப் பாருங்கள்.
இதன் சரியான பொருள், உங்களில் யார் அம்மாதத்தில் ஊரில் தங்கியிருக்கிறாரோ அவர் நோன்பு நோற்கட்டும் என்பதாகும். இதற்குச் சான்றாக திருமறைக் குர்ஆனின் மொழியாக்கம் மற்றும் விரிவுரை நூல்களில் வந்துள்ளதைக் கீழே தருகிறோம்….
…தப்ஸீர் மனார், தப்ஸீர் பத்ஹுல் கதீர் இது போன்ற இன்னும் பல தப்ஸீர்களிலும் இப்படித் தான் பொருள் கூறப்பட்டுள்ளது. விரிவஞ்சி அவற்றைக் குறிப்பிடவில்லை.
….ஆனால் மேற்கண்ட வசனத்தில் அடிக்கோடிடப்பட்ட குர்ஆன் வார்த்தைகளுக்கு,
உங்களில் யார் அந்த மாதத்தை அடைகிறாரோ என்று சிலர் பொருள் கொடுத்து, இந்த வார்த்தைகள் தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது போல் தோன்றுகிறது என்று ஒரு வாதத்தை எடுத்து வைத்து விட்டு, அந்த வார்த்தைக்கும் ஏதாவது ஒரு பொருள் பொதிந்து இருக்கத்தான் செய்யும் என்று கூறி, "உங்களில் யார் அந்த மாதத்தை அடைகிறாரோ என்றால் உங்களில் அந்த மாதத்தை அடையாதவர்களும் இருப்பார்கள் என்ற பொருள் பொதிந்துள்ளது என்றும் வாதிடுகின்றனர்.
இந்த வசனத்திற்கு சரியான பொருள் கொள்ளாததினால் ஏற்பட்ட விளைவு இதுவாகும்.
….யார் ரமளான் மாதத்தில் ஊரில் தங்கியிருக்கிறாரோ அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்கட்டும் என்ற சரியான பொருள் கொள்வதற்குப் பதிலாக, யார் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்கட்டும் என்று தவறான பொருள் கொடுத்ததினால் வந்த விபரீதம் இதுவாகும்.
ஒரு வார்த்தைக்கு அதனுடைய சரியான பொருள் கொடுக்காமல் மாற்றுப் பொருள் கொடுப்பதால் ஏற்படக் கூடிய பாதகங்களை இதனால் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது.
….எனவே ஃபமன் ஷஹித மின்கும் என்ற வார்த்தையின் சரியான பொருளை விளங்கி விடுவோமானால் எல்லா பிரச்சனைகளுக்கும் எளிதாகத் தீர்வு கிடைத்து விடும். அதன் சரியான பொருளை ஆதாரத்துடன் நாம் மேலே கூறியுள்ளோம்.
அல்ஜன்னத், பிப்ரவரி 2000
மேற்கண்ட வசனத்திற்கு எந்தப் பொருளைக் கொடுப்பது மிகப் பெரும் குற்றம், விபரீதம், விளைவு, பாதகம் என்று அவர்களே எழுதினார்களோ அதே பொருளை, அதே வசனத்திற்குக் கொடுத்துள்ளார்கள். இதிலிருந்து இவர்களின் சந்தர்ப்பவாதத்தைப் புரிந்து கொள்ளலாம்.
யார் அடைகிறாரோ என்பது கணிப்பையும் உள்ளடக்கும் என்பது இவர்களின் வாதம். ஆனால் குர்ஆனுக்கு விளக்கமாக அமைந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பிறை பார்த்தே மாதத்தின் முதல் நாளைத் தீர்மானித்துள்ளார்கள்.
எனவே பிறை பார்ப்பதன் மூலம் ரமளானை அடைவதில் ஏற்படும் வித்தியாசத்தைத் தான் இந்த வசனம் கூறுகிறது என்பதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் செயல்முறை விளக்கம் ஆதாரமாக அமைந்துள்ளது.
கணித்துத் தீர்மானிக்க வேண்டும் என்ற வாதத்தை இவர்கள் முன்வைப்பதற்குக் காரணம், உலகம் முழுவதும் ஒரே நாளில் பெருநாள் கொண்டாட வேண்டும் என்பதற்காகத் தான். இதை இந்தப் பிரசுரத்திலும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் எந்தக் கணிப்பை ஏற்றுக் கொண்டு நோன்பு மற்றும் பெருநாளைத் தீர்மானித்தாலும் நாள் வித்தியாசம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.
கணிப்பின் அடிப்படையில் அமாவாசை விலகும் நேரத்தையே முதல் பிறையாக இவர்கள் கணக்கிடுகின்றனர். ஒரு வாதத்திற்கு இதை உலகம் முழுவதும் ஏற்றுக் கொண்டாலும் ஒரே நாளில் பெருநாள் ஏற்படுவது சாத்தியமில்லை. இவர்களுக்குப் போதிய அறிவியல் அறிவு இல்லாத காரணத்தால், கணிப்பின் அடிப்படையில் உலகம் முழுவதும் ஒரே பெருநாள் கொண்டு வரலாம் என்று கூறி வருகின்றனர்.
அமாவாசை விலகுவதாகக் கணிக்கப்படும் அந்த நேரத்தில் உலகில் யாரெல்லாம் சுப்ஹ் நேரத்துக்கு முன்னர் இருக்கிறார்களோ அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் நோன்பைத் துவக்க வேண்டும்; சுப்ஹ் நேரத்தைக் கடந்து விட்டவர்கள் மறு நாள் தான் நோன்பைத் துவக்க வேண்டும் என்பது இவர்களின் வாதம். (இதற்கு மார்க்கத்தில் ஆதாரம் உள்ளதா? என்பது வேறு விஷயம்.)
சுப்ஹ் நேரம் என்பது சூரிய உதயத்தை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு பகுதிக்கும் வேறுபடக்கூடியதாகும். உதாரணமாக 01.01.2008 அன்று திருநெல்வேலியில் 5.16 மணிக்கு சுப்ஹ் நேரம் என்றால் நாகர்கோவிலில் 5.14 மணிக்கு சுப்ஹ் நேரம் ஆரம்பமாகிறது.
இப்போது 5.15 மணிக்கு கணிப்பின் அடிப்படையில் அமாவாசை விலகுகின்றது என்று வைத்துக் கொண்டால், இவர்களின் வாதப்படி திருநெல்வேலியில் இருப்பவர்கள் முதல் பிறை என்று முடிவு செய்து நோன்பு நோற்க வேண்டும். ஆனால் நாகர்கோவிலில் இருப்பவர்களுக்கு சுப்ஹ் நேரம் துவங்கி விட்டதால் நோன்பு நோற்க முடியாது. இவர்கள் மறுநாள் தான் நோன்பு நோற்க வேண்டும். பெருநாளுக்கும் இதே நிலை தான். திருநெல்வேலி, நாகர்கோவிலை இங்கு உதாரணமாகக் காட்டியுள்ளோம். ஒவ்வொரு தலைப்பிறையின் போதும் உலகின் ஏதேனும் அடுத்தடுத்த இரு பகுதிகளுக்கு இந்த நிலை ஏற்படவே செய்யும். எனவே எந்தக் கணிப்பைப் பின்பற்றினாலும் நாள் வித்தியாசம், கிழமை வித்தியாசம் ஏற்படுவதைத் தவிர்க்கவே முடியாது.
"பிறை பார்த்து நோன்பு வையுங்கள், பிறை பார்த்து நோன்பை விடுங்கள்’ என்று கூறியது அறிவியல் வளர்ச்சியில்லாத காலத்தை கருத்தில் கொண்டேயாகும் என்பது தெளிவாகிறது.
இவ்வாறு அந்தப் பிரசுரம் கூறுகிறது.
அறிவியல் வளர்ச்சியடைந்து விட்ட இந்தக் காலத்தில் பிறை பார்க்கத் தேவையில்லை என்றால் அது மார்க்கத்தில் தெளிவுபடுத்தப்பட்டிருக்கும். இன்ன காலத்தை அடைந்தால் நீங்கள் கணித்துக் கொள்ளுங்கள் என்று கூறப்பட்டிருக்க வேண்டும்.
அவ்வாறு எதுவும் மார்க்கத்தில் கூறப்படாத நிலையில், தற்போது இந்தச் சட்டம் தேவையில்லை என்றால் இவர்கள் அல்லாஹ்வுடைய அதிகாரத்தைக் கையில் எடுக்கிறார்கள் என்றே அர்த்தம்.
அதனால் தான் இவர்களாக ஒரு நாளை பெருநாள் என்று தீர்மானித்து, அந்த நாளில் நோன்பு நோற்பது ஹராம் என்றும், அவ்வாறு நோற்பவர்கள் காஃபிர்கள் என்றும் குற்றம் சாட்டும் நிலைக்குச் சென்று விட்டார்கள்.
ஒரு வாதத்திற்கு, மேற்கண்ட ஹதீஸுக்கு இவர்கள் கூறும் பொருள் சரியானது என்று வைத்துக் கொண்டாலும்…
நி அறிவியல் வளர்ச்சியடைந்த காலம் என்றால் அதற்கான அளவுகோல் என்ன?
நி எந்த நிலை ஏற்பட்டால் கணிக்க வேண்டும்?
நி அமாவாசை முடிந்தவுடன் பிறை தோன்றுவதாகக் கணிக்கப்படுவதை மாதத்தின் முதல் நாளாகக் கொள்ள வேண்டுமா?
நி அல்லது இன்ன இடத்தில், இன்ன தேதியில் பிறை தெரியும் என்று கணிக்கப்படுவதை மாதத்தின் முதல் நாளாகக் கொள்ள வேண்டுமா?
நி ஒரு பகுதியில் தென்படுவதாகக் கணிக்கப்படுவதை உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ள வேண்டுமா? அல்லது அந்தந்த பகுதிக்குக் கணிக்கப்படுவதை மட்டும் ஏற்றுக் கொள்ள வேண்டுமா?
நி கணிப்பிலுள்ள இந்தப் பல்வேறு நிலைகளில் குறிப்பிட்ட ஒன்றைத் தான் ஏற்க வேண்டும் என்றால் அதற்கு என்ன ஆதாரம்?
"விஞ்ஞானக் கணிப்பை ஏற்றுச் செயல்படாதவர்கள் காட்டுமிராண்டிகள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு விஞ்ஞான அறிவில்லாததால் பிறை பார்த்து நோன்பு வைத்தார்கள், நாம் அறிவாளிகள்; அதனால் பிறை பார்க்கத் தேவையில்லை” என்றெல்லாம் திமிர்வாதம் பேசக் கூடியவர்கள் மேற்கண்ட கேள்விகள் எதற்குமே பதில் சொல்ல மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் மார்க்கத்தைப் பின்பற்றவில்லை. தங்கள் மனோ இச்சையைப் பின்பற்றுகிறார்கள்.
இவர்களின் ஆதாரமெல்லாம் யூத, கிறித்தவர்கள் உலகெங்கும் ஒரே நாளில் தங்கள் பண்டிகைகளைக் கொண்டாடுவதைப் போல் நாமும் கொண்டாட வேண்டும் என்பது தான். அதைத் தான் இந்தப் பிரசுரத்திலும் இவர்கள் வலியுறுத்துகின்றார்கள்.
அனைத்து முஸ்லிம்களும் ஒரே நாளில் நோன்பைத் துவக்கி ஒரே நாளில் பெருநாள் கொண்டாடி மகிழ்ந்து ஒற்றுமையுடன் செயல்பட இதுவே உகந்த வழி முறையாகும்.
இப்படி யூத, கிறித்தவர்களைப் பின்பற்றி உலகப் பெருநாள் கொண்டாடத் துடிக்கும் இவர்களைக் குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரிப்பதைப் பாருங்கள்.
நாங்கள் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்களாக இருக்க, நபி (ஸல்) அவர்களுடன் ஹுனைன் யுத்தத்திற்குச் சென்றோம். அங்கு இணை வைப்பவர்களுக்கென்று ஒரு இலந்தை மரம் இருந்தது. அங்கு அவர்கள் (பரகத்தை) நாடி தங்களின் போர்க்கருவிகளைத் தொங்கவிட்டு அங்கு தங்கி (இஃதிகாஃப்) இருப்பார்கள். "தாத்து அன்வாத்’ என்று அதற்குச் சொல்லப்படும். நாங்கள் அந்த மரத்தின் பக்கம் சென்ற போது நபி (ஸல்) அவர்களிடத்தில் "அல்லாஹ்வின் தூதரே! அவர்களுக்கு "தாத்து அன்வாத்து’ என்று இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஏற்படுத்துங்கள்” என்று கூறினோம்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் "சுப்ஹானல்லாஹ்! அல்லாஹு அக்பர்! இவையெல்லாம் (அறியாமைக் காலத்தவரின்) முன்னோர்களின் செயல் ஆகும்” என்று சொல்லி, "என் உயிர் யார் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில் பனூ இஸ்ரவேலர்கள் கேட்டதைப் போல் கேட்கிறீர்கள். (அதாவது) பனூ இஸ்ராயீல்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில், "மூஸாவே! அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பதைப் போல் எங்களுக்கும் கடவுளை ஏற்படுத்துங்கள்’ என்று கேட்க, அதற்கு மூஸா (அலை) அவர்கள், "நீங்கள் ஒன்றுமறியாத விபரமற்றவர்கள்’ என்று பதிலளித்தார்கள். இதைப் போலவே, நீங்களும் கூறியுள்ளீர்கள். நிச்சயமாக, நீங்கள் உங்களுக்கு முன்னவர்களின் வழிமுறையைப் படிப்படியாகப் பின்பற்றுவீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூவாக்கிதுல்லைசி(ரலீ)
நூல்: திர்மிதீ 2106, அஹ்மத் 20892
இப்படிப்பட்ட தாக்கம் தன்னுடைய சமுதாய மக்களிடம் ஊடுறுவும்; அதற்கு இந்தச் சமுதாயம் பலியாகும் என்பதை நன்கு தெரிந்திருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இது குறித்து மிகக் கடுமையாகவே எச்சரித்துள்ளார்கள்.
"உங்களுக்கு முன்னிருந்த (யூத, கிறித்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம், அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்புப் பொந்துக்குள் புகுந்திருந்தால் அதிலும் புகுவீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! யூதர்களையும் கிறித்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள்?” என்று கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "வேறெவரை?” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீதுல்குத்ரீ (ரலி)
நூல்: புகாரி 3456
முஸ்லிம்களைத் தவிர உலகெங்கிலும் உள்ள மக்களின் பண்டிகைகள் மற்றும் திருவிழாக்கள் சூரியக் கணக்கின் அடிப்படையில் முன்கூட்டியே கணிக்கப்பட்டு விடுகின்றன. ஆனால் முஸ்லிம்களுக்கு மட்டும் பிறை பார்த்த பிறகு தான் தீர்மானிக்கப்படுகின்றது. முன் கூட்டியே தீர்மானிக்கப்படுவதில்லை.
"கிறிஸ்துமஸ் எப்போது என்பதை அந்த ஆண்டின் துவக்கத்திலேயே காலண்டரில் பதிவு செய்யப்பட்டு விடுகின்றது. இது போன்று நீங்களும் உங்கள் பெருநாளை முடிவு செய்தால் என்ன?” என்று மாற்று மதத்தவர்களும் நம்மிடம் கேட்கின்றார்கள்.
குர்ஆன், ஹதீஸைப் பெயரில் மட்டுமே கொண்டுள்ள ஜாக் இயக்கத்தினரும், நபி (ஸல்) அவர்களிடம் நபித் தோழர்கள் "தாத்து அன்வாத்’ எனப்படும் மரத்தைக் கேட்டது போன்று, "இப்படிப்பட்ட அறிவியல் வளர்ச்சியடைந்த காலத்தில் முன் கூட்டியே கணிப்பதில் என்ன தவறு?” என்று கேட்கிறார்கள். எனவே இவர்கள் தெளிவாக யூத, கிறித்தவ கலாச்சாரத்தைப் பின்பற்றுபவர்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இவர்களின் சதி வலையில் சமுதாயம் பலியாகி விடக் கூடாது.