விளக்கம் கொடுக்கமுடியாத ஹதீஸ்களை நிறுத்தி வைக்க வேண்டுமா?

விளக்கம் கொடுக்கமுடியாத ஹதீஸ்களை நிறுத்தி வைக்க வேண்டுமா?

ரு  ஹதீஸ் ஸஹீஹாக இருந்தாலும் எவ்விதத்திலும் அந்த ஹதீஸுக்கு விளக்கம் கொடுக்க முடியா விட்டால் அந்த  ஹதீஸை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ஹதீஸ்கலையில் விதி உள்ளதா?

ராசிக் ரஃபீக்தீன்

பதில்

ஒரு ஹதீஸிற்கு சிலருக்கு விளக்கம் கொடுக்க முடியவில்லை என்றால் அது அவரது அறியாமையாகும். அது போன்ற ஹதீஸ்களை நிறுத்தி வைக்க முடியாது.

ஆனால் யாராலும் விளக்கம் கொடுக்க முடியாவிட்டால் அந்தச் செய்தியை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று ஹதீஸ் கலையில் தெளிவாகவே கூறப்பட்டுள்ளது.

செய்தி மோசமான கருத்தை உள்ளடக்கி இருந்தால் அல்லது அதன் கருத்து குர்ஆனுடைய போதனைக்கு எதிராக இருந்தால் மட்டுமே அந்தச் செய்திக்கு யாராலும் விளக்கம் கொடுக்க முடியாத நிலை ஏற்படும். எதார்த்தமான உண்மைக்கு மாற்றமாக இருந்தாலும் இந்த நிலை ஏற்படும்.

இது போன்ற செய்திகள் பொய்யானவை என்று அதன் கருத்தை வைத்தே முடிவு செய்து விடலாம்.

அறிவிப்பாளர்களின் குறை நிறைகளை எடைபோடுவதற்குக் காரணம் அவர்கள் அறிவிக்கும் செய்தியில் தவறு வந்துவிடக் கூடாது என்பது தான். செய்தியில் தவறு இருப்பது உறுதியாகி விட்டால் இதற்குப் பின் அறிவிப்பாளர்களை ஆராய வேண்டிய அவசியம் இல்லாமல் போகின்றது.

நமக்கு முன் பல அறிஞர்கள் இந்த விதியை மக்களுக்குத் தெளிவுபடுத்தியும் இதனடிப்படையில் பல செய்திகளை நிராகரித்தும் இருக்கின்றனர். 

ஹதீஸ் கலையில் இந்த விதி இருக்கின்றதா என்று நீங்கள் கேட்டுள்ளதால் அதற்கான ஆதாரத்தைத் தருகின்றோம்.

تدريب الراوي ج: 1 ص: 276

أن من جملة دلائل الوضع أن يكون  مخالفا  للعقل بحيث لا يقبل التأويل ويلتحق به ما يدفعه الحس والمشاهدة أو يكون منافيا لدلالة الكتاب القطعية أو السنة المتواترة أو الإجماع القطعي أما المعارضة مع إمكان الجمع فلا

இட்டுக்கட்டப்பட்ட செய்தியை அறிந்து கொள்வதற்கான அடையாளங்களில் ஒன்று : விளக்கம் கொடுக்க முடியாத வகையில் அச்செய்தி அறிவுக்கு மாற்றமாக இருக்கும். அல்லது உறுதியான குர்ஆனுடைய கருத்திற்கு எதிராக அமைந்திருக்கும். நடைமுறைக்கும், இயல்பான சூழ்நிலைக்கும் ஒத்து வராத செய்தியும் இந்த வகையில் அடங்கும்.

நூல்: தத்ரீபுர்ராவீ, பாகம்: 1, பக்கம்: 276

تدريب الراوي ج: 1 ص: 277

وقال ابن الجوزي ما أحسن قول القائل إذا رأيت الحديث   يباين المعقول  أو يخالف المنقول أو يناقض الأصول فاعلم أنه موضوع

ஒரு செய்தி அறிவுக்கு மாற்றமாகவோ, (சரியான) ஆதாரத்திற்கு மாற்றமாகவோ, அடிப்படை விதிமுறைகளுக்கு எதிராகவோ இருப்பதை நீ கண்டால் அது இட்டக்கட்டப்பட்ட செய்தி என்று அறிந்துகொள் எனக் கூறியவரின் கூற்று மிக அழகானது.

இவ்வாறு இப்னுல் ஜவ்ஸி கூறினார்.

التعريفات ج: 1 ص: 113

549 الحديث الصحيح ما سلم لفظه من ركاكة ومعناه من  مخالفة  آية أو خبر متواتر أو إجماع وكان رواية عدل وفي مقابله السقيم

ஆதாரப்பூர்வமான ஹதீஸ் எதுவென்றால் அதில் மட்டரகமான வார்த்தைகள் இருக்காது. அதன் அர்த்தம் குர்ஆன் வசனத்திற்கு முரண்படாமல் இருக்கும்.

நூல்: அத்தஃரீஃபாத், பாகம்: 1, பக்கம்: 113

Leave a Reply