ஹஜ்ஜின் போது நபிகளாரின் கப்ரை ஸியாரத் செய்வது அவசியமா?

ஹஜ்ஜின் போது நபிகளாரின் கப்ரை ஸியாரத் செய்வது அவசியமா?

ஜ்ஜுக்கும், நபிகளாரின் கப்ரை ஸியாரத் செய்வதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ஒருவர் ஹஜ் கடமையை நிறைவேற்றிவிட்டு மதீனா செல்லாமல் வந்துவிட்டால் அவரின் ஹஜ்ஜுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

கஅபத்துல்லாஹ், ஸஃபா, மர்வா, அரஃபா, முஸ்தலிஃபா, மினா ஆகிய இடங்களில் செய்ய வேண்டிய அமல்களை மட்டும் செய்தாலே ஹஜ் முழுமையாக நிறைவேறிவிடும். இந்த இடங்களில் செய்ய வேண்டிய அமல்களைத்தான் நபிகளார் நமக்குக் கூறியுள்ளார்கள். இது தவிர ஹஜ்ஜில் வேறு இடங்களுக்குச் சென்று எந்த அமலையும் செய்யுமாறு நபிகளார் கூறியதாக ஆதாரப்பூர்வமான செய்திகள் இல்லை.

நபிகளாரின் கப்ரை ஸியாரத் செய்யாதவர் நபிகளாரை வெறுத்தவராவார் என்று செய்தி சில நூல்களில் இடம்பெற்றுள்ளது. ஆனால் அது ஆதாரப்பூர்வமான செய்தி அல்ல.

الكامل في ضعفاء الرجال – (7 / 14)

 ثنا على بن إسحاق ثنا محمد بن محمد بن النعمان بن شبل حدثني جدي حدثني مالك عن نافع عن بن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم من حج البيت فلم يزرنى فقد جفانى

யார் ஹஜ் செய்து என்னை (என் கப்ரை) சந்திக்கவில்லையோ அவர் என்னை வெறுத்தவராவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : அல்காமில் ஃபில் லுஅஃபா – இப்னு அதீ, பாகம் :7, பக்கம் : 14)

இச்செய்தியில் இடம்பெறும் அந்நுஃமான் பின் ஷிப்ல் என்பவர் நபிமொழிகளை இட்டுக்கட்டிச் சொல்பவர் என்று ஹதீஸ்கலை அறிஞர்களால் குற்றம் சுமத்தப்பட்டவர்.

المجروحين – (3 / 73)

النعمان بن شبل: من أهل البصرة، يروى عن أبى عوانة ومالك أخبرنا عنه الحسن بن سفيان، يأتي عن الثقات بالطامات، وعن الاثبات بالمقلوبات.

அந்நுஃமான் பின் ஷிப்ல் என்பவர் பஸரா பகுதியைச் சார்ந்தவர். இவர் நம்பகமானவர் (பெயரைப் பயன்படுத்தி அவர்) வழியாக பிரமாண்டமான செய்திகளை அறிவிப்பவர். மேலும் அறிவிப்பாளர் வரிசைகளை மாற்றி நம்பகமானவர் (பெயரைப் பயன்படுத்தி பொய்யான செய்திகளை) அறிவிப்பவர் என்று இப்னு ஹிப்பான் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

நூல் : அல்மஜ்ரூஹீன், பாகம் :3, பக்கம் : 73

இதைப் போன்று பின்வரும் செய்தியையும் சிலர் ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

من زارني وزار أبي ابراهيم في عام واحد ضمنت له الجنة

யார் ஒரு வருடத்தில் என் (கப்ரை) ஸியாரத் செய்து, என் தந்தை இப்ராஹீம் (அலை) அவர்களின் (கப்ரையும்) ஸியாரத் செய்வாரோ அவருக்கு நான் சொர்க்கத்திற்கு பெறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்தச் செய்தியின் தரத்தைப் பற்றி இமாம் நவவீ அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள் :

المجموع شرح المهذب – (8 / 277(

)فرع (مما شاع عند العامة في الشام في هذه الازمان المتأخرة ما يزعمه بعضهم ان رسول الله صلى الله عليه وسلم قال (من زارني وزار أبي ابراهيم في عام واحد ضمنت له الجنة) وهذا باطل ليس هو مرويا عن النبي صلى الله عليه وسلم ولا يعرف في كتاب صحيح ولا ضعيف بل وضعه بعض الفجرة

யார் ஒரு வருடத்தில் என் (கப்ரை) ஸியாரத் செய்து என் தந்தை இப்ராஹீம் (அலை) அவர்களின் (கப்ரையும்) ஸிராத் செய்வாரோ அவருக்கு நான் சொர்க்கத்திற்கு பெறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக சிரியா நாட்டு மக்களிடம் பரவியுள்ளது. இது பொய்யான செய்தியாகும். இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழியாக அறிவிக்கப்படவில்லை. ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலும் இது இல்லை. பலவீனமான ஹதீஸ்களிலும் இது இல்லை. மாறாக இது தீயவர்களால் இட்டுக்கட்டப்பட்டதாகும்.

நூல் : அல்மஜ்மூவு, பாகம் :8, பக்கம் : 277

لسان الميزان – (2 / 4)

حدثنا النعمان بن هارون ثنا أبو سهل بدر بن عبد الله المصيصي ثنا الحسن بن عثمان الزيادي ثنا عمار بن محمد ثنا خالي سفيان عن منصور عن إبراهيم عن علقمة عن بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه و سلم من حج حجة الإسلام وزار قبري وغزا غزوة وصلى في بيت المقدس لم يسأله الله فيما افترض عليه

ஒருவர் ஹஜ் செய்து என் கப்ரை ஸியாரத் செய்து, போர் செய்து பைத்துல் மக்திஸில் தொழுதிருந்தால் அவர் மீது கடமையாக்கிய (எ)தையும் (மறுமையில்) அல்லாஹ் கேள்வி கேட்கமாட்டான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி)

நூல்: லிஸானுல் மீஸான், பாகம் : 2, பக்கம் :4)

இந்தச் செய்தியில் இடம்பெறும் பத்ரு பின் அப்துல்லாஹ் என்பவரின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் எந்த்த் தகவலும் இல்லை. மேலும் இவர் பொய்யான செய்திகளை அறிவிப்பவர் என்று ஹாபிழ் தஹபீ அவர்கள் கூறியுள்ளார்கள்.

ميزان الاعتدال في نقد الرجال – (2 / 8)

 1137 ( 1548 ) بدر بن عبد الله أبو سهل المصيصي عن الحسن بن عثمان الزيادي بخبر باطل وعنه النعمان بن هارون

பத்ரு பின் அப்துல்லாஹ் என்பவர் ஹஸன் பின் உஸ்மான் என்பவர் வழியாக பொய்யான செய்திகளை அறிவித்துள்ளார்.

நூல் : மீஸானுல் இஃதிதால், பாகம் :2, பக்கம் : 8

سنن الدارقطني – (2 / 278)

2695 – ثنا الْقَاضِي الْمَحَامِلِيُّ , نا عُبَيْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْوَرَّاقُ , نا مُوسَى بْنُ هِلَالٍ الْعَبْدِيُّ , عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ , عَنْ نَافِعٍ , عَنِ ابْنِ عُمَرَ , قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:  مَنْ زَارَ قَبْرِي وَجَبَتْ لَهُ شَفَاعَتِي

யார் என் கப்ரை ஸியாரத் செய்வாரோ அவருக்கு என்னுடைய பரிந்துரை கடமையாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் ; இப்னு உமர் (ரலி)

நூல் : தாரகுத்னீ, பாகம் :2, பக்கம் :278

இந்தச் செய்தியில் இடம்பெறும் நான்காவது அறிவிப்பாளர் மூஸா பின் ஹிலால் அல்அப்தீ என்பவரின் நம்பகத் தன்மை உறுதி செய்யப்படவில்லை.

الجرح والتعديل – (8 / 166)

734 – موسى بن هلال العبدى البصري روى عن هشام بن حسان سمعت ابى يقول ذلك قال أبو محمد وروى عن عبد الله العمرى روى عنه أبو بجير محمد بن جابر المحاربي ومحمد بن اسماعيل الاحمسي وابو امية الطرسوسى محمد بن ابراهيم. حدثنا عبد الرحمن قال سألت ابى عنه فقال: مجهول.

மூஸா பின் ஹிலால் அல்அப்தீ என்பவர் யாரென அறியப்படாதவர் ஆவார்.

நூல் : அல்ஜரஹ் வத்தஃதீல், பாகம் :8, பக்கம் : 166

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கப்ரை ஸியாரத் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வரும் செய்திகள் அனைத்தும் பலவீனமானவையாகும்.