107. அடிமைப் பெண்களுடன் இல்லறம் நடத்த இஸ்லாம் அனுமதித்தது ஏன்?

107. அடிமைப் பெண்களுடன் இல்லறம் நடத்த இஸ்லாம் அனுமதித்தது ஏன்?

வ்வசனங்களில் (4:3, 4:24,25, 4:36, 16:71, 23:6, 24:31, 33:50, 33:52, 33:55, 70:30) "வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட பெண்கள்'' என்ற சொற்றொடர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அடிமைப் பெண்களைக் குறிக்கும் சொல்லாகும்.

"அடிமைப் பெண்களுடன் திருமணம் செய்யாமல் அவர்களின் எஜமானர்கள் குடும்பம் நடத்தலாம்'' என்று இவ்வசனங்களில் கூறப்பட்டுள்ளது.


இன்று அடிமைப் பெண்களோ, அடிமை ஆண்களோ இல்லாததால் இதைப் புரிந்து கொள்வதற்கு இது பற்றிய வரலாறு தெரிந்திருப்பது அவசியம்.

இரண்டு நாடுகளுக்கிடையே போர் நடக்கும்போது, போரில் வெற்றி பெற்றவர்கள் தோற்றவர்களைச் சிறைப்பிடிப்பார்கள். சிறைப் பிடிக்கப்பட்டவர்களில் ஆண்களும் இருப்பார்கள். குறைந்த அளவில் பெண்களும் இருப்பார்கள்.

இவ்வாறு சிறைப்பிடிக்கப்பட்டவர்களை அடைத்து வைக்க அன்று சிறைக் கூடங்கள் இல்லை. அவர்களுக்கு உணவளித்துப் பராமரிப்பதும் தேவையற்ற சுமையாக அமையும். எனவே கைது செய்யப்பட்டவர்களைப் போரில் ஈடுபட்டவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுப்பார்கள். அவர்களிடம் வேலை வாங்கி விட்டு அவர்களுக்கு உணவளிப்பது சிரமமாக இருக்காது.

வேலைக்கு ஆள் தேவையில்லை என்ற நிலையில் இருப்பவர்கள் தமக்குக் கிடைத்த அடிமைகளை வசதியானவர்களிடம் விற்று விடுவார்கள். இதனால் அடிமைச் சந்தைகளும் கூட செயல்பட்டு வந்தன.

எத்தனையோ சமூகக் கொடுமைகளை ஒரு உத்தரவின் மூலம் ஒழித்துக் கட்டிய இஸ்லாம் அடிமைகளையும் ஒழித்துக் கட்டியிருக்க முடியாதா? ஏன் அதை இஸ்லாம் ஏற்றுக் கொண்டது? என்ற கேள்வி சிலருக்குத் தோன்றலாம்.

இதில் பல விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். போர்க்களத்தில் பிடிக்கப்படுவதன் மூலம் அடிமைகள் உருவானாலும் போர் வீரர்கள் உடனுக்குடன் அவர்களை விற்றுக் காசாக்கி விடுவார்கள். பெரும்பாலும் விலை கொடுத்து வாங்கியவர்களிடம் தான் அடிமைகள் இருந்தனர்.

இனிமேல் அடிமைகள் இருக்கக் கூடாது என்று உத்தரவிட்டால் அடிமைகளை விலைக்கு வாங்கியவர்கள் பெரிய அளவில் நட்டமடைவார்கள். அவர்கள் அனைவருக்கும் இழப்பீடு அளித்தால் அரசை நடத்த முடியாது. இழப்பீடு அளிக்காமல் உத்தரவு போட்டால் சட்டப்பூர்வமான அனுமதி இருந்தபோது செய்த வியாபாரத்தில் மக்களுக்கு இழப்பு ஏற்படுத்துவது அநியாயமாகும்.

அப்படியே அனைத்து அடிமைகளுக்காகவும் இழப்பீடு கொடுத்து விடுவிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டாலும் அது கேடாகத்தான் முடியும்.

ஏனெனில் அடிக்கடி போர்கள் நடந்து கொண்டிருந்த அன்றைய சூழ்நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டும் ஒருதலைப்பட்சமாக இவ்வாறு அறிவித்தால், முஸ்லிம் கைதிகள் மற்ற நாட்டில் அடிமைகளாக இருக்கும் நிலை ஏற்படும். எதிரிகள் உடனே விடுதலையாகும் நிலையும் ஏற்படும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை எதிர்த்துப் போர் செய்தால் நமக்குப் பெரிய இழப்பு ஏற்படாது. அவருக்குத்தான் இழப்பு ஏற்படும் என்ற எண்ணம் சுற்றியுள்ள நாடுகளுக்கு ஏற்படும். எனவே தான் உத்தரவு போட்டு அடிமை முறையை ஒழிக்கவில்லை.

உலக நாடுகள் அனைத்தும் ஒருமித்த தீர்மானத்திற்கு வரும் வரை நபிகள் நாயகம் (ஸல்) மட்டும் முடிவெடுப்பது நன்மை பயக்காது.

அதே சமயத்தில் அடிமைகளை இல்லாதொழிக்க வேறு பல ஏற்பாடுகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்தார்கள்.

  • ஒருவர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து விட்டு அதை முறித்தாலோ, அல்லது நோன்பை முறித்தாலோ இது போன்ற குற்றங்களுக்குப் பரிகாரமாக வசதியுள்ளவர்கள் அடிமைகளை விடுதலை செய்ய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டினார்கள்.
  • ஒப்பந்த அடிப்படையில் அடிமைகள் விடுதலையாவதற்கும் ஏற்பாடு செய்தார்கள். உன்னை நான் விடுதலை செய்கிறேன். நீ உழைத்து சிறிது சிறிதாக எனது கடனை அடைக்க வேண்டும் என்று எஜமானர்கள் அடிமைகளிடம் உடன்படிக்கை செய்து விடுவிக்க ஆர்வமூட்டினார்கள்.
  • யாரேனும் அடிமையை விடுதலை செய்தால் அந்த அடிமை பிற்காலத்தில் சம்பாதிப்பவைகளுக்கு அவனது எஜமான் வாரிசாவார் என்று சட்டம் கொண்டு வந்து அடிமைகளை விடுவிக்கத் தூண்டினார்கள்.
  • பொதுவாக மனிதன் செய்யும் நல்லறங்களில் அடிமைகளை விடுவித்தல் சிறப்பானது எனவும் ஆர்வமூட்டினார்கள்.

தமது வாழ்நாளில் கணிசமான அளவுக்கு அடிமைகளின் எண்ணிக்கையைக் குறைத்தார்கள். இது பொதுவாக அடிமைகள் பற்றியது. அடிமைப் பெண்கள் விஷயத்தையும் அறிந்து கொள்வோம்.

அடிமைப் பெண்களாக விற்கப்படுவோர் எஜமான் வீட்டில் தான் தங்குவார்கள். அவளது கணவன் வேறு நாட்டில் இருப்பான்; அல்லது இல்லாமலும் இருப்பான். இந்த நிலையில் அப்பெண்ணை, அன்னிய ஆண்கள் தகாத முறையில் பார்ப்பதைத் தடுப்பதற்கு வேலி போட்டாக வேண்டும். அவளுக்கும் உடல் ரீதியான தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

இதைக் கருத்தில் கொண்டுதான் அடிமைகளை விலைக்கு வாங்கிய எஜமான் (பல எஜமான்கள் இருந்தால் அவர்களில் ஒரே ஒருவர் மட்டும்) குடும்பம் நடத்தலாம். இவ்வாறு குடும்பம் நடத்தும்போது அவள் குழந்தையைப் பெற்றால் அவளும், குழந்தையும் அடிமைத் தளையிலிருந்து விடுபடுவார்கள் என்று இஸ்லாம் சட்டம் போட்டது.

இதை அந்தச் சமயத்தில் அனுமதிக்காவிட்டால் அவளுக்காகப் பரிந்து பேச யாருமில்லாத நாட்டில் அவளது எஜமானையே முழுவதும் சார்ந்திருக்கும்போது அவளை அவன் அனுபவிப்பதைத் தடுக்க முடியாது போகும்.

அடிமை தானே! நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற எண்ணம் மற்றவர்களுக்கும் ஏற்படும். அவளுக்குக் கணவனுக்கு நிகரான நிலையில் எஜமான் இருக்கிறான் என்ற எண்ணம் மற்றவர்களுக்கு ஏற்படும்போது அவளுக்குப் பாதுகாப்பு ஏற்படும்.

அவளுடன் ஒரு எஜமானர் தான் குடும்பம் நடத்த வேண்டும் எனக் கூறுவதாலும், அவருக்குப் பிறந்த குழந்தை சொந்த எஜமானின் குழந்தையாகவே கருதப்படும் என்பதாலும் இது விபச்சாரமாகாது.

அடிமைப் பெண்கள் என்ற நிலை இருந்த காலத்தில் இந்த அனுமதியை அளிப்பதைத் தவிர வேறு வழியில்லை. இன்று உலகமெங்கும் அடிமை முறை ஒழிக்கப்பட்டு விட்டதால் இப்போது இதை நடைமுறைப்படுத்த முடியாது.

வேலைக்காரிகளை அடிமைகள் என நினைக்கக் கூடாது. வேலைக்காரிகள் விலைக்கு வாங்கப்பட்டோர் அல்லர். விரும்பினால் இந்த முதலாளியை விட்டு வேறு முதலாளியை அவர்களால் மாற்றிக் கொள்ள முடியும். அடிமைகள் விரும்பும்போது எஜமானை மாற்ற முடியாது.

Leave a Reply

About Me

இறைவனின் திருப்பெயரால்…

  • இந்த தளத்தில் உள்ள செய்திகள் ஏகத்துவ கொள்கையை சொல்லும் பல்வேறு இணையதளத்தில் இருந்து எடுத்து தொகுக்கப்பட்டவை (ஆன்லைன்பீஜே, ஆன்லைன் டிஎன்டிஜே, etc).
  • இதில் தவறான கருத்துகள் ஏதேனும் இருப்பின் அதை Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு அனுப்பி தெரிவிக்கலாம்.
  • உங்கள் ஆக்கங்களையும்
  • Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு
  • என்ற முகவரிக்கு அனுப்பவும். ஆசிரியர் சரிபார்த்தபின் வெளியிடப்படும்.
  • இந்த தளத்திற்கும் எந்த அமைப்பிற்கும் எந்த தொடர்பும் கிடையாது.

You may want to read

Follow Us

Sign up for our Newsletter

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit