165. உயிர்களைக் கைப்பற்றும் வானவர்கள்

னிதர்களின் உயிர்களைக் கைப்பற்றும் வானவர்கள் பற்றி இவ்வசனங்கள் (4:97, 6:61, 6:93, 7:37, 8:50, 16:28, 16:32, 32:11, 47:27, 79:1,2) கூறுகின்றன.

மனிதர்களின் உயிர்களைக் கைப்பற்ற இஸ்ராயீல் என்ற வானவரை அல்லாஹ் நியமித்திருக்கிறான் என்று பரவலாக தமிழக முஸ்லிம்கள் நம்புகிறார்கள்.


ஆனால் இஸ்ராயீல் என்ற பெயரில் ஒரு வானவர் இருக்கிறார் என்று திருக்குர்ஆனிலோ, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளிலோ எந்தக் குறிப்பும் இல்லை.

ஒரே ஒரு வானவர் தான் அனைவருடைய உயிரையும் கைப்பற்றுகிறார் என்று கூறுவதற்கும் எந்தச் சான்றும் இல்லை.

திருக்குர்ஆனை நாம் ஆய்வு செய்து பார்த்தால் ஒவ்வொரு மனிதனின் உயிரைக் கைப்பற்றுவதற்கும் தனித்தனியான வானவர்கள் இருப்பதாக 32:11 வசனம் கூறுகிறது.

அதிகமான மக்களைப் பற்றி பன்மையாகப் பேசும்போது "அவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றுவார்கள்'' என்று பன்மையாகவே கூறப்படுகிறது. இதை 4:97, 6:93, 8:50, 16:28, 16:32, 47:27 ஆகிய வசனங்களில் காணலாம்.

நம்முடைய தூதர்கள் அவர்களின் உயிர்களைக் கைப்பற்றுவார்கள் என்று 6:61, 7:37 வசனங்களிலும் பன்மையாகக் கூறப்படுவதைக் காணலாம்.

அனைவருடைய உயிரையும் கைப்பற்றுவதற்கு ஒரே ஒரு வானவர் தான் இருக்கிறார் என்ற நம்பிக்கை தவறானது என்பதை மேலே கண்ட வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

ஒவ்வொரு மனிதனின் உயிரைக் கைப்பற்றுவதற்கும் ஒரு வானவரை அல்லாஹ் நியமித்திருக்கிறான். எப்போது கைப்பற்ற வேண்டும் என்ற உத்தரவு வருகிறதோ அந்த உத்தரவுக்காக ஒவ்வொரு வினாடி நேரமும் அவர் காத்துக் கொண்டிருக்கிறார். இதுதான் திருக்குர்ஆனிலிருந்தும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கவுரையிலிருந்தும் கிடைக்கின்ற முடிவாகும்.

ஒரே ஒரு வானவர் உலகத்திலுள்ள அனைவருடைய உயிர்களையும் கைப்பற்றும் அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கின்றார் என்று சொல்லப்படுவதற்கு மார்க்கத்தில் எந்தச் சான்றும் இல்லை. 

Leave a Reply