176. வழிபாட்டின்போது ஆடைக் குறைப்பு

ழிபாடு நடத்தும்போது சில மதத்தவர்கள் ஆடைக் குறைப்பு செய்கின்றனர். குறிப்பிட்ட ஆலயங்களில் நுழைய, நாட்டின் அதிபரே ஆனாலும் மேலாடைகளைக் களைந்து விட்டுத்தான் செல்ல வேண்டும் எனக் கூறப்படுகிறது.

கடவுளுக்குப் பூஜை நடத்துபவர் மேலாடை இல்லாமல் தான் பூஜை நடத்துகிறார். இன்னும் சிலர் நிர்வாணமாகத்தான் வழிபாடு நடத்த வேண்டும் எனக் கூறுகின்றனர்.


திருக்குர்ஆன் இந்த நம்பிக்கைகளை ஒப்புக் கொள்ளவில்லை. நல்ல ஆடை அணிந்து பள்ளிவாசலுக்கு வர வேண்டும் என்பதை இவ்வசனம் (7:31) வலியுறுத்துகிறது.

முக்கிய நிகழ்ச்சிகளுக்கு நல்ல ஆடை அணிந்து வருவோர் பள்ளிவாசலுக்கு வரும்போது அழுக்காடைகளுடன் வருகின்றனர். இது தவறாகும்.

நம்மிடம் எது இருக்கிறதோ, அதில் சிறந்த ஆடையை அணிந்து கொண்டு பள்ளிவாசலுக்கு வர வேண்டும். தினமும் ஐந்து வேளை நல்ல முறையில் ஆடை அணிந்து பழகுபவன் முழு வாழ்க்கையிலும் சிறந்த ஆடை அணிந்து மற்றவருக்கு முன்மாதிரியாகத் திகழ்வான் என்ற கருத்து இதனுள் அடங்கியுள்ளது.

சில பள்ளிவாசல்களில் விரிக்கப்பட்டுள்ள பாய்களில் அமர்ந்தால் அணிந்திருக்கும் ஆடைகளே அசுத்தமாகும் அளவிற்கு உள்ளன.

பள்ளிவாசல் நாற்றமின்றி நறுமணத்துடனும், ஆடம்பரமின்றி அழகுடனும், தூய்மையுடனும் திகழ வேண்டும். இது பள்ளிவாசல் நிர்வாகத்தின் மீது சுமத்தப்பட்ட கடமை என்ற கருத்தும் இதனுள் அடங்கியுள்ளது.

Leave a Reply