183. ஜின்களின் ஆற்றல்

183. ஜின்களின் ஆற்றல்

வ்வசனத்தில் (27:39) 'இஃப்ரீத்' என்ற ஜின் ஸுலைமான் நபி எழுந்திருப்பதற்குள் சிம்மாசனத்தைக் கொண்டு வருகிறேன் என ஸுலைமான் நபியிடம் கூறியதாகக் கூறப்படுகிறது.

இதில் கருத்து வேறுபாடு ஏதுமில்லை.


ஆயினும் இதற்கு அடுத்த வசனத்தில் (27:40) "கண்மூடித் திறப்பதற்குள் அதைக் கொண்டு வருகிறேன்" என்று வேத அறிவு உள்ளவர் கூறியதாகக் குறிப்பிடப்படுகிறது. வேத அறிவு உடையவர் என்பது மனிதரைக் குறிக்குமா? ஜின்னைக் குறிக்குமா? என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.

27:39 வசனத்தில் "ஜின் இனத்தைச் சேர்ந்த" என்ற சொல் இடம் பெற்றுள்ளது. 27:40 வசனத்தில் "வேத அறிவுடையவர்" என்று மட்டும் கூறப்படுகிறது. இதுவே கருத்து வேறுபாட்டுக்குக் காரணம்.

திருக்குர்ஆனில் மனிதனின் ஆற்றல் குறித்தும், ஜின்களின் ஆற்றல் குறித்தும் கூறப்படும் வசனங்களை அறிந்திருப்பவர் 27:40 வசனமும், ஜின்னையே குறிக்கிறது என்பதைப் புரிந்து கொள்வார். ஏனெனில் ஜின்னுடைய ஆற்றல் மனிதனின் ஆற்றலை விடப் பல மடங்கு அதிகம் என்று 72:8,9 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

ஜின்கள் எவ்விதச் சாதனங்களும் இன்றி வானத்தின் எல்லை வரை சென்று திரும்பும் ஆற்றல் வழங்கப்பட்டுள்ளனர். மனிதனால் கண்மூடித் திறப்பதற்குள் ஒரு நாட்டில் உள்ள சிம்மாசனத்தை இன்னொரு நாட்டிற்குக் கொண்டு வர முடியாது. அத்தகைய ஆற்றல் மனிதனுக்கு வழங்கப்பட்டிருப்பதாக திருக்குர்ஆனிலோ, நபிமொழிகளிலோ எந்தச் சான்றும் இல்லை என்பதால் இதில் கருத்து வேறுபாடு கொள்ள நியாயம் இல்லை.

எனவே ஜின்களில் போதிய கல்வியறிவு இல்லாத ஜின் கூறியது முந்தைய வசனத்திலும், கல்வியறிவு பெற்ற ஜின் கூறியது அடுத்த வசனத்திலும் கூறப்படுகிறது என்பதே சரியான கருத்தாகும்.

அடுத்து ஜின்களை நாங்கள் வசப்படுத்தி வைத்துள்ளோம் எனக் கூறி சிலர் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

எந்த மனிதனாலும் ஜின்களை வசப்படுத்த முடியாது என்பதே உண்மை.

பகுத்தறிவு இல்லாத ஜீவன்களை மனிதனுக்கு அல்லாஹ் வசப்படுத்திக் கொடுத்துள்ளான். இதற்கு ஆதாரங்கள் உள்ளன.

45:12, 45:13, 14:32, 16:14, 22:36, 22:37, 22:65, 31:20, 43:13 ஆகிய வசனங்களில் அல்லாஹ் இதைத் தெளிவாக கூறுகிறான்.

ஆனால் மனிதனைப் போல் பகுத்தறிவும், மனிதனை விட அதிக ஆற்றலும் கொண்ட ஜின்களை மனிதன் வசப்படுத்த முடியும் என்று அல்லாஹ் சொல்லி இருக்கிறானா? ஜின்களை எவ்வாறு வசப்படுத்துவது என்ற வழிமுறையை அல்லாஹ்வோ, அவனது தூதரோ கற்றுத் தந்துள்ளார்களா? நிச்சயமாக இல்லை.

நெருப்பால் படைக்கப்பட்ட ஜின்கள் எனும் படைப்பு மனிதர்களின் கண்களுக்குத் தென்படாது. ஆனாலும் மனிதனைப் போல் பகுத்தறிவு கொடுக்கப்பட்ட படைப்பு என்பதற்கு ஆதாரம் உண்டு.

திருக்குர்ஆன் 51:56, 6:130, 55:31, 7:38, 7:179, 11:119, 32:13 ஆகிய வசனங்கள் மனிதர்களின் நன்மை தீமைகளுக்கு ஏற்ப எப்படி சொர்க்கம் அல்லது நரகம் வழங்கப்படுகிறதோ அது போல் ஜின்களுக்கும் வழங்கப்படும் என்பதையும், ஜின்களுக்கும் வணக்க வழிபாடுகள் செய்யும் கடமை உண்டு எனவும் கூறுகின்றன.

7:179 வசனம் ஜின்களுக்குப் பகுத்தறிவு உள்ளது என்று தெளிவாகச் சொல்கிறது.

பகுத்தறிவு இல்லாத மிருகங்களை மனிதன் வசப்படுத்தலாம். பகுத்தறிவுள்ள ஜின்களை எப்படி மனிதனால் வசப்படுத்த முடியும்?

பகுத்தறிவுள்ள மனிதன் பகுத்தறிவுள்ள இன்னொரு மனிதனை வசப்படுத்த முடியாது எனும்போது பகுத்தறிவுள்ள ஜின்களை எப்படி வசப்படுத்த முடியும்.

இது மட்டுமில்லாமல் ஆற்றலில் மனிதர்களை மிஞ்சியது ஜின் இனம் என்பதை மேலே கண்டோம்.

ஜின்களுக்கு மனிதர்களைப் போல் பகுத்தறிவு இருக்கிறது. ஆற்றலில் மனிதனை விட பல்லாயிரம் மடங்கு அதிகமாக உள்ளது. அப்படி இருக்கும்போது மனிதனை வேண்டுமானால் ஜின்களால் வசப்படுத்த முடியுமே தவிர ஜின்களை மனிதனால் வசப்படுத்தவே முடியாது என்பது உறுதியாகிறது.

இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால் மனிதனால் ஜின்களை வசப்படுத்தவே முடியாது என்பதற்குத்தான் ஆதாரங்கள் உள்ளன.

ஸுலைமான் நபிக்கு ஜின்களை அல்லாஹ் வசப்படுத்திக் கொடுத்தது பற்றி கூறும் வசனங்களைக் கவனியுங்கள்!

ஷைத்தான்களில் அவருக்காக முத்துக்குளிப்போரையும், அது தவிர வேறு பணியைச் செய்வோரையும் (வசப்படுத்திக்) கொடுத்தோம். நாம் அவர்களைக் கண்காணிப்போராக இருந்தோம்.

திருக்குர்ஆன் : 21:82 

ஸுலைமானுக்குக் காற்றை வசப்படுத்தினோம். அதன் புறப்பாடு ஒரு மாதமாகும். அதன் திரும்புதல் ஒரு மாதமாகும். அவருக்காக செம்பு ஊற்றை ஓடச் செய்தோம். தனது இறைவனின் விருப்பப்படி அவரிடம் பணியாற்றும் ஜின்களும் இருந்தனர். அவர்களில் நமது கட்டளையை யாரேனும் புறக்கணித்தால் நரகின் வேதனையை அவருக்குச் சுவைக்கச் செய்வோம். அவர் விரும்பிய மாளிகைகளையும், சிற்பங்களையும், தடாகங்களைப் போன்ற கொப்பரைகளையும், நகர்த்த முடியாத பாத்திரங்களையும், அவருக்காக அவை செய்தன. "தாவூதின் குடும்பத்தாரே! நன்றியுடன் செயல்படுங்கள்! எனது அடியார்களில் நன்றியுடையோர் குறைவாகவே உள்ளனர்'' (என்று கூறினோம்.)

திருக்குர்ஆன் : 34:12 

ஒவ்வொரு விநாடியும் ஜின்கள் ஸுலைமான் நபிக்குக் கட்டுப்படுகிறதா என்று அல்லாஹ் கண்காணித்த காரணத்தால் தான் அவரால் ஜின்களை வசப்படுத்த முடிந்தது.

ஸுலைமான் நபிக்கு காற்றை அல்லாஹ் வசப்படுத்திக் கொடுத்தான். பறவையை வசப்படுத்திக் கொடுத்தான். எறும்புகள் பேசுவதைப் புரிய வைத்தான். இதுபோல் தான் ஜின்களையும் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தான்.

மனிதர்களால் ஜின்களை வசப்படுத்த முடியும் என்றால் ஸுலைமானுக்கு வசப்படுத்திக் கொடுத்தோம் என்று சொல்வது அர்த்தமற்ற சொல்லாகிவிடும்.

ஸுலைமான் நபிக்கு ஜின்களை அல்லாஹ் வசப்படுத்திக் கொடுத்தான் என்பது மனிதர்களால் ஜின்களை வசப்படுத்த முடியாது என்ற கருத்தை உள்ளடக்கி இருக்கிறது.

அல்லாஹ்வின் இந்த மாபெரும் அருட்கொடைகளை அனுபவித்த ஸுலைமான் நபியவர்கள் எனக்குக் கொடுத்தது போன்ற ஆட்சியை யாருக்கும் கொடுக்காதே என துஆவும் செய்து விட்டார்கள்.

"என் இறைவா! என்னை மன்னித்து விடு! எனக்குப் பின் யாருக்கும் கிடைக்காத ஆட்சியை எனக்கு வழங்கு! நீயே வள்ளல்'' எனக் கூறினார்.

திருக்குர்ஆன் 38:35 

இந்த துஆவை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான் என ஹதீஸில் ஆதாரமும் இருக்கின்றது.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருநாள்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நேற்றிரவு முரட்டு ஜின் ஒன்று என் தொழுகையை (இடையில்) துண்டிப்பதற்காக திடீரென்று வந்து நின்றது என்றோ, அல்லது இதைப் போன்ற வார்த்தையையோ கூறினார்கள். பிறகு அதன் மீது அல்லாஹ் எனக்கு சக்தியை வழங்கினான். நீங்கள் அனைவரும் காலையில் வந்து அதைக் காணும் வரை இந்தப் பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் அதைக் கட்டிவைக்க நினைத்தேன். அப்போது இறைவா! எனக்குப் பின் வேறு எவருக்கும் நீ வழங்காத ஓர் ஆட்சியை எனக்கு நீ வழங்குவாயாக (38:35) என்று என் சகோதரர் ஸுலைமான் (அலை) அவர்கள் செய்த வேண்டுதல் என் நினைவுக்கு வந்தது என்று கூறினார்கள்.

நூல் : புகாரீ 461 

ஸுலைமான் நபியவர்கள் செய்த பிரார்த்தனையை அல்லாஹ் நபிகளாருக்கு நினைவுக்குக் கொண்டு வந்து ஜின்னை வசப்படுத்தும் நிலையில் இருந்து நபியவர்களைத் தடுத்து விட்டான். ஸுலைமான் நபியின் பிரார்த்தனை இதையும் உள்ளடக்கியது தான் என்பதற்கும் இது ஆதாரமாக உள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூட ஜின்களை வசப்படுத்த முடியாது என்பதை இதிலிருந்து நாம் அறிய முடியும்.

மனிதனால் ஜின்களை வசப்படுத்த முடியாது என்று திருக்குர்ஆனில் தெளிவாகச் சொல்லப்பட்ட பின் அதற்கு மாற்றமாக மனிதனால் ஜின்களை வசப்படுத்த முடியும் என்று வாதிடுவதை எப்படி ஏற்க முடியும்?

ஜின்களை வசப்படுத்தி வைத்து இருந்தால் தனது தேவைகளுக்கு மக்களிடம் கையேந்திக் கொண்டு இருப்பார்களா?

ஜின்னை வசப்படுத்தி வைத்திருப்பவனிடம் போய் நான் உன்னை அடிக்கின்றேன். நீ எதுவும் செய்யக்கூடாது. நீ வசப்படுத்தி வைத்துள்ள ஜின்தான் என்னைத் தடுக்க வேண்டும் என்று சொன்னால் அவன் ஏற்றுக் கொள்வானா?

ஜின்களை வசப்படுத்தி வைத்திருப்பது உண்மையானால் மண்ணில் புதைந்துள்ள பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கொண்டு வருமாறு தனது கட்டுப்பாட்டில் உள்ள ஜின்களுக்குக் கட்டளையிடலாமே?

அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற பயங்கரவாத நாடுகளுக்கு நாலு ஜின்களை அனுப்பினால் அந்த நாடுகளை உண்டு இல்லை என்று பண்ணிவிடலாமே? ஜின்களுக்கு அவ்வளவு ஆற்றல் உள்ளதே?

எங்கோ இருந்த சிம்மாசனத்தை கண்மூடித் திறப்பதற்குள் கொண்டு வரும் ஆற்றல் படைத்த ஜின்களுக்கு இவர்கள் கட்டளையிட்டால் பெண்டகனின் கட்டுப்பாட்டில் உள்ள எல்லா ஆயுதங்களையும் அழித்து விட முடியுமே?

ஜின்களை வசப்படுத்தி வைத்திருப்பதாகப் புளுகும் இவர்கள் சில்லரை வேலைகளைத்தான் பார்க்கிறார்கள். ஜின்கள் பார்க்கும் எந்த வேலையையும் இவர்கள் பார்ப்பதில்லை.

அறிவுப்பூர்வமாகச் சிந்தித்தால் கண்களுக்குத் தெரியாத பகுத்தறிவுள்ள படைப்புக்குத் தான் வசப்படுத்தும் வாய்ப்பு அதிகம் இருக்கும். ஜின்கள் நம்மைப் பார்க்கும். நாம் ஜின்களைப் பார்க்க முடியாது என்று 7:27 வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

ஜின்கள், மனிதனின் தலையில் தட்டி நான் சொல்வதைக் கேள் என்று சொன்னால் அதை மனிதன் மீறமாட்டான். ஏனெனில் கண்களுக்குத் தெரியாததால் எந்தப் பக்கம் இருந்து அடுத்த அடி விழும் என்று தெரியாது. எனவே ஜின்களை எதிர்க்க இயலாமல் மனிதன் ஜின்களுக்குக் கட்டுப்படுவான் என்றால் அதை நம்பலாம்.

மனிதனைப் போல் பகுத்தறிவும், மனிதனை விட அதிக ஆற்றலும், கண்ணுக்குப் புலப்படாமல் இருப்பதன் மூலம் கூடுதல் ஆற்றலையும் பெற்றுள்ள ஜின்களை மனிதனால் ஒருபோதும் வசப்படுத்த முடியாது.

ஜின்களைக் கொண்டு ஜின்கள் செய்யத் தக்க எந்த வேலையையும் இவர்கள் செய்வதில்லை. மாறாக மக்களை ஏமாற்றி பணம் பறிப்பதற்குத்தான் ஜின்களை வசப்படுத்தி வைத்துள்ளோம் என்று பயம் காட்டுகின்றனர் என்பது இதிலிருந்து உறுதியாகின்றது.

Leave a Reply

About Me

இறைவனின் திருப்பெயரால்…

  • இந்த தளத்தில் உள்ள செய்திகள் ஏகத்துவ கொள்கையை சொல்லும் பல்வேறு இணையதளத்தில் இருந்து எடுத்து தொகுக்கப்பட்டவை (ஆன்லைன்பீஜே, ஆன்லைன் டிஎன்டிஜே, etc).
  • இதில் தவறான கருத்துகள் ஏதேனும் இருப்பின் அதை Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு அனுப்பி தெரிவிக்கலாம்.
  • உங்கள் ஆக்கங்களையும்
  • Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு
  • என்ற முகவரிக்கு அனுப்பவும். ஆசிரியர் சரிபார்த்தபின் வெளியிடப்படும்.
  • இந்த தளத்திற்கும் எந்த அமைப்பிற்கும் எந்த தொடர்பும் கிடையாது.

You may want to read

Follow Us

Sign up for our Newsletter

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit