187. இறுதி நபி முஹம்மது (ஸல்)

187. இறுதி நபி முஹம்மது (ஸல்)

வ்வசனங்கள் (4:79, 6:19, 7:158, 14:52, 21:107, 22:49, 33:40, 34:28, 62:3) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதி நபி எனவும், அவர்களுக்குப் பின் எந்த நபியும் வரமாட்டார்கள் எனவும் கூறுகின்றன.

முதல் நபியான ஆதம் (அலை) அவர்கள் முதல் தொடர்ந்து நபிமார்களை அனுப்பிக் கொண்டே வந்த இறைவன், முஹம்மது நபியுடன் ஏன் அதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்? நபிமார்கள் வருவது நன்மை தானே என சிலர் நினைக்கலாம்.


எந்தக் காரியத்தைச் செய்வதாக இருந்தாலும் அதற்கான தேவை இருந்தால்தான் அறிவுடையோர் அதைச் செய்வார்கள்.

மாபெரும் பேரறிவாளன் அல்லாஹ் தேவையற்ற எந்தக் காரியத்தையும் செய்ய மாட்டான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் தொடர்ந்து நபிமார்களை அனுப்பியதற்குத் தக்க காரணங்கள் இருந்தன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் அந்தக் காரணங்களில் ஒன்று கூட இல்லை.

மனிதர்களுக்கு நல்வழி காட்டுவதற்காக ஒரு வேதத்துடன் தூதரை இறைவன் அனுப்பி, அந்த வேதமும், அந்தத் தூதரின் விளக்கமும் பாதுகாக்கப்படாத நிலையில் தான் அடுத்து ஒரு தூதரை அனுப்ப வேண்டிய அவசியம் ஏற்படும்.

அல்லது ஒரு தூதர் மரணித்தபின் அவர் கொண்டு வந்த வேதத்தையும், அவரது போதனைகளையும் கூட்டி, குறைத்து, மாற்றி, மறைத்து மனிதர்கள் கைவரிசையைக் காட்டி இருக்கும்போதும், அவற்றைச் சரி செய்வதற்காக இன்னொரு தூதரை அனுப்ப வேண்டிய அவசியம் ஏற்படும்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பொறுத்த வரை இந்தக் காரணங்கள் அறவே இல்லை. அவர்களுக்கு இறைவன் வழங்கிய திருக்குர்ஆன் எனும் வேதம் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது. அதில் எந்த ஒன்றும் கூட்டப்படவும் இல்லை. குறைக்கப்படவும் இல்லை. மனிதக் கருத்து ஒன்று கூட அதில் நுழைக்கப்படவில்லை. இதைத் தனது தனிச் சிறப்பாக திருக்குர்ஆன் சொல்லிக் காட்டுகிறது.

“இதை நாமே அருளினோம்; இதை நாமே பாதுகாப்போம்”   

என்று இறைவன் உத்தரவாதம் அளிப்பதை 15:9 வசனத்தில் காணலாம். இவ்வசனத்தில் கூறப்பட்டதற்கு இணங்க அன்று முதல் இன்று வரை திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அதே போன்று, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலும் பாதுகாக்கப்பட்டுள்ளன. அதில் இடைச்செருகல்களை சில அறிவீனர்களும், கயவர்களும் நபிகளாரின் காலத்திற்குப் பின் சேர்த்திருந்தாலும் அவற்றைக் கண்டுபிடித்து, களையெடுத்து, சரியானதைப் பிரித்துக் காட்டும் அரும் பணியை நபிகள் நாயகம் (ஸல்) மரணித்து நூறு வருடங்களுக்குள் அறிஞர்கள் வழியாக இறைவன் நிறைவேற்றி விட்டான்.

நபிமொழிகளில் ஏதேனும் இடைச்செருகல் இருந்தால் திருக்குர்ஆனுடன் உரசிப் பார்த்து அவற்றைக் கண்டுபிடித்து விட முடியும்.

திருக்குர்ஆன் 100 சதவிகிதமும், நபிமொழிகள் தேவையான அளவுக்கும் பாதுகாக்கப்பட்டிருக்கும் போது இன்னொரு நபி வரவேண்டிய எந்த அவசியமும் இல்லாமல் போய் விடுகிறது.

ஒவ்வொரு காலத்திலும் தூதர்களை இறைவன் அனுப்பும்போது, அந்தச் சமுதாயத்தினரின் நிலையைக் கவனித்து அதற்கேற்ற சட்டங்களுடன் அனுப்பினான். இதனால் ஒரு காலத்து மக்களுக்கு இறைவன் அனுப்பிய வேதமும், தூதரின் போதனையும் அடுத்த காலத்தவருக்குப் பொருந்தாமல் போய் விடலாம்.

ஒரு நபி மரணித்த பின், அந்த நபியின் போதனை அடுத்து வரும் தலைமுறைக்குப் பொருந்தாது என்ற நிலை ஏற்படும்போது இன்னொரு வேதம் அருளப்படும் அவசியம் ஏற்படுகிறது.

அதுபோல், ஒரு தூதரின் காலத்தில் அருளப்பட்ட சட்டங்களை விட அதிகச் சட்டங்களை அடுத்து வரும் சமுதாயத்திற்குக் கூற வேண்டிய நிலை வந்தால் அப்போதும் இன்னொரு தூதரின் வருகை அவசியமாகும்.

திருக்குர்ஆனைப் பொறுத்தவரை இந்த நிலை இல்லை.

அது அருளப்படும் போதே உலகம் முழுவதற்கும் பொருந்தும் வகையிலும், அனைத்துக் கட்டளைகளும் முழுமைப்படுத்தப்பட்ட நிலையிலும் அருளப்பட்டது.

அதில் எந்த ஒன்றையும் சேர்க்கவோ, நீக்கவோ, திருத்தவோ அவசியமில்லாத அளவுக்கு நிறைவாக உள்ளது.

இப்போது ஓர் இறைத்தூதர் வந்தால், அவர் கொண்டு வரும் வேதம் எந்தத் தரத்தில் இருக்குமோ அந்தத் தரத்தில் திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்டு இருக்கும்போது இன்னொரு வேதமும், தூதரும் வரவேண்டிய தேவையில்லை.

இஸ்லாத்திற்கு எதிராகப் பல விதமான விமர்சனங்களை எதிரிகள் செய்து வருகிறார்கள். ஆனால் திருக்குர்ஆனில் இன்னின்ன சட்டங்கள் இந்தக் காலத்திற்குப் பொருந்தாது என்று ஒரேயொரு விமர்சனத்தைக் கூட தக்க காரணத்துடன் எடுத்து வைத்து அவர்களால் நிரூபிக்க முடியவில்லை. எக்காலத்துக்கும் பொருந்தும் வகையில் திருக்குர்ஆன் அமைந்துள்ளதை இதிலிருந்து அறியலாம்.

உலகத்துக்கே தலைமை தாங்க அமெரிக்க ஏகாதிபத்தியம் துடித்துக் கொண்டிருப்பதை நாம் அறிவோம். உலகில் மிகச் சிறந்த உரிமையியல் மற்றும் குற்றவியல் சட்டங்களை வழங்கிய 10 பேரில் ஒருவராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தேர்வு செய்து அந்த நாட்டின் உச்சநீதிமன்றத்தில் அமெரிக்க அரசாங்கம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சிலை வைக்க முயன்றதையும் திருக்குர்ஆன் எக்காலத்துக்கும் பொருந்தும் என்பதற்கு சான்றாகக் கொள்ளலாம்.

இஸ்லாத்தின் மீது கடும் வெறுப்பு கொண்டுள்ள தலைவர்களில் ஒருவரான அத்வானி போன்றவர்கள், நாட்டில் குற்றச் செயல்கள் பெருகி வருவதைக் கண்டு, "இஸ்லாமியச் சட்டத்தினால் தான் குற்றச் செயல்களைத் தடுக்க முடியும்" என்று சொல்லுமளவுக்கு எக்காலத்திற்கும் பொருந்துவதாகத் திருக்குர்ஆன் அமைந்துள்ளதை அறியலாம்.

1400 வருடங்களுக்கு முன் வாழ்ந்த ஒரு படிக்காத மேதை மூலம் வழங்கப்பட்ட சட்டங்கள் நாகரீகத்தின் உச்சத்தில் இருப்பதாகக் கூறும் நாட்டவராலும் போற்றப்படும்போது இன்னொரு தூதருக்கு என்ன வேலை இருக்கிறது?

எக்காலத்திற்கும் பொருந்துவதாகவும், தான் கூறும் தத்துவங்கள் உடைக்கப்பட முடியாததாகவும் இருக்கும் காரணத்தினால் தான் இது போல் எவராலும் இயற்ற முடியாது என்று திருக்குர்ஆன் அறைகூவல் விடுகின்றது. (இது குறித்து அதிக விபரத்திற்கு, இம்மொழிபெயர்ப்பின் முன்னுரையில் இடம் பெற்றுள்ள, "இது இறை வேதம்'' என்ற கட்டுரையை வாசிக்கவும்.)

இன்றைய நாகரீக உலகம் முந்தைய சமுதாயத்தை விட பல நவீனப் பிரச்சினைகளைச் சந்திக்கின்றது. இது போன்ற நவீனப் பிரச்சினைகளுக்கு எந்த மதத்தினராக இருந்தாலும் தமது சொந்தக் கருத்தின் அடிப்படையிலேயே தீர்வு சொல்கின்றனர். ஆனால் முஸ்லிம்களைப் பொறுத்த வரை எத்தகைய நவீனப் பிரச்சினையாக இருந்தாலும், திருக்குர்ஆனிலிருந்தும், பாதுகாக்கப்பட்ட நபிமொழிகளிலிருந்தும் சான்றுகளை எடுத்துக் காட்டியே அறிஞர்கள் தீர்வு காண்கிறார்கள். அதாவது நவீனப் பிரச்சினைகள் அனைத்துக்கும் திருக்குர்ஆனில் தீர்வு இருப்பதால்தான் அவர்களால் இவ்வாறு எடுத்துக்காட்ட முடிகிறது.

எக்காலத்திற்கும் உரிய சட்டங்கள் ஒரு வேதத்தில் இருக்கும் பொழுது இன்னொரு வேதத்திற்கு எந்தத் தேவையுமில்லை.

இறைவனால் வழங்கப்பட்ட வேதம் அனைத்து மக்களிடமும் சென்றடையாமல் குறிப்பிட்ட சாராருடன் முடக்கப்பட்டிருந்தால் அதைப் பரவலாக்குவதற்காக ஒரு தூதரின் வருகை அவசியமாகும்.

திருக்குர்ஆனைப் பொறுத்த வரை இந்த நிலையும் இல்லை. திருக்குர்ஆன் சென்றடையாத நாடு இல்லை. அனேகமாக உலகின் எல்லா மொழிகளிலும் திருக்குர்ஆன் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இது இறைவேதம் என்பதில் கடுகளவு கூடச் சந்தேகமில்லாமல் நம்புகின்ற இரு நூறு கோடிக்கும் அதிகமான மக்களை அது சென்றடைந்துள்ளது.

முஸ்லிம்களிடம் திருக்குர்ஆன் என்ற வேதம் உள்ளது என்ற செய்தி முஸ்லிமல்லாத அனைவரையும் எட்டியுள்ளது. அந்த வேதம் என்ன தான் சொல்கிறது என்று அறிந்து கொள்ள முஸ்லிமல்லாத எவர் விரும்பினாலும் அவரது தாய்மொழியில் திருக்குர்ஆன் எளிதாக அவருக்குக் கிடைத்து விடுகிறது.

இறைத்தூதர் இப்போது இருந்தால் எவ்வளவு மக்களை அவரது போதனை சென்றடையுமோ அதைவிடப் பலப்பல மடங்கு மக்களை திருக்குர்ஆன் சென்றடைந்திருக்கும் போது எதற்காக இன்னொரு தூதர்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் எந்தத் தூதரும் வர மாட்டார்கள் என்பதை நன்றாகத் தெரிந்து கொண்ட சில பொய்யர்கள் தம்மைத் தூதர்கள் என்று வாதிட்டார்கள்.

முழுமையான ஒரு வேதமும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முழுமையான வழிகாட்டுதலும் ஜீவனுடன் இருந்ததால் அவற்றின் முன்னே இவர்களின் பொய் வாதங்கள் நொறுங்கிப் போயின.

திருக்குர்ஆனில் இல்லாத எந்த ஒன்றையும் அவர்களால் சொல்ல முடியவில்லை. திருக்குர்ஆனில் இருக்கும் ஒரு சட்டத்தை அவர்களால் மாற்றவும் முடியவில்லை.

பொய் நபிக்கு இரண்டு சமீபத்திய உதாரணங்களை நாம் இங்கு சுட்டிக் காட்டலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் எந்த நபியும், ரசூலும் வர மாட்டார்கள் என்பதற்கு இவ்வளவு சான்றுகள் இருந்தும் சமீப காலத்தில் ரஷாத் கலீஃபா என்பவன் தன்னை இறைத்தூதர் என்று வாதிட்டான். ஆனால் அல்லாஹ்வின் அருளால் அவன் பெரும் பொய்யன் என்பது அவனது எழுத்துக்களைக் கொண்டே நிரூபணமானது.

இது பற்றி 354வது குறிப்பில் முழுமையாக விளக்கியுள்ளோம்!

அது போல் பாகிஸ்தானைச் சேர்ந்த காதியான் என்ற ஊரில் பிறந்த மிர்ஸா குலாம் என்பவன் தன்னை நபி என்று வாதிட்டான். அவன் வாழ்ந்த காலத்திலேயே அவன் பொய்யன் என்று நிரூபணமானது.

அவனது மதத்தைச் சேர்ந்தவர்களுடன் கோவையில் 19.11.1994 முதல் 27.11.1994 வரை ஒன்பது நாட்கள் நாம் விவாதம் நடத்தினோம். அந்த விவாதத்தில் காதியானிகளின் தலைமைப் பீடத்திலிருந்து அவர்களது மதகுருக்கள் வந்து கலந்து கொண்டனர்.

அந்த விவாதத்தில் அவர்களின் முன்னிலையில் மிர்ஸா குலாம் என்பவன் பெரும் பொய்யன் என்பதற்கான சான்றுகளை அவனது நூலில் இருந்தே நாம் எடுத்துக் காட்டினோம். கடைசி வரை காதியானி மதத்தவர்களால் அதற்குப் பதில் சொல்ல முடியவில்லை. இது வீடியோவாகவும், ஆடியோவாகவும் பதியப்பட்டு, பாதுகாக்கப்பட்டுள்ளது.

Onlinepj.com இணைய தளத்திலும் இதைப் பார்த்துக் கொள்ளலாம். http://www.onlinepj.com/bayan-video/vivathangal/mirza_kulam_poyyan/

இன்று வரை பதில் சொல்ல முடியாத அந்தக் கேள்விகளில் சிலவற்றை இங்கே சுட்டிக் காட்டுகிறோம்.

1. "மூஸா நபி மரணிக்கவில்லை. அவர் வானத்தில் உயிருடன் உள்ளார். அவர் இறந்தவர்களில் ஒருவர் அல்லர் என்று ஈமான் கொள்வதை அல்லாஹ் நமக்குக் கடமையாக்கி இருக்கிறான்'' என்று மிர்ஸா குலாம், "நூருல் ஹக்" என்ற நூலில் பக்கம் 68, 69ல் கூறியுள்ளான்.

அல்லாஹ் எந்த வசனத்தில் இவ்வாறு கூறியுள்ளான்? எடுத்துக் காட்டுங்கள் எனக் கேட்டோம். கடைசி வரை கதியானிக் கும்பல் பதில் சொல்லவில்லை. அல்லாஹ்வின் மீது பொய் சொன்னவன் எப்படி நபியாக இருக்க முடியும் என்ற கேள்விக்கும் பதில் இல்லை.

2 "மஸீஹ் வரும் காலத்தில் பிளேக் நோய் ஏற்படும் என்று திருக்குர்ஆனிலும் தவ்ராத்திலும் உள்ளது'' என்று கிஷ்தீ நூஹ் என்ற நூலில் பக்கம் 5 முதல் 9 வரை மிர்ஸா குலாம் எழுதியுள்ளான்.

திருக்குர்ஆனில் அல்லாஹ் இப்படிக் கூறியதை எடுத்துக் காட்டுங்கள் என்று கேட்டோம். திருக்குர்ஆனில் அப்படி இல்லாததால் கடைசி வரை எடுத்துக் காட்ட முடியவில்லை. திருக்குர்ஆனில் இல்லாததைக் திருக்குர்ஆனில் உள்ளது என்று சொன்னவன் பொய்யனா? நபியா? என்ற கேள்விக்கும் கடைசி வரை பதில் சொல்லவில்லை.

3 மஸீஹ் வரும் காலத்தில் வானத்தில் இருந்து "இவர் தான் அல்லாஹ்வின் கலீஃபா மஹ்தீ'' என்ற சப்தம் வரும். திருக்குர்ஆனுக்கு அடுத்த நிலையில் உள்ள ஸஹீஹுல் புகாரீ என்ற ஹதீஸ் நூலில் இது உள்ளது என்று மிர்ஸா குலாம் ஷஹாததுல் குர்ஆன் என்ற நூலில் பக்கம் 41ல் கூறியுள்ளான்.

ஸஹீஹுல் புகாரீ இதோ உள்ளது. அந்த ஹதீஸை எடுத்துக் காட்டுங்கள் என்று கேட்டோம். புகாரீயில் அவ்வாறு இல்லாததால் காதியானி மதத்தினர் அதை எடுத்துக்காட்ட முடியவில்லை. பெரும் பொய்யன் என்று தனக்குத் தானே நிரூபித்துக் கொண்டவன் எப்படி நபியாக இருக்க முடியும்?

4 "நீ எனது அர்ஷின் அந்தஸ்தில் இருக்கிறாய்! நீ என் மகனுடைய அந்தஸ்தில் இருக்கிறாய்! எந்தப் படைப்புகளும் அறிந்து கொள்ள முடியாத ஒரு அந்தஸ்தில் நீ இருக்கிறாய்'' என்று அல்லாஹ் என்னிடம் கூறினான் என்று மிர்ஸா குலாம் ஹகீகதுல் வஹீ பக்கம் 86 முதல் 89 வரை கூறியுள்ளான்.

அல்லாஹ்வுக்குப் பிள்ளை இருக்க முடியாது. இது அல்லாஹ்வுக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தும் சொல் என்று அல்லாஹ் கூறியிருக்கிறான். ஈஸா நபியை அல்லாஹ்வின் மகன் என்று கூறுபவர்கள் அல்லாஹ்வுக்குப் பிறந்தவர் என்ற பொருளில் கூறவில்லை. மகனுடைய அந்தஸ்தில் உள்ளவர் என்ற கருத்தில்தான் கூறினார்கள். இதனால்தான் அவர்கள் இறைமறுப்பாளர்களாக ஆனார்கள்.

கிறித்தவர்களின் கடவுள் கொள்கையைச் சொன்னவன் எப்படி இறைத்தூதராக இருக்க முடியும்?

இப்படிக் கூறலாம் என்பதற்குச் சான்றைக் காட்டுங்கள் என்று அடுக்கடுக்கான சான்றுகளுடன் கேள்வி கேட்டோம். கடைசிவரை பதில் இல்லை. அல்லாஹ்வின் பார்வையில் இறைமறுப்பாளனாக ஆகிவிட்ட இவன் எப்படி நபியாக இருக்க முடியும்?

5. 'கமர்' என்ற சொல் மூன்று நாட்களுக்குப் பிறகு உள்ள பிறைக்குத்தான் சொல்லப்படும். இது அன்று முதல் இன்று வரை அனைத்து அரபுகளும் ஒன்றுபட்டுக் கூறும் கருத்தாகும். இதற்கு மாற்றமாக அரபுமொழி அறிஞர் யாரும் சொன்னதில்லை. மொழி அறியாத மடையன் தான் இதற்கு மாற்றமாகச் சொல்வான் என்று மிர்ஸா குலாம் நூருல் ஹக் 10/98ல் எழுதியுள்ளான்.

ஆனால் கமர் என்ற வார்த்தையை அல்லாஹ் முதல் பிறைக்கும் பயன்படுத்தியுள்ளானே என்று ஏராளமான சான்றுகளுடன் கேள்வி கேட்டோம். அல்லாஹ்வையே விமர்சனம் செய்பவனும், இல்லாததை இட்டுக்கட்டும் மடையனும் எப்படி நபியாக இருக்க முடியும் என்று கேட்டபோதும் அவர்களிடம் பதில் இல்ல.

6. "என்னை நபி என்று ஏற்றுக் கொள்ளாதவன் இறைமறுப்பளனாக ஆக மாட்டான்'' என்று திர்யாகுல் குலூப், பக்கம் 432ல் கூறியவன், "என்னை நபி என்று ஏற்றுக் கொள்ளாதவன் முஸ்லிம் அல்ல" என்று ஹகீகதுல் வஹீ பக்கம் 167ல் கூறுகிறான். இப்படி முரண்பட்டுப் பேசியவன் எப்படி நபியாக இருக்க முடியும்? என்று கேட்டதற்கும் பதில் இல்லை.

7. "நான் என்னையே முற்றிலும் இழந்தேன். இப்போது என் இறைவன் எனக்குள் நுழைந்து விட்டான். நானே அல்லாஹ்வாகி விட்டேன். நானே வானத்தைப் படைத்தேன். பின்னர் நட்சத்திரங்களால் அலங்கரித்தேன். பின்னர் நானே களிமண்ணால் மனிதனைப் படைத்தேன்'' என்று ஆயினே கமாலாதே இஸ்லாம் என்ற நூலில் பக்கம் 565ல் கூறியுள்ளானே? தன்னையே இறைவன் என்று கூறிய இவன் ஃபிர்அவ்னா? நபியா என்ற கேள்விக்கும் பதில் இல்லை.

8. சபிப்பதாக இருந்தால் ஆயிரம் சாபம் என்று ஒரு வார்த்தையில் சொன்னால் அவன் சுயநினைவுள்ள மனிதன் எனலாம். இவனுக்கு ஒருவர் மீது கோபம் வந்தபோது அவரைச் சபித்து இவன் எழுதினான். சபிக்கும்போது சாபம் 1, சாபம் 2, சாபம், 3, சாபம் 4 ………….. சாபம் 999, சாபம் 1000 என்று பல பக்கங்களுக்கு எழுதியுள்ளான். பைத்தியக்காரனாக இல்லாத எவனும் இப்படி எழுத மாட்டான். இப்படி நூருல் ஹக் என்ற நூலில் பக்கம் 158ல் இவன் எழுதியுள்ளானே இவன் மனநோயாளியா? நபியா? என்று கேட்டபோதும் எந்தப் பதிலும் இல்லை.

9. "மர்யமும் நானே! ஈஸாவும் நானே!'' என்று கிஷ்தீ நூஹ் என்ற நூலில் பக்கம் 68ல் கூறியுள்ளானே இவன் மனநோயாளியா? நபியா என்று நேருக்குநேர் கேட்டபோதும் காதியானி மதத்தினரால் பதில் சொல்ல முடியவில்லை.

10. "ஈஸா நபியின் அடக்கத்தலம் பாலஸ்தீனில் உள்ளது" என்று நூருல் ஹக், இத்மாமுல் ஹுஜ்ஜா பக்கம் 296ல் எழுதிய இந்தப் பொய்யன், "ஈஸா நபி கப்ரு காஷ்மீரில் உள்ளது" என்று கிஷ்தீ நூஹ் பக்கம் 25(14)ல் எழுதியுள்ளான். இப்படி முரண்பட்டு எழுதியவன் பொய்யனா? நபியா? என்றும் நேருக்குநேர் கேட்டோம். பதில் இல்லை.

11. "மஸீஹ் ஈஸா அவர்கள் வானிலிருந்து இறங்குவார்கள் என்பதை மக்கள் அறிய வேண்டாமா? ஏன் இதை அறியாமல் இருக்கிறார்கள்?" என்று ஆயினே கமாலாதே இஸ்லாம் என்ற நூலில் பக்கம் 409ல் எழுதிய இந்தப் பொய்யன், அதே நூலின் 44ஆம் பக்கத்தில் "ஈஸா நபி இறங்குவார் என்று நம்புவது ஷிர்க் எனும் இணைவைத்தலாகும்" என்று கூறியுள்ளானே இவன் எப்படி நபியாக இருக்க முடியும்?

12. தனக்கு ஆங்கிலத்தில் வஹீ வந்ததாகச் சில வாசகங்களைக் கூறினான்,. ஆனால் அது இலக்கணப் பிழையுடன் இருந்தது. "வஹீ வேகமாக வருவதால் இது போன்ற பிழைகள் வருவது சகஜம்" என்று உளறினான். (நூல் : ஹகீகதுல் வஹீ, பக்கம்: 317) .அல்லாஹ்வே பிழையாகப் பேசுவான் என்று கூறியவன் நபியா?

13. முஹம்மதீ பேகம் என்ற பெண்ணை மணமுடித்துத் தருமாறு அப்பெண்ணின் தந்தை அஹ்மத் பேக் என்பவரிடம் இவன் கேட்டான். அவர் மறுத்து விட்டார். சுல்தான் முஹம்மது என்பவருக்கு மணமுடித்துக் கொடுக்க அவர் முடிவு செய்தார்.

அப்போது மிர்ஸா குலாம் "சுல்தான் முஹம்மத் அவளைத் திருமணம் முடித்தால் முப்பது மாதத்தில் சுல்தான் முஹம்மத் மரணிப்பார். அவர் மரணித்து இத்தா காலம் முடிந்ததும் நான் முஹம்மதீ பேகத்தைத் திருமணம் செய்வேன்; அவ்வாறு செய்யாவிட்டால் அதுவே நான் பொய்யன் என்பதற்குச் சான்று'' என்று இவன் தனது ஆயினே கமாலாத்தே இஸ்லாம் என்ற நூலில் பக்கம் 325ல் எழுதினான். ஆனால் சுல்தான் முஹம்மதுக்கு முன் இவன் மரணித்து தன்னைத் தானே பொய்யன் என்று நிரூபித்தான்.

மேலே சுட்டிக்காட்டியவை யாவும் காதியானிகளின் மாபெரும் தலைவர்கள் முன்னிலையில் அவர்களது நூல்களை அவர்களிடமே எடுத்து வாசித்து நாம் கேட்ட கேள்விகள். அவர்கள் இல்லாத சபையில் கேட்ட கேள்விகள் அல்ல. இவற்றில் எந்த ஒன்றுக்கும் சரியான பதிலைத் தர அவர்களால் முடியவில்லை.

மிர்ஸா குலாம் உளறியவற்றில் சிலவற்றைத்தான் மேலே குறிப்பிட்டுள்ளோம். தனக்கு வந்த இறைச்செய்தி என்று கூறி ஏராளமான கப்ஸாக்களையும், அத்வைதக் கருத்துக்களையும் இவன் கூறியுள்ளான். இந்த உளறல்கள் அடங்கிய பராஹீனே அஹ்மதிய்யா என்ற நூலை காதியானி மதத்தவர்கள், மக்கள் மத்தியில் வைக்காமல் மறைத்து வருகின்றனர்.

மிர்ஸா குலாமின் மதத்தைப் பின்பற்றும் காதியானிகள் எதை இறைச்செய்தி என்று கூறுகின்றார்களோ அதை அனைத்து மக்களுக்கும் சென்றடையும் வகையில் பரவலாக அச்சிட்டு வெளியிடத் தயாரா என்று முஸ்லிம்கள் எழுப்பும் கேள்விக்கு இன்றுவரை அந்த மதத்தினர் பதில் கூறவில்லை. அதைப் பரப்பவுமில்லை. திருட்டுப் பொருளைப் பதுக்கி வைத்திருப்பதைப் போன்று தான் காதியானி மதத்தவர்கள் மிர்ஸா குலாமின் உளறல்களைப் பதுக்கி வைத்திருக்கிறார்கள்.

"இதைச் சிந்திப்பவர் உண்டா?" என்று கேட்டு அகில உலகத்துக்கும் அழைப்பு விடுக்கும் வகையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட திருக்குர்ஆன் அமைந்துள்ளது.

ஆனால் மிர்ஸா குலாமோ, எனக்கும் இறைச்செய்தி வந்தது என்று கூறி, அவற்றை ஒளித்து வைத்துள்ளான். இப்படி ஒளித்து வைப்பதற்கு ஒரு தூதர் தேவையா? தூதரின் பணி தெளிவாக எடுத்துச் சொல்வதா? அல்லது ஒளித்து வைப்பதா? என்பதைச் சிந்தித்தாலே காதியானி மதத்தில் யாரும் இருக்க மாட்டார்கள்.

திருக்குர்ஆன் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளதாலும், அதன் போதனைகள் இறுதிக் காலம் வரை பொருந்துவதாக இருப்பதாலும், அனைத்துப் பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வு அதிலிருந்தே கிடைப்பதாலும், உலக மாந்தர் அனைவரையும் அது சென்றடைந்திருப்பதாலும் குர்ஆனுக்குப் பிறகு இன்னொரு வேதமோ, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பிறகு இன்னொரு தூதரோ வர முடியாது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதி நபி; இறுதித் தூதர். உலகம் முழுமைக்கும் இறுதி நாள் வரை அவர்களே தூதர். அவர்களுக்குப் பின் எந்த நபியும், தூதரும் வரவே முடியாது என்பதற்கு 4:79, 4:170, 6:19, 7:158, 9:33, 10:57, 10:108, 14:52, 21:107, 22:49, 25:1, 33:40, 34:28, 62:3 ஆகிய வசனங்கள் சான்றுகளாகவுள்ளன.

எனக்கும், எனக்கு முன்சென்ற நபிமார்களுக்கும் உதாரணம் இது தான். ஒரு மனிதன் ஒரு வீட்டைக் கட்டினான். அதை அழகுபடுத்தினான். ஒரு மூலையில் ஒரு செங்கல் தவிர மற்ற அனைத்தையும் அழகுற அமைத்தான். மக்கள் அதைச் சுற்றிப்பார்த்து அதில் வியப்படைந்தார்கள். இந்த ஒரு செங்கல்லையும் வைத்திருக்கக் கூடாதா என்றும் அவர்கள் பேசிக்கொண்டனர். அறிந்து கொள்ளுங்கள் நான்தான் அந்த ஒரு செங்கல். நான்தான் நபிமார்களுக்கு முத்திரை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரீ 3535 

இஸ்ரவேலர் சமுதாயத்தை நபிமார்கள் வழிநடத்தி வந்தனர். ஒரு நபி மரணித்ததும் அடுத்த நபி வழிநடத்துவார். எனக்குப் பின் எந்த நபியும் கிடையாது எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரீ 3249, 3455 

இதுபோல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவித்த நூற்றுக்கணக்கான ஹதீஸ்கள் அவர்களுக்குப் பின் எந்த நபியும், ரசூலும் வரமாட்டார் என்பதை தெள்ளத் தெளிவாக கூறுகின்றன.

Leave a Reply