205. அல்லாஹ்வின் பாதையில் ஜகாத்

205. அல்லாஹ்வின் பாதையில் ஜகாத்

காத் நிதியை எட்டு வழிகளில் செலவிட வேண்டும். அதில் ஒரு வகை அல்லாஹ்வின் பாதையில் என்று இவ்வசனத்தில் (9:60) சொல்லப்படுகிறது.


அல்லாஹ்வின் பாதையில் என்ற சொல் எல்லா நல்ல பணிகளையும் குறிக்கும் சொல் என்றாலும் சில சந்தர்ப்பங்களில் சத்தியத்திற்காகக் களத்தில் இறங்கிப் போர் செய்வதை மட்டுமே குறிக்கும்.

இவ்வசனத்தில் இரண்டாவது பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் பாதையில் என்பது எல்லா நல்ல பணிகளிலும் செலவிடுவதைக் குறிப்பதாக இவ்வசனத்துக்குப் பொருள் கொள்ளக் கூடாது.

இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைப் பற்றிக் குறிப்பிடும்போது "அல்லாஹ்வின் பாதையில் போர் செய்பவர்'' என விளக்கியுள்ளனர். (நூல் : அபூதாவூத் 1393)  

இது முதலாவது காரணம்.

'அல்லாஹ்வின் பாதையில்' என்று இவ்வசனத்தில் கூறப்படுவதற்கு எல்லா நற்பணிகளும் என்ற பொருள் இருந்தால், எட்டு வகையினருக்கு ஜகாத் கொடுக்கலாம் எனக் கூறி அவர்களைப் பட்டியலிடத் தேவை இல்லை. "அல்லாஹ்வின் பாதையில்'' என்று ஒரு சொல்லோடு அல்லாஹ் நிறுத்திக் கொண்டிருப்பான். அதற்குள் மற்ற ஏழும் அடக்கமாகி விடும்.

ஏனெனில் மற்ற ஏழுமே முதல் அர்த்தத்தின் படி அல்லாஹ்வின் பாதை தான். எனவே இந்த இடத்தில் போரிடுவோர் என்ற அர்த்தம் தான் கொள்ள வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் போரிடுபவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டதில்லை. எனவே ஜகாத் நிதியிலிருந்து அவர்களுக்கு வழங்குமாறு இஸ்லாம் வழி காட்டுகிறது.

மார்க்கப் பணிகள், நூல்கள் வெளியிடுவது, பள்ளிவாசல் கட்டுவது போன்ற பணிகளுக்கு இந்த நிதியை வழங்கக் கூடாது. பொதுவாக இவை அல்லாஹ்வின் பாதை என்பதில் அடங்கினாலும் இவ்வசனத்தில் (9:60) கூறப்படும் அல்லாஹ்வின் பாதை என்பதில் இப்பணிகள் அடங்காது.

Leave a Reply