21. இவ்வுலகில் இறைவனைக் காண முடியுமா?

21. இவ்வுலகில் இறைவனைக் காண முடியுமா?

வ்வசனங்கள் (2:55, 4:153, 6:103, 7:143, 25:21) அல்லாஹ்வின் தூதர்கள் உள்ளிட்ட எந்த மனிதரும் அல்லாஹ்வைப் பார்த்ததில்லை; பார்க்கவும் முடியாது என்பதைத் திட்டவட்டமாகத் கூறுகின்றன. மறுமையில்தான் இறைவனைக் காணும் பாக்கியம் நல்லோருக்கு மட்டும் கிட்டும்.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூட இறைவனிடம் உரையாடியுள்ளார்களே தவிர அவனைப் பார்த்ததில்லை.

"நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்ததுண்டா?'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டபோது, "அவனோ ஒளிமயமானவன்; நான் எப்படி அவனைப் பார்க்க முடியும்?'' எனக் கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 291  

(அவன் ஒளிமயமானவன் என்றுதான் மூலத்தில் உள்ளது. சில மொழிபெயர்ப்பாளர்கள் அவனைச் சுற்றியிருப்பது ஒளிமயமானது என்று மொழிபெயர்த்துள்ளனர். இது அவர்களின் கற்பனையாகும்.)

இறைவனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்ததில்லை என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரீ 3234, 4855, 7380 

மூஸா நபியாலும் இறைவனை நேரில் பார்க்க முடியவில்லை என்று 7:143 வசனம் கூறுகிறது.

மூஸா (அலை) அவர்களின் சமுதாயத்தவர் இறைவனை நேருக்குநேர் காட்டுமாறு மூஸா நபியிடம் கேட்டபோது அவர்களை அல்லாஹ் இடியோசையினால் தாக்கினான் என்று திருக்குர்ஆனின் 2:55, 4:153 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

அவனைப் பார்வைகள் அடையாது; அவனோ பார்வைகளை அடைகிறான் என்று 6:103 வசனம் கூறுகிறது.  

இவ்வுலகில் யாரும் இறைவனைக் காண முடியாது என்பதை இவ்வசனங்கள் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

அறிவுப்பூர்வமாக நாம் சிந்தித்துப் பார்த்தால் இறைவனை எந்த மனிதனாலும் காண முடியாது என்ற கோட்பாடுதான் மனித குலத்துக்கு நன்மை செய்வதாகும்.

இவ்வுலகில் இறைவனைக் காண முடியும் என்ற நம்பிக்கையினால் மனித குலத்துக்கு நன்மைகள் ஏற்படாது. கேடுகள் தான் ஏற்படும்;

தாம் இறைவனைப் பார்த்ததாக எத்தனையோ ஆன்மிகவாதிகள் மக்களை ஏமாற்றி வருகின்றனர். இறைவனை எவரும் காண முடியாது என்று மக்கள் நம்பினால் ஆன்மிகத்தின் பெயரால் நடக்கும் பெருமளவிலான மோசடிகளை ஒழித்திட முடியும்.

மறுமையில் அல்லாஹ்வைக் காண முடியும் என்பதை அறிய 482, 488 ஆகிய குறிப்புகளைப் பார்க்கவும்.

Leave a Reply