217. பாதுகாக்கப்பட்ட ஃபிர்அவ்னின் உடல்

217. பாதுகாக்கப்பட்ட ஃபிர்அவ்னின் உடல்

ழிக்கப்பட்ட ஃபிர்அவ்னின் உடலை எடுத்துக்காட்டாக ஆக்கி உள்ளோம் என்று இவ்வசனத்தில் (10:92) அல்லாஹ் கூறுகின்றான்.

இவ்வசனத்துக்கு அறிஞர்கள் இருவிதமாக விளக்கம் கொடுக்கின்றனர்.

கடலில் மூழ்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்ட ஃபிர்அவ்னின் உடலை அல்லாஹ் பாதுகாத்து வைத்து இறுதிக் காலத்தில் வெளிப்படுத்துவான் என்பது சில அறிஞர்களின் விளக்கமாகும்.


பாதுகாக்கப்பட்ட ஃபிர்அவ்னின் உடல், பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்படும் என்று திருக்குர்ஆன் கூறுவதை மெய்ப்பிக்கும் வகையில் அவனது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

பண்டைய எகிப்தியர்கள் இறந்தவர்களின் உடலைப் பாதுகாப்பதற்காக உரிய ரசாயனங்களைப் பயன்படுத்தி ஒரு பெட்டியில் உடலை வைத்து மூடுவார்கள். இவ்வாறு பாதுகாக்கப்படும் உடல் 'மம்மி' எனப்படுகிறது. பிறகு அதன் மேல் பிரமிட் எனும் கோபுரத்தை அமைப்பார்கள்.

1898ஆம் ஆண்டு லாரட் என்பவரால் ஒரு பள்ளத்தாக்கில் மம்மி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது எகிப்தின் தலைநகரான கெய்ரோவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பிறகு 1907ஆம் ஆண்டு இதை முழுமையாக ஆய்வு செய்வதற்காக எலியட் ஸ்மித் என்பவரிடம் எகிப்து அரசு ஒப்படைத்தது. அவர் விரிவான ஆய்வு செய்து அது ஃபிர்அவ்னின் உடல் தான் என்பதை உறுதிப்படுத்தினார்.

கடலில் மூழ்கடித்துக் கொல்லப்பட்ட ஃபிர்அவ்னின் உடல் கரையில் ஒதுங்கி, அன்றைய மக்கள் அதை எடுத்து 'மம்மி'யாக்கி மன்னர்களை அடக்கம் செய்யும் ஒரு பள்ளத்தாக்கில் புதைத்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

திருக்குர்ஆன் அருளப்பட்டு பல நூற்றாண்டுகள் கழிந்த பின் ஃபிர்அவ்னின் உடல் கண்டெடுத்து மீட்கப்பட்டது, திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை என்பதை நிரூபிக்கும் சான்றாகும் எனவும் இவர்கள் கூறுகின்றனர்.

ஒரு உடல் கண்டுபிடிக்கப்பட்டு அது ஃபிர்அவ்னின் உடலாக இருக்கக் கூடும் என்று ஆய்வாளர்கள் சொல்லி உள்ளதால் இந்தக் கருத்தையே இன்றைய காலத்தில் அதிகமான முஸ்லிம்கள் கொண்டுள்ளனர்.

ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டதைக் காரணமாகக் கொண்டு ஒரு கருத்துக்கு வருவதில் தவறில்லை. ஆனால் திருக்குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ள வாசகம் அந்தக் கருத்துக்கு இடம் தரும் வகையில் இருக்க வேண்டும். ஆனால் அப்படி இல்லை என்பதே உண்மையாகும்.

இவ்வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வாசகம் என்ன?

உனக்குப் பின்னால் இருப்பவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் பொருட்டு இன்றைய தினம் உன்னை உன் உடலுடன் நாம் காப்பாற்றுவோம் என்று தான் இவ்வசனத்தில் நேரடியாகச் சொல்லப்பட்டுள்ளது. உன்னை உன் உடலுடன் நாம் காப்பாற்றுவோம் என்ற சொல் உயிரற்ற உடலைப் பாதுகாப்போம் என்ற பொருளைத் தராது.

என்றைக்கு ஃபிர்அவ்ன் மூழ்கடிக்கப்பட்டானோ அன்றே அவன் காப்பாற்றப்பட்டதாகத்தான் இவ்வசனம் கூறுகிறது. இன்று உன்னை உன் உடலுடன் காப்பாற்றுவோம் என்ற வாசகத்தில் இருந்து இதை அறியலாம்.

வெறும் உடலைப் பாதுகாப்போம் என்றால் உன் உடலைப் பாதுகாப்போம் என்று தான் இறைவன் கூறியிருப்பான். உன்னை உன் உடலுடன் காப்பாற்றுவோம் என்று சொல்லி இருக்க மாட்டான்.

உன்னை உன் உடலுடன் காப்பாற்றுவோம் என்று சொல்லப்பட்டுள்ளதால் மற்றவர்கள் கடலில் மூழ்கிச் செத்தது போல் இவன் சாகவில்லை. மாறாக உடலுடனும், உயிருடனும் அவன் கரை ஒதுங்கி இருக்க வேண்டும் என்ற கருத்தைத்தான் இந்த வாசகத்தில் இருந்து பெற முடியும்.

உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு அத்தாட்சியாக இருக்கும் பொருட்டு உன்னை உன் உடலுடன் காப்பாற்றுவோம் என்றும் இவ்வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

அவனது உடலை மட்டும் பாதுகாத்து பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னால் வெளிப்படுத்துவதால் அதில் பெரிய பாடமும், படிப்பினையும் இருக்காது. அது அவனது உடல்தானா என்பதே ஊகத்தின் அடிப்படையிலானது என்று மறுப்புச் சொல்ல அதிக வாய்ப்பு உண்டு.

மேலும் ரசாயனப் பூச்சுக்கள் மூலம் பிர்அவ்னின் உடல் மட்டுமின்றி இன்னும் பல உடல்கள் பாதுகாக்கப்பட்டு வருவதால் இதில் பெரிய பாடம் ஒன்றும் இல்லை என்று கூறப்படவும் வாய்ப்பு உள்ளது.

மேலும் பாதுகாக்கப்படுவதாகச் சொல்லப்படும் உடல், உடலாக இல்லை. கருவாடாகத்தான் உள்ளது என்பதும் கவனிக்கத்தக்கதாகும்.

பிர்அவ்னும், அவனுடைய கூட்டத்தினரும் மூழ்கடிக்கப்பட்ட உடன் பிர்அவ்ன் மட்டும் உயிருடன் கரையில் உயிருக்குப் போராடும் நிலையில் ஒதுக்கப்பட்டிருக்கலாம். படைபலமும், அதிகாரமும் இல்லாதவனாக அவன் கரைக்கு ஒதுங்கியதால் பொதுமக்களுக்கு அவன் பாடமாக ஆகி மரணித்திருக்கலாம் என்பது தான் இவ்வசனத்தில் பயனபடுத்தப்பட்டுள்ள வாசகங்களுக்கு ஏற்ப அமைந்துள்ளது.

உன்னை உன் உடலுடன் இன்று காப்பாற்றுவோம் என்ற நேரடியான வார்த்தைகளுக்கு இந்த விளக்கமே நெருக்கமாக உள்ளது.

இவ்வாறு விளங்கும்போது கண்டெடுக்கப்பட்ட உடலை ஃபிர்அவ்னின் உடல் என்று சொல்ல வேண்டிய நிலை வராது. அது ஃபிர்அவ்னின் உடலாகவே இருந்தாலும் அது திருக்குர்ஆன் சொன்ன முன்னறிவிப்பு என்று ஆகாது.

Leave a Reply