226. ஐவேளைத் தொழுகைக்கு திருக்குர்ஆனில் ஆதாரம் உண்டா?

226. ஐவேளைத் தொழுகைக்கு திருக்குர்ஆனில் ஆதாரம் உண்டா?

ஸ்லாத்தில் ஐந்து வேளைத் தொழுகை கடமை என்பதை எல்லா முஸ்லிம்களும் அறிந்து வைத்துள்ளோம்.

ஐந்து வேளைத் தொழுகைகள் உள்ளன என்று திருக்குர்ஆனில் நேரடியாகச் சொல்லப்படவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களில் தான் ஐவேளைத் தொழுகைகள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

ஆனால் நேரடியாக ஐவேளைத் தொழுகைகள் உள்ளதாக திருக்குர்ஆனில் கூறப்படாவிட்டாலும் மறைமுகமாக இது கூறப்பட்டுள்ளது. அத்தகைய வசனங்களில் இதுவும் (11:114) ஒன்றாகும்.


பகலின் இரு ஓரங்களிலும், இரவின் பகுதிகளிலும் தொழுகையை நிலைநாட்டுவீராக என்று இவ்வசனத்தில் கூறப்படுகிறது. இரவின் பகுதிகள் என்று பன்மையாக இங்கே கூறப்பட்டுள்ளது.

அரபு மொழியில் பன்மை என்பது குறைந்தது மூன்றாகும். இரண்டைக் குறிக்க இருமை எனத் தனிச்சொல் அமைப்பு உள்ளது. எனவே இரவில் மட்டும் குறைந்தது மூன்று தொழுகைகள் இருந்தால் தான் "இரவின் பகுதிகளிலும்'' என்று கூற முடியும்.

மக்ரிப், இஷா, சுபுஹ் ஆகிய மூன்று தொழுகைகளை இது குறிக்கின்றது. பகலின் இரு ஓரங்கள் என்பது இரண்டு தொழுகைகளைக் குறிக்கிறது. லுஹர், அஸர் என்ற இரண்டு தொழுகைகளே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

ஐந்து வேளைத் தொழுகை உண்டு என்று திருக்குர்ஆன் மறைமுகமாகக் கூறுவதைத்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளனர். தினமும் மூன்று வேளைத் தொழுகை தான் என்று கூறுவோர் குர்ஆனுக்கும், நபிமொழிக்கும் முரண்படுகின்றனர்.

(ஐந்து வேளைத் தொழுகைக்கான ஆதாரங்களை மேலும் அறிந்திட 71 வது குறிப்பைக் காண்க!)

Leave a Reply