230. ஷைத்தான் யாரை மறக்கச் செய்தான்?

230. ஷைத்தான் யாரை மறக்கச் செய்தான்?

வ்வசனத்துக்கு (12:42) மற்ற மொழிபெயர்ப்பாளர்கள் செய்துள்ள மொழிபெயர்ப்புக்கு மாற்றமாக நாம் மொழி பெயர்த்துள்ளோம்.


நமது மொழிபெயர்ப்பு இதுதான்:

அவ்விருவரில் யார் விடுதலையாவார் என்று நினைத்தாரோ அவரிடம் "என்னைப் பற்றி உமது எஜமானனிடம் கூறு!'' என்று யூஸுஃப் கூறினார். அவர் தமது எஜமானனிடம் கூறுவதை ஷைத்தான் மறக்கச் செய்து விட்டான். எனவே அவர் (யூஸுஃப்) சிறையில் பல வருடங்கள் தங்கினார்.

சக கைதியாக இருந்தவரை ஷைத்தான் மறக்கச் செய்தான் என்று கருத்தைத் தரும் வகையில் மேற்கண்டவாறு இவ்வசனத்திற்கு (12:42) நாம் மொழிபெயர்த்துள்ளோம்.

சிலர், ஷைத்தான் இறை நினைவை அவருக்கு – யூஸுஃபுக்கு – மறக்கச் செய்தான் என்று மொழிபெயர்த்துள்ளனர்.

சிறையிலிருந்த யூஸுஃப் நபி, தமது இறைவனிடம் உதவி தேடாமல் சக கைதியிடம், "உன் எஜமானிடம் என்னைப் பற்றிக் கூறு'' என்று உதவி தேடினார். இவ்வாறு உதவி தேடியது இறைவனை மறந்த செயல் என்பதால் மேற்கண்டவாறு பொருள் கொள்ள வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர். இது தவறாகும்.

ஏனெனில், இவ்வுலகில் மனிதர்களிடம் உதவி தேடவேண்டிய விஷயங்களில் மனிதர்களிடம் உதவி தேடுவது இறைவனை மறப்பதில் சேராது. "என்னைப் பற்றி உன் எஜமானிடம் கூறு!'' என்பன போன்ற சொற்கள் ஈமானை (இறை நம்பிக்கையை) எந்த வகையிலும் பாதிக்காது.

“நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்”  

என்று கூறி இதை 5:2 வசனம் அனுமதிக்கிறது.

யூஸுஃப் நபி இவ்வாறு கூறியது தவறு என்றால் நாமும் இவ்வுலகில் எவரிடமும் உதவி தேடவே கூடாது என்று கூற வேண்டும். எனவே இக்கருத்து அறியாமையால் விளைந்ததாகும்.

இவ்வசனத்தில் "திக்ர ரப்பிஹி" என்ற சொற்றொடர் இடம் பெற்றுள்ளது. ரப்பு என்ற சொல் இறைவனையும் குறிக்கும். மனிதர்களிலுள்ள தலைவர்கள், எஜமானர்கள் போன்றோருக்கும் பயன்படுத்தப்படும்.

அதுபோல் மற்றொரு சொல்லான திக்ர் என்பது, நினைவு கூர்வதையும், வாயால் சொல்வதையும் குறிக்கும்.

"திக்ர ரப்பிஹி" என்பதற்கு "தனது இறைவனை நினைவு கூர்தல்" என்றும் "தமது எஜமானனிடம் கூறுதல்" என்றும் இரு விதமாகப் பொருள் கொள்ள இலக்கணத்தில் இடம் உள்ளது.

எனவே இந்த வசனத்திற்கு, "தனது இறைவனை நினைவு கூர்வதை விட்டும் ஷைத்தான் அவரை (யூஸுபை) மறக்கடிக்கச் செய்தான்'' எனவும் அரபு இலக்கணப்படி பொருள் கொள்ளலாம்.

அல்லது "தனது எஜமானரிடம் கூறுவதை விட்டும் ஷைத்தான் அவரை (சக கைதியை) மறக்கச் செய்தான்'' எனவும் அரபு இலக்கணப்படி பொருள் கொள்ளலாம்.

இரண்டு விதமாகப் பொருள் கொள்வதற்கு இடமிருந்தாலும், முதல் விதமாகப் பொருள் கொண்டால், ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள் என்ற திருக்குர்ஆன் வசனத்தை மறுப்பதாக அமைந்து விடும். எனவே, இரண்டாவது வகையான பொருளைத்தான் நாம் கொள்ள வேண்டும்.

Leave a Reply