281. முஹம்மது நபி உலகத் தூதர்

பிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தூதராக நியமிக்கப்பட்டது குறித்து திருக்குர்ஆன் பேசும்போது அவர்களின் பிரச்சார எல்லை குறித்தும், அவர்கள் யாருக்கு தூதராக அனுப்பப்பட்டார்கள் என்பது குறித்தும் பலவாறாகக் குறிப்பிடுகிறது.

அவை ஒன்றுக்கொன்று முரணாக அமைந்துள்ளதாகக் கருதக் கூடாது. அவர்கள் பிரச்சாரப் பணியின் எல்லை சிறிது சிறிதாக விரிவாக்கப்பட்டது என்பதால் தான் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


முதன் முதலில் அவர்களுக்கு அருளப்பட்ட 96:1 வசனத்தில்

“நீர் ஓதுவீராக”  

என்று அவர்களை அல்லாஹ் ஓதச் சொல்கிறான்; புரிந்து கொள்ளச் சொல்கிறான்.


முதல் வஹீ வந்தபோது நீ ஓத வேண்டும். நீ புரிந்து கொள்ள வேண்டும் என்று மட்டுமே அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டது. பிரச்சாரம் செய்யுமாறு இந்த நேரத்தில் கட்டளையிடப்படவில்லை.

பிறகு, 26:214 வசனத்தில்

“நெருங்கிய உறவினரை எச்சரிப்பீராக”  

 எனக் கூறி, உறவினர்கள் அளவுக்கு அவர்களது தூதுப்பணியை அல்லாஹ் விரிவுபடுத்தினான்.

இதன் பிறகு 6:92, 42:7 வசனங்களில் "உம்முல் குரா – நகரங்களின் தாய்" என்றழைக்கப்படும் மக்காவாசிகளையும், அதைச் சுற்றி இருப்பவர்களையும் எச்சரிக்க வேண்டும் என்று கூறி அவர்களது தூதுப்பணியை அல்லாஹ் மேலும் விரிவுபடுத்தினான்.

அப்போது அவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்த பொறுப்பு மக்காவில் வாழ்பவர்களையும், மக்காவைச் சுற்றியுள்ள பகுதியில் வாழ்பவர்களையும் எச்சரிப்பது மட்டும் தான்.

பிறகு 7:158, 21:107, 34:28 ஆகிய வசனங்களில் அன்றைக்கு வாழ்ந்த உலக மக்கள் அனைவருக்கும் அவர்களைத் தூதராக ஆக்கி பிரச்சார எல்லையை இன்னும் அல்லாஹ் விரிவுபடுத்தியது கூறப்படுகிறது.

இறுதியாக 62:2,3 வசனங்களில் அவர்கள் காலத்தில் வாழ்ந்த மனிதர்களுக்கு மட்டுமின்றி இனிவரும் மக்களுக்காகவும் அவர்களின் தூதுப்பணியை இறைவன் விரிவுபடுத்தியது கூறப்படுகிறது.

அவர்களின் பிரச்சாரப் பணியின் எல்லை சிறிது சிறிதாக விரிவுபடுத்தப்பட்டுள்ளதை இவ்வசனங்கள் கூறுவதால் இவ்வசனங்களுக்கு மத்தியில் எந்த முரண்பாடும் இல்லை.

Leave a Reply