324. ஸலவாத் என்றால் என்ன?

324. ஸலவாத் என்றால் என்ன?

வ்வசனத்தை (33:56) சிலர் தவறாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். "அல்லாஹ்வும், வானவர்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஸலவாத் கூறுகிறார்கள். எனவே நீங்களும் ஸலவாத் கூறுங்கள்'' என்று சில மார்க்க அறிஞர்கள் இவ்வசனத்தை மொழி பெயர்க்கிறார்கள்.

இவ்வசனத்தில் இடம் பெற்றுள்ள ஸலவாத் என்ற சொல் இரண்டு பொருள் கொண்டதாகும்.

ஒன்று, அருள் புரிதல்.

மற்றொன்று, அருளை வேண்டுதல்.

இவ்வசனத்தில் அல்லாஹ், வானவர்கள், மனிதர்கள் ஆகிய மூவருடன் இச்சொல் தொடர்புபடுத்தப்படுகிறது. மூன்றுக்கும் ஒரே விதமான பொருளை வழங்கக் கூடாது.

அருள் புரிகிறான் என்று பொருள் கொண்டால், அல்லாஹ்வும் அருள் புரிகிறான்; வானவர்களும் அருள் புரிகிறார்கள்; நீங்களும் முஹம்மதுக்கு அருள் புரியுங்கள் என்ற விபரீதமான கருத்து வந்து விடும். ஏனென்றால் வானவர்களும், மனிதர்களும் அருள் புரிய முடியாது.

அருளை வேண்டுங்கள் என்று பொருள் கொண்டால் மனிதர்களுக்கும், வானவர்களுக்கும் மட்டுமே இப்பொருள் பொருந்தும். அல்லாஹ்வுக்குப் பொருந்தாது. ஏனென்றால் அல்லாஹ் நபிகள் நாயகத்திற்காக அருளை வேண்டுவதாகப் பொருள் இருந்தால் இன்னொரு அல்லாஹ் இருப்பதாகவும், அவனிடம் அல்லாஹ் வேண்டுவதாகவும் இஸ்லாத்தின் அடிப்படைக்கே எதிரான கருத்து வந்து விடும்.

எனவே அல்லாஹ் ஸலவாத் சொல்கிறான் என்பது போன்ற சொற்களைப் பயன்படுத்தாமல் முஸ்லிம்கள் தவிர்க்க வேண்டும்.

இவ்வசனத்திற்குச் சரியான பொருள் கொள்ள வேண்டுமென்றால் அல்லாஹ்வுடன் ஸலவாத் என்ற சொல்லை இணைக்கும்போது அருள் புரிகிறான் என்ற பொருளும், அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுடன் இச்சொல்லை இணைக்கும்போது அருள் வேண்டுகிறார்கள் என்ற பொருளும் கொள்ள வேண்டும்.

இதனடிப்படையில் "நபிகளுக்கு அல்லாஹ் அருள்புரிகிறான்; வானவர்கள் அருளை வேண்டுகிறார்கள்; நீங்கள் அவருக்காக அருளை வேண்டுங்கள்'' என்பது தான் இவ்வசனத்திற்குரிய சரியான பொருளாகும்.

இப்படித்தான் பொருள் செய்ய வேண்டும் என்பதற்கு இதே அத்தியாயத்தில் இதே போல் அமைந்துள்ள 43வது வசனம் சான்றாக அமைந்துள்ளது.

33:56 வசனத்திற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது அல்லாஹ் ஸலவாத் கூறுகிறான் என்று பொருள் கொள்வார்களானால் 33:43 வசனத்திற்கும் அவ்வாறுதான் பொருள் கொள்ள வேண்டும். அதிலும் ஸலவாத் என்ற சொல்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

33:43 வசனத்தில் "உங்கள் மீது அல்லாஹ் ஸலவாத் கூறுகிறான்'' என்று பொருள் செய்யாமல் அருள் புரிகிறான் என்று பொருள் கொள்கிறார்கள்.

அல்லாஹ் ஸலவாத் கூறுகிறான் என்று கூறுவது தவறு என இவர்களின் மனசாட்சிக்குத் தெரிவதால் தான் 33:43 வசனத்திற்கு மட்டும் சரியாகப் பொருள் கொள்கிறார்கள்.

இதே அடிப்படையில் 33:56 வசனத்திற்கும் மொழி பெயர்ப்பதே சரியாகும்.

Leave a Reply