370. நரகின் எரிபொருட்கள்

370. நரகின் எரிபொருட்கள்

ல்லாஹ்வையன்றி யாரை, அல்லது எதை வணங்கினார்களோ அவர்கள் நரகின் எரிபொருட்களாவர் என்று இவ்வசனத்தில் (21:98) கூறப்பட்டுள்ளது.

அல்லாஹ்வைத் தவிர எதை வணங்கினாலும், எவரை வணங்கினாலும் அவர்களும் நரகில் போடப்படுவார்கள் என்று இவ்வசனம் கூறுகிறது.

வணங்கியவர்கள் நரகில் போடப்படுவதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. வணங்கப்பட்டவர்கள் நரகில் போடப்படுவார்கள் என்பதில் சில சந்தேகங்கள் எழலாம்.

வணங்கப்பட்டவர்கள் மூன்று வகையில் இருப்பார்கள்.

நல்லடியார்களாக வாழ்ந்து மறைந்தவர்களை மக்கள் கடவுளாக ஆக்கி இருப்பார்கள். இதில் நல்லடியார்களுக்கு உடன்பாடு இருக்காது. அவர்களுக்கு அது தெரியவும் வாய்ப்பில்லை. மற்றவர்கள் கடவுளாகக் கருதி வணங்கியதால் இவர்களும் நரகில் போடப்படுவார்கள் என்ற கருத்து இதில் இருந்து கிடைக்கிறது.

இவ்வசனத்தில் இந்தக் கருத்து அடங்கி இருந்தாலும் இந்தச் சந்தேகத்தை 21:101 வசனம் நீக்கிவிடுகிறது.

யார் நல்லவர்கள் என்று என்னால் தீர்ப்பு அளிக்கப்பட்டு விட்டதோ அவர்கள் நரகை விட்டு தூரமாக்கப்படுவார்கள் எனக் கூறி அந்தச் சந்தேகத்தை அல்லாஹ் நீக்குகிறான்.

நபிமார்கள் போன்ற நல்லோர்கள் வணங்கப்பட்டாலும் வணங்கியோர் தான் நரகை அடைவார்களே தவிர நபிமார்களும், நல்லவர்களும் நரகை அடைய மாட்டார்கள் என்பதை இவ்வசனத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.

தன்னைக் கடவுள் என்று சித்தரித்து மக்களை ஏமாற்றியவர்களும் மக்களால் வணங்கப்பட்டனர். இவர்கள் நரகில் போடப்படுவதற்கு தகுதியானவர்கள் என்பது எளிதாகப் புரிந்து கொள்ளக் கூடியதுதான்.

இது அல்லாமல் கற்பனைப் பாத்திரங்களும், பகுத்தறிவு இல்லாத உயிரினங்களும், உயிரற்றவைகளும் வணங்கப்பட்டுள்ளன. இவற்றை ஏன் நரகில் போட வேண்டும்? கல்லும், மண்ணும் நரக வேதனையை உணருமா என்பன போன்ற சந்தேகங்கள் இதில் எழும். இவை வேதனையை உணராவிட்டாலும் இவற்றை வணங்கியவர்களுக்கு மனரீதியாக இது கூடுதல் துன்பத்தைத் தரும். நாம் யாரைக் கடவுள் என்று நினைத்து வழிபட்டோமோ அவர்களே நரகில் கிடக்கிறார்களே என்று நொந்து போவார்கள். இதுதான் இத்தண்டனைக்குக் காரணம்.

Leave a Reply