410. வறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு

410. வறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு

க்கா நகரம் அன்றைய அரபுகளின் மிகப் பெரிய புண்ணியத் தலமாக இருந்தது. பாலைவனமாக இருந்ததால் இந்த ஆலயத்திற்கு வரும் பயணிகள் மூலமாகவே உள்ளூர்வாசிகள் வருவாய் ஈட்டி வந்தனர். அதிக அளவில் பயணிகள் வந்தால்தான் அதிக வருவாய் கிடைக்கும் என்று எண்ணி எல்லா விதமான தீமைகளையும் அங்கு அனுமதித்தனர்.

இந்தச் சந்தர்ப்பத்தில் தான், 'அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர்கள் இந்த ஆலயத்திற்கு வரக் கூடாது' என்று இவ்வசனத்தின் (9:28) மூலம் இறைவன் தடை செய்தான்.

இந்தத் தடையினால் பயணிகளின் கூட்டம் குறைந்து அதனால் தங்கள் வருவாய் பாதிக்கும் என்று மக்காவாசிகள் அஞ்சினார்கள். இவர்களது அச்சத்தைப் போக்கும் விதமாகவே இவ்வசனத்தில் 'நீங்கள் வறுமையை அஞ்ச வேண்டாம்; நான் உங்களைச் செல்வந்தர்களாக்குவேன்' என்று இறைவன் புறத்திலிருந்து உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இணை கற்பிப்போர் கஅபாவுக்கு வரக் கூடாது என்ற கட்டளைக்குப் பின்னர், இறைவன் வாக்களித்தது போல் மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை ஏற்றனர். முன்பிருந்ததை விடப் பன்மடங்கு அதிகமாகப் பயணிகள் கஅபாவுக்கு வரலாயினர். இதனால் மக்காவாசிகளின் செல்வநிலையும் உயர்ந்து இந்த முன்னறிவிப்பு நிறைவேறியது. அந்த நிலை இன்றும் நீடிக்கிறது.

இந்த வசனம் மக்காவாசிகளுக்கு மட்டுமின்றி அனைத்து இறை நம்பிக்கையாளர்களுக்கும் தேவையான ஓர் அறிவுரையைக் கூறுகின்றது.

தவறான முறையில் வருமானம் கிடைக்கிறது என்பதற்காக மார்க்கத்தின் பெயரால் நடைபெறும் தீமைகளில் முஸ்லிம்களில் சிலர் சமரசம் செய்து கொள்வதைப் பார்க்கிறோம். ஏகத்துவக் கொள்கையை நாம் பிரச்சாரம் செய்யும்போது, அது சரியான கொள்கை என்று தெரிந்தால் கூட, வருமானம் பாதிக்கும் என்பதற்காகத் தங்கள் தீமைகளிலிருந்து இவர்கள் விலகுவதில்லை.

இப்படிப்பட்டவர்கள் இறைவனுக்குப் பயந்து இந்தத் தீமைகளிலிருந்து விலகிக் கொண்டால் அல்லாஹ் வேறு வழிகளில் அவர்களது செல்வத்தைப் பெருக்குவான் என்ற படிப்பினையும் இந்த வசனத்தில் இருக்கின்றது.

அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான் என்ற வசனமும் (65:2) இதை உறுதிப்படுத்துகின்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன