42. தடை செய்யப்பட்ட உணவுகள்

42. தடை செய்யப்பட்ட உணவுகள்

நான்கு உணவுகள் தடை செய்யப்பட்டுள்ளதாக இவ்வசனங்களில் (2:173, 5:3, 5:96, 6:119, 6:145, 16:115) கூறப்பட்டுள்ளது.

தாமாகச் செத்த பிராணிகள், இரத்தம், பன்றி ஆகிய மூன்று பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன என்பது எளிதாக நமக்கு விளங்குகிறது.


அல்லாஹ் அல்லாதோருக்காக சப்தமிடப்பட்டவை என்பதன் கருத்து சிந்தித்து விளங்கும் வகையில் உள்ளது.

அன்றைய அரபுகள் தங்கள் சிலைகளுக்காகப் பொருட்களைப் படைக்கும்போதும், அறுக்கும்போதும் அந்தச் சிலைகளின் பெயரைச் சப்தமிட்டுச் சொல்வார்கள். இதன் காரணமாகவே சப்தமிடப்பட்டவை என்று இவ்வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது.

அல்லாஹ் அல்லாதவருக்காக அறுக்கப்படும் பிராணிகளையும் இது எடுத்துக் கொள்ளும்.

அல்லாஹ் அல்லாதவர்களுக்காக படையல் செய்யும் பொருட்களையும் இது எடுத்துக் கொள்ளும்.

5:3 வசனத்தில் அல்லாஹ் அல்லாதவருக்காக சப்தமிடப்பட்டவை என்று மட்டும் கூறாமல் சிலைகளுக்காக அறுக்கப்பட்டவை என்பதையும் சேர்த்துக் கூறுகிறான். அறுக்கப்பட்டவை என்பது உயிரினங்களைக் குறிக்கும் என்பதால் சப்தமிடப்பட்டவை என்பது உயிரற்ற பொருட்களை அல்லாஹ் அல்லாதவருக்குப் படையல் செய்வதையே குறிக்கும்.

எனவே அல்லாஹ் அல்லாதவருக்காகப் படையல், அபிஷேகம் செய்யப்படும் பொருட்களையும், அல்லாஹ் அல்லாதவருக்காக அறுக்கப்பட்ட பிராணிகளையும் உண்ணக் கூடாது என்பதை 5:3 வசனத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

அல்லாஹ் அல்லாதவருக்காக உடைக்கப்படும் தேங்காய்கள், அல்லாஹ் அல்லாதவருக்குக் காட்டப்படும் ஆராதனைப் பொருட்கள், கடவுள் சிலைகள் மீது ஊற்றப்படும் அபிஷேகப் பொருட்கள், தர்காக்களில் அடக்கம் செய்யப்பட்டவர்களுக்காக நேர்ச்சை செய்யப்பட்டவை, அவர்களுக்காக ஃபாத்திஹா ஓதி புனிதமாகக் கருதப்படும் பொருட்கள் ஆகிய அனைத்தும் அல்லாஹ் அல்லாதோருக்காக சப்தமிடப்பட்டவை என்பதில் அடங்கும். இவை அனைத்தும் ஹராமாகும்.

இவ்வசனங்களில் கூறப்படும் நான்கு வகையான உணவுகளைத் தவிர வேறு எதுவும் தடை செய்யப்பட்டவை அல்ல என்ற கருத்தை இவ்வசனங்கள் தருகின்றன.

இவற்றைத் தவிர நாய், நரி, கழுதை போன்றவற்றை உண்ணலாமா? என்று சிலருக்குச் சந்தேகம் ஏற்படலாம்.

இந்த நான்கைத் தவிர இன்னும் பல உணவுகளும் மார்க்கத்தில் தடைசெய்யப்பட்டு உள்ளன. அப்படி இருக்கும்போது நான்கை மட்டும் ஏன் அல்லாஹ் கூற வேண்டும்? இதை நாம் விளக்கமாக அறிந்து கொள்ள வேண்டும்.

இஸ்லாமியச் சட்டங்கள் படிப்படியாகத்தான் மக்களுக்கு அருளப்பட்டன. ஒரு காலத்தில் எந்த உணவும் அல்லாஹ்வால் தடுக்கப்படாத நிலை இருந்தது. பின்னர் மேற்கண்ட நான்கு வகையான உணவுகள் மட்டும் தடுக்கப்பட்டன. இந்தக் காலகட்டத்தில் வேறு எதுவும் தடுக்கப்பட்டிருக்கவில்லை.

இதன் பின்னர் தூய்மையானவை அனைத்தும் அனுமதிக்கப்பட்டன; தூய்மையற்றவை அனைத்தும் தடை செய்யப்பட்டன. தூய்மையற்றவை யாவை? என்பதை விளக்கும் அதிகாரம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்டது. திருக்குர்ஆன் 7:157, 9:29 வசனங்களில் இதைக் காணலாம்.

எனவே இந்த நான்கைத் தவிர எவற்றை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்களோ அவையும் தடை செய்யப்பட்டவையாகும்.

திருக்குர்ஆனில் தடை செய்யப்பட்ட இவற்றுடன் வேறு சில உயிரினங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளனர். அந்தத் தடையும் இறைவன் புறத்திலிருந்து வந்த தடைதான். அதையும் நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

கடல்வாழ் உயிரினங்கள்

கடல்வாழ் உயிரினங்களில் தடை செய்யப்பட்டவை ஒன்று கூட இல்லை. கடல்வாழ் உயிரினங்கள் அனைத்துமே ஹலால் தான்.

நண்டு, சுறா, திமிங்கலம் ஆகியவற்றை உண்ணக் கூடாது என்று சில மார்க்க அறிஞர்கள் கூறுவதை ஏற்கத் தேவையில்லை. ஏனெனில் இவ்வாறு கூறுவதற்கு திருக்குர்ஆனிலும், ஹதீஸிலும் எந்தச் சான்றும் இல்லை. அவர்களாகவே கற்பனை செய்து தான் கூறியுள்ளார்கள்.

கடலில் வேட்டையாடுவதும், அதன் உணவும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன என்று 5:96 வசனம் கூறுகிறது.  

பசுமையான மாமிசத்தை நீங்கள் புசிப்பதற்காக அவன் தான் கடலை உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான் என்று 16:14 வசனம் கூறுகிறது.  

கடல் நீரில் செத்தவைகளும் கூட ஹலால் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

(நூற்கள்: திர்மிதீ 64, அபூதாவூத் 76, இப்னுமாஜா 380, நஸாயீ 59, 330, 4275 அஹ்மத் 6935, 8380, 8557, 8737, 14481, 22017 முஅத்தா)   

கடல்வாழ் உயிரினங்களில் ஏதேனும் உண்ணத் தடை செய்யப்பட்டிருந்தால் அதை அல்லாஹ்வும், அவனது தூதரும் தான் கூற வேண்டும். வேறு எவருக்கும் தடை செய்யும் அதிகாரம் கிடையாது. அல்லாஹ்வும், அவனது தூதரும் கடல்வாழ் உயிரினங்களில் எந்த ஒன்றையும் உண்ணத் தகாதது என அறிவிக்கவில்லை.

ஆனால் மனிதனுக்குக் கேடு விளைவிக்கும் அனைத்தும் மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளன. கடல்வாழ் உயிரினங்களில் மனிதனுக்குக் கேடு விளைவிப்பவை இருந்தால் அவை மார்க்கத்தில் தடுக்கப்பட்டவை என்பதில் சந்தேகம் இல்லை.

பறவையினம்

பறவையினத்தின் பெயர்களைப் பட்டியல் போட்டு இவை ஹலால், இவை ஹராம் என்று திருக்குர்ஆனிலும், ஹதீஸிலும் கூறப்படவில்லை. ஆயினும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பறவையினத்தில் எவை ஹராம் என்பதற்குப் பொதுவான அடிப்படையைக் கூறியுள்ளனர்.

'மிக்லப்' உடைய ஒவ்வொரு பறவையையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உண்பதற்குத் தடை செய்தார்கள்.

நூல் : முஸ்லிம் 3914 

'மிக்லப்' என்ற சொல்லுக்கு நகம் என்று சிலர் பொருள் கொள்கின்றனர். எந்தப் பறவையாக இருந்தாலும் அதற்கு நகம் இருக்கும். அப்படியானால் ஒரு பறவையைக் கூட நாம் சாப்பிடக் கூடாது என்று கூறும் நிலை ஏற்படும்.

பாய்ந்து பிடித்து வேட்டையாடுவதற்குரிய நகங்கள் என்பது தான் இதன் சரியான பொருளாகும். வேட்டையாடுவதற்குப் பயன்படும் நகங்கள் எந்தப் பறவைகளுக்கு உள்ளனவோ அவை உண்ணத் தடை செய்யப்பட்டவையாகும்.

கழுகு, பருந்து, வல்லூறு போன்ற பறவைகள் ஏனைய உயிரினங்களைத் தமது நகங்களால் வேட்டையாடுகின்றன. இவை போன்ற பறவையினங்களை நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். கோழி போன்ற பறவையினங்களுக்கு கூரிய நகங்கள் இருந்தாலும் அவை செத்தவற்றை உண்ணும்போது தான் துணைக்கு நகங்களைப் பயன்படுத்துகின்றன. உயிரினத்தை (புழு பூச்சிகளை) வேட்டையாட தமது வாயையே பயன்படுத்துகின்றன.

எனவே ஏனைய உயிரினங்களை வேட்டையாட நகங்களைப் பயன்படுத்தும் பறவைகள் தவிர மற்ற அனைத்துப் பறவைகளும் உண்ண அனுமதிக்கப்பட்டவையாகும்.

விலங்கினங்கள்

விலங்கினங்களைப் பொறுத்தவரை பன்றி ஹராம் எனக் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.

வீட்டுக் கழுதை ஹராம் என்று புகாரீ 4217, 4215, 4199, 3155, 4218, 4227, 5115, 5522, 5527, 5528 ஆகிய ஹதீஸ்கள் கூறுகின்றன.

இவை தவிர மற்ற விலங்கினங்களைப் பற்றி எவ்வாறு முடிவு செய்வது என்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொதுவான அடிப்படையைத் தந்துள்ளனர்.

விலங்கினங்களில் எவற்றுக்குக் கோரைப் பற்கள் உள்ளனவோ அவற்றை உண்ணக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். (நூல்: புகாரீ 5781, 5530)

மேல் பகுதியில் அமைந்துள்ள பற்களில் வலப்பக்கம் ஒரு பல்லும், இடப்பக்கம் ஒரு பல்லும் மற்ற பற்களை விட அதிக நீளமாக இருக்கும்.

இந்தக் கோரைப் பல் எவற்றுக்கு உள்ளதோ அவற்றை நாம் உண்ணக் கூடாது.

இந்த அடிப்படையை விளங்கிக் கொண்டால் எவற்றை உண்ணலாம் என்பது எளிதில் விளங்கி விடும். கழுதையைப் பொறுத்த வரை அதன் பற்கள் வரிசையாக இருந்தாலும் அதைக் குறிப்பிட்டு ஹராமாக்கி விட்டதால் கழுதைக்கு இந்த அளவுகோலைப் பொருத்தக் கூடாது.

புழு, பூச்சியினங்களைத் தடை செய்யும் விதமாக எந்த ஒரு வசனமும் திருக்குர்ஆனில் இல்லை. எந்த ஒரு ஹதீஸும் இல்லை. மாறாக பூச்சியினத்தைச் சேர்ந்த வெட்டுக் கிளியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் அவர்களின் முன்னிலையில் நபித்தோழர்கள் சாப்பிட்டுள்ளனர். இதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து வெட்டுக் கிளியைச் சாப்பிட்டுக் கொண்டு ஆறு ஏழு யுத்தங்கள் செய்துள்ளோம். (நூல் : புகாரீ 5495)

கடல்வாழ் பிராணிகளிலோ, புழு பூச்சியினத்திலோ எத்தனையோ விஷ ஜந்துக்கள் உள்ளன. அவற்றைச் சாப்பிட்டு விட்டு மனிதன் சாக வேண்டுமா என்று சிலர் நினைக்கலாம்.

உங்களை நீங்களே அழித்துக் கொள்ளாதீர்கள்.

திருக்குர்ஆன் 2:195

உங்களை நீங்களே சாகடித்துக் கொள்ளாதீர்கள்.

திருக்குர்ஆன் 4:29 

என்று அல்லாஹ் கூறுவதால் கேடு விளைவிக்கும் அனைத்தும் ஹராம் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு தாவரத்தைச் சாப்பிடுவது கேடு விளைவிக்கும் என்றால் அதை உண்பது ஹராம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. பாம்பு, பல்லி, கடல்வாழ் விஷ ஜந்துக்கள் ஆகியவைகளும் இந்த அடிப்படைக்குள் அடங்கும்.

இது உயிரினங்களுக்கு மட்டுமின்றி தாவரத்துக்கும், தானியத்துக்கும், ஏனைய உணவு வகைகளுக்கும் பொதுவானதாகும்.

உயிரினங்களில் தடை செய்யப்பட்டவை இவை மட்டுமே. இவை தவிர மற்ற எல்லா உயிரினங்களும் மனிதர்கள் உண்ண அனுமதிக்கப்பட்டவையாகும்.

இவ்வாறு அனுமதிக்கப்பட்டவைகளில் சில நமக்கு அருவருப்பாக இருக்கலாம். அப்படி இருந்தால் அதைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உடும்புக் கறியை விரும்ப மாட்டார்கள். ஆனாலும் அவர்கள் முன்னே மற்றவர்கள் அதைச் சாப்பிடுவதைத் தடுக்கவில்லை. (நூல் : புகாரீ 2575, 5391, 5400, 5402, 5536, 5537, 7267)  

நிர்பந்தத்திற்கு ஆளானவர்கள் தடை செய்யப்பட்ட உணவுகளை உண்ணலாம் என்றும் இவ்வசனங்கள் கூறுகின்றன. எது நிர்பந்தம் என்று அறிய 431வது குறிப்பை வாசிக்கவும்.

Leave a Reply

About Me

இறைவனின் திருப்பெயரால்…

  • இந்த தளத்தில் உள்ள செய்திகள் ஏகத்துவ கொள்கையை சொல்லும் பல்வேறு இணையதளத்தில் இருந்து எடுத்து தொகுக்கப்பட்டவை (ஆன்லைன்பீஜே, ஆன்லைன் டிஎன்டிஜே, etc).
  • இதில் தவறான கருத்துகள் ஏதேனும் இருப்பின் அதை Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு அனுப்பி தெரிவிக்கலாம்.
  • உங்கள் ஆக்கங்களையும்
  • Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு
  • என்ற முகவரிக்கு அனுப்பவும். ஆசிரியர் சரிபார்த்தபின் வெளியிடப்படும்.
  • இந்த தளத்திற்கும் எந்த அமைப்பிற்கும் எந்த தொடர்பும் கிடையாது.

You may want to read

Follow Us

Sign up for our Newsletter

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit