446. மனிதன் சுமந்த அமானிதம் எது?

446. மனிதன் சுமந்த அமானிதம் எது?

வ்வசனத்தில் (33:72) மனிதனுக்கு மட்டும் ஒரு அமானிதம் – முறையாகப் பராமரித்து திரும்ப ஒப்படைத்தல் – வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த வசனத்தில் குறிப்பிடப்படும் அமானிதம் என்ன என்று திருக்குர்ஆனில் ஏனைய இடங்களிலோ, அல்லது நபிமொழிகளிலோ சுட்டிக்காட்டப்படவில்லை. ஆயினும் மனிதர்களுக்கும், ஏனைய அனைத்துப் படைப்பினங்களுக்கும் உள்ள வித்தியாசம் பகுத்தறிவு தான். எனவே இதைத்தான் இந்த வசனம் குறிப்பிடுகின்றது என்று புரிந்து கொள்ள முடியும்.

அமானிதம் என்பது திருக்குர்ஆனைத்தான் குறிப்பிடுகிறது என்று சில அறிஞர்கள் அளித்த விளக்கம் ஏற்கத்தக்கதல்ல. ஏனெனில் இவ்வசனத்தில் அந்த அமானிதம் முழுமனித குலத்துக்கும் உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. மேலும் மனிதன் அதைச் சுமந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

அமானிதம் என்பதற்கு திருக்குர்ஆன் என்று பொருள் கொண்டால் முஹம்மது நபியின் சமுதாயத்துக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் திருக்குர்ஆனைச் சுமந்திருக்க வேண்டும். அவ்வாறு இல்லை எனும்போது இந்தப் பொருள் தவறானது என்பது உறுதியாகிறது.

அமானிதம் என்பது திருக்குர்ஆனைத்தான் குறிக்கிறது என்று விளக்கம் தருவோர் பின்வரும் வசனத்தைத் தங்கள் விளக்கத்துக்கு சான்றாகக் காட்டுகின்றனர்.

இந்தக் திருக்குர்ஆனை ஒரு மலையின் மீது நாம் இறக்கியிருந்தால் அது அல்லாஹ்வின் அச்சத்தால் பணிந்து நொறுங்கி விடுவதைக் காண்பீர். மனிதர்கள் சிந்திப்பதற்காக இந்த உதாரணங்களை அவர்களுக்குக் கூறுகிறோம்.

திருக்குர்ஆன் 59:21 

இந்த வசனத்தையும், மேற்கண்ட வசனத்தையும் இணைத்து அமானிதம் என்பது திருக்குர்ஆன்தான் என்ற முடிவுக்கு வரலாம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் இந்த வசனத்தில் நடக்காத ஒன்றை உதாரணமாக அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான். இறக்கியிருந்தால் என்று அல்லாஹ் கூறுவது அவ்வாறு இறக்கவில்லை என்பதையே காட்டுகின்றது.

ஆனால் 33:72 வசனத்தில் அந்த அமானிதத்தைச் சுமக்குமாறு வானங்கள், பூமி, மலைகள் போன்றவற்றுக்கு நாம் முன்வைத்தோம். ஆனால் அவை மறுத்து விட்டன. மனிதன் சுமந்து கொண்டான் என்று படைப்பின்போது நடந்த நிகழ்வுகளாகக் கூறப்படுகின்றன.

மற்ற எந்தப் படைப்புக்கும் இல்லாமல் மனிதனுக்கு மட்டும் வழங்கப்பட்டது எது என்றால் பகுத்தறிவு தான் என்று எல்லா மனிதர்களும் புரிந்து கொள்வார்கள். அவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் வேறு விளக்கம் எதுவும் குர்ஆனிலோ, நபிமொழிகளிலோ கூறப்படவில்லை.

Leave a Reply