464. இப்போதும் அபாபீல் பறவை வருமா?

464. இப்போதும் அபாபீல் பறவை வருமா?

அபாவை இடிக்க வந்த எதிரிகளை அல்லாஹ் தனது பேராற்றலால் அழித்து கஅபாவைக் காப்பாற்றியதாக இவ்வசனத்தில் (105:2) அல்லாஹ் சொல்கிறான்.

இது கஅபாவுக்கு மட்டும் இறைவன் அளித்த சிறப்பான பாதுகாப்பாகும். உலகில் எந்தப் பள்ளிவாசலை யார் இடிக்க வந்தாலும் உடனே அபாபீல் பறவையை அனுப்பி அல்லாஹ் பாதுகாப்பான் என்று இவ்வசனத்தை நாம் புரிந்து கொள்ளக் கூடாது.

திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் அடிப்படையில் கஅபாவும், உலகின் ஏனைய பள்ளிவாசல்களும் சமமானவை அல்ல.

கஅபாவும், அதைச் சுற்றியுள்ள புனித எல்லையும் இறைவனால் அபயபூமியாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கஅபாவை எவரும் தகர்க்க முடியாது; அன்னியர்கள் கைப்பற்றவும் முடியாது என்று 28:57, 29:67, 3:97, 14:35 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

யுகமுடிவு நாளின்போது கால்கள் சிறுத்த ஒரு கூட்டத்தினர் கஅபாவை அழிப்பார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.

பார்க்க : புகாரீ 1591, 1596  

அதற்கு முன் எவரும் கஅபாவை அழிக்க முடியாது.

இத்தகைய உத்தரவாதம் இருப்பதால்தான் அபாபீல் பறவைகளை அனுப்பி கஅபாவை இறைவன் பாதுகாத்தான். நாளை யாரேனும் கஅபாவைத் தகர்க்க முயன்றால் யானைப்படைக்கு ஏற்பட்டது போன்ற கதியை அவர்கள் அடைவார்கள்.

மற்ற எந்தப் பள்ளிவாசலுக்கும் இத்தகைய எந்த உறுதிமொழியையும் இறைவன் தரவில்லை. மாறாக மற்ற பள்ளிவாசல்கள் இடிக்கப்படலாம் என்பதைத் திருக்குர்ஆன் கூறியுள்ளது.

'எங்கள் இறைவன் அல்லாஹ்வே' என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமையுள்ளவன்; மிகைத்தவன்.

திருக்குர்ஆன் 22:40  

எதிரிகளால் பள்ளிவாசல்கள் இடிக்கப்படுமானால் அதைத் தடுக்கும் பொறுப்பு மக்கள் மீதே சுமத்தப்பட்டுள்ளது. அபாபீல் பறவைகளை எதிர்பார்க்கக் கூடாது. அப்படி எந்த உத்தரவாதமும் எந்தப் பள்ளிவாசலுக்கும் இல்லை.

இது குறித்து மேலும் அறிய 170, 433, 473 ஆகிய குறிப்புகளையும் காண்க!

Leave a Reply