466. எதிரிகளைக் குறைத்துக் காட்டியது ஏன்?

466. எதிரிகளைக் குறைத்துக் காட்டியது ஏன்?

போர்க்களத்தில் சந்தித்துக் கொண்ட இரு அணியினருக்கும் எதிர்த்தரப்பைக் குறைந்த எண்ணிக்கையினராக அல்லாஹ் காட்டியதாக இவ்வசனத்தில் (8:44) கூறப்படுகிறது.

அதாவது முஸ்லிம்களின் கண்களுக்கு எதிரிகளைக் குறைந்த எண்ணிக்கையினராகவும், எதிரிகளின் கண்களுக்கு முஸ்லிம்களைக் குறைந்த எண்ணிக்கையினராகவும் அல்லாஹ் காட்டினான்.

எதிரிகளின் கண்களுக்கு முஸ்லிம்களை அதிகமாகக் காட்டினால் எதிரிகளுக்குக் கலக்கம் ஏற்பட்டு அவர்கள் ஓட்டம் எடுத்திருப்பார்களே? ஏன் அப்படிச் செய்யவில்லை என்ற சந்தேகம் எழலாம்.

போர் நடக்காமல் போர்க்களத்தில் இருந்து எதிரிகள் பின்வாங்கி ஓட்டம் பிடிக்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் நோக்கமாக இருந்தால் அப்படித்தான் செய்திருப்பான்.

போர் நடந்து, முஸ்லிம்களுக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் நோக்கமாக இருந்தது. அவர்களின் எண்ணிக்கையை அவர்களுக்கு அதிகமாகக் காட்டினால் நாம் தான் வெற்றி பெறுவோம் என்ற உறுதி அவர்களுக்கு ஏற்படும். பின்வாங்காமல் களத்தில் இறங்குவார்கள்.

தங்களை விட எதிரிகளின் எண்ணிக்கை அதிகமாகத் தெரிந்தால் நாம் தோற்று விடுவோம் என்று அஞ்சி போரிடாமலே ஓட்டம் பிடித்து விடுவார்கள்.

போர் நடந்து ஆக வேண்டும் என்பது இறைவனின் திட்டமாக இருந்ததால் இரு தரப்பினருக்கும் மற்ற தரப்பினரைக் குறைத்துக் காட்டினான். இதனால் போர் செய்தே ஆகவேண்டும் நாம் தான் வெல்வோம் என்ற உத்வேகம் இரு தரப்புக்கும் ஏற்பட்டது.

ஆனால் இது போர் துவங்குவதற்கு முன்னர் இருந்த நிலையாகும். எதிரிகள் களத்தில் இறங்கிய பின்னர் அவர்கள் உள்ளங்களில் பீதியை ஏற்படுத்துவதற்காகவும், முஸ்லிம்களுக்கு நம்பிக்கையை ஊட்டுவதற்காகவும் நிலைமையை அல்லாஹ் மாற்றினான்.

போர் துவங்கும் முன்னர் இருந்தது போலவே போர் நடக்கும் போதும் எதிரிகள் முஸ்லிம்களின் கண்களுக்குக் குறைவாகவே தெரிந்தனர்.

ஆனால் எதிரிகளின் கண்களுக்கு முஸ்லிம்களை இரு மடங்காக அல்லாஹ் காட்டினான். நாம் நினைத்தது தவறாகி விட்டதே என்ற கலக்கம் ஏற்பட்டு எதிரிகளின் மனஉறுதி குலைந்து போனது. இதனால் அவர்கள் தோல்வியைத் தழுவினார்கள்.

இதை 3:13 வசனத்தில் அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.

Leave a Reply