47. நோன்பை விடுவதற்குப் பரிகாரம்

47. நோன்பை விடுவதற்குப் பரிகாரம்

நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர் ஏழைக்கு உணவளிக்கலாம் என்று இவ்வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இவ்வசனத்துக்குப் பொருள் செய்த பலர் சக்தியுள்ளவர் என்ற இடத்தில் சக்தியில்லாதவர் என்று மொழிபெயர்த்துள்ளனர். ஆனால் அரபு மூலத்தில் யுதீ(க்)கூன என்ற உடன்பாட்டு வினைச்சொல் தான் உள்ளது. லா யுதீ(க்)கூன என்று எதிர்மறைச் சொல் பயன்படுத்தப்படவில்லை. எனவே சக்தியுள்ளவர்கள் என்று அல்லாஹ் சொல்லி இருக்க சக்தியற்றவர்கள் என்று மொழிபெயர்ப்பது தவறாகும்.


சக்தியுள்ளவர்கள் நோன்பு தானே நோற்க வேண்டும். அவர்கள் எப்படி பரிகாரம் செய்ய முடியும் என்று இவர்கள் சிந்தித்ததால் இப்படி இல்லாத அர்த்தம் செய்து தங்கள் கருத்துக்கு ஏற்ப திருக்குர்ஆனை வளைத்துள்ளனர்.

ஆரம்பத்தில் நோன்பு கடமையாக்கப்பட்டபோது "நோன்பு நோற்கச் சக்தி உடையோர் விரும்பினால் நோன்பு நோற்கலாம்; அல்லது ஒரு நோன்புக்குப் பதிலாக ஒரு ஏழைக்கு உணவு அளிக்கலாம்'' என்ற சலுகை இருந்தது. அதுதான் இவ்வசனத்தில் (2:184) கூறப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் பின்னர் மாற்றப்பட்டு விட்டது.

இது குறித்து புகாரீயில் பின்வருமாறு சொல்லப்பட்டுள்ளது.

சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர்கள் அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும் எனும் (2:184ஆவது) வசனம் அருளப்பட்டபோது, விரும்பியவர் நோன்பு நோற்காமல் விட்டுவிட்டு பரிகாரம் செய்து வந்தார். பின்னர் இதை மாற்றி இதற்குப் பின்னுள்ள வசனம் (உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும்!' என்ற 2:185ஆவது வசனம்) அருளப்பெற்றது.

நூல் : புகாரீ 4507 

இதில் இருந்து தெரிய வருவது என்ன? நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர்கள் விரும்பினால் நோன்பு நோற்கலாம், அல்லது ஒரு நோன்புக்கு ஒரு ஏழைக்கான உணவு என்ற கணக்கில் பரிகாரம் செய்யலாம் என்ற சட்டத்தைச் சொல்லவே இவ்வசனம் அருளப்பட்டது என்று தெரிகிறது.

மேலும் நோன்பு நோற்கச் சக்தியற்றவர்கள் நோன்பும் நோற்க வேண்டாம்; பரிகாரமும் செய்ய வேண்டாம் என்ற கருத்தை இவ்வசனம் உள்ளடக்கியுள்ளது என்பதும் தெரிகிறது.

இது இப்போது மாற்றப்பட்டு விட்டதால் சக்தி உள்ளவர்கள் நோன்பு தான் நோற்க வேண்டும். அவர்கள் நோன்புக்குப் பகரமாக உணவு வழங்க முடியாது.

ஆனால் நோன்பு நோற்கச் சக்தியில்லாதவர்கள் நோன்பு நோற்காமல் இருந்ததற்காகப் பரிகாரம் செய்ய வேண்டுமா என்றால் அது தேவை இல்லை என்பது தான் சரியான கருத்தாகும். ஏனெனில் மேற்கண்ட வசனம் நோன்பு வைக்கச் சக்தியுள்ளவர்களைத் தான் பரிகாரம் செய்யச் சொல்கிறது. நோன்பு வைக்கச் சக்தியற்றவர்களுக்கு நோன்பு கடமையாகாது. எப்போது நோன்பு கடமையாகவில்லையோ அவர்கள் ஒரு குற்றமும் செய்யவில்லை. எப்போது ஒரு குற்றமும் செய்யவில்லையோ அவர்கள் ஏன் பரிகாரம் செய்ய வேண்டும்?

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இதற்கு மாற்றமாகக் கூறியதை நாம் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.

அதாஉ பின் அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

சக்தியுள்ளவர்கள் நோன்பை விட்டால் ஓர் ஏழைக்கு உணவளிக்க வேண்டும் எனும் (2:184ஆவது) வசனத்தை ஓதி, இது சட்டம் மாற்றப்பட்ட வசனம் அன்று; நோன்பு நோற்க இயலாத தள்ளாத முதியவரையும், தள்ளாத வயதுடைய பெண்ணையும் இது குறிக்கும். அவர்கள் ஒவ்வொரு நாளுக்கும் பகரமாக ஓர் ஏழைக்கு உணவளிக்கட்டும் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன்னார்கள்.

நூல் : புகாரீ 4505  

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொல்வது போல் இவ்வசனம் முதியவர்களுக்கு நோன்பைக் கடமையாக்கும் வகையில் அமையவில்லை. அவர்கள் பரிகாரம் செய்ய வேண்டும் என்ற கருத்தையும் தரவில்லை. எனவே மேற்கண்ட வசனம் சொல்வதற்கு மாற்றமாக இப்னு அப்பாஸ் சொன்னதாக இச்செய்தியில் கூறப்படுவதால் இதை நாம் ஏற்க முடியாது.

ஹஜ் செய்ய வசதியில்லாதாவர் ஹஜ் செய்யாவிட்டால் அல்லாஹ் அவரை விசாரிக்க மாட்டான். ஏனெனில் அவருக்கு ஹஜ் கடமையாக ஆகவில்லை. அது போல் நோன்பு நோற்க சக்தியுள்ளவர் நோன்பு தான் நோற்க வேண்டும். இயலாதவர் நோன்பும் நோற்க வேண்டியதில்லை. அவருக்கு நோன்பு கடமையாக ஆகாததால் பரிகாரமும் செய்ய வேண்டியதில்லை என்பது தான் சரியான கருத்தாகும்.

Leave a Reply