474. தேனீக்களின் வழி அறியும் திறன்

474. தேனீக்களின் வழி அறியும் திறன்

னது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல் என்று தேனீக்களுக்கு அல்லாஹ் உள்ளுணர்வை ஏற்படுத்தியுள்ளான் என்று இவ்வசனத்தில் (16:68) கூறப்படுகிறது.

பாதைகளை அறிவதில் தேனீக்கள் தனித்து விளங்குகின்றன என்பதை இன்றைய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இதுகுறித்து பிரிட்டனைச் சேர்ந்த ராயல் ஹாலோவே பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உயிரியல் விஞ்ஞானிகள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். அந்த ஆய்வறிக்கையில் அவர்கள் கூறியுள்ளதாவது:

தேனைத் தேடி, தேனீக்கள் அதிக தொலைவுக்குப் பயணம் மேற்கொள்கின்றன. அவை அதிகமான குறுக்கு வழிகளைப் பயன்படுத்துகின்றன. இதற்காக கம்ப்யூட்டரின் உதவியுடன், செயற்கைப் பூக்களைக் கொண்டு, தேனீக்களின் பயண வழியைக் கண்காணித்தோம். அதில், தேனீக்கள் மிகக் குறைவான நேரத்தில், வெவ்வேறு பூக்களுக்குச் செல்வதற்கு அதிக குறுக்கு வழிகளைப் பயன்படுத்துவதைக் கண்டறிந்தோம்.

அந்த வழிகள், விற்பனைப் பிரதிநிதி செல்வதற்காக, கம்ப்யூட்டர் உருவாக்கிக் கொடுத்த வழிகளை விட அதிக வழிகளாகும். இதன் மூலம் கம்ப்யூட்டரின் அறிவை மிகச்சிறிய தேனீயின் மூளை மிஞ்சியுள்ளது என்று தெரிய வருகிறது.

இவ்வாறு விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

வழிகளை எளிதாகக் கண்டு கொள்ளும் திறன் தேனீக்களுக்கு உள்ளது என்ற இந்த உண்மையை திருக்குர்ஆன் சொல்லி இருப்பதன் மூலம் இது இறைவனின் வேதம் தான் என்பது உறுதியாகிறது.

எளிதாக வழிகளைக் கண்டுபிடிப்பது என்பது குறுக்கு வழிகளை மட்டும் குறிக்காது. சரியான வழியையும் கண்டுபிடித்தால் தான் எளிதாக இருக்கும்.

ஒரு மலரில் அல்லது கனியில் தனக்கு உரிய உணவு உள்ளதா என்பதை மோப்ப சக்தி மூலம் சரியாகக் கண்டுபிடித்தால் தான் வழிகள் எளிதாக இருக்கும். ஒவ்வொரு பூவாகச் சென்று ஏமாந்தால் வழிகள் எளிதாக இருக்காது. அலைச்சல் தான் மிச்சமாகும்.

தேனீக்களின் மோப்பசக்தி மிகத் துல்லியமாக அமைந்துள்ளதயும் இன்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஐரோப்பாவில் உள்ள குரோஷியா நாட்டுக்கும், செர்பியாவுக்கும் நடந்த போரின்போது ஏராளமான கண்ணிவெடிகளை செர்பிய நாடு குரோஷியாவுக்குள் புதைத்து வைத்தது. போர் முடிந்த பின்னும் கண்ணிவெடி புதைக்கப்பட்ட இடத்தில் கால் வைப்பவர்கள் செத்துமடிந்து வருகின்றனர். எனவே கண்ணிவெடிகளைக் கண்டுபிடிக்க தேனீக்களின் மோப்ப சக்தியைப் பயன்படுத்த முடியுமா என்று ஜாக்ரப் பல்கலைக் கழக வேளாண்மைத் துறை பேராசிரியர் நிகோலா கேசிக் ஆராய்ச்சி மேற்கொண்டார்.

தேனீக்களின் உணவு எவ்வளவு தொலைவில் இருந்தாலும் தேனீக்கள் அதைச் சரியாக மோப்பம் பிடிக்கும் திறன் வாய்ந்தவை என்பதை முதலில் இவர் கண்டுபிடித்தார்.

வெடிமருந்துகளில் உள்ள டி.என்.டி எனும் வாசனையை இனிப்புடன் கலந்து தேன் கூடுகளுக்கு அருகில் வைக்கப்பட்டது. இனிப்பைத் தேடிவரும் தேனீக்கள் டி.என்.டி வாசனையைப் பழகிக் கொண்டன. இப்படியே பழக்கப்பட்ட தேனீக்கள் டி.என்.டி வாசனை எங்கு இருந்தாலும் அது தன்னுடய உணவின் வாசனை என்று நினைக்கும் அளவுக்கு தொடர் பயிற்சி அளிக்கப்பட்டது.

இவ்வாறு தேனீக்கள் பழக்கப்பட்ட பின்னர் டி.என்.டி கலந்த இனிப்பையும் டி.என்.டி கலக்காத இனிப்பையும் கூடுகளுக்கு அருகில் வைக்கும்போது டி.என்.டி கலந்த இனிப்பை மட்டும் அது சரியாகக் கண்டுபிடித்து அதில் அமர்ந்தது.

இதன் பின்னர் ஒரு இடத்தில் வைக்கப்படும் இனிப்பின் நடுப்பகுதியில் டி.என்.டி கலந்தும் ஓரங்களில் டி.என்.டி கலக்காமலும் வைக்கப்பட்டது. அப்போது டி.என்.டி கலந்த மையப்பகுதியில் போய் தேனீக்கள் அமர்ந்தன.

இயல்பாக வெடிமருந்தின் வாசனையை தேனீக்கள் தேடிச் செல்லாது. அதுதான் தன்னுடைய உணவு என்று பயிற்சியளிக்கப்படும்போது அந்த வாசனையைத் தேடிச் செல்ல ஆரம்பித்து விடும்.

இப்படி பழக்கப்பட்ட தேனீக்களுக்கு அருகில் மண்ணுக்குள் வெடிபொருளைப் புதைத்து வைத்தால் அந்த இடத்தின் மேலே அமர்ந்து மொய்க்க ஆரம்பித்தன. இதன் மூலம் அந்த இடத்தில் கண்ணிவெடி உள்ளதைக் கண்டுபிடித்து பக்குவமாக அகற்றலாம் என்பது தான் ஆராய்ச்சியின் முடிவாகும்.

இது குறித்து பேராசிரியர் நிகோலா கேசிக் கூறுகையில், 'இந்த ஆராய்ச்சி, கண்ணிவெடிகளைக் கண்டுபிடிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். இது விஞ்ஞானபூர்வமாக வெற்றிபெற்றால், கண்ணிவெடி இருப்பதாகக் கருதப்படும் பகுதிகளில் தேனீக்களின் நடவடிக்கையை அகச்சிவப்பு கதிர்கள் மூலம் கண்காணித்து கண்ணிவெடிகளை அகற்றி விடலாம்.

நாய், மற்றும் எலி மூலம் கண்ணிவெடியைக் கண்டுபிடிக்க முடியும் என்றாலும், அவற்றின் உடல் எடை காரணமாக வெடிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் தேனீக்களைப் பொறுத்தவரை அந்தப் பிரச்சினையே இல்லை. தேனீக்கள் மூலம் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி அமெரிக்காவில் நடந்துள்ளது என்றார்.

இன்று பல்வேறு ஆய்வுகள் மூலம் இதைக் கண்டுபிடிக்க முடிகிறது. ஆனால் தேனீக்களிடம் இந்தத் தன்மை உள்ளது என்ற விஷயம் 14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் இறைவனுக்கு மட்டுமே தெரிந்த உண்மையாகும். எனவே திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தைகள் தான் என்பது இதன் மூலம் நிரூபணமாகின்றது.

Leave a Reply

About Me

இறைவனின் திருப்பெயரால்…

  • இந்த தளத்தில் உள்ள செய்திகள் ஏகத்துவ கொள்கையை சொல்லும் பல்வேறு இணையதளத்தில் இருந்து எடுத்து தொகுக்கப்பட்டவை (ஆன்லைன்பீஜே, ஆன்லைன் டிஎன்டிஜே, etc).
  • இதில் தவறான கருத்துகள் ஏதேனும் இருப்பின் அதை Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு அனுப்பி தெரிவிக்கலாம்.
  • உங்கள் ஆக்கங்களையும்
  • Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு
  • என்ற முகவரிக்கு அனுப்பவும். ஆசிரியர் சரிபார்த்தபின் வெளியிடப்படும்.
  • இந்த தளத்திற்கும் எந்த அமைப்பிற்கும் எந்த தொடர்பும் கிடையாது.

You may want to read

Follow Us

Sign up for our Newsletter

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit