476. மனிதனை எந்த அளவுக்கு நம்பலாம்?

476. மனிதனை எந்த அளவுக்கு நம்பலாம்?

வ்வசனத்தில் (2:282) கடன் கொடுத்தால் அதை எழுதிக் கொள்ளுங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

மக்களில் அதிகமானவர்கள் பிறர் மீது வைத்துள்ள அளவு கடந்த நம்பிக்கையால் ஏமாற்றப்படுகிறார்கள். ஆனால் இஸ்லாம் யாரையும் நூறு சதவிகிதம் நம்புமாறு கூறவில்லை.

வெளிப்படையான செயல்களை வைத்தும், தெரிந்தவர்களிடம் விசாரித்தும் ஒருவரை மனதளவில் நம்பலாம். ஆனால் கொடுக்கல் வாங்கல் போன்ற பிரச்சினைகளில் நம்பிக்கை இல்லாவிட்டால் எப்படி நடக்க வேண்டுமோ அந்த அளவு எச்சரிக்கை உணர்வுடனே அனைவரிடமும் நடந்து கொள்ள வேண்டும்.

இது தான் இஸ்லாம் காட்டும் வழியாகும்.

அதாவது மனதில் தான் நம்பிக்கையை வைத்துக் கொள்ள வேண்டும். நடவடிக்கைகளில் நம்பிக்கை இல்லாதது போல் அனைவரிடமும் நடந்து கொள்ள வேண்டும்.

கடன் கொடுத்தால் எழுதிக் கொள்ளுங்கள் என்று திருக்குர்ஆன் கட்டளையிடுவதும் இந்த அடிப்படையில் தான்.

என் மீது நம்பிக்கையில்லையா என்று கேட்டு எழுத்துமானமோ, பிடிமானமோ இல்லாமல் சிலர் கடன் கேட்பார்கள். அப்படி யாரும் கேட்டால் அவர்களின் மனம் கோணாத வகையில் எவ்வாறு பதில் சொல்வது என்பதற்கும் இவ்வசனம் வழிகாட்டியாக உள்ளது.

உங்கள் மீது நம்பிக்கை இல்லை என்பதற்காக நான் எழுதிக் கேட்கவில்லை. இறைவன் இதைக் கடமையாக்கியுள்ளான் என்பதற்காகவே எழுதிக் கேட்கிறேன் என்று கூறி மனம் கோணாமல் எழுதி வாங்க முடியும்.

எழுதும் வாய்ப்பு இல்லாவிட்டால் அடைமானமாக ஒரு பொருளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனக் கூறுவதும் இந்த அடிப்படையில் தான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அடைமானம் குறித்து பல வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளனர். ஒருவர் மீது முழு நம்பிக்கை வைக்க வேண்டும் என்றால் அடைமானம் என்ற பேச்சுக்கே வேலையில்லை.

யூதரிடம் கடன் வாங்கியபோது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கவச ஆடையை அடைமானமாகக் கொடுத்தார்கள். என் மீது நம்பிக்கையில்லையா என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்கவில்லை.

ஒரு பொருள் தனக்குரியது என்று வாதிடுபவன் அதற்கான சான்றைச் சமர்ப்பிக்க வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போதித்து உள்ளனர். யாரையும் நம்பி ஏமாந்து விடாமல் சான்றுகளைத் தயாரித்துக் கொள்ள வேண்டும் என்பதை இதிலிருந்து அறியலாம்.

பல்வேறு விஷயங்களுக்கு ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள் என்று இஸ்லாம் வழிகாட்டுகிறது. எழுதி ஒப்பந்தம் போட்டுக் கொள்வதே வாய் வார்த்தையில் நம்பி ஏமாந்து விடக்கூடாது என்பதற்குத் தான்.

அதுபோல் பல விஷயங்களுக்கு சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுமாறு இஸ்லாம் கூறுகிறது. முழுநம்பிக்கை வைக்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் நிலைபாடாக இருந்தால் சாட்சிகளுக்கு வேலை இல்லை.

தீர விசாரித்துக் கொள்ளுமாறு இஸ்லாம் கூறுவதும் இதே காரணத்துக்காகத் தான்.

இஸ்லாம் கூறும் இந்த அறிவுரையை உலக மக்கள் சரியாகக் கடைப்பிடித்தால் மோசடிகளுக்கு வேலையில்லை. ஏமாறத் தேவையில்லை.

இவர் தொழுகையாளி என்று நம்பி அதைக் கொடுத்தேன். இவர் தாடி வைத்துள்ளார் என்று நம்பி இதைக் கொடுத்தேன்; இவர் தவ்ஹீத்வாதி என்று நம்பி மோசம் போய்விட்டேன்; இவர் சொந்தக்காரர் என்பதால் நம்பினேன்; ஏமாற்றி விட்டார் என்று கூறும் ஏமாளிகள் கூட்டம் பெருகுவதற்குக் காரணம் இஸ்லாம் கூறும் இந்த போதனையைப் புறக்கணித்தது தான். எவரையும் நம்பி ஏமாறக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

Leave a Reply