488. இறைவன் உருவமற்றவனா?

488. இறைவன் உருவமற்றவனா?

திருக்குர்ஆனின் பல வசனங்கள் அல்லாஹ்வின் பண்புகளைப் பற்றியும், இறைவனின் இலக்கணம் பற்றியும் பேசுகின்றன.

அல்லாஹ் உருவமற்றவன் என்பது தான் இஸ்லாத்தின் கடவுள் கொள்கை என்று முஸ்லிமல்லாத மக்கள் நம்புகிறார்கள். முஸ்லிம்களில் பலரும் இவ்வாறுதான் நம்புகின்றனர்.

இறைவனை யாரும் பார்க்காததால் அவனை உருவமாக ஆக்கி முஸ்லிம்கள் வழிபடுவதில்லை என்ற கருத்தில் இப்படிக் கூறினால் அதில் தவறில்லை. ஆனால் இறைவன் என்றால் ஒன்றுமே இல்லாத சூனியம் என்ற கருத்தில் இப்படிக் கூறுவார்களானால் அது முற்றிலும் தவறாகும்.

திருக்குர்ஆனில் எந்த வசனத்திலும் இறைவன் உருவமற்றவன் என்று சொல்லப்படவே இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் தமது பொன்மொழிகளில் இறைவன் உருவமற்றவன் என்று ஒருபோதும் கூறியதில்லை.

மாறாக இறைவனுக்கு உருவம் உண்டு என்ற கருத்தில் ஏராளமான வசனங்கள் திருக்குர்ஆனில் உள்ளன. நபிமொழிகளும் உள்ளன.

இறைவனுக்கு உருவம் இல்லை என்ற இஸ்லாத்துக்கு எதிரான கருத்து இஸ்லாத்தின் பெயரால் மக்களிடம் புகுந்து விட்டதால் மக்களிடம் இறைவனைப் பற்றிய அச்சம் உரிய அளவுக்கு இல்லாமல் போய்விட்டது.

அல்லாஹ் என்பவன் கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தி என்று சொல்வதால் ஒன்றுமில்லாத சூனியத்துக்கு நாம் ஏன் பயப்பட வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதில் அவர்களையும் அறியாமல் வேரூன்றியுள்ளது.

இறைவன் தனக்கே உரிய உருவத்தில் இருக்கிறான். ஆனால் அந்த உருவம் எத்தகையது என்று நாம் சொல்ல முடியாது. மறுமையில் அவனை நாம் காணும்போது தான் அவனது உருவம் நம் கண்களுக்குத் தென்படும். இப்படித்தான் அல்லாஹ்வைப் பற்றி முஸ்லிம்கள் நம்ப வேண்டும்.

இதற்கு திருக்குர்ஆனில் சான்றுகள் உள்ளன.

மறுமையில் நாம் அல்லாஹ்வைப் பார்ப்போம் என்று திருக்குர்ஆன் 2:46, 2:223, 2:249, 3:77, 6:31, 6:154, 10:7, 10:11, 10:15, 10:45, 11:29, 13:2, 18:105, 18:110, 29:5, 29:23, 30:8, 32:10, 33:44, 41:54, 75:23, ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

மறுமையில் இறைவனைக் காண முடியும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறியுள்ளனர். (பார்க்க : புகாரீ 554, 573, 806, 4581, 4851, 6574,7434, 7435, 7436, 7438, 7440)  

மறுமையில் இறைவனைக் காண முடியும் என்பது இறைவனுக்கு உருவம் உண்டு என்பதற்கான சான்றாகும். உருவம் என்று ஒன்று இருந்தால் தான் கண்களால் அதைப் பார்க்க முடியும்.

இறைவன் அர்ஷ் எனும் சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறான் என்று 7:54, 10:3, 13:2, 20:5, 25:59, 32:4, 57:4 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

அல்லாஹ், அர்ஷ் எனும் சிம்மாசனத்துக்குச் சொந்தக்காரன் என்று 9:129, 11:7, 17:42, 21:22, 22:86, 22:116, 27:26, 40:15, 43:82, 81:20, 85:15 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

சிம்மாசனத்தில் வீற்றிருப்பது என்பதும் இறைவனுக்கு உருவம் உள்ளது என்பதற்கான சான்றாகும். உருவமே இல்லாவிட்டால் சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் பேச்சுக்கு இடமில்லை.

சிம்மாசனம் என்றால் அது அவனது அதிகாரத்தைக் குறிக்கும் சொல்லாகும். அதற்கு நேரடிப் பொருள் கொள்ளக் கூடாது என்று சிலர் கூறுவது தவறாகும்.

ஏனெனில் 39:75, 40:7, 69:17 ஆகிய வசனங்களில் அர்ஷைச் சுமக்கும் வானவர்கள் உள்ளனர் என்றும், அர்ஷைச் சுற்றியுள்ள வானவர்கள் இறைவனைப் புகழ்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. வானவர்களால் சுமக்கப்படும் பொருளாகவே அர்ஷ் உள்ளது என்பதையும், அதிகாரத்தைக் குறிக்க அர்ஷ் எனும் சொல் இவ்வசனங்களில் பயன்படுத்தப்படவில்லை என்பதையும் இதிலிருந்து அறியலாம்.

மறுமையில் மக்களை விசாரிக்க வானவர்கள் புடைசூழ இறைவன் வருவான் என்று 89:22 வசனம் கூறுகிறது.

மறுமையில் இறைவனின் காலில் முஸ்லிம்கள் விழுந்து பணிவார்கள் என்று 68:42 வசனமும், புகாரீ 4919வது ஹதீஸும் கூறுகின்றன.

(நரகவாசிகள்) நரகத்தில் போடப்படுவார்கள். நரகம், இன்னும் அதிகம் இருக்கின்றதா? என்று கேட்கும். இறுதியில் அல்லாஹ் தனது பாதத்தை (அதில்) வைப்பான். அப்போது அது, போதும், போதும் என்று கூறும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக புகாரீ 4848, 4849 ஆகிய ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.  

அல்லாஹ்வுக்குக் கால்கள் உள்ளதாக இதில் இருந்து தெரிகின்றது.

 மறுமையில் தீர்ப்பளிக்கப்பட்ட பின் ஒவ்வொருவரும் யாரை வணங்கினீர்களோ அவர்களுடன் செல்லுங்கள் என்று உத்தரவிடப்படும். அவர்களுடன் சென்று நரகத்தில் விழுவார்கள். அல்லாஹ்வை மட்டும் வணங்கிய மக்கள் மட்டும் தாங்கள் வணங்கிய அல்லாஹ்வை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருக்கும்போது அவர்களிடம் இறைவன் வருவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய செய்தி புகாரீ 806, 7440 வது ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது. 

 மறுமையில் அல்லாஹ் சிலரைத் தனக்கு நெருக்கமாக அழைத்து இரகசியமாக உரையாடுவான். அவர் செய்த ஒவ்வொரு பாவத்தையும் சுட்டிக்காட்டி இதைச் செய்தாயா என்று கேட்பான். அவர்கள் ஆம் என்பார்கள். இப்படி எல்லா பாவத்தையும் அவர்கள் ஒப்புக் கொண்டபின் உலகில் உனது பாவங்களை நான் மறைத்தது போல் இங்கும் மறைத்து மன்னித்து விட்டேன் என இறைவன் கூறுவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். (பார்க்க : புகாரீ 4685) 

அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்பதற்கு இதுவும் சான்றாகும்.

 உலகம் அழிக்கப்படும்போது வானமும், பூமியும் அல்லாஹ்வின் கைப்பிடிக்குள் அடங்கும் என்று 39:67 வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவன் தன் கைப்பிடிக்குள் எப்படி அடக்குவான் என்று சைகை மூலம் விளக்கியுள்ளதாக முஸ்லிம் 5371, 5372வது ஹதீஸ்களில் சொல்லப்பட்டுள்ளது. 

 தவ்ராத் வேதத்தைத் தன் கைப்பட எழுதி மூஸா நபிக்கு அல்லாஹ் கொடுத்தான் என்று புகாரீ 6614வது ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது. 

 கியாமத் நாளில் பூமி அல்லாஹ்வின் கையில் ஒரு ரொட்டியைப் போல் அடங்கிவிடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர் என்று புகாரீ 6520வது ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது. 

 மூமின்கள் அல்லாஹ்வின் வலது கைப்புறத்தில் இருப்பார்கள் என்று முஸ்லிம் 3731வது ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது. 

 முதல் மனிதர் ஆதமை தன் இருகைகளால் படைத்ததாக 38:75 வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான். 

 அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதமை தன்னுடைய உருவத்தில் படைத்தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் புகாரீ 6227 

அல்லாஹ்வுக்கு உருவம் இல்லாவிட்டால் தன் சாயலில் ஆதமைப் படைத்தான் என்று சொல்ல முடியாது. உருவமற்றவைகளுக்கு எந்த சாயலும் கிடையாது.

இது போல் ஏராளமான சான்றுகள் இறைவனுக்கு இரு கைகள் உள்ளதாகக் கூறுகின்றன.

 தஜ்ஜால் என்பவன் தன்னை இறைவன் என்று கூறுவான். ஆனால் அவனது ஒரு கண் ஊனமாக இருக்கும். அவன் கூறுவதை நம்பாதீர்கள். உங்கள் இறைவன் கண் ஊனமானவன் அல்ல என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். (பார்க்க : புகாரீ 3057, 3337, 3440, 4403, 6173, 7127, 7131, 7407) 

இறைவனுக்கு கண்கள் உள்ளன என்பதை இதிலிருந்து அறியலாம்.

 அல்லாஹ் மறுமையில் சிரிப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக புகாரீ 7437, 3798, 6573 ஆகிய ஹதீஸ்கள் கூறுகின்றன. 

அல்லாஹ் மூஸா நபியிடம் உரையாடியதாக 2:253, 4;164, 7;143, 7:144 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

அல்லாஹ்வுக்கு வாய் உள்ளது என்பதற்கு இவை சான்றுகளாக உள்ளன.

இறைவன் கேட்பவன், பார்ப்பவன் என்று ஏராளமான வசனங்கள் கூறுகின்றன.

இவை அனைத்தும் இறைவனுக்குச் செவியும், கண்களும் உள்ளன என்பதற்கான சான்றுகளாக உள்ளன.

இதுபோல் எண்ணற்ற சான்றுகள் இருந்தும் சிலர் இதற்கு வேறு விளக்கம் கொடுத்துள்ளனர்.

இவர் எனது வலது கை என்றால் இந்த இடத்தில் வலது கைபோல் முக்கியமானவர் என்று தான் பொருள். இவர் எனக்குக் கண்ணாவார் என்றால் கண் போன்றவர் என்று தான் பொருள். அது போல் தான் அல்லாஹ் விஷயத்தில் சொல்லப்பட்டுள்ள பண்புகள் குறித்தும் நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

இது இவர்களின் அறியாமையைக் காட்டுகிறது. பொதுவாக எந்தச் சொல்லாக இருந்தாலும் அதற்கு நேரடியான பொருள் தான் கொடுக்க வேண்டும். நேரடியான பொருள் கொடுக்க முடியாதபோது தான் மாற்றுப் பொருள் கொடுக்க வேண்டும். மேற்கண்ட உதாரணங்களில் ஒருவன் இன்னொருவனுக்குக் கையாகவும் கண்ணாகவும் இருக்க முடியாது என்பதால் அங்கே வேறு பொருள் கொடுக்கிறோம்.

ஆனால் அவன் கையால் சாப்பிட்டான்; அவன் கை உடைந்தது; கண் சிகிச்சை செய்தான்; கண் விழித்தான் என்பன போன்ற ஆயிரக்கணக்கான சொற்களை நேரடிப் பொருளில் தான் புரிந்து கொள்கிறோம்.

அது போல் தான் அல்லாஹ்வைப் பற்றி பேசும்போது எந்த இடங்களில் நேரடிப் பொருள் கொள்ள முடியாதோ அந்த இடங்களில் மட்டுமே மாற்றுப் பொருள் கொடுக்க வேண்டும். இவை மிகவும் குறைவாகும்.

அது போன்ற இடங்களை 61வது குறிப்பில் தெளிவுபடுத்தியுள்ளோம்.

நேரடிப் பொருள் கொள்ள முடியாத அந்த இடங்கள் தவிர மற்ற இடங்களில் நேரடிப்பொருளில் தான் புரிந்து கொள்ள வேண்டும்.

இறைவனுக்கு உருவம் இல்லை என்று சொல்பவர்கள் வைக்கும் ஒரே சான்று அல்லாஹ்வைப் போல் எதுவும் இல்லை என்ற கருத்திலமைந்த வசனங்கள் தான். அல்லாஹ்வுக்கு உருவம் இருக்கிறது என்று சொன்னால் அவனைப் போல் எதுவும் இல்லை என்ற வசனங்களுக்கு அது முரணாகி விடும் என்கின்றனர்.

இந்த வாதம் அறிவுடைய மக்களால் அடியோடு நிராகரிக்கப்பட வேண்டிய வாதமாகும்.

அல்லாஹ்வின் படைப்புகளில் உருவமுள்ளவையும் இருக்கின்றன.

உருவமில்லாதவையும் இருக்கின்றன.

காற்று வெளிச்சம், மின்சக்தி, வெப்பம், குளிர் போன்றவை உருவமற்றவையாக உள்ளன.

அல்லாஹ்வுக்கு உருவம் உள்ளது என்று சொன்னால் அது படைப்பினங்களுக்கு ஒப்பாகிவிடும் என்ற வாதப்படி பார்த்தால் அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை என்றும் சொல்லக் கூடாது. அப்படிச் சொன்னால் உருவமற்றவைகளுக்கு அல்லாஹ்வை ஒப்பாக்கியதாக ஆகும்.

இதிலிருந்தே இவர்களின் வாதம் எந்த அளவு அபத்தமானது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

அல்லாஹ்வுக்கு உருவம் உள்ளது; ஆனால் அது படைப்பினங்களைப் போன்றதல்ல என்று சொன்னால் ஒரு குழப்பமும் இல்லாமல் எல்லாம் தெளிவாகி விடும்.

நாம் அப்படித்தான் சொல்கிறோம்.

 அவனைப் போல் எதுவும் இல்லை.

திருக்குர்ஆன் 42:11 

 "அல்லாஹ் ஒருவன்'' என (முஹம்மதே!) கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.

திருக்குர்ஆன் 112:1-4

ஆகிய வசனங்களைக் கவனத்தில் கொண்டு அல்லாஹ்வைப் போல் எதுவும் இல்லை என்று உறுதியாக நம்பிக்கை கொண்டு யாருக்கும் ஒப்பாகாத தனக்கே உரிய உருவத்துடன் அவன் இருக்கிறான் என்று நம்புவது தான் சரியான நம்பிக்கையாகும். திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளில் இருந்து கிடைக்கும் விளக்கம் இதுதான்.

Leave a Reply

About Me

இறைவனின் திருப்பெயரால்…

  • இந்த தளத்தில் உள்ள செய்திகள் ஏகத்துவ கொள்கையை சொல்லும் பல்வேறு இணையதளத்தில் இருந்து எடுத்து தொகுக்கப்பட்டவை (ஆன்லைன்பீஜே, ஆன்லைன் டிஎன்டிஜே, etc).
  • இதில் தவறான கருத்துகள் ஏதேனும் இருப்பின் அதை Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு அனுப்பி தெரிவிக்கலாம்.
  • உங்கள் ஆக்கங்களையும்
  • Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு
  • என்ற முகவரிக்கு அனுப்பவும். ஆசிரியர் சரிபார்த்தபின் வெளியிடப்படும்.
  • இந்த தளத்திற்கும் எந்த அமைப்பிற்கும் எந்த தொடர்பும் கிடையாது.

You may want to read

Follow Us

Sign up for our Newsletter

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit