502. பெண்ணுக்கு இரு இதயங்களா?

502. பெண்ணுக்கு இரு இதயங்களா?

ந்த மனிதருக்கும் இரு உள்ளங்களை அல்லாஹ் ஏற்படுத்தவில்லை என்று இவ்வசனத்திற்கு (33:4) நாம் மொழிபெயர்த்துள்ளோம்.

ஆனால் அரபுமூலத்தில் மனிதருக்கு என்று நாம் மொழிபெயர்த்த இடத்தில் ரஜுலுன் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் நேரடிப் பொருள் ஆண் என்பதாகும். இதனால் மனிதன் என்று மொழி பெயர்த்துள்ளது தவறு என்று சிலர் விமர்சனம் செய்கின்றனர்.

மனிதனுக்கு என்று மொழிபெயர்க்காமல் ஆணுக்கு என்று மொழிபெயர்ப்பதே சரியானது என்பதற்கு அறிவியல் காரணத்தையும் இவர்கள் சொல்கிறார்கள். பெண்கள் கருவைச் சுமந்திருக்கும்போது தாயின் இதயம், குழந்தையின் இதயம் என இரு இதயங்கள் பெண்களுக்கு உள்ளன. எனவே தான் அல்லாஹ் ஆண் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளான் என்பது அவர்களின் அறிவியல் விளக்கம்.

4:34, 7:155 போன்ற வசனங்களில் இதே சொல்லுக்கு ஆண் என்று தான் மொழிபெயர்க்கப்படுகிறது என்பதையும் எடுத்துக் காட்டுகின்றனர்.

33:4 வசனத்தில் ரஜுலுன் என்ற சொல் இடம் பெற்றுள்ளது உண்மை தான். இதன் நெரடிப் பொருள் ஆண் என்பதும் உண்மை தான். ஆனால் இவ்வசனத்தில் ஆண் என்று மொழிபெயர்க்காமல் மனிதன் என்று தக்க காரணத்துடன் தான் நாம் மொழி பெயர்த்துள்ளோம்.

இதை விபரமாகப் பார்ப்போம்.

பெரும்பாலும் எல்லா மொழிகளிலும் பல சொற்கள் நேரடியான பொருளில் பயன்படுத்தப்பட்டாலும் சில நேரங்களில் நேரடிப் பொருளை விட விரிந்த அர்த்தத்திலும் பயன்படுத்தப்படும். நேரடிப் பொருள் கொள்வது பொருந்தாது என்ற நிலை ஏற்படும்போது இவ்வாறு மாற்றுப் பொருள் கொள்ளப்படும்.

நான் எவனுக்கும் பயப்பட மாட்டேன் என்ற சொல் ஆணைக் குறித்தாலும் எந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் பயப்பட மாட்டேன் என்ற கருத்து தான் இந்த வார்த்தையால் கருதப்படுகிறது.

ரஜுலுன் என்ற சொல்லின் நேரடிப் பொருள் ஆண் என்பது தான். இப்படித்தான் இயன்றவரை பொருள் கொள்ள வேண்டும். நேரடிப் பொருள் கொள்வது பொருந்தாமல் போனால் அப்போது ஆணையும், பெண்ணையும் குறிக்கும் விரிவான பொருளை அதாவது மனிதன் என்ற பொருளைக் கொடுக்கலாம்.

இதற்கு உதாரணமாக 7:46 வசனத்தில் ரஜுல் என்ற சொல்லின் பன்மைச் சொல்லான ரிஜால் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் நேரடிப் பொருள் ஆண்கள் என்பதுதான். ஆனாலும் இவ்வசனத்தில் எல்லா அறிஞர்களும் நேரடிப் பொருள் கொள்ளாமல் மனிதர்கள் என்றே பொருள் கொள்கின்றனர்.

நன்மையும் தீமையும் சம அளவில் செய்தவர்கள் அஃராஃப் என்ற தடுப்புச் சுவர் மீது இருப்பார்கள். சொர்க்கவாசிகளில் எப்படி ஆண்களும், பெண்களும் இருப்பார்களோ, நரகவாசிகளில் எப்படி ஆண்களும், பெண்களும் இருப்பார்களோ அது போல் அஃராப்வாசிகளிலும் ஆண்களும், பெண்களும் இருப்பார்கள். எனவே இவ்வசனத்தில் ஆண்கள் என்ற சொல் பயன்படுத்தப்பட்டாலும் மனிதர்கள் என்றே பொருள் கொள்ள வேண்டும்.

33:4 வசனத்தைக் கவனித்தால் அது ஆண் பெண் இருவரையும் குறிக்கிறது என்பதை அறியலாம். இதனால் தான் எந்த மனிதனுக்கும் இரு உள்ளங்களை அல்லாஹ் ஏற்படுத்தவில்லை என்று மொழிபெயர்த்துள்ளோம்.

கர்ப்ப காலத்தில் பெண்ணுக்கு இரு இதயங்கள் உள்ளதை இவ்வசனம் மறைமுகமாகச் சொல்வதற்காகத் தான் ஆண் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற வாதம் தவறாகும்.

அது எப்படி என்று பார்ப்போம்.

33:4 வசனம் இதயம் என்ற உறுப்பைப் பற்றி பேசவில்லை. உள்ளத்தைப் பற்றித்தான் பேசுகிறது.

இவ்வசனத்தை முழுமையாகப் பார்ப்போம்.

எந்த மனிதருக்குள்ளும் இரண்டு உள்ளங்களை அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. உங்களின் மனைவியரில் யாரைத் தாயுடன் ஒப்பிட்டீர்களோ அவர்களை உங்கள் தாயார்களாக அவன் ஆக்கவில்லை. உங்களால் வளர்க்கப்படும் பிள்ளைகளை உங்கள் பிள்ளைகளாக அல்லாஹ் ஆக்கவில்லை. இது உங்கள் வாய்களால் கூறும் வார்த்தை. அல்லாஹ் உண்மையே கூறுகிறான். அவனே நேர்வழி காட்டுகிறான்.

இதுதான் முழு வசனமாகும்.

இரு உள்ளங்களை ஏற்படுத்தவில்லை என்ற வாக்கியம் எந்தக் கருத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை முழு வசனத்தையும் கவனித்து அறிந்து கொள்ளலாம்.

ஒரு மனிதன் மனைவியைத் தாயாகக் கருதுகிறான் என்று வைத்துக் கொள்வோம். உண்மையில் அவள் மனைவியாக இருக்கிறாள். இவனது கற்பனைப்படி அவள் தாயாக ஆக்கப்படுகிறாள். மனிதனுக்கு இருப்பது ஒரு உள்ளம் தான். அந்த உள்ளம் மனைவி என்று முடிவு செய்தால் தாய் என்று முடிவு செய்ய முடியாது. அந்த உள்ளம் தாய் என்று முடிவு செய்தால் மனைவி என்று முடிவு செய்ய முடியாது. மனிதனுக்கு இரு உள்ளங்கள் இருந்தால் ஒரு உள்ளம் மனைவி என்றும் மற்றொரு உள்ளம் தாய் என்று முடிவு செய்யலாம். ஆனால் யாருக்கும் இரு உள்ளங்கள் இல்லை என்பதால் இப்படி முரண்பட்ட முடிவைச் செய்ய முடியாது; செய்யக் கூடாது என்பதுதான் இதன் கருத்தாக உள்ளது.

அது போல் ஒரு குழந்தைக்கு ஒருவன் தந்தை என்றால் வேறு எவரும் அக்குழந்தைக்குத் தந்தையாக முடியாது. இருவருக்கு மகனாக ஒருவன் இருக்க முடியாது. ஒரு மனிதனுக்கு இரு உள்ளங்கள் இருந்தால் இப்படி முரண்பட்ட முடிவை எடுக்க முடியும். இருப்பது ஒரு உள்ளம் தான் எனும்போது முரண்பட்ட இரு முடிவை எடுக்க முடியாது.

இதைச் சொல்வதற்குத்தான் இரு உள்ளங்களை யாருக்கும் ஏற்படுத்தவில்லை என்று இவ்வசனத்தில் கூறப்படுகிறது.

இரத்தத்தை உறுப்புகளுக்குக் கொண்டு செல்லும் இதயம் என்ற உறுப்பைப் பற்றி இவ்வசனம் பேசவில்லை. ஒரு மனிதனுக்குள் இரு முரண்பட்ட முடிவுகள் எடுக்கும் வகையில் இரு உள்ளங்களை அல்லாஹ் யாருக்கும் ஏற்படுத்தவில்லை என்பது தான் கூறப்படுகிறது. முழு வசனத்தையும் கவனித்தால் இதை அறிந்து கொள்ளலாம்.

இந்தத் தன்மையைத் தான் இவ்வசனம் கூறுகிறது எனும்போது இது ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவானது தான் என்பதை அறியலாம்.

ஒரு பெண் கர்ப்பிணியாக இருந்தால் அவளுக்கு ஒரு இதயம், அவள் வயிற்றுக்குள் உள்ள சிசுவுக்கு ஒரு இதயம் என்று இரு இதயங்கள் இருக்கலாம். ஆனால் இரு உள்ளங்கள் அவளுக்குள் எந்த நேரத்திலும் இருக்கவே இருக்காது.

அவளது உள்ளம் தான் அவளை இயக்குமே தவிர குழந்தையின் உள்ளம் அவளை இயக்காது. குழந்தை சார்பில் ஒரு முடிவும், தன் சார்பில் ஒரு முடிவும் அவள் எடுக்க முடியாது. எனவே அவள் கர்ப்பிணியாக இருக்கும்போதும் அவளுக்கு இருப்பது ஒரு உள்ளம் தான்.

இது ஆணை மட்டுமே குறிக்கிறது என்றால் கர்ப்பிணியாக இருக்கும் பெண் ஒரு குழந்தையை தன் குழந்தை என்றும் அதே நேரத்தில் இன்னொருத்தியின் குழந்தை என்றும் முடிவு செய்ய முடியுமா?

இன்னொருவனுக்குப் பிறந்தவனை வளர்ர்ப்பு மகன் என்று ஆண்கள் சொல்லக் கூடாது. பெண்கள் சொல்லிக் கொள்ளலாம் என்று இவர்கள் தீர்ப்பு சொல்வார்களா? அப்படி தீர்ப்பு சொல்லாவிட்டால் பெண்ணுக்கும் ஒரு உள்ளம் தான் இருக்கிறது என்பதையும், இரு உள்ளங்கள் இல்லை என்பதையும் இவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள் என்பது உறுதியாகிறது.

அதுபோல் ஒரு பெண் தன் கணவனை கணவன் என்றும் சொல்லலாம். தந்தை என்றும் சொல்லலாம் என்று இவர்கள் தீர்ப்பு அளித்தால் அப்போது அவளுக்கு இரு உள்ளங்கள் இருப்பதாக எடுத்துக் கொள்ளாலாம்.

மேற்கண்ட முடிவை ஆணும் எடுக்கக் கூடாது. பெண்ணும் எடுக்கக் கூடாது. ஏனெனில் இருவருக்கும் இருப்பது ஒரு உள்ளம் தான்.

பெண்ணுக்கு இரு உள்ளங்கள் உள்ளன என்று சொல்வதில் இவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் வளர்ப்புப் பிள்ளையை சொந்தப்பிள்ளை எனக் கூறுவது ஆணுக்குத் தான் கூடாது. பெண்ணுக்குக் கூடும் என்று இவர்கள் சொல்ல வேண்டும். அப்படி இவர்கள் சொல்வது கிடையாது என்பதால் பெண்ணுக்கும் ஒரு உள்ளம் தான் என்று ஒப்புக் கொள்கிறார்கள்.

மேற்கண்ட வசனத்தில் இரு உள்ளங்களைக் குறிக்கவில்லை. இரு இதயங்களைத் தான் குறிக்கிறது என்று ஒரு வாதத்துக்கு வைத்துக் கொண்டாலும் குழந்தையின் இதயம் அவளுடையது அல்ல. அவளுக்கு உரியது அவளது உள்ளம் மட்டும் தான். பெண்களுக்கு எந்தச் சந்தர்ப்பத்திலும் இரு இதயங்கள் இருக்கவில்லை.

மேலும் இவர்கள் கூறுவது போல் பெண்கள் இரு இதயங்களுடன் இருக்கும் காலம் மிகக் குறைவாகும். குழந்தை பெறக் கூடிய பெண் அறுபது வயது வரை வாழ்ந்து அவள் மூன்று குழந்தைகளைப் பெற்றிருந்தால் முப்பது மாதம் தான் அவள் குழந்தையைச் சுமந்திருப்பாள். 57 வருடம் குழந்தையைச் சுமக்காமல் ஒரு இதயத்துடன் தான் இருக்கிறாள். சில பெண்கள் ஒரு சமயத்தில் நான்கு கருவைச் சுமந்திருப்பார்கள். இவர்களுக்கு ஐந்து இதயம் என்று ஆகிவிடும்.

சில பெண்கள் குழந்தை பெறாமல் அறுபது வயது வரை வாழ்ந்தால் அவர்களுக்கு இரு இதயங்கள் என்ற பிரச்சினை எப்போதும் ஏற்படாது.

பருவத்தை அடையும் வரையும், மாதவிடாய் நின்ற பிறகும் அவள் பெண்ணாக இருக்கிறாள். அவளுக்கு இரு இதயங்கள் இருக்கவில்லை.

எனவே இவர்களின் வாதம் முற்றிலும் தவறாகும்.

இவ்வசனம் முரண்பட்ட முடிவை ஆணும் எடுக்கக் கூடாது; பெண்ணும் எடுக்கக் கூடாது என்ற சட்டத்தை அதற்கான காரணத்துடன் விளக்கும் வசனமாகும். இது ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவானது என்பதால் எந்த மனிதருக்கும் அல்லாஹ் இரு உள்ளங்களை ஏற்படுத்தவில்லை என்று நாம் செய்த தமிழாக்கம் தான் இந்த இடத்தில் பொருத்தமானது. சரியானது.

Leave a Reply