65. மனைவிக்கு எதிராகச் சத்தியம் செய்தல்

65. மனைவிக்கு எதிராகச் சத்தியம் செய்தல்

னைவியின் மீதுள்ள கோபத்தின் காரணமாக அல்லாஹ்வின் பெயரைப் பயன்படுத்தி "'அல்லாஹ்வின் மேல் ஆணையாக இனி உன்னைத் தீண்ட மாட்டேன்'' என்று கூறும் வழக்கம் அன்றைய அரபுகளிடம் இருந்தது. இவ்வசனம் (2:226) அந்த வழக்கத்தைக் கண்டிப்பதுடன் அதற்கான பரிகாரத்தையும் கூறுகிறது.


இவ்வாறு சத்தியம் செய்தவர் இதற்காக மனைவியைப் பிரியத் தேவையில்லை. நான்குமாத அவகாசத்துக்குள் சத்தியத்தை முறித்து விட்டு மனைவியுடன் சேர்ந்து கொள்ளலாம்.

காலமெல்லாம் மனைவியுடன் சேர மாட்டேன் என்று ஒருவர் சத்தியம் செய்தாலும் அவருக்குரிய கெடு நான்கு மாதங்கள் தாம்.

நான்கு மாதம் வரை மனைவியுடன் சேராமல் நான்கு மாதம் கழித்துத்தான் சேர வேண்டும் என்று இவ்வசனத்திற்கு (2:226) அர்த்தம் இல்லை. நான்கு மாதம் முடிவதற்குள் சேர வேண்டும் என்பதே இதன் பொருள்.

சத்தியம் செய்து விட்டு மறுநாள் கூட அதை முறிக்கலாம். நான்கு மாதம் கடந்த பின்னும் மனைவியுடன் இணக்கமாகாவிட்டால் விவாகரத்துச் செய்து விட வேண்டும் என்று அடுத்த வசனம் கூறுகிறது.

கோபத்தில் சத்தியம் செய்து மனைவியுடன் சேராமல் இருப்பதை அல்லாஹ் கடுமையான விஷயமாக எடுத்துக் கொள்கிறான் என்பது இதிலிருந்து தெரிகிறது.

சிலர் பொருள் திரட்டுவதற்காக சில ஆண்டுகள் மனைவியை விட்டுப் பிரிந்து வெளியூர்களுக்கோ, வெளிநாடுகளுக்கோ செல்கின்றனர். நான்கு மாதங்களை விட அதிகமாக இவர்கள் மனைவியரைப் பிரிந்தாலும் இவர்களை இது குறிக்காது. உடல் ரீதியாக இருவரும் சேராவிட்டாலும் மனம் ஒப்பி இவ்வாறு பிரிந்துள்ளனர். மனைவிக்கான பொருளாதாரத் தேவைகளை கணவன் நிறைவேற்றுகின்றார். எனவே நான்கு மாதத்தில் ஏன் சேரவில்லை என்று இவர்கள் மீது குற்றம் சுமத்த முடியாது.

மனைவியுடன் உள்ளூரில் இருக்கும் போது உடல் ரீதியான காரணங்களால் நான்கு மாதங்களுக்கு மேல் இருவரும் சேராமல் இருப்பார்கள். சூழ்நிலையும், இயலாமையும் தான் இதற்குக் காரணமாக இருக்கும். மனைவியின் மீதுள்ள வெறுப்பு இதற்குக் காரணமாக இருக்காது. இவர்களையும் இவ்வசனம் கட்டுப்படுத்தாது.

சிலர், மனைவியுடன் வெறுப்புக் கொண்டு அவளுடன் வாழ்க்கை நடத்தாமலும், அவளை விவாகரத்துச் செய்யாமலும் கொடுமைப்படுத்துவர். வாழ்க்கைச் செலவினம் கொடுக்க மாட்டார்கள். நான்கு மாதம் கடந்த பின்னும் மனைவியின் மீது வெறுப்புக் கொண்டு பிரிந்திருந்தால், நான்கு மாதத்துக்குள் மனைவியுடன் உறவைப் புதுப்பிக்குமாறும், வாழ்க்கைச் செலவினம் அளிக்குமாறும் ஜமாஅத்தினர் இத்தகைய கணவனுக்கு அறிவுறுத்த வேண்டும்.

கணவன் இதற்குக் கட்டுப்பட மறுத்து இதே நிலையைத் தொடர்வதாக பிடிவாதம் பிடித்தால் அதன் காரணமாக விவாகரத்து முடிவை அறிவிக்கும் கடமை ஜமாஅத்துகளுக்கு உண்டு.

அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து விட்டதால் நான் எப்படி மனைவியுடன் சேரமுடியும் என்று கேட்க வாய்ப்பு இருந்தும் அதையே அல்லாஹ் தளர்த்தி இருவரையும் இணையச் சொல்கிறான். சத்தியம் போன்ற தடை ஏதும் இல்லாதவன் பிடிவாதம் பிடிப்பது அதைவிடக் கொடுமையானது என்பதே இதற்குக் காரணம்.

Leave a Reply