82. மார்க்கப் பணிகளில் ஈடுபடுவோருக்கு ஊதியம்

82. மார்க்கப் பணிகளில் ஈடுபடுவோருக்கு
ஊதியம்

வ்வசனத்தில் (2:273) மார்க்கப் பணிகளில் ஈடுபடுவோருக்காக சிறப்பு கவனம் எடுக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

பொதுவாக ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்குத் தர்மம் செய்யலாம் என்பதை அனைவரும் அறிவர்.


ஒருவர் ஏழையாக இருப்பதுடன் மார்க்கப் பணிக்காகத் தன்னை அர்ப்பணித்துள்ளார். மார்க்கப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டது தான் அவர் ஏழையாக இருப்பதற்கே காரணமாகவும் உள்ளது. இதன் காரணமாக அவரால் பொருளீட்டவும் இயலவில்லை.

இத்தகையவர் ஏழையாக இருக்கிறார் என்பதற்காக மட்டுமின்றி மார்க்கப் பணிகளிலும் தன்னை அர்ப்பணித்துள்ளார் என்பதையும் கவனத்தில் கொண்டு தர்மங்கள் வழங்குவதில் முன்னுரிமை கொடுக்க இவ்வசனத்தில் (2:273) அல்லாஹ் ஆர்வமூட்டுகிறான்.

ஒருவர் பொருளீட்டுவதற்கான முயற்சி எதனையும் மேற்கொள்ளாமல் முழுக்க முழுக்க மார்க்கப் பணிக்காக அர்ப்பணித்துக் கொள்வது குறை கூறப்படக் கூடாது; மாறாக இது பாராட்டப்பட வேண்டிய சேவை என்பதையும் இவ்வசனத்திலிருந்து அறியலாம்.

இவ்வாறு மார்க்கப் பணிகளில் தம்மை அர்ப்பணித்துக் கொள்வோர், வருமானத்திற்கு வேறு வழியில்லை என்பதால் மற்றவர்களிடம் யாசிப்பதோ, சுயமரியாதையை இழப்பதோ கூடாது.

எல்லா நிலையிலும் எவரிடமும் கேட்பதில்லை என்பதில் உறுதியாக அவர்கள் நிற்க வேண்டும். அவ்வாறு சுயமரியாதையைப் பேணுபவர்களுக்கு மார்க்கப் பணியைக் காரணம் காட்டி இஸ்லாமிய அரசும், முஸ்லிம் சமுதாயமும் உதவி செய்ய வேண்டும். அவர்கள் யாசிக்க ஆரம்பித்து விட்டால் இந்தத் தகுதியை இழந்து விடுகிறார்கள் என்பதையும் இவ்வசனத்திலிருந்து அறியலாம்.

Leave a Reply